ஒட்டடை

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

தேவமைந்தன்


நாற்பத்தேழு வயதில் என்னையும் தன்னையும்
நிரந்தரமாய் மறந்துபோன மூர்த்தி அண்ணன்
புதுச்சேரிக்கு வந்த பொழுதெல்லாம்
திரும்பத் திரும்ப எனக்கு அறிவுறுத்துவார்:
‘ ‘அறையில் ஒட்டடை சேர விடாதே!
ஒட்டடை எவ்வளவு சேருகிறதோ,
அவ்வளவு மனக்கவலையும் சேரும் ‘ ‘ என்பார்.
‘அதை எப்படிச் சுத்தம் செய்வது என்றா ? ‘
என்று வழமைபோல் விளங்காது கேட்பேன்.
சிரித்துக் கொள்வார். ‘ரொம்பவும் படித்துவிட்டாய்!
இதெல்லாம் உனக்கு இப்பொழுது கிண்டல்தான் ‘
என்றார். முதல் ஒட்டடை என்மன மூலையில் படிந்தது.
‘ ‘நிரம்பவும் படித்து விட்டேனா ? நானா ? இருக்காது..
அண்ணன் பாசத்தால் சொல்கிறார் ‘ ‘ என்றது காரணம்.
‘ ‘இல்லை, இல்லை: அண்ணன் சொன்னால்
சரியாகவே இருக்கும்! ‘ ‘ – எக்களித்தது அகந்தை.
முதல் ஒட்டடை இறுகியது; கம்பி தட்டியது.
வீடணன் மகளின் கூந்தல் அழகாய்
வீட்டின் கூரையும் சுவர்களின் மூலையும்
தொங்க விடுகிற திரிந்த மென்பொருள்.
தொட்டுப் பார்த்தால் மெத்துமெத்தெனக் குழையும்.
காதலும் காமமும் மோதும் மனசுள்.
கலைவலை நெய்யக் கற்ற கலைஞன்,
கலைஞியோ ? இருக்கலாம் –
‘ ‘கடிக்கும் கொசு பெண்கொசு ‘ ‘ என்ற
உயிரியல் உண்மை போல.
கலைஞி சிலந்தி நுட்பமாய் நூல்இழை
தன்னுடல் சாரம் எடுத்துப் பின்னும்
வலையில் நானும் வீழ்ந்தேன்.
சுகமாய் இருந்தது; ராட்சசி வரும்வரை.
கூர்விரல் நுனிகளால் குத்திக் குத்தி
உமிழ்ந்த வேதி எச்சிலால் குழைத்து
உண்ணத் தலைப்பட, உடலெலாம் நடுங்கி
கடனெலாம் கழித்தபின் உயிரும் ஒடுங்கினேன்.
மறதி. விளிம்புகள் அற்ற மறதி.
சாந்தி. நவசக்தி அடிகள் சொல்லிய
நிரந்தர ஆனந்த நிம்மதி – சாந்தி.
ஒடுங்கினேன் உயிருள். கணம்சில கழிந்தன.
உயிர்ப்பு மீண்டது. என்னது ?
என்கை காலா இவைகள் ?
மனிதன் அல்லவா நான் ?
எனக்கப்படி எப்படி
குச்சி ரோமக் கைகால் முளைத்தன ?
பார்வையின் பருமாணமே வேறாயுள்ளதே ?
ஏதிவ் வினிய வாடை, எச்சிலில்!
என்னஇவ் உந்துதல் ?

பின்னத் தொடங்கும் ‘ ‘நான் ‘ ‘
பிறவி வரிசையில்
இலக்க வாசிப்பு வேறு –
யாருக்கு ?
****
pasu2tamil@yahoo.com

Series Navigation