ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான் -ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

வெள்ளியம்பலம்


ஒக்ரோபர் மாதம் 29 ந் திகதி மாலை ஸ்காபரோ சிவிக் சென்ரரில் 11.10. 2006 இல் தன் 72 வயதில் காலமான ஏ.ஜே.க்கு காலம் சஞ்சிகையினர் ஒழுங்கு செய்த அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. அதை என்.கே.மகாலிங்கம் நெறிப்படுத்தினார். கூட்டத்திற்கு ஏ.ஜே.யின் நண்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் ஏறக்குறைய எண்பது பேர் சமூகமளித்திருந்தனர்.

ஆங்கில -தமிழ், தமிழ் -ஆங்கில மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், நூல் மதிப்பீட்டாளர், பத்திரிகைபாளர், ஆங்கில ஆசிரியர் போன்ற அத்தனை முகங்களும் ஏ.ஜே.யின் மனிதம் என்ற முகத்தில் ஆழப் புதைந்தவை தாம் என்ற hPதியில் தான் பேசிய அத்தனை பேரின் நினைவுகூறல்களின் சாராம்சம் இருந்தது.

என்.கே. மகாலிங்கம், ஏ,ஜே. என்ற மனிதரை இலக்கிய உலகில் எந்த வகைமைப்பாட்டிற்குள்ளும் அடக்க முடியாது என்றார். அவர் யாழ்ப்பாணத்து கல்விப் பாரம்பரியத்தின் குறியீடு. அதேவேளை அதை மீறியவர். தமிழர்களின் மரபார்ந்த மதிப்பீடுகளை உடைத்தவர். உண்மையான கத்தோலிக்கர். ஆனால் ஞாயிறு தோறும் தேவாலயம் சென்று வழிபடுபவர் அல்ல. வசதியான, வளமான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் ஒரு பிறத்தியான் போல வாழ்ந்தவர். கட்டைப் பிரமச்சாரி. ஆனால் கிருஷ்ணகுமாரின் குடும்பத்தில் தந்தையாக இருபது ஆண்டுகள் வாழ்ந்தவர். யாழ்ப்பாணத்து மேல் தட்டு வர்க்கத்தவர். ஆனால் மேல் தட்டு வர்க்கத்தின் மதிப்பீடுகளாலும் பெறுமானங்களாலும் கட்டுப்படாதவர். மாக்ஸியக் கொள்கையில்பால் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர். ஆனால் அதன் கட்டுப்பாடுகளுக்குள் இயங்காதவர். இலக்கிய அழகியல் கொள்கையில் நம்பிக்கை வைத்தவர். முழு நேர வாசகர். உலக இலக்கியத்தில் இறுதிவரை தன் பரிச்சயத்தைப் பேணியவர். பேராசிரியர் முதல் பாமரர்வரை அவரை தன் ஆளுமையால் கவர்ந்தவர். யாழ்ப்பாண மண்ணின் மைந்தர். அங்கு ‘சேற்றில் புதைந்த தடி’ யாக தன்னை வர்ணித்துக் கொண்டு விடாப்பிடியாக அதை விட்டு வெளியேறாதவர். யாழ்ப்பாண நகர குறியீடுகளான, பண்ணைப் பாலம், மணிக்கூண்டுக் கோபுரம், நூலகம் போன்று ஏ.ஜே.யும் ஒரு குறியீடு. அவர் இல்லாத அந்நகர் புத்திஜீவிகள் கண்களுக்கு வெறுமையாகவே காட்சி அளிக்கும்.

‘காலம்’ செல்வம் ஏ.ஜே.யின் வாழ்க்கைச் சரிதத்தைச் சுருக்கமாகச் சொன்னார். ஊர்காவற்றுறை, கரம்பனில் பிறந்த ஏ.ஜே. பின்னர் அவர் குடும்பம் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் செல்ல அங்கு பெரும் மாளிகை போன்ற வசதியான வீட்டில் வாழ்ந்தவர். புனித சம்பத்தரிசியார் கல்லூரி கற்று, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை வழிப் பாட்டன் கனகரத்தின முதலியார். பின்னர் முதலியார் என்ற பின்னொட்டுப் போக கனகரத்னாவாகி விட்டது. அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா இவருடைய முழுப் பெயர். ஏ.ஜே.குடும்பத்தில் மூத்தவர். இவருக்கு இரு சகோதரர்கள். ஒருவர் அமெரிக்காவில் பேராசிரியர். இரண்டாமவர் சிலோன் பிறின்ரன்ஸ் செல்வம் கனகரத்னா. அவர் தான் ஏ.ஜே.யைக் கடைசி மாதங்களில் வைத்தியசாலையில் வைத்து சகல வசதிகளையும் அளித்துக் கவனித்தவர். ஏ.ஜே.க்கு உயிருக்குரான நண்பர்கள் பலர். கடைசி 20 வருடங்கள் கிருஸ்ணகுமார் வீட்டில், அக்குடும்பத்தில், கண்ணியமான பாசமுள்ள தந்தையின் ஸ்தானத்தில் வாழ்ந்தவர்.

அடுத்துப் பேசியவர், ஏ.ஜே.யுடன் ஒரே காலத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற, இராமநாதன் மண்டபத்தில் ஒன்றாக வசித்த யோகி தம்பிராசா. அவர் ஏ.ஜே.யின் இலக்கிய முகத்தைத் தெரியாதவர் என்றும் ஆனால் அவருடைய புறத்தியான் ஆளுமையால் கவரப்பட்டவர் என்றும் சொன்னார்.

அடுத்து, உயர் தர வகுப்பில் புனித சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றபோது அதே கல்லூரியில் கற்பித்தவரும் பின்னர் ஏ.ஜே.யுடன் கற்பித்த ஆசிரியரான இலங்கையன் செல்வரத்தினம் பேசினார். இலங்கை அரசு 1960 இல் தனியார் பாடசாலைகளை தேசியமயமாக்கியபோது ஏ.ஜே.யும் அப்பாடசாலையைத் தேசியமயமாக்குவதற்கு உடந்தையாக இருந்தபடியால், அவர் கத்தோலிக்க ஆசிரியராக இருந்தும், கத்தோலிக்க பாடசாலை நிர்வாகம் அவரையும் வேலைநீக்கம் செய்தது. அது தனக்கு வியப்பாக இருந்தது என்றார்.

புனித சம்பத்தரிசிரியார் கல்லூரியிலிருந்து நீக்கியபோது அவரை மகாஜனாக் கல்லூரி ஏற்றுக் கொண்டது. அக்காலத்தில் அங்கு கல்வி கற்பித்த ஆசிரியர் பின்னர் அதிபரான கனகசபாபதி அடுத்துப் பேசினார். அக்காலத்தில் ஏ.ஜே.யின் ஆங்கிலப் புலமையை தமது பாடசாலை நன்றாகப் பயன்படுத்தியது என்றும் ஆனால் அவர் அங்கே மூன்றாண்டுகள் மட்டும் கற்பித்துவிட்டு, ஆங்கில ஏடான டெயிலி நிய10சுக்கு பத்திரிகை ஆசிரியராகச் சென்று விட்டார் என்றார். போய்க் கொஞ்சக் காலத்தில் ஏ.ஜே. வ.அ.இராசத்தினத்தின் ‘தோணி’ என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அதை அக்காலத்தில் மகாஜனாக் கல்லூரி அதிபரும் ஆங்கில மொழியின் பரம ரஸிகருமான ஜெயரத்தினம் அவர்கள் ஏ.ஜே.யின் ஆங்கில மொழிபெயர்ப்பை விதந்து பாராட்டினார் என்றும். சக ஆசிரியர்கள் தங்களில் ஒருவரான ஏ.ஜே.யைப் பற்றியே அக்காலத்தில் உரையாடினர் என்றும் சொன்னார். பின்னர், ஏரிக்கரைப் பத்திரிகை, யாழ்ப்பாணப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வெளியீடான ஊழழிநசயவழசள சஞ்சிகை, ளுயவரசனயல சுநஎநைற ஆகியவற்றுக்கு ஆசிரியராகவும் இருந்தார் என்றார்.

பேராசிரியர் செல்வா கனகநாயகம் தனக்கு 30 ஆண்டுகளாக ஏ.ஜே.யை நன்றாகத் தெரியும் என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சக ஆசிரியராக இருந்தவர். தனது ஆய்வுக்குப் பலவழிகளில் வழிகாட்டியாக இருந்தவர். அவருடைய பங்களிப்பை மதிப்பிடுவது மிகவும் கஷ்டமான ஒன்று. அவர் பல்கலைக் கழக ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருக்கக் கூடிய அளவு கல்விப் புலமை உள்ளவர். ஆனால், அதை விரும்பாதவர். ‘சிறியன சிந்தியாத’ பண்புள்ளவர். யாழ்ப்பாண சமூக மதிப்பீடுகளைக் கொண்டு அவரை அளக்க முடியாது என்றார்.

ஏ.ஜே. யிடம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆங்கிலம் படித்த க.நவம் பேசுகையில் எப்படி ஆர்.எல்.ஸ்hPவன்சனின் வுசநயளரசந ஐளடயனெ நாவலை அதனுடன் ஐக்கியமாகி கற்பித்தார் என்றார். லோங் ஜோன் சில்வரை வர்ணித்ததையும்;, குகைவநநn அநn ழn வாந னநயன அயn’ள உhநளவஃ லழ-hழ-hழஇ யனெ ய டிழவவடந ழக சரஅ என்று கரகரத்த குரலில் பாடி, ஆடி அபிநயித்துக் காட்டியதையும் நினைவு படுத்தினார். “எங்களுடன் படித்த குழப்படிகார ஒரு மாணவன் ஏ.ஜே.யை ‘வெறிக் குட்டி’ என்று பாடம் முடிந்து போனபோது பின்னால் இருந்து கூப்பிட்டான். திரும்பி வந்த அவர் என்ன செய்யப் போகிறாரோ என்று அந்த மாணவனும் நாங்களும் பயந்திருந்தபோது ஏ.ஜே. தன் பேர்சுக்குள்ளிருந்து ஐந்து ரூபாய்க் காசை எடுத்துச் சாப்பிடு, போ! என்றார். ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று அவரைக் கேட்டபோது ‘அவன் காலையில் எதுவுமே சாப்பிடாமல் வருகிறவன் அதுதான் அப்படிக் குழப்படி செய்கிறான்’ என்றார்.”
இறுதியில், ஞானம் லம்பேட் பேசுகையில் தான் மொழிபெயர்த்து மேடையேற்றிய ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தை பாராட்டி ஏ.ஜே. கடிதம் போட்டதையும் அந்நாடகத்திற்கு லங்கா காடியனில் எதிர்வினையாற்றிய சமுத்திரனுக்கு எதிர்வினையாக எழுதியதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

‘காலம்’ சஞ்சிகை ஏ.ஜே. வாழும்போதே அவருக்கு நினைவு மலர் போட்டதையும் கனடிய இலக்கியத் தோட்டம் அவரின் இலக்கிய சேவையைப் பாராட்டி 50,000 ரூபா பணம் கொடுத்ததையும் நினைவு கூர்ந்தனர். ஆனால் அவற்றை ஏ.ஜே. விரும்புவர் அல்ல. அவரைப் பற்றி எழுதிய எதையுமே வாசித்தவர் அல்ல என்பதை கிருஸ்ணகுமார் எழுதியிருந்தார். அவருடைய ‘மத்து’ என்ற நூலுக்கு இலங்கை சாகித்தியப் பரிசு கிடைத்துள்ளது. அவருடைய நூலொன்றை வெளியிடும்பொழுது அவர் அக்கூட்டத்திற்கே போகாமல் வேறு வழியால் சென்று கொண்டிருந்தார். அவரைப் பற்றி எழுதிய கட்டுரையை குகமூர்த்தி கொண்டு வந்தபோது அதை வாங்கி வாசிக்காமல் எறிந்து விட்டார். தன்னை அழுத்தாத, தன்னகங்காராம் இல்லாத மனிதப்பிறவி அவர். இப்படியாக அவர் வாழும்போதே ஒரு புறத்தியானாக பற்றற்ற துறவியாக வாழ்ந்தவர். அவருக்கு அஞ்சலி செலுத்துவதையே அவர் விரும்பி இருக்க மாட்டார். ஆனால் அவருடைய நண்பர்கள் தங்கள் திருப்திக்காக, ஏ.ஜே. என்ற அன்புள்ளம் கொண்ட உண்மையான மனிதரைக் கௌரவிப்பதற்காக, அவருடைய மாசற்ற ஆன்மா சாந்தியடைவதற்காக, அக் கூட்டத்தைக் கூடி அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.


mahalingam3@hotmail.com

Series Navigation

author

வெள்ளியம்பலம்

வெள்ளியம்பலம்

Similar Posts