This entry is in the series 20110220_Issue

கவிஞர் வைகைச் செல்வி


நான்கு சுவர்களுக்குள்
நெய்தல் பொழுதினிலே
கானல் வரியுண்டோ
கணப்பொழுதில் பிரிவுண்டோ?

அரங்க மேடைகளின்
கரைகளுக்குள் அடங்கிடுமோ
அலையலையாய்ப் பொங்கிவரும்
உன் குரலும்?

குறிஞ்சித் தேன் சொற்கள்
சுழன்று ஓடிவர
முகம் பார்த்த போதில்
மனம் நழுவி
முல்லைக் காடுகளில்
அகமென்றும் . . . . புறமென்றும்
அலைந்து திரிந்த பின்
மனக் கப்பல்
தரை தட்ட
அரங்கம் முடிந்திருக்கும்.

நீ இல்லாத பொழுதெல்லாம்
பாலையாய்ச் சுட்டிருக்க
பண்ணுக்குள் பொருளாக
கண்ணுக்குள் கட்டி வைக்க
பச்சை மருதத்தில்
செங்குருதி நீர் பாய்ச்சி
காதல் பயிர் வளர்க்க
வழியுண்டோ என்றேனும்?

Series Navigation