ஐந்திணை ஐம்பதும், எழுபதும்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

முனைவர் மு. பழனியப்பன்



சங்கம் மருவிய காலத்து நூல்களில் திணைமாலை நூற்றைம்பது ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது ஆகிய நூல்கள் அகப்பொருளைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்கும் நூல்களாகும். சங்க இலக்கியச் சாயலை உள்வாங்கி இந்நூல்கள் படைக்கப்பெற்றுள்ளன. வெண்பா வடிவம், ஒரே புலவர் அனைத்துத் திணைகளையும் பாடுதல் போன்றவற்றால் இவை சங்க இலக்கியச் சாயலில் இருந்து வேறுபட்டாலும், இவற்றிற்கும் சங்க இலக்கியங்களுக்கும் உள்ள பாடுபொருள், சுட்டி ஒருவர் பெயர் கொள்ளா முறைமை, அன்பின் ஐந்திணைகளைப் பாடுதல் போன்ற பல ஒற்றுமைகள் கருதியே இவை சங்கம் மருவிய நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இச்சங்கம் மருவிய காலத்து நூல்களில் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது ஆகியன இலக்கியவாணர்களால் அவ்வப்போது எடுத்தாளப் பெற்றுக கொண்டே வந்துள்ளன. தலைவன் தலைவியரின் இன்ப வாழ்வைச் சுட்டும் பல பாடல்கள் அடங்கிய பகுதிகளாக இவை உள்ளன. இவை தரும் செய்திகளைத் தொகுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐந்திணை ஐம்பது
அன்பின் ஐந்திணைகளாக விளங்கும் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றைப் பகுப்புகளாகக் கொண்டுத் திணைக்குப் பத்துப்பாடல்கள் என்ற நிலையில் ஐம்பது பாடல்களைக் கொண்டதாக இந்நூல் படைக்கப் பெற்றுள்ளது. இப்பாடல்களுக்குத் துறைகளும் தக்கநிலையில் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார் என்பவர் ஆவார். இந்நூலில் உள்ள ஐந்து திணைகள் சார்ந்த ஐம்பது பாடல்களையும் இவர் ஒருவரே இயற்றியுள்ளார். இவரை `வண்புள்ளி மாறன் ‘ என்று பாயிரம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக இவரை இலக்கப் புள்ளியிடுவதாகிய கணக்கில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கருதுவர். (அ. நடராசப்பிள்ளை (உ. ஆ), நாலைந்திணை,ப. 9) “ஐந்திணை ஐம்பது ஆர்வத்தி னோதார் செந்தமிழ் சேராதவர்” (பாயிரம்) என்ற பாயிர ஈற்றடிகளின் வழியாக இந்நூல் செந்தமிழ் நலம் சார்ந்தது என்பது உறுதியாகின்றது.

நூற்பொருள்
முல்லை
இத்திணையிலுள்ளப் பத்துப்பாடல்களும் முல்லை நில முதல், கரு, உரிப் பொருள்கள் சார்ந்து இலக்கிய வளத்துடன் நிற்கின்றன. இத்திணையின் நிறைவுப்பாடல் ஒரு படக்காட்சியைப் போல் அமைக்கப் பெற்றுள்ளது. தலைவன் தன் வருகைக்காகத் காத்திருக்கும் தலைவியின் கற்பு சான்ற நிலையை எண்ணிப் பார்க்கின்றான். அதனைத் தன் பாகனிடம் பகிர்ந்து கொள்ளுகின்றான்.

நூல்நவின்ற பாக! தேர் நொவ்விதாகச் சென்றுஈக!
தேன்நவின்ற கானத்து எழில்நோக்கி தான்நவின்ற
கற்புத்தாள் வீழ்த்துக் கவுள்மிசைக் கைஊன்றி
நிற்பாள் நிலைஉணர்கம் யாம் (10)

என்ற பாடலில் தலைவி கற்பு நோற்று நிற்கும் பாங்கினை அழகாகப் படம் பிடித்துக்காட்டப் பெறுகிறது.

தேர்ப்பாகனே! நீ தேரினை விரைவாக ஓட்டு. தேன்பொழியும் காட்டினை நோக்கிய வண்ணமே என் வரவினை எதிர்பார்த்துத் தலைவி எனக்காகக் காத்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு நான் கூறிய நம்பிக்கை சொற்களே இன்னும் அவளை வாழவைத்துக் கொண்டுள்ளன. இச்சொற்களையும், தன் கற்பின் திறத்தையும் தாங்கிக் கொண்டு அவள் தன் மேவாய்மீது இடக்கையினைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் காட்சி எனக்குக் கண் முன்னே தெரிகிறது. எனவே உடன் தேரைச் செலுத்து என்றுத் தலைவன் கூறும் சொற்களின் காட்சிப்படுத்தல் கற்பவருக்குத் தலைவியின் காத்திருக்கும் தோற்றத்தைக் கண்முன் நிறுத்துகிறது. முல்லையின் பெருமையை இப்பாடல் பெரிதும் உணர்த்தும்.

முல்லை நிலத்தில் வரும் கார்காலம் பற்றிச் சில பாடல்கள் இப்பகுதியில் கருத்துரைக்கின்றன. திருமால் நிறம் கொண்டு எழுந்த மேகமானது, முருகப்பெருமானின் வேல் போல் மின்னலுடன் தோன்றித் திரபுரம் எரித்த சிவனின் மாலைக்குரிய கொன்றை மலர்கள் பூக்க வலமாக வந்தது என்று பருவ வரவினைத் தோழி தலைவிக்கு அறிவிப்பதாக ஒரு பாடல் அமைந்துள்ளது (1).

இப் பருவ வரவால் தலைவன் துணையின்றித் தலைவி வருந்துகிறாள். மயில் ஆட, மலை தாழ்ந்து வந்த மேகங்களைக் கண்டதும் தலைவியின் தோள் பீர்க்கம்பூ நிறத்தைப் பெற்றுப் பசந்தது (2). இம் மேகங்களைக் காணும் பொழுதெல்லாம் தலைவியின் கண்கள் ஈரம் பூத்துநின்றன ( 5). இம் மழை நேர மாலைக் காலத்தில் ஆயர்கள் ஊதும் குழலோசை தலைவியினுள் வேல் கொண்டு எரிவது போன்று துன்பத்தைத் தந்தது(7). வண்டுகள் ஊத வந்த இருள்மாலை இணைந்திருப்பாருக்கு நன்மை தந்தது. பிரிந்து நிற்கும் தலைவிக்கு வருத்தத்தைத் தந்தது(6). இப்பாடல்கள் அனைத்தும் தலைவியின் வருத்தத்தைப் பதிவு செய்வனவாகும்.

கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்ற தலைவனின் சொற்களை சிதைக்கும் நிலையில் முரசுகளைப் போல மேகம் இடியோசையை எழுப்பியது (3). தலைவன் சென்ற நாட்டில் தலைவியை வருத்தும் இடி, மேகம்,மின்னல் போன்றன எழுவது இல்லை. அவற்றால் வரும் துயரத்தைத் தலைவன் உணர்ந்தான் இல்லையோ(4). பருவ வரவின்போது தலைவன் வராநிலை கண்டு தலைவி அழுகிறாள். இதுகண்டுத் தோழி “வருந்தாதே. இந்த மழை புதிய மழை. வம்ப மழை. இதனை உண்மைப் பருவம் என்று எண்ணி முல்லைப் பூக்கள் மலர்ந்துவிட்டன. நிச்சயம் கார்காலத்தில் தலைவன் வருவான்” (9)

இம்முன்று பாடல்களும் தலைவனின் சொற்கள், அவனின் துயரமின்மை போன்றவற்றின் இயல்புகளை எடுத்துரைப்பனவாகும்.

இப்பகுதியில் அமைந்த மற்றொரு குறிக்கத்த பாடல் பின்வருமாறு.
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனிபோல் பொற்பத் திருந்திழாய்
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத
கானம் கடந்து சென்றார் (8)

காதலர் பிரிந்தால் துயரம். இணைந்தால் இன்பம். மழை வறண்டால் துயரம். பொழிந்தால் வளமை. இவ்விரு கருத்துக்களையும் இணைத்து ஒரு சொற்சித்திரத்தை மேற்பாடல் விளைவிக்கிறது. பிரிந்தவர் மேனிபோல கிடந்த மழையின்றி வறண்டு கிடந்த முல்லைப் பூ, பெய்த மழையால் பொருந்தியனர் மேனி போலச் செழித்தது என்பது பாடலின் பொருளாகும். பிரிவிற்கும், இணைவிற்கும் முல்லைப் பூவைச் சான்றாக்கும் இப்பாடல் இப்பகுதியில் அமைந்த குறிக்கத்தக்க பாடலாகும்.

குறிஞ்சி
குறிஞ்சித்திணையில் பகற்குறி இடையீடு, இரவுக்குறி மறுத்தல், வரைவு கடாஅதல் போன்றன பற்றிய செய்திகள் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன.

தலைவன் ஒருவன் தலைவியைக் காணுகின்றான்.கண்டபின் அவனுக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள அவன் தலைவி குறித்த பல செய்திகளை அறிய ஆசைப்படுகிறான். அதற்காக அவன் பல வழிகளை மேற்கொள்ளுகிறான். அதில் ஒரு வழி தோழியிடத்தில் வேறொன்று விசாரிப்பது போல தலைவியை விசாரிக்கும் பாங்கு ஆகும். அச்செய்தியைப் பின்வரும் பாடல் உணர்த்துகிறது.

புனைபூந் தழைஅல்குல் பொன்அன்னாய்! சாரல்
தினைகாத்து இருந்தேம்யாம் ஆக வினைவாய்ந்து
மாவினவு வார்போல் வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவல் உற்றதுஒன்று உண்டு ( 14)

என்ற இப்பாடலில் தலைவன் ஏதோ ஒரு விலங்கினைத் தேடி வந்ததாகவும், அது குறித்து வினவுவது போல தலைவி பற்றிய செய்திகளை அறியவிரும்பியதாவுமாக தோழியிடம் செயல்பட்டுள்ள செய்தி காட்டப் பெற்றுள்ளது.

பகற்குறிக்கண் தலைவன் தினைப்புனம் காத்த தலைவியைச் சந்தித்துக் கொண்டிருந்தான். அப்படியே சில நாள்கள் கழிந்தன(1). தினை அறுவடைக்காலம் வந்தமையால் இனிப் பகற்குறி தடைபடும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகத் தோழி “காவல் இயற்கை ஒழிந்தோம். தூஅருவி பூக்கண் கழுஉம் புறவிற்றாய் பொன்விளையும் பாக்கம் இது எம்மிடம்” (12) என்று பகற்குறி இடத்தை மறுத்துரைத்து வரைவிற்கு வழி வைக்கிறாள். மற்றொரு பாடலில் ” ஏனல் மறந்தும், கிளி இனமும் வாரா” (18) என்றுக் குறிப்பாகப் பகற்குறியை மறுக்கிறாள் தோழி.

பகற்குறி மறுத்தபின் தலைவன் இரவுக்குறிக்கு இரங்கினான். தலைவியும் அளி செய்தாள். என்றாலும் அவள் அவன் வழி அருமை குறித்து வருத்தமடைந்தாள். ” நீள் வேல் துணையாக கடுவினை வால் அருவி நீந்தி நடு இருள் இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள் என்னாவாள்” என்று தலைவியின் வருத்தத்தைத் தோழி எடுத்துரைக்கிறாள்(19). தலைவன் வரும் வழியில் வேங்கை பிழைத்த யானைகள் கோபத்துடன் உலவலாம். அவ்வழியில் தலைவன் வருகையில் ஏதும் ஊறு ஏற்படுமோ என்று எண்ணி தலைவியின் கண்கள் தூங்க மறுத்தன என்று தோழி மற்றொரு பாடலில் குறிப்பிடுகிறாள்(16). தலைவன் வரவெண்ணி தலைவயின் உரு உள் உருகி நின்று ஒடுங்குகிறதாம் (17) என்றும் தோழி குறிக்கிறாள். இந்த அளவிற்கு தலைவி மெலிவான நெஞ்சினை உடையவளாக உள்ளாள்.

தலைவனும் தலைவியும் கலந்து உறவாடினர். அந்த இன்புறுத்தலால் தலைவியின் கண்கள் சிவந்தன. இது குறித்து ஐயம் எழுப்பிய செவிலிக்கு அருவி நீராடலால் இது விளைந்தது என மொழிகிறாள் தோழி (15).

களவு ஒழுக்கம் தாயர்க்குத் தெரிந்ததும் தலைவியை இற்செறித்தனர். இந்நிலையில் தலைவனைப் பொருந்தாது அவளின் தோள்கள் வருந்தின. இந்த வருத்தத்தை தலைவன் நாட்டிலிருந்து வரும் அருவி நீராடி அகற்றுவேன் என்கிறாள் தலைவி.(13)

களவால் நலிந்த தலைவிக்கு நேர்ந்தது யாதென்று அறியாத செவிலி அணங்கு அவளை வெருட்டியது என்று கருதி வெறியாட வேலனை அழைக்கிறாள். அவன் மறியாட்டை ஈர்த்து அதன் உதிரத்தைப் பல இடங்களில் தூவி வெறியாட முயன்றான். இதனைத் தடுக்க வேண்டுகிறாள் தலைவி.

இவ்வாறு தலைவன் தலைவியின் இன்புறு வாழ்வினைக் குறிஞ்சிப் பாடல்கள் காட்டி நிற்கின்றன.

மருதம்
பாணன், தலைவன், தலைவி, பரத்தையர், மகன் போன்ற பலர் இத்திணையில் அகத்திணை மாந்தர்களாக புனையப்பெற்றுள்ளனர். அதிக அளவிலான அகத்திணைப் பாத்திரங்கள் இடம்பெற்ற பகுதி இது என்பது குறிக்கத்தக்கது.

தலைவனின் களவு கால இன்பத்திற்கு உரியவளாக இருந்த தலைவி கற்புக் காலத்தில் அதற்கு மாற்றாகிவிடுகிறாள். தலைவன் அன்புத் தலைவியைப் பிரிந்து போகின்றான். தலைவி தன் நிலையைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறாள். ” சார்தற்குச் சந்தனச்சாந்து ஆயினோம் இப்பருவம் காரத்தின் வெய்ய என் தோள்” (24) என்ற அடிகளில் முன்னர் சந்தனத்தின் குளிர்ச்சியைப் போலத் தலைவனுக்கு இருந்தோம். இந்தக் காலத்தில் புண்ணிற்கு வைக்கப்படும் காரத்தின் வெம்மையைப் பெற்றுவிட்டோம்.

மாற்றொழுக்கம் உள்ள தலைவனோடு புலப்பது எம்மால் முடியுமா? ஐந்துவகைப்பட்டு பின்னப்பட்டு கருமையாய் அழகாய் இருக்கிறது என்று பாராட்டப் பெற்ற எம் கூந்தல் தற்போது வெண்மரல் போல் திரிந்துவிட்டது. இதுதான் தலைவன் வெறுப்பிற்குக் காரணம் (27) என்று மற்றொரு தலைவி தன் நிலை பகர்கின்றாள்.

தம்மை மறந்த தலைவனை ஒரு தலைவி தழுவ மாட்டேன் என்று சூள் செய்கிறாள். ஆனால் அவனைக் கண்டதும் அவன் சொல்லில் மயங்கி அவன் சொன்னதைச் செய்யும் அடிமையாகிவிடுகிறாள் (29). குளிர்காலமாக இருந்தாலும் எரியும் உடம்பினுக்குத் தென்றல் இனிது. அதுபோலத் தலைவனோடு நான் புலந்து நின்றாலும் அவனின் கூடல் எனக்கு இனிதாகும் (30) என்று மற்றொரு தலைவனின் கூடல் உண்மையைப் பகர்கின்றாள்.

தலைவனின் மாற்றொழுக்கம் கருதி தலைவி புலக்கின்றாள். இவளுக்கு வாயிலாகப் பாணன் வருகின்றான். வந்த பாணனிடம் கொல்லன் தெருவில் ஊசி விற்பவர் பெறும் பயனைப் போல என்னிடத்தில் தலைவனின் அருளுடைமையைப் பற்றி எடுத்துரைக்காதே என்று பாணனின் வாயிலைத் தலைவி மறுக்கிறாள். (21) என்னை வாயில் நேர்விக்க ஏன் இங்கு வந்தாய். என் தங்கையராகிய பரத்தையர் வீட்டிற்குச் சென்று தலைவனுக்கு இனிய கீதங்கள் பாடு (22) என்று மற்றொரு தலைவி பாணனை வழிப்படுத்துகிறாள். இப்பாடலில் தலைவியின் முதுமைதான் தலைவனைப் பரத்தையர் பக்கம் அழைத்தது என்பதாக ஒரு பொருள் உரைந்துகிடக்கிறது. ஏனெனில் தலைவி பரத்தையரைத் தங்கையர் (எங்கையர்) என்று விளித்துள்ளாள்.

மற்றொரு தலைவி பாணனே! தலைவனின் அருளுடைமையைப் பற்றி எம்மிடம் பேசாதே. சான்றோர் அருளுடையவராக இருந்தால் பிறர் வருந்தும் செயல்களைச் செய்யமாட்டார். அதனால் தலைவன் அருளுடையவனும் இல்லை. சான்றோனும் இல்லை (23) என்று பாணனின் மொழிகளை மறுத்துரைக்கிறாள்.

இத்திணையில் இடம் பெற்றுள்ள மகன் குறித்த பாடல்கள் அக்கால இயல்பு வாழ்வினை அப்படியே படம் பிடிப்பனவாக உள்ளன. மகன் கூறும் மழலை மொழிகள் பெருவிருப்பத்தைத் தலைவனிடம் ஏற்படுத்தினவாம். இதன் காரணமாக தலைவிக்கு அன்பு செய்ய தலைவன் காத்து நிற்பதாக பாணன் வாயில் மொழிந்தான். இது கேட்டத் தலைவி தலைவனின் பல் மகளிர் விரும்பும் மார்பு என்னைப் புணர்ந்தபோதும் வருத்தமே படும். அதனால் அவன் என் பக்கல் வரவே வேண்டாம் என்று மொழிகிறாள்(25).

தலைவன் பரத்தையரை நாடி புதிய மணம் புரிந்து விழாக் காணப் புறப்பட்டான்.அப்போது மகன் எதிர்ப்பட தலைவனின் மனம் வருத்தம் கொண்டது. அவன் புதுமணம் புரியாது தவிப்போடு பரத்தையர் குழாத்திடையே நின்றான். இதைக் கண்டு நான் மகிழ்ந்தேன் என்று தலைவி மகிழ்வு கொள்கிறாள்.(26) மற்றொரு தலைவி மகன் தடுப்பவும் பரத்தையைக் காணச் சென்ற தலைவன் நிலை கண்டு மிகு வருத்தம் கொள்ளுகின்றாள் (28).

இவ்வாறு இல்லற நுட்பம் கிளக்கும் நாடகமாக இப்பகுதி படைக்கப் பெற்றுள்ளது.

பாலை

பாலை நில இயல்புகள் இப்பகுதியில் நயம்பட எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.

புலியின் நகம்போல முருக்கமலர்கள் பூத்துள்ளன. இவ்விளவேனில் பருவத்தைக் காணும்போதெல்லாம் தலைவியின் உள்ளம் கலங்குகின்றது. தலைவன் பிரிவால் இவ்வருத்தம் தலைவிக்கு எழுகிறது(31). பாலை நிலமானது கொடிய வெம்மை உடையது. இவ்வெம்மையைச் சிறிதுத் தனிக்க அந்நிலத்தில் திரியும் வருத்தம்மிக்க ஆண்யானையானது சிறுதுளித் தண்ணீரை எடுத்து பெண்யானையின் உச்சி மீது தெளிக்கும். இவ்வன்புக் காட்சியைக் கண்ட தலைவன் தன் செலவைத் தவிர்ப்பான் (32). ஆறளைக்கும் கள்வர் பயம் மிக்க பாலை வழியில் தலைவியின் அன்பு துறந்து தலைவன் செல்வானோ. செல்லமாட்டான் (34). நடுகற்களின் நிழலில் ஆறலை வேட்டுவர் வெட்டி எறிந்த வழிப்போவாரின் தசைகளை தின்றுவிட்டு ஓய்வெடுக்கும் பேய்கள் நெருங்கிய சுரத்தின் வழியாகத் தலைவன் போவானா.. மாட்டான்…(35) வெம்மை காரணமாக நீர் தேடி அலைந்த ஆண் மானும் பெண்மானும் ஓரிடத்தில் சிறிதளவு நீரைக் கண்டன. இந்நீர் ஒரு மானின் வருத்தத்தைப் போக்கும் அளவினது. இரு மான்களும் நீருண்ண முயன்றன. அதில் ஆண்மான் பெண் மான் உண்ணட்டும் என்று நீர் அருந்துவது போல கள்ளத்தினால் ஊச்சுகிறது (குடிப்பதுபோல நடிக்கிறது). இந்த அன்புக் காட்சியைக் கண்டதும் தலைவன் தலைவியின் அன்பு நாடி வந்துவிடுவான்.(38)

இவ்வாறு தலைவனின் பிரிவுத் துயரால் வருந்தும் தலைவியின் நிலை இப்பாடல்களில் காட்டப் பெற்றுள்ளது. தலைவன் தன் பிரிவு தலைவிக்கு எந்த வருத்தத்தைத் தரும் என்பதையும் உணர்ந்திருந்தான். அது பற்றியும் சில பாடல்கள் உள்ளன.

அன்பாகத் தலைவியைத் தழுவும் காலத்தில் சற்றுப் பிரிவு ஏற்பட்டுப் புடை பெயர்ந்தால் அவ்வளவில் தலைவியானவள் அப்பிரிவை ஆற்றமாட்டாது துன்பப்பட்டு, விம்மி, பெருமுச்சுவிட்டு வருந்துவாள். அப்படிப்பட்டவள் நான் பிரிவதை ஆற்றியிருப்பாளா? என்று தலைவன் தலைவியின் நிலைக்கு வருந்துகிறான் (39).

தலைவன் ஒருவன் இன்று தலைவியின் அருகிருக்கும் போது ஏற்படும் மகிழ்வையும், நாளை பிரிந்து செல்லும்போது ஏற்படும் துன்பத்தையும் ஒரு சேர எண்ணிப்பார்க்கிறான்.

“இன்றுஅல்கல் ஈர்ம்படையுள் ஈர்ங்கோதை தோள்துணையா
நன்கு வதிந்தனை நல்நெஞ்சே நாளைநாம்
குன்றுஅதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலோ சேர்க்கம் இடம்” (40)

இன்று குளிர்ந்த படுக்கையில் தலைவியின் தோள்களைத் துணையாகக் கொண்டு நன்றாக வதிந்து இருக்கும் நெஞ்சமே! நாளை நீ பிரியப்போகும் பிரிவை எண்ணிப்பார். குன்றுகளடர்ந்த கொடுமையான வழியில் தனியாளாய் நீ போக வேண்டும் என்பதை எண்ணிப்பார் என்று தலைவன் தன் நெஞ்சத்திடம் கூறுகின்றான். இக்கருத்து தலைவனின் நல்லுள்ளத்தைக் காட்டுகின்றது.

இவ்வாறு தலைவன் தலைவியின் பிரிவு பற்றிய செய்திகள் இப்பகுதியில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இவைதவிர தலைவி தலைவனுடன் உடன்போகின்றாள். அதுபோது தாயர் இப்பிரிவெண்ணிப் புலம்புவதாகவும் சில பாடல்கள் இப்பகுதியில் இடம்பெற்று உள்ளன.

பால்போன்ற மொழிபேசும் என்மகள் தான் விளையாடிய பொம்மைகளையும், பந்துகளையும், வளர்த்த பைங்கிளிகளையும், பழகிய தோழியர் கூட்டத்தையும் மறந்து விட்டுத் தலைவன் பின் சுடுகின்ற காட்டினை நோக்கிப் போகும் வல்லமை பெற்று விட்டாளா? (33) என்று ஒரு தாய் கலங்குகிறாள். மற்றொரு தாய் என் வீட்டின்முன் தோழியரோடு சற்று நேரம் விளையாடுகையில் அது தாளாமல் தளரும் என் மகள் தலைவனோடு நெடுந்தூரம் போகும் பெற்றியைப் பெற்றிருப்பாளா என்று கலங்குகிறாள் (37)

இவ்வாறு பாலைப் பாடல்கள் தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் வருத்தத்தையும், தலைவியைப் பிரிவதால் தலைவனுக்கு ஏற்படும் வருத்தத்தையும், தலைவியின் உடன்போக்கால் தாயர்க்கு ஏற்படும் வருத்தத்தையும் ஒரு சேரக் காட்டுகின்றன.

நெய்தல்
நெய்தல் திணைப்பாடல் பத்தும் பத்துவகைப்பட்டனவாக உள்ளன.

தலைவன் பிரிவால் என் கண்கள் உறக்கம் இழந்தன. துணையைப் பிரியவே பிரியாத இந்த அன்றில் பறவை ஏன் என்னைப்போல் கதறிக் கொண்டு இருக்கிறது (41). தலைவன் வந்து சென்ற தேர்த்தடத்தை மணலில் விளையாடும் நண்டே நீ அழித்துவிடாய் என்று தலைவி வேண்டுகிறாள்(42). பல்லியின் முட்டை போன்று காணப்படும் புன்னை மலர்களை உடைய மணற்குன்றில்மேல் ஒரு தலைவி ஏறி நிற்கின்றாள். நின்றவள் தலைவன்தன் மார்பு கிடைக்கும் என்றால் இக்கூடல் சேரட்டும் என்று கூடலிழைக்கிறாள்(43). தலைவன் பிரிந்தான். அதனால் தலைவி அழுகிறாள். இதன் காரணமாக அவளின் கண்கள் சிவக்கின்றன. இந்நிலையில் இவளுக்கு ஏற்பட்ட துன்பம் யாது என்று கேட்டுச் செவிலித்தாய் வந்து வினவினாள்.அதற்குத் தலைவி நான் கட்டிய சிறு மண் வீட்டை இந்த அலை அழித்தது. அதனால் அழுதேன் என்று சொல்லி நின்றாள் (44).

தலைவன் என் வளைத்தோள் பற்றி காதல் உரைத்த மொழிகளை நான் மறக்கவில்லை. இந்த கடற்கரையில் இதற்குச் சான்றாக இருந்த பறவைகளும் மறந்திருக்கமாட்டா என்றே நினைக்கின்றேன் என்றுத் தலைவனின் அளியைத் தலைவி எண்ணுகின்றாள்( 45). தலைவியின் தோள் நலத்தைத் தலைவன் விரைவில் வரைதலைச் செய்யாது கெடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் உடனே வரைதலைச் செய்யட்டும் என்று தோழி கூறுவதாக ஒரு பாடல் உள்ளது (46). தலைவனே… சான்றோர் என்பவர் மிக்கப் புகழுடையவர்கள். அவர்கள் மற்றவர் துன்பத்தைக் கண்டு அதைத் தீர்க்க வல்லவர்கள் ஆவர். ஆனால் உன் நிலை அவ்வாறு இல்லையே… என்று கூறித் தலைவி தலைவனை வரைதலுக்கு விரைவு படுத்துகிறாள். ( 48)

பெரிய கடற்கரையில் மீன் உணங்கல்களைப் பறவைகள் உண்ணாத வண்ணம் காத்துக் கொண்டுள்ள மாதர்கள் தெய்வம் போன்று காட்சியளிக்கின்றனர். இவர்களைக் காணும் போதெல்லம் தலைவனுக்கு ஒருவகை பயம் தோன்றுகிறதாம். (47).

தலைவன் நாமறியாத குறி ஒன்றைச் செய்தான். இதன் காரணமாக அவனை இரவுக்குறியில் சந்திக்க இயலவில்லை. (49). தலைவன் குறித்த மணியோசை கேட்டது எனக் கருதித் தலைவி இரவுக் குறி நேர்ந்தாள். ஆனால் அது தலைவன் எழுப்பும் மணியோசை அல்ல. பறவைகளின் ஓசை. எனவே தலைவி அல்லகுறிப்பட்டாள். (50)

இவ்வகையில் நெய்தல் நிலத்தில் நடக்கும் பல் கோண அன்புறு வாழ்வினை இப்பகுதி எடுத்துரைத்துள்ளது.

இவ்வாறாக ஐந்திணை ஐம்பதில் தலைவன் தலைவி நலம் சார்ந்த ஐம்பது பாடல்கள் சங்கச்சாயலில் அமைந்து தமிழர்தம் அகவாழ்வின் மேன்மையை, நுண்மையை உலகிற்கு எடுத்துரைக்கின்றன.

ஐந்திணை எழுபது
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்ற திணைவரிசையில் தினைக்குப் பதினான்கு பாடல்கள் என்ற நிலையில் எழுபது பாடல்கள் கொண்டு பாடப்பட்டது இந்நூல் ஆகும். இந்நூலில் 25,26, 69, 70 ஆகிய எண்களுடைய பாடல்கள் கிடைக்கவில்லை. இதன் ஆசிரியர் முவாதியார். இவர் சமண சமயத்தவர் ஆவார். பல உள்ளுறைச் செய்திகளை அடக்கி அகப்பொருள் நுணுக்கத்தை உணர்த்துவதாக இந்நூலின் பாடல்கள் அமைந்துள்ளன.

நூற்பொருள்
குறிஞ்சி

தலைவி, தலைவன்மேல் கொண்ட அன்பு எக்காலத்தும் குறைவுபடாதது(4). சான்றோரின் நட்பு இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை செய்யும். அதுபோன்றுத் தலைவனின் அன்பும் தலைவிக்கு நன்மை செய்யும்(5). அவனின் நட்பு என்றும் நம்பினார்க்குக் காவலாகும் (12). அவன் காதல் கொண்டு சொன்ன உறுதி மொழிகள் எக்காலத்தும் தலைவியைக் காப்பனவாகும் (9). அவனின் காதல் உறுதிமொழிகள் தலைவியின் மார்பில் கூரிய அம்பால் எழுதப்பட்டனபோல பதிந்து நிற்கின்றன(11). தலைவன்மேல் காதல் மிக்குற நான் வேறுபட்டேன். இவ்வேறுபாட்டை நீக்கத் தாய் வெறியாட்டினைச் செய்ய எண்ணினாள். இதனைத் தடுத்து என் காதலை வெளிப்படுத்துவாய் தோழியே! என்று ஒரு பாடலில் கூறுகிறாள் தலைவி (13) தலைவன் பொருள் தேடச் சென்றிருந்தாலும் அவன் வரைவுடன் விரைவில் வருவான் என்று உறுதியாக எண்ணுவதால் என் தோள்களுக்கு வாட்டம் ஏற்படவில்லை என்கிறாள் மற்றொரு தலைவி(2). தலைவன் வரைவோடு வந்தான். அதனால் தாயின் ஏச்சுப் பேச்சு குறைந்தது என்பது ஒரு தலைவயின் கூற்று(3) என்றவாறு குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவியின் அன்புநிலை எடுத்துக்காட்டப்படுகிறது.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடைப் புணையாக தோழி விளங்கி நிற்கிறாள். அவள் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ள வேண்டுகிறாள். (1). தோழி தலைவனிடம் நின் நலமன்றி வேறறியாள் தலைவி. எனவே அவள் இன்னுயிர் தாங்கும் மருந்தாக தலைவனே! உன் கண்ணோட்டத்தை வரைவின் முலமாகச் செய்வாயாக. (6) தலைவனே! மிக்க அறிவுடைய உனக்கு விரைவில் வரைவினைச் செய் என்ற மடமை மொழிகளைக் கூறத் தேவையில்லை(8). நீ வரைவுடன் வரவில்லையென்றால் தலைவி உயிருடன் வாழாள்(10) என்ற வேண்டுகோள்கள் தோழியினவாகும்.

தலைவியின் கண்கள் தலைவனின் அன்பிற்காக ஏங்கி அழுதுச் சிவந்தன. இந்நிலையில் தாய் இவளின் வருத்தம் குறித்து ஐயப்பட, தோழி இது நெடுநேரம் நீராடியதால் வந்தது என்று மாற்றி உரைக்கிறாள்(7). இந்நிலையில் தோழியின் பங்கு காதலுக்கு மிக்கத் தேவையாகுவதாக இப்பகுதியில் காட்டப்பட்டு உள்ளது.

குறையொன் றுடையேன்மற் றோழி! நிறையில்லா
மன்னுயிர்க் கேமங் செயல்வேண்டு மின்னே
யரா வழங்கு நீள் சோலை நாடனை நம்மி
விராவரா லென்ப துரை (14)

என்ற பாடல் தலைவனின் இரவுக்குறி வரவினைத் தலைவி தடுத்துத் தோழியிடம் கூறுவதாகும். இதில் உள்ள குறையொன்றுடையேன் என்ற தொடர் தற்காலத்தில் பிரபலமாகப் பாடப்பட்டுவரும் ” குறையொன்றுமில்லை கோபாலா ” என்பதின் முன்மாதிரி வடிவம் என்று கொள்ளலாம்.

முல்லை
முல்லை நிலப் பாடல்களின் செய்திகள் பின்வருமாறு.
கார் வானம் காண்தொறும் தலைவியின் கண்கள் தலைவன் பிரிவை எண்ணும். அதனால் வருந்தும்(15). தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்தான். இந்நேரத்தில் மயில் அழைக்க மின்னலுடன் மழை தோன்றியது. ஆனால் இப்போது தலைவியை நோக்கி நீ வருந்த வேண்டாம் என்று சொல்வார் யாரும் இல்லை(16). துன்பத்தைச் செய்யும் மாலை தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் கொல்லுவதுபோல் வந்தது(17). இடிக்கும் வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் தலைவனைச் சேராத தலைவியின் உயிர் துடிக்கும் (18). மயில் ஆட வந்த வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் தலைவனைக் கூடாத தலைவியின் உயிர் உருகும்(19). மாலையும், மழையும் என்னையும் பிரிந்த தலைவனையும் வருத்தம் செய்யுமாறு வந்தது (20). மாலை வருத்த அறியாமையால் துன்புற்று அதனைப் பொறுத்து வாழும் தலைவியைப்போல் யார் உயிர் காத்து வாழ வல்லார் (21). கோவலர்கள் குழலூதியபடி முன்செல்ல ஆநிரைகள் பின்வர மாலையும், மழையும், வானவில்லும் தோன்றின. இதனைக் கண்டு தலைவி வருத்துமடைந்தாள்(22). தலைவியின் கைவளையல்கள் தலைவன் பிரிவால் கழன்றன. தலைவன் தலைவியைத் தேற்ற வருவாரோ (23). சிறுமாலைப் பொழுது தலைவியின் கண்களில் நீரினை நீங்காது இருக்கச் செய்கின்றது (27). தலைவன் பிரிவால் ஏற்பட்ட வருத்தம் மழையின் காரணமாகவே வந்திருக்க வேண்டும் (28) என்று இப்பாடல்கள் தலைவி பருவ வரவு கண்டு தோழிக்குச் சொல்லிய ஒதே துறையில் அமைந்துச் சிறக்கின்றன.

இப்பகுதியில் குறிக்கத்தக்க பாடல் பின்வருமாறு.

கல்ஏர் புறவில் கவினி புதல்மிசை
முல்லை தளவொடு போதுஅவிழ எல்லி
அலைவுஅற்று விட்டன்று வானமும் உண்கண்
முலைவற்று விட்டன்று நீர் (24)

என்பதில் தலைவி பருவ காலத்தில் வாராத தலைவனை அடைய முடியாத வருத்த மிகுதியால் கண்களில் நீர் கொள்ளுகின்றாள். அவளின் கண்ணீர் மார்பங்கள் வழியாக வழிந்துப் பெருகியதாம் என்று தலைவியின் துயரம் காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னால் எழுந்த சீதையின் துயரத்தினைப் பாடும் கம்பருக்கு அடியெடுத்துக் கொடுத்தபாடல் இதுவாகும்.

பாலை
தலைவன் செல்லும் வழியானது கல்லில் எழுத்துக்களைக் கொண்ட நடுகற்கள் நிறைந்த பகுதியாகும். இவ்வழியில் காதல் விருப்பமிக்கவர் போன்று செயல்பட்ட தலைவன் பிரிந்து போவது அவரின் இரக்கமற்ற பண்பினைக் காட்டுவதாக உள்ளது. (29). கொலைவில்லைக் கருவியாகக் கொண்டு வழிச்செல்வாரைத் துன்புறுத்தி வாழும் வாழ்க்கையைக் கொண்ட கள்வர்கள் நெருங்கியிருக்கும் வழியில் நம் தலைவர் நம் அன்பினை விட்டுச் செல்வாரோ? (30). புலியால் தாக்குண்ட யானைகள் உலவும் காட்டுவழியே பிரிந்து சென்ற தலைவரின் தண்ணளியை எண்ணி இன்னும் உயிர்வாழ்கிறாளா தலைவி (31). நீரின்றித் தவிக்கும் காட்டுப்பசுக்கள் திரியும் கானகத்தைத் தாண்டித் தலைவர் சென்று கொண்டுள்ளார். ஆனால் அவர் நினைவாகவே உயிருடன் இருந்து, நாணத்தை மறந்து அவர் வந்த பின் அவரைப் புணர்ப்பதை இந்நெஞ்சு செய்வது சரியா (32). தலைவன் அருஞ்சுரத்திடை சென்றுவிட அவரால் நமக்கு ஏற்பட்ட அலர் மலையில் தோன்றும் கொடிகள்போல அனைவருக்கும் தெரிவதாயிற்று(33). பீர்க்கம்பூக்கள் பூத்துநிற்கும் பாழ்மனையுள் கரடிக்கூட்டங்கள் தங்கும்படியான பாலை நிலத்தை எண்ணியாவது தன் செலவைத் தலைவர் ஒழிக்க மாட்டாரா.. (34) தலைவன் பிரிகையில் நம் துன்பத்தை ஒழித்துவிட்டுச் செல்வாரோ (35). தலைவன் செல்லும் வழியானது முள்ளுடைக் காட்டில் காட்டுப்பூனை தன் குட்டிக்கு இரைத் தேடித் திரியும்படியான சூழலை உடையது. அக்காட்டில் ஆறலைக் கள்வர்கள் திரிவார்கள். இவ்வழிதான் தலைவன் செல்லும் வழி என்றும் பலரும் கூறுகிறார்கள். இக்கொடுமையைக் காணத் தலைவர் பிரிவாரா? (36) ஓமை மரத்தின் நிழலில் யானைக் கூட்டங்கள் தங்கிடவும், காட்டுத்தீ பரக்கவும் இருக்கவும் காட்டிடத்தில் தலைவன் செல்லுவதை அறிந்து தலைவியாகிய என் மை தீட்டப் பெற்ற கண்கள் கண்ணீர் கொண்டு நிற்கும்(37). தலைவரானவர் புலிகள் திரியும் வற்றிய காட்டகத்தே தற்போது வாழ்ந்துவரும் அன்பு வாழ்வை மறந்துவிட்டுச் செல்வாரோ (38). புலியின் தாக்குதலால் பெண்யானையினை இழந்துத் துயருற்ற ஆண்யானை புலியின் வருகையைப் பார்த்துக் கொண்டு பழிவாங்க இருக்கும் சுரம் நோக்கித் தலைவர் தன் பயணத்தை மேற்கொள்ளுவாரோ (39). மன்றத்தில் உள்ள பெரிய ஆலமரத்தின் மீதிருந்து ஆந்தைகள் குரல் கொடுக்கும் குன்றத்தின் பக்கம் பொருள் தேடிச் சென்ற தலைவர் தலைவியை நினைத்துக் கொண்டே இருப்பார் போலும். இதன் காரணமாக ஔளிய தும்மல் அடுத்தடுத்துத் தலைவிக்கு வந்தது. (40)

தலைவியின் பூப்போன்ற கண்கள் இடமாகத் துடிக்கின்றன. கனவும் நற்பயன் தந்தது. குன்றத்தின் பக்கம் பொருள் தேடிப் பிரிந்த தலைவரைத் தலைவி நினைத்துக் கொண்டிருக்க அவள் தோள் நலம் பெறும் வகையில் பல்லியும் நன்நிமித்தம் சொன்னது.(41)

பூங்கண்இடம் ஆடும் கனவும் திருந்தின
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப
வீங்கிய மென்தோள் கவினிப் பிணிதீர
பாங்கத்துப் பல்லி படும் (41)

என்ற பாடலில் உள்ள எளிமைத்தொடர்கள் இனிமை பயப்பனவாக உள்ளன.இப்பாடலின் வழியாக அக்கால நம்பிக்கைகளையும்அறிந்து கொள்ள முடிகின்றது.

இப்பகுதியில் உடன்போகிய மகளைப் பற்றி ஒரு தாய் புலம்புவதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. கொல்லவரும் களிறு போன்றவனான தலைவனின் பின்னால் தலைவி தன் மெல் விரல்கள் சிவப்ப உடன்போக்கு கொள்வாளோ அல்லது இயலாது என்று கருதி ஏங்கி இருப்பாளோ (42)

இவ்வகையில் பாலையில் பெருமளவில் பாலைப் பெருவழியின் அச்சமும், கொடுமையும் உரைக்கப்பெற்றுள்ளன. இவ்வழி கருதி தலைவி புலம்பும் பாடல்கள் அதிகமாக இப்பகுதியில் இடம் பெற்று உள்ளன.

மருதம்
கற்பு வாழ்வின் சிறப்பாக வரும் மருதத்திணைப் பாடல்கள் அமைந்துள்ள இப்பகுதி இந்நூலின் சிறப்பு மிக்கப் பகுதியாகும். பல சிறப்பு மிக்க கருத்துக்கள் இதனுள் அடங்கியுள்ளன.

தலைவன் தலைவியின் அன்புறு வாழ்க்கை பற்றிய சில செய்திகள் இதனுள் இடம் பெற்றுள்ளன.

தலைவன் தன் மகனை தன் மேலாடை சிதையும் வண்ணம் அணைத்து மகிழ்ந்தான். அவ்வணைப்பின் வழியாக அவன் தலைவியையும் மகிழ்விக்க முயலும் முயற்சி தெரிந்தது(43).

மேலும் தலைவன் தலைவியரின் அன்பு வாழ்வினை மற்றொரு பாடல் செவிலி கூற்றாக எடுத்துரைக்கிறது.

தேங்கமழ் பொய்கை அகவயல் ஊரனைப்
பூங்கண் புதல்வன் மிதித்துஉழக்க ஈங்குத்
தளர்முலை பாராட்டி என்னுடைய பாவை
வளர்முலைக்கண் ஞெமுக்கு வார் (47)

என்ற இப்பாடலில் தலைவன் தன் மகனை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அம்மகன் தலைவனை மிதித்து உழக்கினான். இந்நேரத்தில் தலைவியின் முலைக் கண்களை ஞெமுக்கியபடித் தலைவன் தன் அன்பினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். இந்த அழகான இல்லறக் காட்சியைச் செவிலி கண்டுப் பெருமிதம் கொள்ளுகின்றாள். இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஞெமுக்குதல் என்ற வினையாட்சி குறிக்கத்தக்கதாகும். தனித்த நயமுடைய தேர்ந்த சொல்லாட்சியாக இது விளங்குகின்றது.

இவ்விரு பாடல்களும் தலைவன் தலைவியின் அன்புப் பரிமாறலை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பகுதி சார்ந்த மற்ற பாடல்கள் தலைவனின் பரத்தை ஒழுக்கம் பற்றிக் கருத்துரைக்கின்றன.

தலைவன் மாற்றொழுக்கம் கொண்டான். இதன் காரணமாக வேதின் மகளிரைக் கடிந்து என்ன பயன்? (44). இப்பாடலில் பரத்தையரைக் குறிக்க வேதின் மகளிர் என்ற சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது. தலைவன் ஒருவன் மாற்றொழுக்கம் கொண்டான். ஆனால் அவன் காதலிக்கும் காலத்து காதல் உறுதிப்பட பல உறுதிமொழிகளைத் தந்தான். அவை பிற்காலத்தில் பொய்யாகும் என்று அறியாத தலைவியான நான் அவற்றை எழுதித்தரும்படிக் கேட்டு வைத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேனே என்று தலைவி புலம்புகிறாள்.

அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாள் ஓர்
பொய்ச்சூள் எனஅறியா தேன் (50)

இதன்வழி ஒரு செய்தியை உறுதிப்படுவதற்கு எழுதி வாங்கிக் கொள்ளும் நிலை சங்கம் மருவிய காலத்தில் இருந்தது என்பது தெரியவருகிறது.

தலைவனைக் காணாதபோது அவனைப் பற்றித் தவறாக உரைத்தும், கண்டபோது வாய்பொத்தி மௌனம் காத்தும் நிற்கும் பரத்தையரை உண்மையானவர்கள் என்றெண்ணித் தலைவன் திரிகின்றான். அவர்களின் பொய்மையையும், தலைவனின் திறத்தையும் என மார்புகள் அறியும் (51).

இன்னும் சில பாடல்கள் வாயில் நேர்ந்த பாணனுக்குத் தலைவி கூறிய பதில்களாக அமைகின்றன. வாயிலாக வந்த பாணனே.. எம்மார்பினைச் சற்றும் தலைவன் தழுவுவதற்கு நேரமின்றி என் மகன் அவற்றை உண்டு கொண்டுள்ளான். மேலும் யான் முதியவளானேன். என்னிடத்தில் நீ இரந்து நிற்பதைக் காட்டிலும் இளமுலைகளை உடைய பரத்தையரை மகிழ்வித்து கூத்தாடி வாழலாம். அங்கே செல் (45) என்று ஒரு தலைவி பாணனின் வாயிலை மறுத்துரைக்கிறாள். தலைவனின் மார்பை அடைய எனக்கு நீ வழி சொல்ல வேண்டாம். புறப் பெண்டிருக்குச் சென்று உரை. அதுவே பயன்தரும் என்று மற்றொரு தலைவி பாணனை மறுத்துரைக்கிறாள்(46). மகனையே சார்பாகக் கொண்டிருக்கும் தலைவியாகிய நான் இனி தலைவனுக்கு எவ்வகையில் உதவ இயலும். நீ திருமகள் போன்று அழகுடைய பரத்தையரிடம் சென்றுத் தலைவனுக்காகப் பரிந்து பேசு(48). தலைவனின் பெருமைகளைப் பேசுவதை ஒழி பாணனே. உனக்கு ஏதாவது குறை இருந்தால் நீ சொல் என்று மற்றொரு தலைவி அவன் வாயிலை மறுத்துரைக்கிறாள்(49). தலைவன் புகழைப் பாடும் பாணனே எழுந்து நீ உடனே செல். நான் என் மகனைப் பாதுகாவலாகப் பெற்றுள்ளேன். என்னுடைய தவறு எதுவாக இருந்தாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை(55) என்பது மற்றொரு தலைவியின் மறுமொழியாகும்.

தலைவன் தலைவியரின் இந்த முரண்பாட்டினைத் தோழி தீர்த்து வைக்கிறாள். தோழியின் நல்லெண்ணத்தின்படி தலைவனும் தலைவியும் ஊடல் நீங்கி வாழ முற்படுகின்றனர்.

தலைவன் பரத்தையர் இல்லம் நாடிச் செல்லும்போது தோழியானவள் அவனிடம் சென்று உன்னையே நம்பியுள்ள தலைவியைப் பாராய். அவளை விட்டுவிட்டு நீ பரத்தையர் சேரிக்குச் செல்வதை ஊராண்மையாகக் கொண்டுள்ளாயே இது தகுமோ? எனவே அச்செலவைத் தவிர் என்று வேண்டுகிறாள் (54).

இதுபோன்று அவள் தலைவயின் ஊடலையும் தீர்க்கிறாள். சான்றோர்களால் இன்பம் என்னும் உள்நாட்டத்துடன் வகுக்கப்பட்டது இல்லறம் என்பதை அறியாமல் வெறும் பொருள்நாட்டம் கருதி நிற்கும் பரத்தையர் பக்கத்திற்குச் சென்றமையத் தலைவன் தவறென்றெண்ணி உன்னை வழிபட வந்துள்ளான். அத்தலைவனை நீ ஏற்றுக் கொள். அவ்வாறு ஏற்காவிட்டால் அதனால் வரும் பழி உன்பக்கம் சேரும் என்பதாக தோழி தலைவிக்கு எடுத்துச் சொல்லி அவளின் ஊடலைத் தீர்க்கின்றாள்(53). சக்கரம் போன்ற மோதிரமணிந்த கரங்களை உடைய பரத்தையரின் ஆளுகையில் இருந்துத் தலைவன் மீண்டுத் தலைவியாகிய உன்னிடத்தில் வருவான் ஆயின் அன்றைக்கு வாழ்நாளில் அனைத்தும் பெற்ற மகிழ்விற்கு உரியவளாக நான் இருப்பேன் என்று மற்றொரு தோழி தலைவியின் ஊடலைத் தணிவிக்கிறாள். (56)

நயத்தக்க நாகரீகமுடையவளாக, பிளவுற்ற தலைவன் தலைவியரை மீண்டும் இணைப்பவளாத் தோழியானவள் இப்பகுதியில் படைக்கப் பெற்றுள்ளாள். இவ்வளவு செய்த பின்னும் தலைவன் திருந்தவில்லை என்றால் தலைவி அதற்கு மேலும் ஒரு வழி வைத்துள்ளாள்.

அதாவது பரத்தையரிடம் சென்று நீங்கள் தலைவனைத் தழுவுவதை சிறிதுநாள்கள் நிறுத்துங்கள். அவனைப் பற்றிய புகழ்மொழிகளைக் கூறுவதைத் தவிர்த்திடுங்கள். இவற்றைச் செய்தால் அவன் உண்மையினை உணர்வான் என்று தலைவி மொழிகின்றாள். இம்மொழி யாருக்கு எட்டப் போகின்றது. (52)

இவ்வாறு மருதத்திணைப் பாடல்கள் இல்லற வாழ்வின் மேடு பள்ளங்களை நிரவும் பாங்கில் இந்நூலில் வடிவமைக்கப் பெற்றுள்ளன.

நெய்தல்
தலைவன் வரையாது காலம் நீட்டிக்கின்றான். இதனைத் தவிர்க்க வேண்டி இத்திணைப்பாடல்கள் இரங்குகின்றன.

நம் தலைவன் அறிவற்றவன் என்று தோழி உரைக்கும் மொழிகள் தலைவியின் உயிரை வாழவைக்கும் ஊதியமாக விளங்குகின்றன (57). தலைவியின் காதல் கிடைத்தமையைப் பெருமை என்றெண்ணித் தலைவன் வரைவிற்கு வாராது காலம் கடத்துவது சரியல்ல என்று தோழி தலைவன் கேட்ப வரைவு கடாவுகின்றாள் (63). அன்றில் பறவைகளே தலைவனிடம் சென்று தலைவியைக் களவில் கலந்தபோது அவள் இழந்த வண்ணத்தைத் திருப்பித்தர வேண்டுங்கள் அல்லது வரைந்து கொள்ள வேண்டுங்கள் (64) கடற்கரைக் குருகுகள் தலைவன் களவில் என்னைக் கலந்தபோதும் இருந்தன. அவன் வரையாது காலம் நீட்டிக்கும் திறமும் அவற்றிற்குத் தெரிந்துதான் இருக்கவேண்டும் (65). வரைவு நீட்டிக்கும் தலைவனைச் சந்திக்க நேர்ந்தால் தோழியாகிய நான் தலைவியின் வண்ணம் பெற்றிருந்த முன்னிலையைத் தந்துவிட்டுப்போ என்று கூறுவேன் (66). அவ்வாறு சந்திக்க நேர்ந்தால் தோழியாகிய நான் தலைவியின் உடலைப் பசலை தின்கிறது. அதனை மீட்டுத் தா என்று கேட்பேன் (67).

தாய் தலைவியின் காதலை அறிந்துவிட்டாள். தலைவனோ வரைவு நீட்டிக்கிறான். அதனால் தாய், தலைவன் கள்ளமனம் கொண்டு அயல் நெறிச் செல்லப் போகிறான் என்று எச்சரிக்கிறாள். ஆனால் தோழியோ அவ்வாறு தலைவன் செல்லுபவன் அல்லன். விரைவில் அவன் வரைவு மேற்கொண்டு வருவான் என்று மொழிகிறாள் (62).

இவை தோழியின் செயற்பாடுகள் ஆகும்.

தலைவன் களவில் தலைவியின் அணிநலத்தை நுகர்ந்தான். இருப்பினும் அவளை வரைந்து கொள வரவில்லை. இதன் காரணமாக அவள் அழுத வண்ணமாகவே இருந்தாள். அவளின் நிலை போலவே முந்நீர்க் கடலும் உறங்காது அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றதாம் (60). தலைவனை முண்டக மலர்கள் பூத்து நின்ற சோலையில் கண்டேன். ஆனால் அவன் தரும் இன்பம் பின்னாளில் துன்பத்தைத் தரும் என்று தெளிவில்லாமல் நின்றேன்(61) என்று ஒரு தலைவி தன் மடநிலையை உரைக்கின்றாள். தலைவனோ வரையாது காலம் நீட்டிக்கின்றான். தாயோ முகம் சுளித்துக் கொடுமை காட்டுகிறாள். தலைவனிடம் நின்னல்லது தலைவிக்குப் பொருத்தப்பாடு உடையவர் யாரும் இல்லை என்று தோழியே நீ கூறுவாயாக என்று தலைவி விண்ணப்பம் வைக்கின்றாள்(58). மேலும் தலைவனுடன் களவில் கலந்தமையை நாரைகள் அறியும். அவனை வரைவில் பெற அவையே சான்று என்று தலைவி தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள்(68)

இவ்வாறு இப்பகுதி தலைவியின் வருத்த மிக்க நிலையை எடுத்துரைப்பனவாக உள்ளன.

ஐந்திணை எழுபது ஏறக்குறைய ஐந்திணை ஐம்பதின் வழியிலேயே சென்றுள்ளது. இந்நூலில் உள்ள கருத்துக்கள் பெரும்பாலும் ஈற்றடிகளிலேயே இடம் பெற்றுள்ளன. முன்னடிகளில் தலைவனை விளிக்கும் விளியாகவே அமைந்துள்ளன. இவ்விளிகளில் உள்ளுறை காண இயலும். அது குறித்து விரிவாக ஆராய இயலும்.

இவ்வகையில் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூல்களான ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது ஆகியன சங்கச் சாயலில் தலைவன் தலைவயரின் அன்புறு வாழ்வினை எடுத்துரைப்பனவாக உள்ளன. மேலும் தோழி, செவிலி, மகன், பரத்தை, பாணன், தேர்ப்பாகன் போன்ற பல அகப் பாத்திரங்களை உட்படுத்தியும் பாடல்கள் புனையப்பெற்றுள்ளன. தந்தை, உடன்பிறந்தான், பாங்கன், தோழன் போன்ற பாத்திரங்கள் பற்றிய செய்திகள் இவற்றில் இடம்பெறவில்லை. மேலும் இப்பாடல்களில் உள்ளுறை கொண்டும் உணரமுடிகின்றது. உள்ளுறைக்கான இடங்களாக பல நுட்பமான இடங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தும் உரைகள் வெளிவர வேண்டும்.

அதிகஅளவில் நீதி நூல்களின் தொகுப்பாக விளங்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காதல் சார்ந்த இலக்கிய காட்சிகளை முற்றிலும் உள்ளடக்கி அப்பகுதிக்கு இலக்கிய வளமையை இவ்விரு நூல்களிலும் பெருக்கி நிற்கின்றன என்பதில் ஐயமில்லை.

பயன்கொண்ட நூல்கள்
1. சுப்பிரமணியன் ச.வே. (ப. ஆ), பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007

2. நடராசப்பிள்ளை. அ., நாலைந்திணை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை,1960

Series Navigation

author

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts