ஐம்பூதங்களின் அழுகுரல்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

அவதானி கஜன்


நிலம்
—-
மனிதா…
சுவாசத்தை இழக்கையில்
என்னுடன் சங்கமிக்கின்றாய்.
உனக்குமட்டும் ஏன் மரியாதை ?
என்னில் அசுத்தங்களை வாரி இறைக்கும் நீ
இறுதியில் நீயும் அசுத்தம் அடைந்தவனாய்
என்னுடன் சேர்கின்றாயே !
கண்ட இடத்தில் காறிவிட்டு
கைவீசும் திசையில் குப்பைபோட்டு
வாழ்வு காட்டும் நீ
ஆட்சி செய்யும் அரசாங்கம்
அநியாயக் குப்பைகளுக்கு
அந்நியச்செலாவாணி தரவேண்டுமோ ?
அதைக்கேட்க உனக்கேது நியாயம் ?
அடுத்தமுறை அதற்கென்ற இடத்தில் குப்பையை எறி !

***

நீர்
—-
என்னால் பல நன்மைகள்
பிரதிபலனாய்
எனக்கு அசுத்தங்கள்
தாகம் என்றால் என்னை நாடும் நீ
தகுந்த வேலை செய்யத்
தவறியதால் எனக்குத் தட்டுப்பாடோ ?
குளமெல்லாம் கூவாமாகுது
கங்கையெல்லாம் கட்டாந்தரையாகுது
கவனியாமல் இருந்துவிட்டு
கடைசியில் மற்றோர் மீது பழியோ ?
மேல்நாட்டைக் கவனித்தாயா ?
என்மகனாக மின்சாரம் வந்தான்
என் அசுத்த பாகங்கங்கள்
அவனால் சுத்தம்செய்யப்படுகின்றன
பல இடங்களில்
நீ மட்டும் என்னை
மேலும் மேலும்
அசுத்தம் செய்து கொண்டிருக்கின்றாய் .
உந்தன் சோம்பலுக்குச்
சற்றுத்தள்ளி முற்றுப்புள்ளி வை.
அதுவரை எனக்காக தொழிற்படப் புறப்படு

***

காற்று
—-
என்னை உள்ளிழுக்கும் நீ
வெளிவிடுகையில் அசுத்தத்தை
தருகின்றாயே !
தாவரத்தைக் கவனித்தாயோ ?
அது என்னைச் சுத்தப்படுத்த
நீ மட்டும் எந்தன் எதிரியாய் ஏன்தானோ ?
சமையல் வீட்டில் புகை
சத்தமிடும் தொழிற்சாலையிலும் புகை
சச்சரவான வாகனப்புகை
பொதுவாய்ப் பொறாமையில் புகையும் மனிதனே,
கொஞ்சம் கவனம் செலுத்து என்னில் !

***

ஆகாயம்
—-
அண்டவெளியின் பாதை நான்
அழகான காட்சி நான்
அந்தியிலே சிவந்தாலும்
என்நிறம் நீலம்தான்
என்னை ஆராயாது உறங்குவதேனோ ?
முகிலைக் கண்டு என்னை வெள்ளையென்பாய்
கங்குலைக் கண்டு கருப்பென்பாய்
மங்கையைக் கண்டு என்னை மறந்திருப்பாய்
மொத்தத்தில் விஞ்ஞானம் வேண்டாது
என்றன் அருமை மறப்பதேனோ ?

***

நெருப்பு
—-
கதிரவன் உறங்குகையில்
என்னை அரவணைக்கும் மனிதா
தீ என்றால்
அழிப்பது என்ற எண்ணத்தில்
என்னை அவமதிப்பதேனோ ?
சுடரானால் சுகம் அளிக்கும் நான்
சுவாலையானால் சோகம் தருகின்றேன்.
சுடராக்குவதும் சுவாலையாக்குவதும் நீதானே ?
காற்று என்றன் சகோதரன்
எண்ணெய் என்றன் நண்பன்
வெப்பம் அதிகரிப்பின் நான் யமன்
மாயை நிறைந்த வாழ்விலிருந்து
உன்னை நான் மீட்கிறேன்
சில சமயங்களில்
அதற்கு நீ நன்றி சொல்ல மறந்ததேனோ ?

***

Series Navigation

author

அவதானி கஜன்

அவதானி கஜன்

Similar Posts