ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

இப்னு பஷீர்


1972-ல் ஏமன் நாட்டு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால குர்ஆன் ஏடுகளை ஆய்வு செய்து வரும் ஜெர்ட் புயின் என்ற ஜெர்மனியர், இன்று வரை ஆதாரங்களுடன் ஆய்வு முடிவு எதையும் வெளியிட்டதாக தெரியவில்லை. இந்த ‘ஆய்வு’ பற்றி அட்லாண்டிக் மன்த்லி என்ற பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில் புயின் சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஒரு பத்தி முழுக்க, ‘எனது கருத்து என்னவென்றால்..’ ‘நான் நினைக்கிறேன்…’ ‘இப்படி இருக்கலாம்..’ என்பது போன்ற புயினின் யூகங்கள்தான் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. மேலும் புயினுக்கு குர்ஆனை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்ததையும் அந்தப் பத்தி தெரிவிக்கிறது. ஏடுகள் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து 35 ஆண்டுகளாக தொடர்ந்து ‘ஆய்வு’ செய்தும் இதுதான் நிலை! இவ்வளவுக்கும் புயின் ஒன்றும் அரபி மொழி வல்லுனரோ இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளரோ அல்லர். அவர் அரபி கையெழுத்துக்களையும் calligraphy எனப்படும் அலங்கார எழுத்து வடிவங்களையும் பற்றி ஆராய்ச்சி செய்பவர் மட்டுமே.

சரி, இன்று முஸ்லிம்களால் ஓதப்பட்டு வரும் குர்ஆனுக்கும் ஏமன் மசூதியின் ஏடுகளுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இல்லையா? ஆரம்பக்காலத் தகவல்களின் படி இவற்றுக்கிடையில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் வசனங்களின் வரிசையிலும், சில இடங்களில் வார்த்தை வித்தியாசங்களுமாக இருந்தன. இஸ்லாமிய வரலாற்றையும் குர்ஆன் தொகுக்கப்பட்ட விதத்தையும் நன்கு அறிந்த முஸ்லிம்களுக்கு இந்த வித்தியாசங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இந்த வித்தியாசங்களெல்லாம் இந்த முஸ்லிம் அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கனவே அறிந்ததுதான்.

முஹம்மது (ஸல்) அவர்களின் மறைவுக்கு மறு ஆண்டு, உமர் அவர்களின் ஆலோசனையின்படி, அப்போதைய கலிஃபா அபூபக்கர் அவர்களின் காலத்தில் இறை வசனங்கள் மிகுந்த கவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டு நபிகளார் சொல்லித் தந்திருந்த வரிசை முறையில் தொகுக்கப்பட்டு குர்ஆனின் முதல் முழு எழுத்துப் பிரதி உருவாக்கப் பட்டது. முழுமையாக தொகுக்கப்பட்ட பிறகு அந்தப் பிரதி கலீஃபா அபுபக்கர் அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பின் இரண்டாவது கலீஃபா உமரிடம் வந்து சேர்ந்தது. அவரும் மறைந்த பிறகு, இத் தொகுப்பு அவரது மகளாரும் நபிகளாரின் துணைவியாருமான அன்னை ஹஃப்சா (ரழி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குர்ஆனின் “அரசாங்கப் பிரதி”யாக இதுவே இருந்தது. ஆகையால், சாதாரணமாக பொதுமக்கள் தாமாக திரட்டி வைத்திருந்த பிரதிகளை விட இது மதிப்பு வாய்ந்ததாக, நம்பிக்கைக்குரியதாக இருந்தது.

இவ்வாறு குர்ஆனின் இந்த ஒரு தொகுப்புநூல் மட்டும் அரசாங்கத் தரப்பில் பாதுகாக்கப்பட்டு வந்த வேளையில் பொதுமக்கள் தங்கள் மனனத்திலும், நினைவிலும், சுவடிகள், ஏடுகளிலுமுள்ள குர்ஆனையே பயன்படுத்தி வந்தனர். மூன்றாம் கலீஃபா உஸ்மான் அவர்களின் காலத்தில் இஸ்லாம் தனது பரப்பெல்லைகளை விரிவாக்கியவாறு கிழக்கில் ஈரான் வரையிலும், மேற்கில் எகிப்து வரையிலும் பரவி விட்டிருந்தது. அரபு அல்லாதோர் பெரும்பான்மையாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர்; தழுவிக் கொண்டிருந்தனர். இம்மக்களுக்கு அரபி அடியோடு தெரியாது. இவர்களுக்கு குர்ஆன் அதை மனனம் செய்திருந்த ஹாபிஸ்கள் மூலமாக ஒலி வடிவிலும் பொதுமக்கள் தாமாக திரட்டி வைத்திருந்த பிரதிகள் மூலமாகவுமே அறிமுகம் செய்யப் பட்டிருந்தது. இதன் விளைவாக இம்மக்கள் குர்ஆனில் சிலத் தவறுகளைப் புரியலாயினர். சிரியா, ஈராக் நாட்டு முஸ்லிம்கள் கூட குர்ஆனில் சிலத் தவறுகளைச் செய்து வந்தனர். இதன் அடிப்படை காரணம், ஒப்பிட்டுப் பார்க்கத் தோதாக இவர்களிடையே குர்ஆனின் ஒரு மூலப் பிரதி இல்லாததுதான்.

ஆர்மீனியா, அஜர்பைஜான் போர்களின் போது மேற்சொன்ன பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்ட முஸ்லிம்கள் தப்பும் தவறுமாக குர்ஆன் ஓதுவைதக் கண்டு திடுக்கமடைந்த ஹுதைபா, போரிலிருந்து திரும்பி வந்ததுமே கலீஃபா உஸ்மானைச் சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினார். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த கலிஃபா, உடனடியாக ஜைத் பின் ஸாபித் தலைமையில் ஒரு குழுவை நியமித்து அன்னை ஹஃப்ஸா அவர்களின் பாதுகாப்பில் இருந்த மூலநூலை பற்பல பிரதிகளை எடுத்து தனது ஆட்சிக்குட்பட்டிருந்த அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கச் செய்தார்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதிகள், எகிப்து, கூஃபா, பசரா, சிரியா, மக்கா, யமன், மற்றும் பஹ்ரைன் என அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மூலப் பிரதி கிடைக்கப் பெற்ற பகுதிகளில் இருந்த முஸ்லிம்கள் தங்களிடம் இருந்த, தவறுகளை உள்ளடக்கிய பிரதிகளை பயன்படுத்துவதை நிறுத்தி ஆதாரப்பூர்வமான பிரதிகளை பயன்படுத்தத் தொடங்கினர். பழைய பிரதிகளை சிலர் எரித்திருக்கலாம். சிலர் புதைத்திருக்கலாம், சிலர் அப்பிரதிகளிலேயே அடித்தல் திருத்தங்களைச் செய்து தொடர்ந்து பயன்படுத்தியிருக்கலாம். ஏமன் மசூதியில் கண்டெடுக்கப் பட்ட பிரதிகள் இந்தப் பிரதிகளாக இருக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனாலேயே, தவறுகளைக் கொண்ட இப்பிரதிகள் கண்டுபிடிக்கப் பட்டபோது, அது முஸ்லிம்கள் அறிஞர்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. இப்பிரதிகளை 35 ஆண்டுகளாக ஆய்ந்து கொண்டிருப்பவர்களும் கூட இன்றுவரை மறுக்கவியலா ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

உஸ்மான் அவர்கள் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட இந்த மூல நூற்கள் மக்கா, மதீனா, டமாஸ்கஸ், மற்றும் இஸ்தான்புல் போன்ற இடங்களில் இன்றும் இருந்து வருகின்றன. ‘குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டது’ என்று வாதிடுபவர்கள், இன்று உலகெங்கிலும் பயன்படுத்தப் பட்டு வரும் குர்ஆன் பிரதிகளுக்கும், அன்றைய மூல நூற்களுக்குமிடையில் ஏதேனும் வித்தியாசத்தை காட்டட்டும்!

– இப்னு பஷீர்
http://ibnubasheer.blogsome.com/


Series Navigation