ஏணி

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


விண்ணைத் தொட்டாலும்
உன் கால்கள்
மண்ணில்தான்.

பாதையில் நடக்கும் பாதங்களை
பறப்பதில் பாதியாய்
படிப்படியாய் தொட்டு
அடிஅடியாய்
சிறகடிக்க வைக்கிறாய்.

உயரமேற
உன்னில்
படிப்பினை படிகள்.

பட்டமரமாய் போனாலும்
ஒன்றிணைந்த ஒற்றுமையால்
முடிகிறது உனக்கு
முன்னேற்றிவிட.

உன் கலந்துறவாடல்
காலோடு மட்டும்தானா ?
இல்லை இல்லை
கைகள் உனை பிடித்து நிறுத்த
கைகுலுக்கிக் கொள்கிறாய்.
கால்களை நிறுத்தி
கைதூக்கி விடுகிறாய்.

ஏறிய பின்
மனம் உன்னை மறப்பதுண்டு
ஏறிய ஏற்றம்
நிலையில்லா நிலையில்
உன்
இருகால்கள் தருகிறாய்
இறக்கி விட்டும்
தலைநிமிர வைக்கிறாய்.

ஆணிகள் அறைந்த
தேகம் உனக்கு.
பாரம் சுமக்கிறாய்.
உயரம் ஏற
உன் தோள் கொடுக்கிறாய்.
உன் முகம் தேடுகிறேன்.
உன் முதுகேறி
முகம் திருப்பி
முத்தமிட துடிக்கிறேன்.

முகம் காட்டாமல்
முகம் பார்க்காமல்
என்னை
ஏற்றிவிட்டிருக்கிறாய்
உயரத்திற்கு.

ஏணி நீ.

— பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி