எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை
ஓரிலக்கில்லாமலும்…
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்…

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்…
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்…

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்
நிலைத்து நிற்காமலும்…
உடனே கலைந்து போவதாயும்…

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்
பயமுறுத்தும் அமைதியோடும்…
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்…

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்…
எவராலும் கவனிக்கப்படாமலும்…

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்
அழிந்துகொண்டே இருப்பதாயும்…
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்…

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்
சரிந்துகொண்டே இருப்பதாயும்…
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்…

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்…
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்…

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..?
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ…?

* மீஸான் கட்டை – கல்லறை அடையாளம்

– எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்