ஏகத்துவ அரசியல் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1) இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக. அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) என்பதாக பல நிலைகளில் இது அறியப்படுகிறது. இந்த ஏகத்துவக் கொள்கை, புராதான இந்திய சமூகத்தின் கி.மு.7 முதல் 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வேத, உபநிடத காலங்களில் இயற்கை கடவுள்வணக்கம் தாண்டிய மற்றொரு நிலையில் ஓரிறை தத்துவமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இறையின் அவதாரமா, தூதரா – உருவமா, அருவமா என்பதான எல்லை தாண்டி இது செயல்படுகிறது.
ரிக், யசூர், சாம அதர்வண வேதங்களில் ஏக இறை குறித்த கருத்தாக்கங்கள் இடம் பெற்றுள்ளன. உபநிடதங்களின் சில சுலோகங்கள் கீழ்கண்டவாறு உள்ளன. அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை (ஏகம் ஏவம் அத்விதயம்) அவனுக்கு பெற்றோர்களும் இல்லை. பாதுகாவலரும் இல்லை (நா கஸ்ய கஸ்சிச் ஜனித நா கதிபத்) அவனுக்கு நிகராக எதுவுமில்லை. (நா தஸ்தி பிரதிம அஸ்தி)
யசூர் வேதத்தின் சில பகுதிகளிலும் இத்தகையதான ஏக இறை சார்ந்து சிந்தனை வெளிப்படுகிறது. அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (நா தஸ்ய பிரதிம அஸ்தி) என்பதாக வெளிப்பட்டுள்ளது. படைப்பவன் என்கிற அர்த்தத்தில் பிரம்மா வென இறைவனை ரிக் வேதம் சுட்டிக் காட்டுகிறது. தெய்வீகக் தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டும் வணங்குங்கள். (மா சிதன்யதிவி சன்சதா) என்பதான இதன் நீட்சி தொடர்கிறது. அல்லாஹு அக்பர் – அல்லா பெரியவன் என்ற முஸ்லிம்களின் கூற்றை அதர்வண வேதத்தின் வரிகள் நிச்சயமாக கடவுள் மிகப் பெரியவன் ஆவான் (தேவ் மஹாஓசி) இதுபோன்றே இந்து மத பிரம்ம சூத்திரம் இறைவன் ஒருவனே, வேறு இல்லை இல்லவே இல்லை. (ஏகம் பிரஹ்மம் தவித்ய நாஸ்தே, நஹ்னே நாஸ்தே கின்ஜன்) என்பதாக பேசுகிறது. தமிழ் மரபில் சமண பௌத்த சமய சாயல்களையும் வேறுவிதமாய் அர்த்தப்படுத்தலாம்.
கி.பி. 2ம் நூற்றாண்டிலேயே வானுறையும் தெய்வம் / இவ்வுலகு இயற்றினான் / ஆதிபகவன் / மெய்ப்பொருள் – என்பதான ஏகச் சிந்தனையை கடவுள் கோட்பாடாக வள்ளுவம் கூறுவதையும் சொல்லலாம்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பாரžகத்தின் ஜெராஷ்ட்ரிய மதமும் ஆஹுராமஷ்டா எனும் அறிவில் மிகைத்த கடவுள் பற்றி குறிப்பிடுகிறது. பார்சிகளின் புனித நூலான தசாதிர் இறைவனை ஆதியும் அந்தமும் இல்லாதவன், வடிவமோ அமைப்போ இல்லாதவன், அவன் ஒருவன், அவனைப்போல எவருமில்லை என்பதாக குறிப்பிடுகிறது. இம்மத கோட்பாடுகளெல்லாம் நபிமுகமது இஸ்லாத்தை வடிவமைப்பதற்கு முற்பட்ட காலத்தின் தத்துவக் குரல்களாகும்.
நபிமுகமதுவிற்கு முன்பே கஃபாவில் அரபு பழங்குடிகள் லாத், உஜ்ஜா, மனாத், ஹுபல் என பல பெண் கடவுள் சிலைகளை வணங்கி வந்துள்ளனர். இவற்றினூடே உயர்ந்த வகைப்பட்ட தந்தைக் கடவுளாக அல்லா என்ற சந்திரக் கடவுளையும் வணங்கி வந்துள்ளனர். இளம்பிறை முஸ்லிம்களின் அடையாளமாதற்கு இதுவே காரணமாகும். யூதர், கிறிஸ்தவர், பகாயிகள், தங்களின் சந்தோசம், துயரத்தின் குறியீடாக யா அல்லா என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார்கள். நபிமுகமதுவின் தந்தையின் பெயர் கூட அப்துல்லா என்பதாகும். இதில் கூட ‘அல்லா’ என்ற சொல் இணைந்துள்ளது. அக்கால கட்டத்தில் ஏமன் மக்கள் வணங்கிய தெய்வத்திற்கு அர்ரகுமான் என்று பெயர். ரகுமானா என்ற யூத மொழிச் சொல்லின் வடிவமான யூதர்களை ஒன்று திரட்ட பயன்பட்ட அர்ரகுமான் சொல் அல்லாவின் பெயருக்கு மாற்றாக திருக்குர்ஆனீன் முதல் ஐம்பது சூராக்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. இஸ்லாத்தின் முக்கிய கடமையென வலியுறுத்தப்பட்டு உலக முஸ்லிம்களால் நாளொன்றுக்கு ஐந்து நேரம் என வரையறுக்கப்பட்ட இறைவனை வணங்கும் தொழுகை முறையானது நபி முகமதுவின் வழிமுறையாக பின்பற்றப்படுகிறது. நபிமுகமதுவின் காலகட்டத்திற்கு முன்பே சிரியாவில் வாழ்ந்த சாபியீன்கள் என்னும் மக்கள் சமய சடங்காக ஒரு நாளைக்கு ஏழு தடவை தொழுகை நடத்தியவர்கள் ஆகும. இஸ்லாத்தில் அவர்கள் பின்பற்றிய ஐந்து நேர தொழுகையின் அதேகாலம் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும் மிகப்பழமை வாய்ந்த இந்திய வகைப்பட்ட, வைதீக சாதீய மரபுகளுக்கு மாற்றான யோக மரபின் கூறுகளோடு தொழுகையின் அம்சங்கள் ஒத்திருப்பதை கவனிக்கலாம். பதஞ்சலியின் யோக சூத்திரத்திற்கு கி.பி.4ம் நூற்றாண்டிலேயே வியாச பாஷ்யம் விரிவுரையை வியாசர் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழுகையின் அமைப்பு முறையில் இடம் பெறும் காட்சிநிலைகள் இகாமத் சொன்னவுடன் நிற்கும் நிலை சமஸ்திதி, அல்லாஹு அக்பர் சொல்லி தக்பீர் கட்ட கையை உயர்த்துதல் கர்ண சக்தி விகாஸகா, ருகூவுக்கு செல்லும் குனிந்தநிலை ஸமன்சித்தி விகாஸகா ஸமியல்லஹுலிமன்ஹமீதா என நிமிரும் நிலை சக்ரவாகாசனம், பூமியில் நெற்றிபட சுஜுது செய்யும் நிலை அர்த்த சிரசாசனம், அமர் நிலையில் பூமி தொடும் நிலை வஜ்ராசனம், தலையை திருப்பி ஸலாம் கொடுத்தல். அர்த்த மத்ஸ யேந்திராசனம் என்பதாக யோக, தியான மரபின் கூறுகளோடு தொழுகை பின்னிப் பிணைந்திருப்பதையும் கவனத்திற்கொள்ளலாம்.

3. வரலாற்று பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.3ம் நூற்றாண்டிலேயே அரேபியாவிற்கு வடக்கே ரோமானிய பேரரசும், கிறிஸ்தவமும், வடகிழக்கே பாரžகப் பேரரசும் யூத மதமும் அதிகாரத்தில் நிலை பெற்றிருந்ததை காணலாம். இப்ராஹ“ம் நபியும் அவர்தம் மகன் இஸ்மாயீல் நபியும் புதுப்பிக்கக் கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம். நபி முகமதுவுக்கு முற்பட்ட காலத்திலும் நாயக வாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது. குறைஷ’, ஹுதைல், சிமிட்டிக் உள்ளிட்ட இன மக்கள் ஹோபல். லாத், உஜ்ஜா, மனாத் உள்ளிட்ட முன்னூற்றி அறுபதுக்கும் மேற்பட்ட தெய்வச் சிலைகளை கஃபத்துல்லாவில் வணங்கி வந்தனர். நபி முகமதுவால்தான் இத்தகு புற மத அடையாளங்கள் நீக்கப்பட்டு கஃபா இஸ்லாமியப் பண்பாட்டு அடையாளமாக நிலைபெறுகிறது.
இஸ்லாத்தின் இறுதிக் கடமையை ஹஜ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றுதலாக உள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் இஹ்ராம் என்னும் வெள்ளாடை தரித்தலும் மக்காவின் எல்லைப் புறமான மினாவில் தங்கி அங்கு ஷைத்தானை கல்லெறிவதும், கஃபாவைச் சுற்றி ஏழுமுறை வலம் வந்து இரண்டு ரக்அத்து தொழுவதும், அங்குள்ள உஹறஸ்ருல் அஸ்வத் பளிங்கு கல்லை முத்தமிடுவதும், சபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும், இறுதி நிகழ்வாக பலியிடுதலான குர்பான் கொடுப்பதும், அரேபிய கலாச்சார சூழல் சார்ந்து, திருக்குர்ஆன் அங்கீகரித்த நபிகள் நாயகத்தின் நடைமுறைகளாகும். இந்துக்கள் கோவில்களில் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள், முஸ்லிம்களோ தர்காக்களில் படுக்கப்போட்டு கும்பிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதைப்போல கஃபாவை சுற்றி வலம் வருவதை கே’யிலை சுற்றி வலம் வருவதாகவும், ஹஸ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை கறுப்பு நிற கல்லை வணங்குவதாகவும், முடி களைவதை கோயில் கடமை முடித்துவிட்டு மொட்டை போடுவதாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்க சாத்தியமுள்ளதாக மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே தான் தர்கா நிகழ்வுகளையோ, ஹஜ்ஜின் அமல்களையோ மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ இல்லாமல் வரலாற்று சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்தும் அணுக வேண்டியுள்ளது.

4. இஸ்லாத்திற்கு முற்பட்ட காலங்களில் அரேபிய நாடுகளில் ஆசியப் பிரதேசங்களில் மட்டுமல்ல உலகமெங்கும் பழங்குடி சமுதாய மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக கடவுளுக்காக பலியிடுதல் என்கிற வழக்கம் உள்ளது. வேதகாலப்பழக்கமும் நடைமுறையும் இது. சமண புத்த மதங்களின் உருவாக்கத்தின்போது கால்நடைகளை தெய்வத்திற்கு பலியிடுதல் தடுக்கப்பட்டது. இதற்கான சமூகக் காரணம் வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு மாறியதுதான். புராதான விவசாய சமூகத்தில் கால்நடைகள் பங்களிப்பு மிக தேவையாயிருந்தது. எனவே அது அம்மத நம்பிக்கைகளில் தடை செய்யப்பட்டிருந்தது. எந்திரமயமாக்கப்பட்ட தொழிலுற்பத்தி சமுதாயத்தில் விவசாய உற்பத்தி கூட கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. இக்காலத்தில் வைதீக இந்து மதம் பசுவதைதடை என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, தலித்திய மற்றும் சிறுபான்மையின மக்களின் உணவுப்பழக்கத்தில் கை வைக்கப்பார்க்கிறது சைவம் உயர்ந்தது. அசைவம் தாழ்ந்தது என்ற பிராம­ய கருத்தாடலை திரும்பவும் உயிர்ப்பிக்க முயல்கிறது.
இச்சூழலில் இஸ்லாம் கூறும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் ஆட்டையோ ஒட்டகத்தையோ பலியிடுதல் (குர்பான் கொடுத்தல்) இபுராகீம் நபீ அவர்தம் மகனார் இஸ்மாயிலை இறையாணையின் படி பலிகொடுக்க முன் வந்ததையும் அவர்களது இறைபக்தியையும் இறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பாரம்பரியமான நடைமுறையாகும். இதன் வரலாற்று அர்த்தம் என்பதே மனிதப்பலி தடுக்கப்பட்டு விலங்கினப்பலி மாற்றாக முன்வைக்கப்பட்ட சம்பவமாகும்.
எனவே குர்பான் கொடுத்தலிலும் புற வடிவம் அகவடிவம் என்கிற இருநிலைகள் உள்ளன. இச்செயலின் புறவடிவ சில பகுதிகளைப் பார்த்தால், பிற சமய நடவடிக்கையான கிராமப்புற தெய்வங்களுக்கு ஆடு, மாடு பலியிடுதல் போலத் தோன்றும். எனவே குர்பான் கொடுக்கும் முறை நோக்கம் உள்ளிட்ட அகவடிவமும் மிக முக்கியமானதாகப் படுகிறது.
நோன்பு, சுன்னத் உள்ளிட்ட வழக்கம்
இஸ்லாமிய மரபுகளில் ஒன்றாக மாறுவதற்கு முன்பே நோன்பு என்பது இன்னொருவித வடிவத்தில் கிறிஸ்தவத்திலும் நடைமுறை சமயப் பழக்கமாக இருந்து வந்துள்ளது. உபவாசம் என்கிற வகையில் அது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட வடிவத்தில் இருந்தது. யூதர்கள் கூட பாவ பரிகார பண்டிகையான அஷ”ரா நோன்பை கடைபிடித்திருக்கிருந்தார்கள். இந்து சமய நடவடிக்கைகளிலும் விரதமிருத்தல், கார்த்திகை மாத நோன்பு அனுசரித்தல், பெண்கள் மட்டும் அனுசரிக்கும் அவ்வை நோன்பு போன்ற வழக்கங்கள் பல்வேறு வடிவங்களில் இடம் பெறுகின்றன.
இஸ்லாத்தில் நோன்பு ரமலான் மாதத்தில் என வரையறுக்கப்பட்ட, கட்டுப்பாடான, வடிவத்தில் கடமையான ஆன்மீகப் பயிற்சியை உருவாக்கவும் மனிதநேய சாளரத்தை திறக்கும் நோக்கிலும் இயங்கியது. சுரங்கங்கள், ஆலைகள், விவசாயம் என பல்வேறு துறைகளில் நேரடி கடும் உடலுழைப்பில் ஈடுபடும் மக்களுக்கான நடைமுறை பங்கேற்பு சாத்யப்பாடுகள் குறைவாக இருந்தாலும் மத்தியவர்க்க, வணிக பிரிவு மக்களும், வசதி படைத்தவர்களுக்கும் முப்பது நாள் நோன்பு பிடித்தல் இயல்பான காரியமாக உள்ளது. அரபுச் சூழலில் சிரிய மக்களான சாபியீன்களும் முப்பது நாட்கள் நோன்பினை பேணிவந்துள்ளார்கள். ஆனால் நோன்பின் காலம் சூரிய மறைவிலிருந்து மறுநாள் காலை சூரிய உதயம் ஆகும் வரை என்பதாக இருந்தது. ஈது பெருநாளும் கொண்டாடியுள்ளார்கள். நபி முகமதுவின் முன்மாதிரிப்படி ஏற்றத்தாழ்வை சமன்படுத்தல் நோக்கிலான ஜகாத் என்னும் ஏழைவரியும் இம்மாதத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது. எனவே நோன்பு அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மைளும் பொதுக்கூறு யூதர்கள் பின்பற்றுகின்ற கிறிஸ்தவர்களிடத்தில் முன்பு நடைமுறையில் இருந்த விருத்தசேதனம் என்னும் நிகழ்வைப்போல இஸ்லாமிய நடைமுறை பழக்கத்தில் ஆண்குழந்தைகளின் பிறப்புறுப்பு நுனியை கத்னா செய்தல் என்னும் மரபு வழக்கம் கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கலாம்.
இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் புராதான ஐரோப்பிய, ரசிய சமூகங்களிலும், முற்பட்ட அராபிய சமூக வழக்கங்களிலும், புராதன தமிழ் சமூகத்திலும்கூட இருந்து வந்துள்ளது. இப்பழக்க முறை சாயல்கள் இஸ்லாத்தின் மரபாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
பழந்தமிழ் சமூகப் பழக்கங்களில் ஒன்றான திருமணத்தின்போது மணமகளுக்கு மணமகன் பரிசப்பணம் வழங்குதல் எனும் நிகழ்வு இஸ்லாத்தில், மணமகன், மணமகளுக்கு மஹர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதோடு ஒத்துப்போவதையும் கவனிக்கலாம்.
அரேபிய முற்காலச் சூழலில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்துள்ளது. கதிஜாநாயகி தனியாக முதலீடு செய்த வர்த்தக தொழிலில்தான் நபித்துவம் பெறுவதற்கு முன்பே நபி முகமது ஈடுபட்டிருந்தார்கள் என்கிற செய்தியும் கவனத்திற்குரியது.
இஸ்லாத்தை காலத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு நபி முகமது வடிவமைத்தது நிகழ்ந்துள்ளது. இதில் வகாபிகள் பேசும் தூய்மைவாதத்திற்கு இடம் எதுவுமில்லை. முன்பிருந்த சமய சமூக பழக்கங்களின் வளர்முகத் தன்மை கொண்ட சாரம்சத்தை சூழலுக்கேற்றவாறு இஸ்லாம் உள்வாங்கிக் கொண்டது என்பதே இவைகூறும் ஆழமான செய்திகளாகும்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்