ஏழாவது சுவை

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

நாகூர் ரூமி


====
அபாரமான சுவை
அருமையான வாசனை
பாட்டில் ஐம்பது
அல்லது நாற்பது டாலர்
ஊறுகாய் மாதிரி
கடைகளில் விற்பனைக்கு.

தட்டில் வைத்து
வாஷ்பேசினில் கழுவும்போது
சற்றே தெரிகிறது
சந்தேகத்தின் தலை.

வெட்டி வெட்டி
துண்டுகளாக்கி
கொண்டுவரும்போது
தெரியவில்லை அவ்வளவாக.

வருத்த இளம் தொடையை
வழுக்கைத் தலையன் ஒருவன்
வாயில் வைத்துக் கடிக்கும்போது
விளங்கிவிடுகிறது.

கருவறையிலேயே கலைந்து போன
அல்லது கலைக்கப்பட்ட
கம்பனோ காளிதாசனோ
ஏசுவோ லாசூ வோ ?!

தெரியவில்லை எனினும்
ஆரோக்கியமான வாழ்வுக்கு
அமோக விற்பனையாம்
தைவானில் !

ஆன்மாவின் நாக்குகள்
அறுந்துபோனவர்களுக்கான
ஏழாவது சுவை…

இலையில் தண்ணீர் தெளித்துக் கொள்வதற்கு முன்
====
இது ஏழாவது சுவை. அறுசுவை மட்டும் அறிந்தவர்கள் அறியாதது. ஆனால் அறிய முடியாதது அல்ல. சிலர் அறிய விரும்பாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். உண்மையில் எல்லா சுவைகளுமே இந்த ஒரு சுவையை அறியத்தான். ஆனால் இது நமது வாய்க்குள் இருக்கும் நாவால் அறிந்து கொள்ள முடிகிற சுவை என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். இந்த சுவை பற்றி விரிவுரை விளக்க உரை பரிந்துரை எல்லாம் செய்யலாம். ஆனால் பயனில்லை. சுவைத்துத்தான் பார்க்க வேண்டும். ஆனால் சுவைத்துப் பார்த்த நாக்குகளில் கூட இந்த ஏழாவது சுவை ஒரே மாதிரியாகவே இருந்ததா என்றால் இல்லை ! ஏழாயிரம் நாக்குகளில் ஏழாயிரம் விதமாக பரிணமிக்கிறது இந்த சுவை ! இந்த கவிதைகளும் ( ! ) அந்த சுவையை சுட்டத்தான். நிலவைச் சுட்டும் விரல் போல. இந்த சுவைக்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு கொண்ட கவிதைக்கும் சம்பந்தமிருக்கிறது என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் ஏழாவது சுவையை தவற விட்டவர் ஆவீர்கள் ! பிஸ்மில்லாஹ் ! ஷுரூகரோ !

நாகூர் ரூமி
நவம்பர் 02, சனி, 2002
ஆம்பூர்.

சமர்ப்பணம்
தன்னைவிட என்னை அதிகமாக நேசிக்கும் என் மனைவி நஸீஹாவுக்கு.

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி