எழுதிச் செல்லும் விதியின் கை

This entry is part [part not set] of 7 in the series 20000611_Issue


– முடவன் குட்டி


சுவர்க்கடிகாரம் நான்கு முறை அடித்தது. எங்கிருந்தோ ஒலிப்பதாய் காதில் விழுகிறது. பாதித்
தூக்கத்தில் புரண்டு படுக்கிறேன். மனைவி குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும்
அம்மாவுக்கும் ராத்திரி நடந்த சண்டை நினைவுக்கு வர, தூக்கம் சுத்தமாய்ப் போய்விட்டது.

‘ச்சே… ‘ படுக்கையை விட்டு வெடுக்கென எழுந்து உட்காருகிறேன். பீடி தேடி, தலையணைக்குக் கீழே
கை போகிறது. தீப்பெட்டி… ? ராத்திரி நடந்த யுத்தத்தில் அதனையும் மறந்திருக்கிறேன்.
தீப்பெட்டி சமையலறையில் இருக்கும். எழுந்து கதவைத் திறந்து முற்றத்தில் இறங்கிய போது, குளிர்ந்த காற்று
முகத்தில் அறைகிறது. சமையலறைக் கதவு திறந்திருக்கிறது. சின்ன விளக்கின் மங்கலான ஒளி
லேசாய் அசைகிறது. மூலையில் அம்மா படுத்திருக்கிறாள். தீப்பெட்டி தேடுகையில் விழித்துக் கொண்டாள்
அம்மா. ஏதோ முனகினாள். எரிச்சலாய் வந்தது. ‘ஏம்மா… காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டியா ? ‘

‘என்னல ஆரம்பிச்சேன்… ஒளிஞ்சு போலாம்னா சாவு வரமாட்டேங்குதே… வூட்டு நரகத்திலே
கெட-ன்னு அந்த ரப்பு எழுதிட்டானே… ‘

‘சரி… சரி பேச்சை நிறுத்து. எளவெடுத்த பேச்சு… ‘

‘….ஆமல. நான் எளவெடுத்துப் போயிடறேன்… நீயும் ஒம் பொண்டாட்டியும் வாழுங்கலே… ஏல
வாப்பா… நிதானமா இருல.. துள்ளித் துடுச்சு தூளாப் போவாதல_ ‘

‘ஏ செத்த சவம். இப்போ சும்மா கெடக்கிறியா இல்லையா…! ‘

அவ்வளவுதான். படுத்திருந்தவள் ஆக்ரோஷமாய் எழுந்துவிட்டாள். ‘யாரப் பார்த்துல சும்மா கெடக்கச்
சொல்ற… கால நீட்டி படுத்துறங்குதா பாருல… ஒம் பொண்டாட்டி…. பொண்டா ஆட்டா… ஈ…
ஈ… அந்த தே… செருக்கியப் போயி சும்மா கெடக்கச் சொல்லுல … ‘ டம் டம் டம்… டம டம
டம்… – வார்த்தைகள் சீறிச்சினந்து செவிப்பறையைக் கிழித்து நெஞ்சைச் சுட்டுக் குதறின. ரத்தம்
கிர் ரென தலைக்கேறி, கண்கள் வெறியாய்க் கொப்பளிக்க, ‘கிழட்டு நாயே… ஒனக்கு இம்புட்டு
ஆங்காரமா… ஒங்காலை முறிச்சு கையிலே விலங்கு போடுறேனா இல்லியா பாரு… ‘.

எட்டி ஓர் உதை. ‘ஐயோ கொல்றானே… ‘ அலறியபடி, கீழே சாய்ந்தாள் அம்மா. விழுந்து கிடந்த
அம்மாவிடம் பேச்சில்லை. அசைவில்லை. பதறிப்போய்… ‘ம்மா… ம்மா… ‘ என்கிறேன்.
நெற்றியைத் தடவிப் பார்க்கிறேன். தோளைத் தொட்டு உசுப்புகிறேன். கையைப்ப்ற்றி தூக்க அது ‘தொப் ‘
பென விழுகிறது.

அம்மா… அம்… மா… அடிவயிற்றிலிருந்து பிளிறிக் கிளம்பும் உயிரின் குரல், ‘பக் ‘ கென
நெஞ்சுக்குழி அடைக்க, நரம்பில் , ரத்தத்தில், கைதலத்தில் , கண்ணில், காதுகளில் பீதி
பரவிற்று. கழுத்து நெறிபட மூச்சு திணறிற்று.

பாய்ந்து ஒரே தாவு. முற்றத்தைத் தாண்டி படுக்கை அறை வாசலில் விழுகிறேன். வியர்த்து விறுவிறுக்க
உடல் நடுங்குகிறது. மனைவி புறண்டு படுக்கிறாள்.

‘வேண்டாம்… சொல்ல வேண்டாம்… யாருக்குமே… ‘ கொடியில் தொங்கும் சட்டை, வேஷ்டி
துண்டு… துணிப்பைக்குள் திணிக்கிறேன். பணம்.. ? மூச்சை ஆழமாய் உள் இழுத்து ‘தம் ‘ பிடித்து, அரிசிப்
பானையைத் துளாவ… மனைவியின் சங்கிலி, காப்பு. சட்டைப் பையில் கொஞ்சம் சில்லறை இருக்கிறது.
போதும். மெல்ல அடிவைத்து முற்றத்திற்கு வருகிறேன். அ… விளக்கு அணைஞ்சு போச்சா… ஒரே
இருட்டா இருக்கே… கொல்லைப் புறக் கதவை மெதுவாக திற… திறந்து…

ஓடு… ஓடு… வெறிக்கொண்ட நாயைப் போல ஓடுகிறேன். சேறும் சகதியுமாய் குளத்து ஓடை. ஒரு
கால் சகதிக்குள். வெளியே இழு… இழுத்து… அ… அந்தப் பூவரச வரத்துக்குப் பின்னால் ஒளிந்து,
சட்டையைப் போட்டு கொள்ளலாம். மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறேன். குறுக்குப் பாதையில்
சென்றால், யாருக்கும் தெரியாது. மெயின் பஸ் ஸ்டாண்டுக்கும் போக வேண்டாம். ரோட்டிலேயே கை காட்டி
பஸ்ஸை நிறுத்திக் கொள்ளலாம். முதலில் ஊரைவிட்டு நகர்ந்துவிடணும். அப்புறம் எங்கேயாவது கண்காணாத
இடத்துக்கு ஓடிடணும்.

எங்கிருந்தோ, இருளைக் கிழித்து வந்த ஆந்தையின் அலறல், குரல் மாற்றி மாற்றி தலைக்குள்
பெரிதாய் ஓலமிடுகிறது. மூச்சு நடுநடுங்க வேகமாய் நடக்க ஆரம்பிக்கிறேன். வேகம், நடையை விரட்ட
ஓட்டமாய் ஓடுகிறேன். இருட்டு… வானத்தில் ஒரேயொரு நட்சத்திரம். அதுவும் என்னோடு …
என்னைத்துரத்திக் கொண்டு வருவதாய்… ஐயோ… இது என்ன… ? சரல்கற்களும். மேடு பள்ளங்களும்… ? வண்டிப்
பாதையை விட்டுவிட்டேனா… ? முட்செடியின் கிளையொன்று கன்னத்தை விளாறி, சட்டையைக்
கிழித்துவிட்டது. கன்னத்தைத் தடவ பிசுபிசுப்பு. ரத்தம். கால்கள் தாவித்தாவி ஓடுகின்றன. தெவங்கித்
தெவங்கி மூச்சு வாங்குகிறது. வாய் பிளந்து காற்றை உள்இழுக்கிறேன். மார்கழிக்குளிர் காற்று,
கொஞ்சம்… உட்கார்ந்து… அப்புறம் செல்லலாம்… காற்று பலமாய் வீசுகிறது. மழை வருமோ… ? குவிந்து,
குவிந்து, சுழித்து, சுழித்து ‘ஹ்உ ஹ்உ ‘ – வென காதுக்குள் ஓலமிடுகிறது காற்று. வெலவெலத்துப் பயந்து
குப்புற விழுகிறேன். நாக்கு, குடல் ஒட்டி உலர்ந்து போவுதே… குடிக்கத் தண்ணீர். தண்… எழுந்து
ஓடுகிறேன். சுண்ணாம்புக் காள்வாய் எதிரே குளம். ஆடு, மாடு குளிப்பாட்ட-மலம் கழித்தபின் கால்கழுவும்
குளம். தாகம். அள்ளி அள்ளிக் குடிக்கிறேன். தீரவில்லை குனிந்து, கைகளை தலையில் ஊன்றி,
வாயால், ஒரு மிருகத்தைப் போல் குடித்து தீர்க்கிறேன். அப்பாடா… குளத்தை ஒட்டி மெயின்ரோடு.

கண்களைக் குருடாக்கும் வெளிச்சத்தை வாரி இறைத்தவாறு- அதோ பஸ். ‘சடாரென ‘ நிற்கிறது.

‘எளவெடுத்த மூதேவி. நடுரோட்டுலேயா நின்னு கை காட்டுவாக… ஏறு. வேய்… ஏறு. ஏய்யா
பேயடிச்ச மாதிரி பாக்கேறு… பஸ் மேலே ஏறுச்சுன்னா என்ன ஆவும் தெரியுமா வேய் ? நீரு நிம்மதியாப்
போய் சேர்ந்திருவீரு. என் வேலை போயிடும் வேய். சரி சரி… எங்க போவணும்… எங்க
வேய்… ? பொட்டல் புதூரா… ? எடும்… துட்டெடு வேய்… ‘

பொட்டல் புதூர்னு, அவனே சொல்றானே… இந்த பஸ், த்ருவா பொட்டல் புதூருக்கே போவுதுபோல…
அதுவும் நல்லதுதான். பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், பாத்திஹா ஓதிவிட்டுப்
போய்விடலாம். பின் ஸீட்டில் , மூலையில் அமர்கிறேன். மழைக்காக சுருட்டி வைத்திருந்த கான்வாஸை,
கீழே இழுத்துவிடுகிறேன். ஸீட்டில் படுத்தவாறு சாய்ந்து, கால்களை முன்னால் நீட்டி கொள்கிறேன்.

‘அ…ம்…மா ‘- உயிர்ச்சுடர் உள்ளே, ஆழத்திலிருந்து கதறிற்று. துண்டை வாயில் திணித்து,
பொங்கிப் பொங்கி அழுகிறேன். ‘அம்மா-எப்பவாவது உன்னை வாயாற அம்மா-ன்னு கூப்பிட்டிருப்பேனா… ?
ரத்தம் தெறிச்சுப் போக, ராப்பகலா தறி நெய்து என்னைக் கண்ணுலவச்சு வளத்தியே… ஐயோ…
அம்மா… ஒன்ன இனிமே பார்க்கவே… முடியா…

முன்ஸீட் கம்பியில் படார் படாரென, தலை மோத , பஸ் நிற்கிறது. கண்டக்டர் அருகே வந்து,
மேலும் கீழும் முறைக்கிறான். துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறேன். ‘ரைட் ‘ ‘ரைட் ‘ – கண்டக்டர்
கத்துகிறான். டிரைவரும், அவனும் ஏதேதோ பேசிக்கொள்கின்றனர். காதோடு சேர்த்து, துண்டை தலையில்
கட்டிக் கொள்கிறேன். கண்கள், மூட…

அம்மா… அம்மா நீ பட்ட கஷ்டத்துக்கு, உன்னைப் பூவா வச்சிருக்கணும்… அப்படித்தான்
நினைச்சேன்… கல்யாணமாச்சு. புதுசா வந்த பொஞ்சாதிக்கு முதல் குறி, புருஷனைப் பெத்தவதான். அவளிடமிருந்து
புருஷனை பிரிச்சிரணும். அது வரைக்கும் ஓயமாட்டா… மருமவ நினைப்பெல்லாம், மாமியார்க்காரிக்கு
‘பளிச் ‘னு தெரியும். இவளை அவ மறிப்பா. அவளை இவ நெரிப்பா. இந்த திணறல்ல அம்மா,
என்னிடமிருந்து விலகி போயிட்டா… ரொம்ப தூரம். வீட்டில் யாரும் அம்மாவுடன் பேசுவதில்லை. என்னிடம்
மட்டும் வலிஞ்சு, திரும்பத் திரும்ப பேசுவா. ஒம் பொஞ்சாதி அதெச் சொல்றா… இதெச்
சொல்றா… என. நான் அதுக்கெல்லாம் பதில் சொல்றதே இல்லை. வெறுப்புன்னு ஒண்ணுமில்லே. சண்டையை
விசாரிக்க ஆரம்பிச்சா நதிமூலம், ரிஷிமூலம்தான். ஜீவனம் கழியாது. ஆனா அம்மா, காத்திருந்தா.
எப்பவாவது அவளை நான் அம்மா-ன்னு கூப்பிடுவேன்-னு. அது நடக்கல. அப்படியே பழகிப் போச்சு. ஆச்சு…
பத்துவருஷம். அம்மா தன்னை கொண்டு ஒதுங்கிட்டா. வீட்ல யாருமே இல்லாதபோது, ஒரு திருடியைப் போல
வருவா… சோறோ… சோளக் காடியோ… தானா எடுத்து வச்சு வெங்காயத்தைக் கடிச்சுகிட்டு
சாப்பிடுவா…

நேற்று ராத்திரி… எங்கோ வெளியில போயிட்டு, பத்து பத்தரை மணி வாக்கில வீட்டுக்கு
வந்தா அம்மா. சோறு இல்லை. பானையிலே தண்ணி ஊத்தி வச்சிருக்கு. பேச ஆரம்பிச்சா பொஞ்சாதி
சும்மா இருப்பாளா… ? எதிர்ப்பேச்சு. பேச்சு வளர்ந்து, இவள் தலைமயிரைப் ப்ற்றி அவள் உலுக்க,
அவளின் மூஞ்சியைப் பிராண்டித் துப்பினாள் இவள். பக்கத்துவீட்டு ஆயிஷா, எதிர்த்தவீட்டு மைமூனு- என
கும்பல்கூடி, சமாதானம் செய்யும் சாக்கில், சண்டையை அணு அணுவாக ரசித்து, ருசித்து பருகிக்
கொண்டிருந்தபோது நான் வந்தேன். இருவரையும் விலக்கினேன்.

‘எனக்கென்ன தெரியும்… ? ‘அது ‘ சாப்பிட்டிருக்கும்-ன்னு நினைச்சு, புள்ளைக்கு ஒரு வாய் ஜாஸ்தி
சோறு போட்டேன்… ‘ – என்றாள் மனைவி.

நான் பொன்னுவிலாஸ் காபிக் கடையில, இட்லி வாங்கிவந்து, அம்மா முன்னால் வைத்தேன். அவள்
இட்லியைத் தொடவே இல்லை. தூங்காம, ரொம்ப நேரம் அழுது புலம்பிக் கொண்டே இருந்தாள். காலையில்
பீடிக்குத் தீப்பெட்டி தேடும்போது ஒப்பாரி வைத்ததால், அவளை காலால் எ…த்…தி…

‘வேய் தூங்குறீரா… எறங்கும். பொட்டல்புதூர் வந்தாச்சு வேய்… ‘- கண்டக்டர் உசுப்ப, தட தடவென
கீழே இறங்குகிறேன். எதிரிலேயே பள்ளிவாசல். அண்ணாந்து பார்க்கிறேன். பார்வை போகுந்தூரம்
வளர்ந்தவாறு மேலே மேலே போயிற்று பள்ளிவாசல் மினாரா. மெல்ல நடக்கிறேன். புறாக்கள் முகத்துக்கு
நேரே மறிப்பது போல, மாறி மாறிச் சிறகடிக்கின்றன. படி தாண்டி, பள்ளிவாசலுக்கு உள்ளே,
கல்தரையில் கால்வைக்க, ‘சுரீல் ‘ என ஏதோ ஒன்று, கால்நுனிவழியே மேலேறி, கபாலத்தை தாக்கிற்று.
தலை தாழ, கூனிக் குறுகியபடி. மனித உருவங்கள் ஆங்காங்கே திட்டுதிட்டாய் உறைந்து கிடக்கின்றன.
எத்தனையோ மனிதர்களின் உள்மன ரகஸ்யங்களை, காலா காலமாய் உறிஞ்சி உள்வாங்கிக் கொண்ட
ஊழிக்காற்று தலைக்குமேல் சுற்றிச் சுற்றி வருகிறது. உள் பள்ளி வாசலில் எரிந்து கொண்டிருந்த விளக்கின்
சுடரை எதேச்சையாய்ப் பார்க்கிறேன். ஐயோ… இது என்ன தீ ஜ்உவாலை என் கண்ணுள்
தகிக்கிறதே… ‘அம்மா… உன்னைக் கொன்னுட்டேன்… கொலை செஞ்சுட்டேன்… ‘

வெடித்துச் சிதறிய குரலில், பள்ளிவாசல் கட்டிடமே கிடுகிடுத்து நடுங்கிற்று.

பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், இவன் உயிரை மாய்த்துக் கொண்ட கோரத்தைச்
சொல்ல, ஓடிவந்தார் அப்துல்லா மாமா. அன்று காலை மயங்கிவிழுந்து, உடனே தெளிந்தும் விட்ட, இவன்
அம்மா அலறினாள். ‘ வாப்பா… எம்புள்ளே… போயிட்டியாடா மவனே… ‘  
 
  Thinnai 2000 June 11

திண்ணை

Series Navigation

Scroll to Top