ஒரு கனவுகூட மிஞ்சவில்லை

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

லறீனா அப்துல் ஹக், இலங்கை


இம்முறை பல்கலைக்கழகத்தில் இருந்து நான் ஒரு தீர்மானத்தோடு தான் வீட்டுக்கு வந்திருந்தேன். செமஸ்டர் எக்ஸாமுக்கு நானும் ஸல்மாவும் எங்கள் வீட்டில் இருந்து படிக்கப் போகிறோம். வருடக் கணக்காகப் பூட்டிக் கிடக்கும் தொங்கல் அறையைச் சுத்தப்படுத்தி அதற்குத் தயார் செய்துவிட வேண்டும். வாப்பாவிடம் அதைச் சொன்னபோது அவர் அதை அவ்வளவாக விரும்பவில்லை என்பது அவரின் முகக் குறியிலிருந்தே விளங்கியது. ஆனால், ஹொஸ்டலில் இருந்து சரியாகப் படிக்க முடியவில்லை. சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் ஒரே பிடியாக நிற்கவும் உம்மாவும் அப்பாவும் என் சப்போர்ட்டுக்கு வந்துவிட்டார்கள். “என்னவோ பண்ணித் தொலை” என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு வாப்பா கடைக்குப் போனதும் ஏதோ பெரிதாக சாதித்துக் கிழித்தது போல இருந்தது, எனக்கு. நானும் அப்பாவும், வலது உள்ளங் கைகளை மோதி “ஃபைவ்” அடித்து மகிழ்ந்தோம். நான் எப்போதுமே அப்பாவின் செல்லப் பிள்ளைதான்.
ஆயிற்று. தொங்கல் அறையைத் துப்புறவு செய்யும் பொறுப்பை என்னோடு கபீர் நானாவும் சுமனாவதி அக்காவும் பகிர்ந்துகொண்டார்கள். தூசு தட்டி, ஒட்டடை அடிக்கும் வேலை கபீர் நானாவுடையது. கூட்டிப் பெருக்கும் வேலையை சுமனாவதி அக்கா ஏற்றுக்கொண்டா. எப்படியோ, ராக்கைகள் நிறையத் தாறுமாறாகக் கிடந்த புத்தகங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி அடுக்கும் பொறுப்பு என் தலையில் வந்து விழுந்தது. அதன் மூலம், அவ்வளவு காலமும் எனக்குத் தெரியாத ரகசியமொன்று எங்கள் வீட்டுக்குள் புதைந்து கிடந்துள்ளது என்பதைத் தற்செயலாக அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.
புத்தக ராக்கைகளைத் தூசுதட்டி அவற்றில் இருந்த புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருந்த எனக்கு வியப்புத் தாங்க முடியவில்லை. அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த வாசகனின் அருமையான கலெக்ஷனாக இருந்தன. எங்கள் ஊர் நூலகத்தில் கிடைக்காத சில அரிய பழந்தமிழ் நூல்களும்கூட அதில் அடக்கம். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியங்கள் வரை அருமையான நூல்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன. ஆங்கில, சிங்கள நூல்களுக்கும் குறைவில்லை.
நம் வீட்டில் இந்தளவு நூல்களைச் சேகரித்துப் படிக்கத்தக்க ஆழமான வாசகர் யாராக இருக்கக்கூடும் என்பதை எவ்வளவு யோசித்தும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. என்னுடைய வாப்பாவோ வெறுமனே ஒரு கடை முதலாளி. உம்மா பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவர். அப்பாவும் ஆச்சிம்மாவும் முறையே நாலாம், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடம் போகாதவர்கள். அப்படியென்றால், இந்தளவு அருமையான நூல்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு வாசித்து மகிழ்ந்தது யாராக இருக்கும்? மண்டையைக் குடைந்து யோசித்தபடி இருந்த என் கண்ணில் பட்டது, இடப்பக்க மூலையில் இருந்த சிறிய இரும்புக் கதவு. இறுக்கமாக மூடியிருந்த போதிலும், எப்படியோ படாத பாடுபட்டு அதைத் திறந்துகொண்டதில் பெருமிதம் எனக்கு.
உள்ளே நுழைந்ததும் கண்கள் இருட்டுக்குப் பழக சற்று நேரம் தேவைப்பட்டது. நிரம்பியிருந்த தூசியினால் நாலைந்து முறை தும்மிவிட்டேன். பெரிய ஃபிரேமிட்ட புகைப்படங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கையிலிருந்த பழந்துணியால் ஒரு பெரிய புகைப்படத்தில் இருந்த தூசியைத் துடைத்துப் பார்த்தேன். அதில், அப்பா, ஆச்சி, என் வாப்பா- உம்மாவோடு பாவாடை தாவணி அணிந்த ஓர் இளம் பெண்ணும் இருந்தார். யார் இவர்? வாப்பாவின் சாயலில்… இல்லையில்லை அசலாக என்னுடைய சாயலில்… எனக்கு ஒரே குழப்பம்.
எனக்கு ஒரு ராத்தா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நான்தான் உம்மாவுக்குத் தலைப் பிள்ளை என்றும், நான் பிறந்ததும் ஏற்பட்ட பிரசவச் சிக்கலால் உம்மாவின் கர்ப்பப்பை உடனே அகற்றப்பட்டதென்றும் ஆச்சி அடிக்கடி சொல்லியிருக்கிறா. தவிர, அந்தப் புகைப்படத்தில் 1985 ஆம் ஆண்டு என்றிருந்தது. என் உம்மாவும் வாப்பாவும் கல்யாணம் கட்டியது 1983 இல். கல்யாணமாகி எட்டு வருடங்களின் பின் பிறந்த ஒரே வாரிசு என்பதால் தான் அந்த வீட்டில் அத்தனை செல்லம் எனக்கு. எனவே, இந்தப் பெண் என் வாப்பாவின் அக்காவாகவோ தங்கையாகவோ இருக்கவேண்டும் என்று அனுமானித்தேன். அப்படியென்றால், அவர் இப்போது எங்கே? நம் வீட்டில் ஏன் அப்படி ஒருவரைப் பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை? நம் வீட்டுச் சுவர்களில் தொங்க விடப்பட்டுள்ள எந்த ஒரு புகைப்படத்திலும் ஏன் அவர் இல்லை? இந்த அழகான குடும்பப் படம் ஏன் இப்படி மூலைக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது? எனக்குள் அடுக்கடுக்காகக் கேள்விகள். எப்படியோ இதற்குப் பின்னால் ஏதோ ஒரு மர்மம் புதைந்திருக்கிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
யாரோ கூப்பிடும் குரல் என்னை சுயநினைவுக்குக் கொண்டுவந்தது. சட்டென்று அந்தச் சிற்றறையை விட்டு வெளியேறி, தொங்கல் அறையையும் மூடிக்கொண்டு வெளியே வந்தேன். சற்று ஆசுவாசமாக இருந்தது.
“என்ன புள்ள, ஒன்னய எங்கெல்லாம் தேடுறது? சாப்பாடு எடுத்துவச்சி எவ்வளவு நேரம்! வா வா, நேரத்துக்கு சாப்பிடாட்டி ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?” ஆச்சிம்மா என்னை செல்லமாகக் கடிந்து கொண்டா.
“ஐயோ ஆச்சிம்மா, மேலெல்லாம் ஒரே தூசியும் ஒட்டடையும். நான் டக்குன்னு குளிச்சிட்டு வந்துர்றேன்” என்றபடி அவரது பதிலையும் எதிர்பார்க்காமல் கிணற்றுக்கட்டை நோக்கி ஓடினேன்.
குளித்து முடிக்கும் தறுவாயில் அங்கே வந்தார், ஆச்சிம்மா. நான் தலையைத் துடைத்தபடி அவரருகே சென்று நைச்சியமான குரலில் கேட்டேன்.
“ஆச்சிம்மா, நான் ஒரு விஷயம் கேட்பேன். ஒளிக்காம பதில் சொல்லணும், சரியா?”
“இதென்ன புள்ள இப்புடிப் பேசுற? நான் எதுக்கு ஒங்கிட்ட ஒளிச்சி மறைச்சிப் பேசணும்?”
“இல்ல… வந்து… ஒங்களுக்கு எல்லாமாக எத்தனை புள்ளைங்க?”
“எனக்கா? எனக்கு எல்லாமா நான்கு ஆம்புளைப் புள்ளைங்களும் ஒரேயொரு…” என்றவர், கண்கலங்க நிறுத்திவிட்டார்.
“ஒரேயொரு பொம்புளப்புள்ள, அப்படித்தானே?”
“……………”
“சரி, வாப்பாவத் தவிர மத்த எல்லாரும் எங்கே?”
“அதுதான் பொறந்து கொஞ்ச காலத்துலயே ஒண்ணொண்ணா கபுறுக் குழிக்குள் போயிருச்சே!”
“அந்தப் பொம்புளப் புள்ளையுமா ஆச்சிம்மா?”
“………………….”
“சொல்லுங்க ஆச்சிம்மா.”
“நீ ஏண்டி இப்போ தூண்டித்துருவி அந்தச் சனியனப் பத்தியே கேட்டுட்டு இருக்கே?”
“சனியனா? எங்கட மாமிய சனியன்னா எனக்கு கெட்ட கோவம் வரும், சரியா? ஏன் ஆச்சிம்மா, அவங்களும் என்னயப் போலவே இருப்பாங்க தானே?”
ஏதோ சொல்ல வாயெடுத்த அவர், அந்தப் பக்கம் வாப்பா வருவதைக் கண்டதும் சட்டென்று வாயை மூடிக்கொண்டதோடு, எதுவும் பேச வேண்டாம் என்பது போல் எனக்கும் சாடை காட்டினார். நானும் மௌனமாக அவரைப் பின்தொடர்ந்து சாப்பாட்டு அறைக்குப் போனேன். சாப்பாட்டில் என் கவனம் செல்லவில்லை. நான் இதுவரை அறிந்துகொள்ளாத அந்த மாமியைப் பற்றியே என் நினைவெல்லாம் சுற்றிச் சுழன்றன. எப்பாடு பட்டாவது அவரைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வது என்பதில் நான் உறுதியோடு இருந்தேன். என் எண்ணத்தை அனுமானித்தவர் போல என்னிடம் தனியே மாட்டாமல் ஆச்சிம்மா நழுவிக் கொண்டே இருந்ததைக் காண எனக்கு ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. அவரை சங்கடப்படுத்தாமல் நானாகவே எப்படியும் அந்த ரகசியத்தைக் கண்டறிவது என்று மனதுக்குள் திடசங்கற்பம் எடுத்துக்கொண்டேன். இல்லாவிட்டால், இம்முறை எக்ஸாமுக்குப் படிக்கக்கூட முடியாமல் போய்விடலாம் என்ற அச்சம் எனக்குள்.
அன்று மாலை மறுபடியும் தொங்கல் அறைக்குப் போய் புத்தக ராக்கையிலுள்ள புத்தகக்குவியலை ஆராய்ந்தேன். என்னுடைய அதிருஷ்டம் ஓர் அழகான கொப்பி என் கையில் சிக்கியது. முன் அட்டையில் ஓர் ஓவியம். ஒரு பெண்ணின் பக்கவாட்டு முகத் தோற்றம். ஒளிவீசும் கண்களில் வழியத் தயாராக இருக்கும் ஒரு கண்ணீர்த் துளி. விம்மத் தயாரானது போன்ற தோற்றத்துடன் அதரங்கள். அடடா! என்ன ஒரு தத்ரூபம்! புத்தகத்தை விரித்துப் படிக்கத் தொடங்கினேன். முதல் பக்கத்தில் “ஸெய்னம்பு நிஸா” என்ற பெயர் இருந்தது. ‘ஓகோ! இதுதான் மாமியின் பெயரோ’ என் இதழ்களில் ஒரு புன்னகை. கண்டுபிடித்துவிட்ட பெருமிதம். உள்ளே பக்கங்களைப் புரட்டப் புரட்ட ஒரு பெண்ணின் மனசின் வரிகளும் வலிகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. தனக்குப் பிடித்த புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்கள்… மறக்க முடியாத நிகழ்வுகள் என்று தொடர்ந்து எழுதப்பட்டிருந்ததை வாசித்துக்கொண்டே வந்த என்னுடைய விழிகள் ஓரிடத்தில் குத்திட்டு நின்றன.
“என்னுடைய திருமணத்தின் போது எல்லோருக்கும் போலவே எனக்கும் எத்தனையோ எதிர்பார்ப்புக்கள் இருந்தன. என்றாலும், அவற்றில் எதுவுமே நிறைவேறப் போவதில்லை என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அப்படியே அறிந்து கொண்டிருந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி என்னிடம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வாழ்வின் விளிம்புவரை என்னைத் துரத்தி வந்து நிறுத்திய விதியின் கரங்களுக்குள் நான் சிறைப்பட்டுப் போனேன். என் வாழ்வின் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாய் என்னுடைய திருமணம் நடந்தேறிற்று.”
அதைத் தொடர்ந்து அவரது திருமண வாழ்வு எவ்வளவு தூரம் இயந்திரத்தனமானதாய் இருந்தது, அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறானாதாக அமைந்திருந்தது என்பது விரிவாக எழுதப்பட்டிருந்தது. இடையிடையே எழுத்துக்கள் மங்கிக் கசிந்திருந்தன. கண்ணீர்த் துளிகள் விழுந்ததன் விளைவு என்பதைப் புரிந்துகொண்டேன்.
“வசந்தம் பூத்த போது குயில் இறந்து போவது எவ்வளவு துக்ககரமானது என்பதை உன்னால் உணர முடிகிறதா?
சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோத்து நான் எழுதும் இந்த வரிகளினூடே வெளிப்படும் என் தவிப்பும் துடிப்பும் உனக்குப் புரிகிறதா? என் இதயத்தின் விசும்பல் ஒலி உனக்குக் கேட்கிறதா?
“வீட்டுக்குள் ஓர் அறை.
நீயும் உள்ளேதான் இருக்கிறாய்…
நானும் தான்.
ஆனால்…
இருவரும் இருவேறு தொலைவுகளில்…
இருவேறு துருவங்களில்…
இருவேறு சாத்தியப்பாடுகளில்…”
நாளுக்கு நாள் மனதளவில் எனக்கும் அவருக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து வருவதை அவர் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அப்படியே அறிந்து கொண்டிருந்தாலும் அதனை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என நினைக்கிறேன். என்னை மீறி இவளால் என்னதான் செய்துவிட முடியும் என்ற அலட்சிய மனோபாவம் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். அல்லது எதுவாக இருந்தாலும் ஒரு பெண் என்ற வகையில் இவை அனைத்தையும் இவள் சகித்துத்தான் ஆகவேண்டும் என்ற இறுமாப்பு காரணமாக இருக்கலாம். இத்தகைய எண்ணமே என் மனதினுள் அதீதமான வலியை ஏற்படுத்துவதாக, மிகுந்த வேதனையையும் ஆயாசத்தையும் தருவதாக இருந்தது. என்றபோதிலும் அவ்வாறு எண்ணுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எதையும் காரண காரியங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு, இயல்பாகவே எண்ணங்கள் எல்லாத் திசையிலும் முனைப்போடு எழுந்து நிற்பதைத் தடுக்கத் தெரியவில்லை.
எல்லா உறவுகளும் சுற்றியிருந்த போதிலும் அந்த உறவுகளுக்கும் எனக்கும் இடையில் மானசீகமாக அல்லது கண்ணுக்குத் தெரியாத வகையில் மிக நுட்பமாக எழுப்பப்பட்டிருந்த வேலி என்னைத் தனிமைச் சிறையொன்றினுள் தள்ளிவிட்டிருந்தது.
ஒரு நல்ல கவிதையைப் படிக்கும் போதெல்லாம் அதனை யாரிடமாவது பகிர்ந்துகொண்டு மகிழவேண்டும் என்ற உந்துதலும் உற்சாகமும் வாழ்வில் ஒருபோதுமே சாத்தியமாகவில்லை. மனசுக்குப் பிடித்த பாடலை சத்தமாக வாய்விட்டுப் பாடவேண்டும் என்று பொங்கிப் பிரவாகிக்கும் உணர்வைப் புரிந்து கொள்ளாமல், பார்க்கப்படும் ஒரு விசித்திரமான பார்வையால், அனாவசியமாகக் குறுக்கிடும் ஓர் உப்புசப்பற்ற கேள்வியால் என் உற்சாகமெல்லாம் அப்படியே வடிந்து போய்விடும். மழை பெய்யும் போது நனைந்து மகிழவேண்டும் என்ற ஆவல் ‘கிறுக்குத்தனமானது’ என்று கேலி செய்யப்படும் போது தோன்றும் வலியினால் பலமுறை எனக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளேன்.
புல் தரையில் தத்தித் தத்தித் தாவி இரைதேடும் சின்னக் குருவிகளை, இதோ விழுந்துவிடப் போகிறேன் என்று இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் புல் நுனிப் பனித் துளியை, வானளாவ உயர்ந்து வகை வகையான பசுமை காட்டும் மரங்களை அலுக்காமல் சலிக்காமல் பார்க்கின்ற ஆவலை மட்டந்தட்டி, ‘அப்படி என்னதான் இருக்கிறது அதில்? சும்மா பைத்தியம் மாதிரிப் பார்த்துக் கொண்டு…” என்பதான விமர்சனங்களைக் கேட்க நேருகின்ற துர்ப்பாக்கியமான கணங்களை எதிர்கொள்ள நேர்கையில்… மனசின் இறக்கைகள் அப்படியே ஒடிந்து கருகிவிடும்.
அவருடன் பேசுவதை விட மௌனமாக இருப்பதையே நான் அதிகம் விரும்பினேன். அவரோடு எப்போது உரையாடினாலும் இறுதியில் எஞ்சுவது வெறும் வேதனையும் கசப்புணர்வுமே என்ற அனுபவத்தை நான் பலமுறை அடையப் பெற்றிருந்தேன். மென்மை என்ற உணர்வுக்கே இடமின்றி இயந்திரத்தனமான ஓர் உரையாடல் எனக்கு மிகுந்த ஆயாசத்தையே கொடுத்தது. எதைப் பேசினாலும், அதில் ஒரு குற்றம் காணுகின்ற, இடக்காக மறித்துக் கேள்வி எழுப்புகின்ற அந்தத் தோரணையும் தொனியும் எனக்குப் பிடிக்கவே இல்லை. நான் எதைச் சொன்னாலும், அதனை நம்பாமல் துருவித் துருவிக் கேள்வி எழுப்புகின்ற, தான் நினைப்பதையே என் சிந்தனைக்குள் திணிக்க முனைகின்ற அந்த ஆதிக்க மனோபாவம் எனக்கு மிகுந்த வெறுப்பையும் சோர்வையுமே தந்தது.
மனசின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்துகொண்டு இதமான, இனிமையான, அழகான வார்த்தைகளைப் பேச அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் என்னுடைய சுகத்தை விசாரிக்க வேண்டும் என்ற நினைவுகூட அவருக்கு எழுவதில்லை. காதலும் கனிவும் நிறைந்த, குறும்பு கலந்த உற்சாகமூட்டும் வார்த்தைகளை என் மனம் அவரிடமிருந்து எதிர்பார்த்து ஏங்கியது. ஆனால், அதனைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் அவர் ஒருபோதுமே இருக்கவில்லை. சுத்தமாக அப்படி ஒரு பக்கம் இருப்பதை விளக்கினாலும் புரிந்துகொள்ளக் கூடியவராக அவர் இருக்கவில்லை. அந்த அளவுக்கு அவருடைய மன உலகமும் என்னுடைய மன உலகமும் வௌ;வேறானவையாக இருந்தன. ஒரே வீட்டில், சிலபோது ஒரே அறைக்குள் வாழ நேர்ந்த நம் இருவருடைய வாழ்வும் ஒரு ரயில் பெட்டிக்குள் அல்லது ஒரு விடுதியறைக்குள் இருந்த இருவரின் நிலையை ஒத்திருந்தது. சில நேரங்களில், இந்த உதாரணம்கூட தவறானதோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்குள் எழும். ஏனென்றால், ஒருசில மணிநேரம் ரயில் பெட்டியொன்றில் சந்தித்துக் கொள்ளும் இருவரிடையே, சில காலம் விடுதியறையில் ஒன்றாகக் கழிக்க நேர்ந்த இருவரிடையே வாழ்நாளெல்லாம் நினைத்துப் பார்த்துப் புன்னகைக்கத் தோன்றும் அழகான, இனிய நினைவுகள் எஞ்சிவிடுவதும் உண்டல்லவா?
லாப நஷ்டக் கணக்குகளை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டிருந்த அவருக்கு எந்த நஷ்டமும் இல்லாமல் வெறுமனே சில இதமான வார்த்தைகளால் கொள்ளை மகிழ்ச்சியை தன்னால் மற்றவருக்கு வழங்கமுடியும் என்பது தெரிந்திருக்கவில்லை. ஓர் இதமான புன்னகையால், ஆழ்ந்த நேசத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பார்வையால் ஏற்படுத்தக்கூடிய அபரிமிதமான ரசாயன மாற்றம் பற்றி அவர் எதுவுமே அறிந்திருக்கவில்லை.
எங்காவது சென்று விட்டு வரும்போது “வழியில் பார்த்தேன். உன் நினைவு வந்தது. உனக்குப் பிடிக்குமே என்று எடுத்து வந்தேன்” என்று ஒரு கருங்கல் துண்டையாவது கொண்டுவந்து தரமாட்டாரா என்ற மனசு கிடந்து தவிக்கும். ஆனால், “உன்னை நினைவு வந்து… உனக்காகவென்று…” என்பதான எதுவும் அவருடைய அகராதியில் இடம்பெற்றிருக்கவில்லை. அவர் அவற்றையெல்லாம் யதார்த்தத்திற்குப் புறம்பான அதீதங்கள்… அல்லது மேற்பூச்சான டாம்பீக வார்த்தைகள் என்றெல்லாம் கருதியிருக்கக்கூடும். தான் ஒரு யதார்த்தவாதி என்று அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், வாழ்க்கை என்பதும், அதன் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் என்பதும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதா என்ன?” மாமியின் அந்தக் கேள்வி என் மனதுக்குள்ளும் எதிரொலிக்கத் தவறவில்லை.
“ஆயிற்று. துயரங்களும் வலிகளும் நிறைந்த வாழ்நாட்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது எனக்குள் இன்னோர் உயிர் உருவாகி இருப்பதை உணர்ந்தேன். மனங்கொள்ளாத பூரிப்புடன் அதை அவரிடம் கூறியபோது, அவருடைய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஊர் உலகத்தில் இல்லாத அதிசயமா என்பதான ஒரு வெற்றுப் பார்வையுடன் அவர் அப்பால் போய்விட்டார். அறை வாங்கியவள் போன்ற வேதனையில் துவண்டு போனேன் நான். தினமும் உடலின் அசௌகரியங்களால் துன்புறலானேன். இரவெல்லாம் வலியில் துடித்து அழுவேன். அப்போதெல்லாம் ஒரு மரக்கட்டையாய் அருகில் கிடந்து உறங்கினாரே தவிர, ஏன், என்ன என்றெல்லாம் ஒரு வார்த்தைதானும் கேட்டாரில்லை. இயல்பாகவே அவர் மிக ஆழ்ந்து உறங்கும் பழக்கம் உள்ளவர் என்பதைப் பின்னர்தான் யாரோ சொன்னார்கள். ஆனால், வலியாலும் அவரது பொருட்படுத்தாத போக்கினால் மனம் நொந்தும் நான் எவ்வளவு அழுதிருப்பேன் என்பதை எங்களுடைய படுக்கையறைச் சுவர்களுக்கும் அந்தத் தலையணைக்கும் வாயிருந்தால் சாட்சி சொல்லியிருக்கும்.” இந்த வரிகளை வாசித்தபோது என்னையறியாமல் என் கன்னங்களினூடே கண்ணீர் வழிந்தோடிற்று. முகம் தெரியாத அந்த மாமா மீது அளவற்ற வெறுப்பு தோன்றியது.
“என்னுடைய நிலையையோ என் வேதனையையோ யாருமே காதுகொடுத்தும் கேட்கவில்லை. ஏதாவது சொல்ல ஆரம்பிக்கும் போதே என் உம்மாவும் சரி, நானாவும் சரி, ‘இவர் போல ஒரு மாப்பிள்ளை கிடைத்தது உன் அதிருஷ்டம். ஆம்புளைகள் அப்படித்தான். ஆயிரத்தெட்டு சோலி அவர்களுக்கு. பொம்புளையாப் பொறந்த நீதான் எல்லாத்தையும் அனுசரிச்சுப் போகணும்’ என்பதான அறிவுரைவேறு. இதைச் சொல்லும் என் நானா, மதினிக்கு வயிற்றுவலி வரும் நாள்களில் குட்டிபோட்ட பூனைபோல வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக உலாவுவதும், அவரைத் தாங்கு தாங்கென்று தாங்குவதும் எனக்குத் தெரியாதா என்ன!” – இந்த இடத்தில் என் வாப்பாவை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது.
“ஆயிற்று. எப்படியோ எட்டு மாதங்கள் ஆயிற்று. உடலின் அசௌகரியமோ மனதின் விரக்தியோ எடுத்ததற்கெல்லாம் தாங்க முடியாத எரிச்சல் வந்தது. கோபமும் சிடுசிடுப்பும் அதிகரித்தது. இந்நிலையில், அவர்மீது தாங்கவே முடியாத வெறுப்பு தோன்றும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பக்கத்து வீட்டு ஸபீனாவுக்குப் பிள்ளை பிறந்திருந்ததைப் பார்க்க நானும் அவரும் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். ‘அந்தப் பிள்ளை சரியாக ஸபீனாவைப் போலவே இருக்குது, கவனிச்சீங்களா?’ என்றேன். ‘ஊம்! அதுதான் எனக்கும் ஒரே யோசினையா இருக்கு’ என்றார். எனக்கு ஒரே வியப்பு. ‘என்ன யோசினை?’ என்று கேட்டேன், அந்தக் கேள்விக்கான பதிலின் பயங்கரம் எத்தகையது என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. ‘இல்லை, எங்களுக்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்கு உன்னுடைய குணங்கள் வந்துவிடக்கூடாதே என்று ஒரே கவலையா இருக்கு’. வேடிக்கையாகச் சொல்கிறாரா அல்லது வேண்டுமென்றேதானா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ‘ஏன், என் குணத்துக்கென்ன?’ ‘உன் குணத்துக்கென்னவா? சரியான லூசு மாதிரி மரம் மட்டையைப் பார்த்துக்கிட்டும், கவிதை கற்பனைன்னு புலம்பிக்கிட்டும் இருக்கிற உன்னை மாதிரியே குழந்தை பிறந்தால் உருப்பட்டாப் போலத்தான்.! அதைவிட அப்படி ஒரு குழந்தை பிறக்காமலேயே இருக்கலாம்!’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு விடுவிடென்று என்னைக் கடந்து போய்விட்டார். நான் கல்லாய்ச் சமைந்து போனேன்.
எவ்வளவு நிஷ்டூரமான வார்த்தைகள்! ‘அப்படி ஒரு குழந்தை பிறக்காமலேயே போகலாம்!’ என்ற வாக்கியம் மீண்டும் மீண்டும் என் மனதைக் கொந்தளிக்கச் செய்தது. இனந்தெரியாத ஒரு வன்மம் மனதுக்குள் உருப்பெறத் தொடங்கியது. ‘என் குணங்கள் என் பிள்ளைக்கு வரக்கூடாதாமே! அப்படி ஒரு குழந்தை தேவையில்லையாமே! அப்படியென்றால் நான்கூட தேவையற்றவள் தனோ?’ என்னுள் ஆக்ரோஷம், வெறுப்பு, சீற்றம் எல்லாம் கலந்த ஒருவித வெறியுணர்வு தோன்றியது. இவருக்கு ஒரு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாத பாடமாக அது இருக்கவேண்டும். இவ்வளவு நாளும் ஒரு கல்லுப் போல… வெறும் மரக்கட்டை போல என்னோடு ஒப்புக்கு ஒரு வாழ்வு வாழ்ந்தவரின் மனநிலை பிறக்கப் போகும் இந்தக் குழந்தையினாலாவது மாறும் என்ற ஒரே ஒரு கனவு மட்டும் எனக்குள் எஞ்சியிருந்தது. இப்போது… அதுவும்கூட…
எனக்கென நீ அழவேண்டாம்…
உயிர்த்திருந்த காலமெல்லாம்
அன்பாய் சிலவார்த்தை
பேசி மகிழ்விக்காமல்…
அரவணைத்துக் காதலுடன்
அணைத்து முத்தம் தந்திடாமல்…
நோயுற்றுப் படுக்கையினில்
நாளெல்லாம் கிடந்தாலும்
ஏனென்று கேட்டொருவாய்
தண்ணீர் தரமுனையாமல்…
எத்தனையோ வகைவகையாய்
அறுசுவைகள் படைத்தாலும்
நல்லதென்று ஒருவார்த்தை
மனம்நிறையச் சொல்லாமல்…
நான் வாழ்வில்…
உள்ளம் வெதும்பிப்போய்
நொந்து நொறுங்கிப்போய்
கண்ணீரில் கரைந்தழிந்து
மரணித்துவிட்ட பின்னே
‘நேசம் இருந்தது”போல்
பாசாங்கு செய்து மிகும்
காதல் கணவனைப்போல்
காட்டுதற்கு முயன்று- பொய்யாய்
எனக்கென்று நீ ஒன்றும்
அழவேண்டாம் ஊருக்காய்!”
அதன் பின் வெற்றுப் பக்கங்கள் மட்டுமே அந்த நோட் புக்கில் இருந்தன. எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. எப்படியோ, மாமிக்கு என்ன நடந்தது என்பதை ஆச்சிம்மாவிடம் கேட்டே ஆகவேண்டிய நிலை. அவரைத் தேடிக்கொண்டு போனேன். சிற்றுரலில் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தவரிடம் போனேன். உரலைப் பறித்து நானே இடிக்கத் தொடங்கினேன். என் முகத்தைப் பார்க்கப் பயந்தவர் போல வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினார். நான் நேரே விஷயத்துக்கு வந்தேன். “ஆச்சிம்மா, எனக்கு எல்லாம் தெரியும். சும்மா இனியும் ஒளிச்சி மறைக்க வேண்டாம். ஸெய்னம்புநிஸா மாமிக்கு கடைசியில் என்ன நடந்திச்சி? அவருக்குப் புள்ள பொறந்துச்சா? அது என்ன புள்ள?”
ஆச்சிம்மா விக்கிவிக்கி அழலானார். நான் சட்டென்று அவரை நெருங்கிப் போய் அணைத்து முதுகை வருடிவிட்டேன். “ஏன் ஆச்சிம்மா அழுறீங்க? நான் கேட்டது தப்பா? என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு ஏன் நெனக்கிறீங்க?”
“இல்ல புள்ள… அப்புடியெல்லாம் இல்ல… அந்தப் பாவி மக… அவளுக்கு என்ன குறைய வச்சோம். கண்ணிறைஞ்ச புருஷன்! கைநிறைய சம்பாத்தியம்! வீடு நிறைய வசதி! இப்புடி எல்லாம் இருந்தும் பைத்தியக்காரி… எட்டு மாச கர்ப்பிணிங்கிற நெனப்புக்கூட இல்லாம… தூக்குமாட்டிக்கிட்டு….” அதற்குமேல் அவர் கோவென்று கதறத்தொடங்கினார். நான் திடுக்கிட்டுப் போனேன்! அடப் பைத்தியக்கார மனுஷி! அந்தக் கிறுக்கன்தான் ஏதோ அசட்டுத்தனமா உளறினான்னு, அவனை உதறித்தள்ளிட்டு தலைநிமிர்ந்து வாழ்ந்துகாட்டாமல் இப்படி தன்னையும் அழிச்சுக்கிட்டு ஒரு பாவமும் அறியாத அந்தச் சிசுவையும் அழிச்சுக்கிட்டு… என்னால் தாங்கவே முடியவில்லை.
“அவள் அப்படி தூக்குமாட்டிச் சாகிறவரைக்கும் அந்தப் பாவி மனுஷன் என்னதான் பண்ணிட்டு இருந்தானோ தெரியாது. கட்டில்ல தூங்குற மனுஷனுக்குக் கொஞ்சமாவது சத்தம் கேட்காமலா இருந்திருக்கும்! அப்படி என்ன கண்டறியாத தூக்கமோ! அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம்!” ஆச்சிம்மாவின் புலம்பல் ஓயவில்லை. நான் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை.
அன்றிரவெல்லாம் ஏதேதோ கனவுகள்! பலதடவை கட்டிலில் எழும்பி உட்கார்ந்து கொண்டு அழுது புலம்பியதாகவும், ஏதோ கெட்ட ஜின்னின் பார்வை பட்டிருக்கவேண்டும் என்றும் உம்மா பேசிக்கொள்வது என் காதிலும் இலேசாக விழுந்தது. ‘அவள் அந்த தொங்கல் காம்பராவுக்குள் போகக்குள்ளயே நினைச்சேன், இப்படி ஏதாச்சும் நடக்குமெண்டு! இப்பப் பார்த்தீங்களா? காய்ச்சல் நூத்தி எட்டுல நிக்கிது.’ வாப்பாவின் குரல் உச்சஸ்தாயில் ஒலித்தது.
ஓரிரு நாட்கள் கடந்திருக்கும். நான் வழமைக்குத் திரும்பியிருந்தேன். வாசலில் ஏதோ நிழலாடுவது தெரிந்தது. “மாமி, செய்னம்புட மாப்புள ஊட்டு வாசல்ல நிக்கிறார். எதுக்கு வந்திருக்கிறாரோ தெரியா. உள்ளாற வரச்சொல்லட்டா?” உம்மாவின் குசுகுசுப்பு என் காதிலும் விழுந்ததுதான் தாமதம்! எங்கிருந்துதான் அத்தனை ஆக்ரோஷம் கிளம்பியதோ, நானறியேன். எழுந்து நேரே வாசலுக்குப் போனேன். நடுத்தர வயதான அந்த நபரை தலைமுதல் கால் வரை ஓர் அற்பப் புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தேன். “ஏற்கெனவே ரெண்டு உசிரக் கொன்னாச்சி, இப்போ யாரைக் கொல்ல வந்திருக்கீங்க? போங்க, போங்க! இனி வராதீங்க இந்தப் பக்கத்துக்கு!” என்றவாறு கதவை அறைந்து மூடிவிட்டுத் திரும்பவும் வாப்பா என் முன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. இப்போது அவரின் கோபம் என்னை எதுவும் செய்யவில்லை. எதுவுமே நடக்காதது போல நேரே தொங்கல் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டேன். மனசு முழுக்க ஆசுவாசம் நிறைந்தது போல… மாமிக்கு நடந்த அநியாயத்துக்கு சரியான பதிலடி கொடுத்தது போல… உணர்ந்தேன். ஒரு மெல்லிய மனசின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அதை மிதித்துக் கசக்கிய ஒருவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது! எனக்கு அந்த நேரத்தில் ஃபஹீமாவின் வரிகள் நினைவில் எழுந்தன.
“அற்பப் புழுதான் – நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்
நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா”
“இந்த ஊட்டுல என்னதான் நடக்குது? வரவர மட்டுமரியாதை எல்லாம் இல்லாமப் போய்க்கிட்டிருக்கி. ஏற்கெனவே ஒருத்திய பறிகுடுத்தது போதாதா? அவள் படிச்சது போதும் போதும்னு சொன்னத கேட்டீங்களா? இப்போ அவளும் அதே வழீல போயிருவாளோன்னு வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு அலைய வேண்டியதா இரிக்கி” வெளியே வாப்பா உரத்துக் கத்துவது என் காதிலும் விழுந்தது. நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
– லறீனா அப்துல் ஹக், இலங்கை

Series Navigation