ஒரு திண்ணை டயலாக்.

This entry is part [part not set] of 9 in the series 20001210_Issue


சித்திர லேகா

‘வாங்க சார். நீங்க யாருன்னு தெரியலையே ? ‘

‘வந்தேன். வந்தேன். உங்க பொண்ணு கல்யாணம் பத்தி பேச வந்தேன் ‘

‘ஓ அப்படியா ? ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என் மகளைத் தெரியுமா ? உள்ள வாங்க. ‘

‘பரவாயில்லை. இங்கத்தான் ஜிலுஜிலுன்னு காத்து வருதே. இங்கியே உக்காந்து பேசலாம். என்னக் கேட்டாங்க ? உங்க மகளை எனக்குத் தெரியுமான்னா கேட்டாங்க ? என் மகனும், உங்க மகளும் ஒண்ணா வேலைப் பாக்கறாங்க. என் பையன் சொன்னான். உங்க மகள் ரொம்ப தைரியசாலி, சிம்பிள், ஸ்ட்ரெய்ட்பார்வர்ட்னு. ஆபீஸ்ல எடுத்த போட்டோ காட்டினான். உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. என் மகனுக்கும், உங்க பொண்ணைப் பார்த்த நாள்ளருந்து ஒரே பிரமிப்புத்தான். உங்களைப் பார்த்தால் அவ அப்பான்னு நம்ப முடியலை. ரொம்பக் கிழவரா வேறே தெரியறேள் ? -சொக்கலிங்க பாகவதர் மாதிரி. பொண்ணு அம்மா சாயலோ ? உங்கப் பொண்ணு சிம்பிள் கல்யாணம்தான் பண்ணுவேன்னு எல்லார்ட்டயும் சொல்லுவாளாமே ? எங்களுக்கும் இந்த சாஸ்திர சம்பிரதாயம், பட்சணம், சீர், செனத்தி, சொந்தக்காரா மூஞ்சியத்தூக்கி வச்சுண்டு, இதெல்லாம் வேண்டாம்னுத்தான் அபிப்ராயம். ஆனா உங்களைப்பார்த்தால் பழைய பஞ்சாங்கம்னு நன்னாவே தெரியரது. நீங்க வைதீகமா கல்யாணம் பண்ண ஆசைப் படலாம். ‘

‘ நீங்கக் கூடத்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி வழ வழ கொழ கொழன்னு இருக்கீங்க. வைதீகக் கல்யாணம் எளிமையா நடக்கக்கூடாதா என்ன ? ‘

‘அது கூட சரிதான். அப்போ எந்தக் கல்யாண ஹால் புக் பண்ணறேள் ? உங்களைப் பாத்தா கோவில் எங்கியாவது கல்யாணம் பண்ணிடுவேளோன்னு தோண்றது. கோவில்னாலும் திருப்பதி, பழனிதான் எங்களுக்கு சரிப்படும். அது உங்களால முடியுமோ என்னமோ. பேசாமல் டாசண்ட்டா ஒரு ஹால் ஏற்பாடு பண்ணுங்கோ ‘

‘ஹால் ஒண்ணும் புக் பண்ணப் போறதில்லை. இதோ எங்க வீட்டு ட்ராயிங் ரூம் பெரிசா இருக்கே ? உள்ள வாங்க சார். வந்து இந்த ரூமைப் பாருங்க. இங்கத்தான் வைதீக விவகாரம். மொட்டை மாடால லன்ஞ். ‘

‘இந்த ரூம் பெரிசுத்தான். இருந்தாலும் கல்யாணம் பண்ண ரொம்ப சின்னது. மயிலாப்பூர்ல எங்க வீட்டுப்பக்கத்திலேயே ஒரு நல்ல ஹால் இருக்கு. எங்களுக்கும் அலய வேண்டாம். கொஞ்சம் பைசா அதிகம்னாலும் நல்ல ஹால். ரிஸப்ஷன் அங்கேயே பண்ணலாம். ஹால் ப்ராப்ளம் சால்வ்ட். கேட்டரிங்க்கு யாருட்ட அரேன்ச் பண்ணறேள் ? சாப்பாடு நல்லதா இருக்கணும் இல்லையா ? எங்க குடும்பம் பெரிய குடும்பம். ஒரு நானூறு பேராவது எங்க வீட்டுக் கலியாணத்துக்கு வர வழக்கம். எங்க ஃபேமிலிக்கு சங்கரன் தான். சங்கரன் ரொம்ப பிஸியான மனுஷன்னாலும் காண்டாக்ட் பண்ணறது ரொம்ப ஈஸி. டெலிபோன் பண்ணினா ஆன்சரிங்க் மிஷின்ல சொல்லலாம். ஃபாக்ஸ் அனுப்பலாம். இந்த ஈ மெய்ல், எறும்பு மெய்ல் கூட அனுப்பலாம். உங்களுக்கு எங்க அது பத்தி தெரியும். உங்கப் பொண்ணுட்ட சொல்லுங்கோ. நீங்க பாட்டுக்கு ஐயா சாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டுல சாப்பாடு, கொட்டுமேளம் கோயில்ல, வெத்தல்பாக்கு கடையில, சுண்ணாம்பு சூளைலன்னு ஏற்பாடு பண்ணப் போறேள். ‘

‘கேட்டரிங்க் விவேகானந்தன்தான். சிம்பிள் கல்யாணம் தானே ? எங்க வீட்டுக் கல்யாணத்துல கூட்டம் ரொம்பக்கம்மிதான். ‘

‘விவேகானந்தனா ? அவனால எப்படி சார் பண்ண முடியும் ? சங்கரனை ஏற்பாடு பண்ணுங்கோ ‘

‘சங்கரன்லாம் வயசானவர். விவேகானந்தன் துடிப்பான பையன். நான் கூட இவ்வளவு நாளும் அவனுக்கு பிஸினஸ் எந்த அளவுக்கு முன்னேறுமோன்னு சந்தேகப் பட்டேன். இப்போ உங்களை மாதிரி ஆட்கள் இருக்கறவரைக்கும் அவனுக்கு பிஸினஸ்க்கு ஒரு குறைவும் வராதுன்னு புரிஞ்சு போச்சு. அவனும் சொல்லுவான். நாம்ப இன்னும் ரெண்டாயிரம் வருஷம்னாலும் மாற மாட்டோம். இந்த கல்யாண காண்ட்ராக்ட் பிஸினஸ்க்கு ஒரு குறைவும் வராதுன்னு. ‘

‘எங்கருந்துதான் இந்த விவேகானந்தனைப் புடிச்சீங்க ? ‘

‘இதே தெருவுதான். பிஸினஸ் பண்ணிட்டே, கூட ஏதோ கம்ப்யூட்டர் படிக்கறான். என் பொண்ணு கிட்ட சந்தேகம் கேக்க வருவான். அப்படியே பழக்கம். ‘

‘சரி, உங்க கிட்டப் பேசிப் புண்ணியம் இல்லை. நானே உங்கப் பொண்ணுட்டப் பேசறேன். சரி. நகை கிகைலாம் பத்தி உங்கக்கிட்ட பேசிடமுடியும்னு தோணலை. பொண்ணுக்கு நல்ல அகலமா ஜரிகைப் போட்டு ஒரு புடவையாவது எடுப்பேளா ? ஏன்னா ரிஸ்ப்ஷன்ல பார்க்கறா மாதிரி இருக்க வேண்டாமா ? கூரைப் புடவையாவது கொஞ்சம் சரிகை கம்மியாப் போட்டு வாங்கலாம் ‘

‘ரிஸப்ஷன்னு தனியாலாம் கிடயாது. ஞாயிற்று கிழமைதான கல்யாணம். கல்யாண லன்ச்சோட சரி ‘

‘கல்யாணம் ஆயிரங்காலத்துப்பயிர்னு எல்லா சினிமா, ட்ராமா, வசனத்திலேயும் சொல்லுவா. நீங்க அதுக்குப்போய் இவ்வளவு கஞ்சத்தனம் பண்ணணுமா ? ரிஸப்ஷன் வச்சாகணம். பையனுக்கு ப்ளேசர் வாங்குங்கோ. கோட், சூட் போடறது வெள்ளைக்காரன் மரபானாலும், அதை நம்ப கல்யாணங்கள்ள ஒரு வழக்கமாக்கிட்டாளே ? ‘

‘நான் ரிஸப்ஷனே கிடயாதுன்னு சொன்னா நீங்க திரும்பத் திரும்ப ரிஸப்ஷன், கோட், சூட்னு பேசிட்டே போறீங்க ? மெட்ராஸ் வெய்யில்ல மூளைன்னு ஒண்ணு இருக்கறவன் கோட், சூட் போடுவானா ? என் பொண்ணு முகூர்தத்துக்கே, காட்டன் புடவையும், மாப்பிள்ளைக்கு பட்டு இல்லாம சாதா வேட்டியும் வாங்கர தீர்மானத்துல இருக்கா. கல்யாணப் பையனுக்கும் அதுதான் பிடிக்குமாம். இந்த புடவை வேட்டிலாம், கட்டிக்கப்போறவங்க தீர்மானம் பண்ண வேண்டிய சமாச்சாரம். ‘

‘ நான் என் பையனை கன்வின்ஸ் பண்ணறேன். நான் கிழிச்சக் கோட்டைத் தாண்ட மாட்டான். நீங்களும் உங்கப் பொண்ணுட்ட எடுத்துச் சொல்லுங்கோ. ‘

‘ என் பொண்ணுட்ட எடுத்துச் சொல்ல ஓண்ணும் இல்லை. உங்க பையனைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. எப்பிடியும் போங்க. என்னை ஆளை விடுங்க ‘

‘கோச்சுக்காதீங்க. கை நிறைய பொண்ணு சம்பாதிக்கறா. ராஜாவா கல்யாணம் பண்ணலாமேன்னுத்தான் இவ்வளவும் சொன்னேன். தயவு செய்து விவேகானந்தன் வேண்டாம். சங்கரனை ஏற்பாடு பண்ணுங்கோ. அவரே முறுக்கு, அதிரசம்லாம் பண்ணுவார். அவர்தான் சரி ‘

‘சுத்த விவரம் கெட்ட ஆளா இருக்கீங்க ? சும்மா சங்கரன் சங்கரன்னுட்டு. பொண்ணு கூட வேலை பார்க்கறவரோட அப்பான்னு இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். முருக்கும் அதிரசமும் சாப்பிடவா கல்யாணம் ? என் பொண்ணுக்கு மனசுக்குப் பிடிச்சு இருக்கு. விவேகானந்தனை கல்யாணம் பண்ணிக்கறா. நீங்க உங்க வேலையப் பாக்காம ஏன் நாட்டாமை பண்ணிட்டு இருக்கீங்க ? ‘

Series Navigation