ஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

விக்ரமாதித்யன் நம்பி


ஐரோப்பா, உலகுக்கு அளித்த ஒரு கொடை நாவல். பழமையும் செவ்வியல்தன்மையும் கவிதை மொழியுமான தமிழில் மிகவும் பிந்தித்தான் அது உருக்கொண்டதற்கு வெகுவான சமூகக் காரணிகள் உண்டு.

உலக அளவிலேயே கவிதைப்பரப்பு இருக்கிற அளவு, சிறுகதைவளம் காணப்படுகிற அளவு, நாவல்கள் இல்லை என்கிறபோது, தமிழில் அவ்வளவாக இல்லை என்பது ஒன்றும் கெளரவக்குறைச்சல் இல்லைதான்.

தமிழ் நாவலின் வயது நூற்றிச்சொச்சம். எனில், நல்ல நாவல்கள் என்று சொல்லிக் கொள்ள பத்து, இருபதுதான் தேறும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இன்றும் ஒரு பத்துப் பதினைந்து சேரும்.

நம் நாவல்கள் எல்லாமே எதார்த்தக் களத்தில் உள்ளவைதாம் என்பதும் கவனத்துக்குரியது. உத்தி அளவில் , சொல்லும் முறையில், வடிவத்தில் வேண்டுமானால் வேறுபாடுகள் உண்டே தவிர, மற்றபடி எதார்த்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டவைதாம். விதிவிலக்குகள், புத்ர, நித்ய கன்னி, வாக்குமூலம் மாதிரி சிலதாம்.

நம்முடைய நல்ல நாவலாசிரியர்களான க.நா.சு., ஆர். சண்முகசுந்தரம், எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா., தி. ஜானகிராமன், ஜி.நாகராஜன், நகுலன், சுந்தர ராமசாமி, அசோக மித்திரன், சா. கந்தசாமி, நீல. பத்மநாபன், வண்ணநிலவன், தோப்பில் முகம்மது மீரான், ஜெயமோகன், பெருமாள் முருகன் எல்லோருமே சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு இப்படிப் பிற இலக்கிய வடிவங்களிலும் ஈடுபட்டிருந்தது, நாவலில் இன்றும் அதிகம் சாதிக்கத் தடங்கலாக இருந்திருக்குமோ என்றும் யோசிக்க வைக்கிறது.

ஆர் . சண்முகசுந்தரம், தி.ஜானகிராமன், க.நா.சு., ப.சிங்காரம், ஜி.நாகராஜன், எம்.வி.வெங்கட்ராம், அசோகமித்திரன், கிருத்திகா, நகுலன், ஜெயகாந்தன் ஆகியோரைத் தமிழன் வெற்றிகரமான நாவலாசிரியர்களாகச் சொல்லவேண்டும். சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், நீல. பத்மநாபன், பூமணி, சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஹெப்ஸிபா ஜேசுதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன், பெருமாள் முருகன், ஜெயமோகன், சூ.வேணுகோபால், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரை இதற்கு அடுத்தபடியாகக் குறிப்பிடவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல நாவல்கள், ஒரு நல்ல நாவல் தந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தப் பகுப்பு.

க.சுப்பிரமணியனின் வேரும் விழுதும், சாருநிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஸலிஸமும் ஃபேன்ஸி பனியனும் சித்தார்த்தனின் மின்மினிகளின் கனவுக்காலம் ஆகியவை. வெற்றி பெறாதவை என்றபோதும் நல்ல முயற்சிகள்.

தமிழ்நாவல் எதுவும் உலகத் தரத்துக்கு இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியத் தரத்துக்குக் கூட வராது என்பது சொல்லவும் கேட்கவும் சங்கடம் தருவதுதான். என்றாலும், உண்மை அதுதான். விபூதி பூவின் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி, வைக்கம் முகம்மது பஷீர், சிவராம காரந்த் அளவுக்கு, இந்திய அளவுக்கு, இங்கே ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால், தி.ஜானகிராமனைத்தான், அதுவும் ஓரளவுக்குத்தான் சொல்லமுடியும்.

‘தமிழில் நாவல்கள் இல்லை. ‘

‘தமிழில் இரண்டே இரண்டு நாவல்கள்தாம். ஒன்று, நகுலனின் வாக்குமூலம், இன்னொன்று பிரேதாவின் நாவல் ‘ என்ற அபிப்ராயங்களையெல்லாம் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

டால்ஸ்டாயின் போரும் அமைதியும், ஹெமிங்வேயின் போரே நீ போ மாதிரியெல்லாம் பரந்துபட்ட களம்கொண்ட, நாவல்கள் நம்மிடம் இல்லைதாம். அவ்வளவுக்கு என்றில்லாவிட்டாலும், உரூபுவின் சுந்தரிகளும் சுந்தரன்மார்களும், சிவராம காரந்தின் மண்ணும் மனிதரும், விபூதி பூஷன் பந்தோ பாத்யாயவின் பதேர் பாஞ்சாலி, தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்ய நிகேதனம், பஷீரின் மந்திரப் பூனை மாதிரி ஒருகாலகட்டத்தின் சரித்திரம் அல்லது மனிதகுல ஆவணம் என்கிறாற்போலத் தமிழில் நாவல்கள் இன்னும் வந்துவிடவில்லை. ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி இந்த இரண்டையும் வேண்டுமானால் குறிப்பிடலாம், ஓரளவுக்கு.

கவிதையும் சிறுகதையும் கணிசமாக உள்ள மொழியில் நாவல் வளர்ச்சி குன்றியிருப்பது ஒரு தனி ஆய்வுக்குரியது. பிறகு, எதார்த்தத் தளத்திலேயே, பெரிதும் குறுகிய பரப்புக் கொண்டதாகவே இருப்பது குறித்தும்.

தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதையும் ஓர் எதார்த்த நாவல்தான். எதார்த்த வகை எடுத்துக்கேயான நேரடியான கதைகளில். சிக்கல் எதுவுமில்லாத எளிய நாவல்.

சுதந்திரத்துக்கு முந்தைய தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த- இன்றைய குமரிமாவட்டம் விளவங்கோடுவட்டம் – கடலோரப்பகுதியின் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தை மையமாகவும், மற்ற குடிபடைகள் வாழ்வைப் பின்புலமாகவும் கொண்டது. இதை ஒரு சமுதாய சீர்திருத்த நாவல் என்றே சொல்ல வேண்டும். அதாவது, அந்த நாள்களில் இஸ்லாமிய சமுதாயம் பல மூடநம்பிக்கைகளில் அழுந்திக் கிடந்தது, இன்றைக்கேறும், அதுபோல, வேறு வகையான மூடநம்பிக்கைகளால் கெடலாகாது என லட்சியவாதம் பேசும் நாவல் என்று கொள்ளலம்.

நாவலில் இடம்பெற்றுள்ள பிரதான பிரச்னைகள் பொருந்தாத் திருமணம், பால்ய விவாகம், மதத் தலைவர்கள் மீதான மூடநம்பிக்கை, ஆங்கிலப் பள்ளிக்கு எதிர்ப்பு, வீண்கெளரவம், பணத்திமிர், அதிகாரம் இன்ன பிற.

அஹமதுக்கண்ணு முதலாளியின் தங்கை பதின்மூன்று வயதான நூஹ்உ பாத்திமாவை அறுபது வயதுக் கிழவரான மூசைப்பிள்ளை முதலாளுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அவர் ஒரே வருஷத்தில் பூவாறு பொழியில் படகு மூழ்கிப் போய் இறந்துவிடுகிறார். நூஹ்உ பாத்திமா விதவையாகி நிற்கிறாள். மகள் ஆயிஷாவுக்கு இளவயதிலேயே திருமணம் செய்து வைக்கிறார், அஹமதுக்கண்ணு முதலாளி. மருமகன், பைத்தியம்.

பொருந்தாத் திருமணம், பால்ய விவாகம் இரண்டுமே அந்தக் காலத்தில் இந்து சமூகத்திலும் இருந்தவைதாம். இவை அன்று கடுமையான சமூக பிரச்னைகளாகி, சமூக சீர்திருத்த இயக்கங்களும் தலைவர்களும் அறிஞர்களும் தோன்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திச் சட்ட அளவிலேயே கொண்டு வரச் செய்து நேர்படுத்தியவை. (புதுமைப் பித்தனின் ‘கல்யாணி ‘ கதை இதுதான் என்று நினைவு.)

மதத்தலைவர்கள் மீதான மூடநம்பிக்கையும் இந்து சமூகத்தில் நிலவிய குறைபாடுதான். பெரியாரின் சமூக சீர்திருத்த இயக்கம் வேர்கொண்டதுக்கே இது ஒரு பெரிய காரணம் ஆகும்.

பிறகு, ஆங்கிலப்பள்ளிக்கு எதிர்ப்பு. அந்நாளில் பார்ப்பனர்கள் கடல் கடந்து போனவர்களை ஜாதி பிரஷ்டம் செய்து வைத்தார்கள். பெண்கொடுக்கத் தயங்கினார்கள்.

தமிழ் நீச பாஷை என்று அதைப் பயிலாதும் தமிழாசிரியராக வராதும் இருந்தார்கள்.

பின்னே, வீண்கெளரவம், பணத்திமிர், அதிகாரம் இன்ன பிற.

இவையெல்லாமுமே அன்றைக்கு உயர்ஜாதி இந்துக்களில் வசதியுள்ள பலரிடமும் இருந்த குணக்கேடுகள்தாம். இவற்றாலேயே நிறைய குடும்பங்கள் அழிந்தும் போயின.

பணம், அதிகாரம் கொண்டுவருவதும் அதிகாரம் ஆளையே அழித்துவிடுவதும் இயல்பேயாகும். இதில் இந்து – முஸ்லீம் என்ற பேதமெல்லாம் இல்லை.

ஆக, மீரான் சொல்கிற விஷயங்கள் அஹமதுக்கண்ணு முதலாளி வீட்டில் மட்டுமல்லாது, ஆலாலசுந்தரம் பிள்ளை வீட்டிலோ நாராயணசாமி முதலியார் குடும்பத்திலோ நடந்திருக்கக் கூடியவையும் நடக்கக் கூடியவையும்தாம்.

ஆனால், ஆசிரியர் மிகுந்த சமுதாயப் பிடிப்போடு நாவலாக எழுத வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம். கடந்த காலம் என்பது ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதலாம். சாரு நிவேதிதா தன் முஸ்லீம் நண்பர் ஒருவர் நாகூர் தர்கா பின்னணியில் ஒரு நாவல் எழுதி வைத்திருப்பதாகவும், அதை வெளியிட்டால் அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருப்பதையும் ஹெச்.ஜி.ரசூலுக்கு நேரிட்டதையும், இந்த நாவல் முஸ்லீம் முரசு பத்திரிகையிலேயே தொடராக வந்து, நூல் பலபதிப்புகள் கண்டது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மதிப்புக்குரிய மீரான் அவர்களிடம் ஒரு வேண்டுகோள். சமகால இஸ்லாமிய வாழ்க்கை, மனிதர்கள், உலகத்தைத் தயவுசெய்து நீங்கள் நாவலாக எழுதவேண்டும். கடந்தகாலப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வர வேண்டும். முடிந்தால்தான். இல்லையென்றால், ஒன்றும் பிரச்னையில்லை. நீங்கள் உங்கள் பாட்டுக்கு இப்படியே எழுதிக் கொண்டிருங்கள், போதும்.

பஷீர் நிகழ்காலத்தைத்தான் எழுதினார். நீங்கள் பஷீர் மாதிரி வரவேண்டும். தமிழுக்கு ஒரு பஷீர் வேண்டும். நிற்க.

இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் எல்லோருமே பெரிதும் ‘கட்டுப்படுத்தப்பட்ட ‘ (conditioned people) மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

சாகுல் ஹமீதுக்கண்னு முதலாளி முழுக்க முழுக்க நல்ல முஸல்மான். அவர் இஸ்லாம் மத நெறியில் கட்டுண்டு இருக்கிறார். அந்தஸ்து, குடும்பப் பெருமைகள் வேறே. அவரிடமிருந்து பெற்ற பண்பியல்புகளும், இன்னும்கூட மத மூடநம்பிக்கைகளுமாக இருப்பவர் அஹமதுக்கண்ணு முதலாளி.

பரீத் சற்று மனவளர்ச்சி குன்றியவன் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

அஹமதுக்கண்ணு முதலாளி வீட்டுப் பெண்கள் அனைவரும் தங்கள் சூழலில் கட்டுண்டு இருக்கிறார்கள்.

ஒரு விஷயம் தெளிவாகிறது. மதம், இனம், மொழி, ஜாதி, உயர்வுமனப்பான்மை சகலமும் நம்மைக் கட்டுப்படுத்திவைத்து விடுகிறது. நாம் அந்தச் சூழலுக்குள் இருக்கும்வரை, சுதந்திரமாக வாழ இயலாது. உண்மையான வாழ்வை விட்டுவிட்டு இந்த மாயையில் அழுந்திக் கிடக்க வேண்டியதுதான்.

பெரிய வேடிக்கை என்ன வென்றால், இந்த நாவலில் தன்னளவில் உண்மையாக வாழ்கிறவராக தங்ஙளைச் சொல்லலாம். தங்ஙள் பாமரத்தனத்தை, மதநம்பிக்கையை வைத்து ஒட்டுண்ணியாக வாழ்கிறார் என்றாலும் சுதந்திரமாக இருக்கிறார். இஷ்டப்பட்ட இடத்துக்கு இஷ்டப்பட்ட போது வருகிறார். இஷ்டம் இல்லாத போது நீங்கிப் போய்விடுகிறார். சரியோ, தப்போ, இஷ்டப்பட்ட பாத்திமாவை வசியப்படுத்திவிடுகிறார். அஹமதுக்கண்னு முதலாளியிடமே நூஹ்உபாத்திமாவைப் பெண் கேட்கிறார். பெரிய அளவு எதுவும் கெடுதல் பண்ணியதாகத் தெரியவில்லை. பெண்கள் விஷயத்தில் சபலமாக இருக்கிறார் என்பதுதவிர, வேறு ஒரு குற்றமும் படவில்லை.

இன்னொரு சுதந்திரமான மனிதர், மஹ்மூது. அவர்பாட்டுக்கு உழைக்கிறார், சாப்பிடுகிறார், குடும்பத்தைக் காப்பாற்றுகிறார், அல்லாவைத் தொழுகிறார். அவருடைய இயல்பே இந்த மாதிரி பந்தாவை ஏற்கததாக இருக்கவேண்டும். அதுதான் அவர் அஹமதுக் கண்ணு முதலாளியின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி தருகிறவராக்கி இருக்க வேண்டும். இதற்குப் பின்னணி அவருடைய தைரியம்தான். ஆளைப் பிடிங்கடா என்றதும் கத்தியை உருவிக் காண்பிக்கிறதும், தலைப்பா தொழுகிற காலம் என்று முனகுகிறதும் அதுதான்.

இதை இப்படியும் பார்க்கலாம். இதுமாதிரி கட்டுப்படுத்தப்பட்ட சமுதாயத்தில் தங்ஙள் மாதிரியோ இருக்கிறவர்கள்தாம் ‘சுயம் ‘ இழக்காமல் வாழ முடியும். எனில், இவர்கள் இருப்பது பாதுகாப்பற்ற வெளி. தங்ஙள் ஒரு உதிரி என்றால் மஹ்மூது கலகக்காரன். உதிரியாக இருப்பதும் கலகக்காரனாக இருப்பதும் சிக்கலான வாழ்க்கையையே மேற்கொள்வதாகும். அதேசமயம், சுவாரஸ்யமானது. அவரவர் வழியில் அவரவர் ஏற்படுத்திக்கொள்ளும் அர்த்தமுள்ள வாழ்வு.

இன்றும் சொல்லப்போனால், தங்கள் பாத்திரம்தான் உண்மையாக உருவாகியிருக்கிறது. மஹ்மூது பாத்திரம்கூட லட்சியவாத முலாம் பூசப்பட்டதாகிவிடுகிறது.

இன்னொரு லட்சியவாதபாத்திரம், ஆங்கிலப் பள்ளி ஆசிரியர், மஹபூப்கான். ‘கல்வி அறிவு இல்லாமல், குடும்பப்பெருமை சொல்லி, நாளுக்குநாள் அழிந்து கொண்டிருக்குது நம் சமுதாயம். ஏழைகளைப் பணபலமுள்ளவர்கள் சுரண்டுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், கல்வி தேவை. அதற்கு என்னால் முடிந்ததை நான் செய்தே தீரவேண்டும். நீ வீட்டுக்குப் போனாலும் நான் தனியாக இங்கு வாழ்வேன். ‘ (பக்கம்;228)

மஹபூப்கான், மனைவி நூர்ஜஹானிடம் சொல்பவை இவை. ‘ஒரு நன்மையான விஷ்யத்துக்கு வந்தேன். அதில் நான் இறந்துவிட்டாலும் எனக்கு நன்மையுண்டு. ‘ (பக்கம்;230)

மீரானின் லட்சியவாதமும் சமுதாய (இஸ்லாமிய) சீர்திருத்த நோக்கும் மஹ்மூது, மஹபூப்கான் ஆகிய பாத்திரங்களின் மீது கவியாதிருந்திருக்குமானால், அவர்களின் இயல்பு இன்னும் நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், நாவல் முஸ்லீம் முரசுவில் வந்திருக்க முடியாது.

மீரானின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. முஸ்லீம்கள், சாகுல்ஹமீதுக் கண்ணு முதலாளி, அஹமதுக்கண்ணு முதலாளி, தங்ஙள் போல வாழக்கூடாது. மஹ்மூது, மஹபூப் கான் மாதிரி வாழவேண்டும். அப்போதுதான் இஸ்லாமிய சமுதாயம் மேன்மையுறும். இதுதான் நாவல் சொல்லும் செய்தி.

இந்த வகையில், இது ஒரு பிரசார நாவலே ஆகும். இந்த பிரசாரமே நாவலின் கலைத்தன்மையை ஊனப்படுத்துகிறது என்றும் சொல்லவேண்டும். ஏனெனில், வாழ்க்கை லட்சியத்துள்ளேயோ கோட்பாட்டுக்குள்ளேயோ, எந்த ஒரு சட்டகத்துக்குள்ளுமே அடங்கிவிடுவதில்லை. அதேதான் இலக்கியத்துக்கும்.

‘நீ ஆருவ்வா ? ‘ – முதலாளி கேட்டார்.

‘நான் மஹ்மூது. என்ன வேணும் ? ஜ்உம் ஆவுக்கு நேரமாச்சு, போணும். ‘

‘எனக்குப் பல்லக்கு வந்ததை பாக்கலியா ? ‘

‘சத்தம் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். ‘

‘பின்னேயேன் நீ அங்கிருந்து மோண்டா ? ‘

‘எனக்கு மோள வந்தது மோண்டேன். மோளக்கூடாதா ? ‘

‘நான் வாற நேரத்துலதான் ஒனக்கு மோளணுமா ? ‘

‘நான் என்ன உங்க பல்லக்குலயா மோண்டேன். இது என்னடா உலகம் ? நான் ஒதுங்கியிருந்து மோளக்கூடாதா ? ‘

(பக்கம் 19,20)

‘எனக்கட்ட யாரும் எதுத்துப் பேசினதில்லே. எனக்கப் பல்லாக்கு முன்னால நடந்து போனவனுமில்லே. ‘

‘இது ராஜபாதை. இதுல எல்லாருக்கும் நடக்கலாம். ‘

‘உனக்கு வளிவிட்டு நின்னா என்னா ? ‘

‘போறதுக்கு எவ்வளவோ இடமிருக்குல்லா ‘ ‘

‘உனக்கு திமிரு கூடிப்போச்சு ‘ ‘

‘வழி நடக்கவும், ஒண்ணுக்குப் போகவும் சுதந்திரமில்லையா ? ‘

‘இல்லெ. ‘ உரக்கச் சொன்னார் முதலாளி.

‘இப்பச் சொன்னதுதான் திமிரு. ‘

திருப்பிச் சொன்னார் மஹ்மூது.

‘என்னா ? ‘

‘பேச நேரமில்லே. பள்ளிக்கு நேரமாச்சு. ‘

மஹ்மூது திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

இப்படி அறிமுகப்படுத்தப் படுகிறார் மஹ்மூது.

புரட்சிக்கார முஸ்லீமாக என்று சொல்லலாம்.

எழுபது வருஷத்துக்கு முன் ஒரு கிராமத்தில் பெரும்பணக்காரரை எதிர்த்துப் பேசமுடியுமா, தெரியவில்லை.

‘மணி ஒண்ணரை ஆச்சி. ஒரு ஆளுக்கு இவ்வளவு நேரம் காத்து இருக்கணுமா ? கொத்துமா ஓதுங்க. ‘ – மஹ்மூது வெறுப்போடு சொன்னார். (பக்கம் :21)

‘குத்துக்கல்லுக்கு கெளக்கே உள்ளவர்களுக்கு மாலிக் இப்னு தீனார் பள்ளியில் பேச உரிமையில்லை. ‘

‘மாலிக் இப்று தீனார் பள்ளி, குத்துக்கல்லுக்கு மேல்புறம் உள்ளவர்களுடைய உம்மாமார்களுக்கு சீதனமாகக் கிடைத்ததல்ல. ஆண்டவனின் இல்லம். அது எல்லோருக்கும் உரிமைப்பட்டது. ‘ மஹ்மூது பதிலடி கொடுத்தார்.

பரீதும் ஆயிஷாவும் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் பஷீரின் ‘பால்ய கால சகி ‘யை நினைவுபடுத்துகின்றன. பஷீரைப் படிக்காதவர்களுக்கு பிரச்னையில்லை.

எதார்த்தமாகப் போய்க்கொண்டிருக்கிற நாவல், திடார் திடாரென்று கற்பனாவாத எதார்த்தமாக மாறுவதும், மொழிநடைகூட அப்படியே ஆவதும் பழைய மலையாள மொழிபெயர்ப்பு நாவல்களை அவ்வப்போது ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன.

எது எப்படியிருந்தாலும், இஸ்லாமிய சமுதாய வாழ்வைச் சொல்லும் நாவல்களின் தொடக்கமாக மீரானின் நாவல்கள் இருப்பதை முக்கியமான ஒன்றாகவே குறிப்பிடவேண்டும். இதன் முதல் ஆரம்பம்தான், ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை ‘. இந்த வகையில், இதற்கு ஒரு தனி இடம் எந்த நாளும் இருக்கும். இனிவரும் நாள்களில் அந்த சமுதாய வாழ்வு இன்னுமின்னும் துலக்கம் பெற இது ஒரு வழிகாட்டியாக விளங்கும்.

***

Series Navigation

author

விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி

Similar Posts