எரியாத முலைகள்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

கே. ஆர். மணி



விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனின் ஆறாம் ப்ளார்ட்ஃபார்முக்கு வெளியே சில நாட்களுக்கு முன் போடப்பட்ட மஞ்சள்நிறச் சாய்வு நாற்காலிகள் மும்பை மாநகரப் புறநகர் ரயில் நிலையங்களுக்குப் புதியவை. நீளமான அந்நாற்காலிகள் ஒன்றில் அவள் படுத்திருந்தாள். அவள் போட்டிருந்த ஆம்பிளைச் சட்டை திறந்து ஒரு பக்கம் விலகியிருந்தது. சூம்பிப்போய் வெளியே தெரிந்த முலைமீது அழுக்கு அப்பியிருந்தது. அவளது திறந்த மார்பை அடைய முயன்று தோற்றுக்கொண்டிருந்தது மகா அழுக்கான குழந்தை. அதற்கு இரண்டு வயதுக்கு மேலிருக்காது. அது நாற்காலியின் நுனியில் உட்கார்ந்திருந்ததைக்கண்டு எனக்குப் பயமாயிருந்தது. குழந்தை எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம்.

குழந்தையைவிட அவள் அழுக்காயிருந்தாள். அழுக்கு அவள் உடம்பெங்கும் அப்பியிருந்தது. பரட்டைத் தலை. எச்சில் ஒழுகிக்கொண்டிருந்த வாய். அதற்கு மேலும் அழுக்கோ நாற்றமோ படிய முடியாத நிலையில் சுடிதார். குழந்தையைப் போலத் தூக்கத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் சிரிப்பு ரம்மியமாயிருந்தது.

அவள் தூக்கம் வெறும் தூக்கமாகத் தெரியவில்லை.

எழுந்து அடுத்த நாற்காலியில் உட்காரலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, குழந்தை படக்கென்று விழுந்தது. அநிச்சையாய் என் லேப்டாப் பேக்கை அதற்குக் கீழே வீசினேன். குழந்தை நேராகத் தரையில் விழாமல், பேக் மீது விழுந்தது. அதிகமான அடியில்லை. என்னைப் பார்த்தவுடன் அழுவதற்கான ஆயுத்தங்களை ஆரம்பித்தது. அம்மா இன்னும் சிரித்துகொண்டும் வாய் ஒழுக்கிக்கொண்டும் இருந்தாள். அவளை எப்படி எழுப்ப, குழந்தையை எப்படித் தூக்கி அவள்மீது வைப்பது?

அப்போதுதான் பாட்டிலோடு அவன் வந்தான். சின்ன மருந்துப் பாட்டில் சைஸ். அவன் குழந்தையைத் தூக்கிக்கொள்ள நான் என் லேப்டாப் பேக்கை எடுத்துக்கொண்டேன்.

“ஏய் இந்தா சாப்பிடு . . .” பாட்டிலிலிருந்த திரவத்தை மூடியில் ஊற்றி அவளிடம் நீட்டினான். அதன் வாசம் மூக்கைத் துளைத்தது. பார்வையைத் திருப்பி என் தோழனுக்காய்க் காத்திருக்க ஆரம்பித்தேன். மறுபடியும் மனம் அங்குதான் சாய்ந்தது. அதைத் தொடர்ந்து பார்வையும் கவனமும் அங்கே சென்றன.

அவள் அந்த மூடியிலிருந்ததைப் பருகிவிட்டு, மறுபடி மறுபடி நக்கினாள். கண்கள் இலேசாய்ச் சொருகச் சிரித்தாள். அவன் மடேர் மடேர் என்று அவள் தலையில் தட்டினான். அவள் சிரித்துக்கொண்டே வேசிமகனே என்று அவனை அன்புடன் அழைத்தாள்.

அப்படித் தன்னை அழைத்ததைவிட அவள் சிரித்ததும் பீர்ர்ர்ர்ர்ரென ஒரு சத்தமிட்டதும் அவனைக் கொஞ்சம் அவமானப்படுத்தியிருக்க வேண்டும். சப்பென்று அவள் கன்னத்தில் அறைந்தான். இப்போது அவள் சிரிப்பு கொஞ்சம் அடங்கியது. வலியால் சொரணை வந்திருக்கலாம்.
அவனது குறி மற்றும் தாய், சகோதரிகளைப் பழிக்கும் சொற்கள் ஆகியவற்றை வேகமாய்ச் சொல்லிக்கொண்டே, “நாயே இன்னும் கொஞ்சம் குடுடா” என்று அந்த மூடியை நீட்டினாள்.

அவன் இரண்டு சொட்டு விட்டு “இப்ப இது போதும்” என்றான். அதையும் அவள் நக்கினாள். பகைவனின் தலையைக் காலடியில் கொண்டுவந்து சேர்த்த தளபதியைப் பாராட்டும் ஒரு ராஜபார்வையைப் பாட்டில் மூடிக்குப் பரிசளித்தாள்.

அதற்குள் அவன் ஒரு பொட்டலத்தைப் பிரித்தான். அதில் வடாபாவுடன் வறுத்த மிளகாய்களும் பம்மியிருந்தன. சிவப்புத் தீட்டல்கள் நிறைந்த வடாபாவை விண்டு அவள் வாயில் திணித்தான். அவள் அதை மென்று விழுங்க முயன்றாள்.

“யேய் . . . நாயே . . . கொளந்தைக்குப் பால் குடு.” குழந்தையை ஒரு கையால் தூக்கிச் சோனி மார்புப் பக்கம் வைத்தான். தனக்கான உணவை நோக்கிக் குழந்தையே நகர்ந்தது. அது சப்பத் தொடங்கியது.

“என்னப்பா அது?”

“ஸ்பிரிட் சார்.”

“அதானா . . . இப்படித் தூக்கம். குழந்தை கீழ விழுறதுகூடத் தெரியாம காலங்காத்தால என்னப்பா இது?”

“இழவெடுத்த சனியன் சொன்னா கேக்கமாட்டங்குது சார். நான்கூடக் குடிப்பேன் சார். ஆனா ராத்திரி மட்டும்தான். இப்பத் தொழிலுக்குக் கிளம்பனும்ல. அறிவுகெட்ட நாயி.” திட்டியவாறு வடாபாவின் அடுத்த விள்ளலை அவள் வாயில் திணித்தான்.

குழந்தை சப்பி எதுவும் கிடைக்காமல் மறுபடி மறுபடி முயன்றது. இரண்டு வாய் வடாபாவ் உள்ளே போன தெம்பில் அவள் உளறலாய்ப் பேசினாள்.

”ஏண்டா நீதாண்டா கத்துக்கொடுத்தே. சுத் . . . இராத்திரி எனக்கெங்கடா குடுத்த? நீயே மூணு மூடி குடிச்சிட்டு. மேலே ஏறி அமுக்கிட்டிருந்தேல்ல? குத்தே கமீனே . . . (நாயே.) எத்தனை தடவைடா . . . வலிக்குதுடா.” இலேசாய்த் தொடையை அகற்றி அரற்றியபடியே அவன் முகத்தில் தோராயமாய்க் குத்தினாள். அவன் குற்றவுணர்வு மேலும் கொஞ்சம் அதிகரித்திருக்க வேண்டும் அவன் என்னைப் பார்க்க, நான் பேச்சை மாற்றினேன்.

“ஸ்பிரிட் என்ன விலைப்பா?”

“ரொம்பக் கம்மி சார். ஒரு பாட்டில் போதும் சார். நம்ம சம்பளத்துக்கு இதுதான் சார் கட்டுபடியாகும். எனக்குக் கம்பெனி வேணுன்னு இவளுக்குக் கத்துக்கொடுத்ததே நாந்தான். இப்பப் பாருங்க நாயி. நாள் புல்லா வேணுங்குது. எப்படி சார் குடும்பம் நடக்கும்?”

அவனிடமிருந்து அந்த மூடியை வாங்கி மோந்து பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தேன். அதற்குள் வடாபாவ் முழுவதையும் அவள் காலி செய்திருந்தாள். குழந்தை அடுத்த முலையில் பாலுக்கு முயலும் எண்ணத்தோடு தவித்ததாகப் பட்டது.

ஏழாம் தளத்தில் ஒரு ரயில் வந்து நின்றது. அந்த வண்டியிலும் என் அலுவலகத் தோழன் வரவில்லை. பத்து மணிக்கு ஃபோர்ட்டில் மீட்டிங். கூட்டம் அலையடித்து ஓய்ந்தது. மெல்லிய மீன் வாசனையோடு ஃபிளாட்பார்ம் மறுபடி அமைதியானது.

குழந்தைக்குப் பால் கிடைத்திருக்கும்போல. மெல்லிய தூக்கத்திற்குள் போய்க்கொண்டிருந்தது. அவள் மூடியை நக்கிகொண்டிருந்தாள். தான் கொண்டுவந்திருந்த உடைமைகளைச் சரிசெய்து அவன் அவளை எழுப்ப முயன்றுகொண்டிருந்தான். அவள் தள்ளாடி அவன் துணையோடு நடந்து போனபோதுதான் அது நடந்தது.

அப்போதுதான் ஏசி ஓட ஆரம்பித்த அறை புழுக்கத்திலிருந்து மெதுவாக விடுபடத் தொடங்கியிருந்தது. ட்ராவர் சோபாவின் நுனியில் உட்கார்ந்து நகம் கடித்துக்கொண்டிருந்தான். மோதிரவிரலை முடித்து ஆட்காட்டி விரலைக் கடிக்க ஆரம்பித்திருந்தான். வயிற்றுக்குக் கீழே பயம் மெல்லியதாய்த் தொடங்கியிருந்தது.

ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறைக்குப் பக்கத்து அறையில் இன்னும் சற்று நேரத்திற்குள் இண்டர்வியூ ஆரம்பிக்கவிருந்தது. அந்த நேர்முகத் தேர்வின் பொருட்டு ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்து அதில் மேடம் ரிலாக்ஸ் செய்துகொள்வது வழக்கம். நேர்முகத் தேர்வில் உதவுவதற்கும் ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கும் ட்ராவரை இந்தத் தடவை கூட்டிவந்திருந்தாள் ரேஸ்மா மேடம்.

தானும் இப்படியான ஒரு நேர்முகத் தேர்வில் எட்டு மாதங்களுக்கு முன்பு கலந்துகொண்டது ஞாபகம் வந்தது. தனி நேர்காணல், குழு விவாதம், மறுபடியும் கேள்வி நேரம், சம்பளத்திற்கான பேரம் பேசல் என்று ஒரு நாள் முழுவதும் செலவழிந்தது.

அன்றும் ரேஸ்மா மேடம் கேள்வி கேட்டுப் பயமுறுத்தினாள். பள்ளியில், சர்ச்சில் பேசிய ஆங்கிலம், கிளாராவோடு பேசிப் பேசியும் சண்டைபோட்டும் வளர்ந்த சூசகமான, நுட்பமான பதிலளிப்புத் திறன், தெருமுனை இயேசு நாடகங்களால் நர்த்தனமாடும் குரல் வளம், ஞாயிறு பூசை முடிந்து ஃபாதர் சொல்லும் உலக விசயங்களின் மீதான வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் கைகொடுத்து வந்திருந்த நானூறு பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது பேரில் அவனும் ஒருவன்.

இரவு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரோடு வீட்டிற்குப் போக மணி பத்தாயிற்று. அன்று இரவு முழுக்கத் தூங்கவேயில்லை. தூக்கம் வரவேயில்லை. அப்பாவின் முப்பது வருட ரயில்வே சம்பளத்திற்கு இணையான சம்பளம். அப்பாவால் நம்பவே முடியவில்லை. அம்மா நீண்ட நேரம் அந்தக் கடிதத்தைத் தடவிக் கொடுத்துக்கொண்டேயிருந்தாள். பிறகு புனித மேரியின் படத்திற்கு முன்னால் வைத்துவிட்டுத் தூங்கச் சென்றாள்.

வாரா வாரம் மாறும் பணி நேரம். ஒரு வாரம் மதியம். இன்னொரு வாரம் இரவு. மற்ற இரண்டு வாரங்கள் காலை முதல் மாலைவரையிலான ரெகுலர் ஷிப்ட்.. சம்பளம் போக முதலிரு மாதங்களிலேயே அதிகப்படியான விற்பனைக்கும் தரமான பதிலளித்தலுக்குமான சின்னதான கிஃப்ட் செக்குகள். அவனுக்கென வாங்கிய மொபைலில் தங்கை எப்போதும் கேம் விளையாடுகிறாள்.

ரேஸ்மா மேடம், கழிப்பறையிலிருந்து வெளியே வந்தாள். அலுவலக பேண்ட் சட்டையிலிருந்து சின்னதான நைட்டிக்கு மாறியிருந்தாள். லாவண்டர் வாசனை. தலை சாய்த்து யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். பேசியபடியே ட்ராவரை நோக்கி வந்தாள். பக்கத்தில் வர வர நைட்டியைத் தாண்டி உள்ளாடைகள் தெரிந்தன. பார்வையைத் திருப்பிக்கொண்டாலும் லாவண்டர் வாசனை நாசியில் அப்பியது.

ரேஸ்மா மேடம் டெரர் மேடம். அவளென்றால் எப்போதும் பயம்தான். இப்போது என்ன செய்யப்போகிறாளோ? ஏற்கனவே மெகுல் சொல்லியிருந்தான். அவனது வேலை சரியில்லாததால் சீட்டு கிழிக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்பிருந்த நிலையில் மேடத்தின் மீது புழுதிவாரித் தூற்றிக்கொண்டிருந்தான் எனப் புரிந்தது. உண்மையிலேயே ரேஷ்மா மேடம் அப்படித்தானா?

பார்க்கப் பயமாயிருந்தது. பயம் தாண்டிப் பாய்ந்த பதுங்கிய பார்வைத் தேடல். மெலிதென்று சொல்ல முடியாத உருவம். சமச்சீரற்ற வளர்ச்சிதான். இன்னும் கொஞ்சம் உயரம் கூடுதலாயிருந்தால் எல்லாம் சரியென எண்ணவைத்திருக்கும். வெயில் படாத தோல் பகுதிகள் மினுமினுத்தன.

பேசியபடி குனிந்து ட்ராவரின் தலைகோதி, கன்னம் உரசி முத்தமிட்டாள். அது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் சிறந்த பெர்ஃபாமன்ஸூக்கான விருதை வழங்கும்போதும் எல்லோர் முன்னாலும் பாதி அணைத்து மெல்லிதாய் முத்தமிடுவாள். எல்லோரும் கைதட்டுவார்கள். அப்போது வாகாய்க் குனிந்து கன்னம் கொடுக்க வேண்டும். அதையும் மெகுல் சொல்லியிருந்தான்.

அலைபேசியில் பேசியபடியே தன்னை அணைக்க வந்த மேடத்திற்கு வசதியாக ட்ராவர் குனிந்தான். லிப்ஸ்டிக் தடவிய உதடுகள் கன்னங்களில் பதிந்துவிடாதவாறு காதையும் காதுப்பகுதி முடிகளையும் கடித்துக் கவ்வி இழுக்க ட்ராவர் இன்னும் சற்றே எழுந்து கொடுத்தான். அவன் எதிர்பார்க்காதபோது மேடமே நகர்ந்து உதடு கடித்து, எச்சில் சுவைத்து மறுபடி சாதரணமாய்ப் பேசியபடியே நகர்ந்து போனாள். ட்ராவருக்குக் கபக்கென்று கலக்கம் ஏற்பட்டது. சரியான நகர்வில் பொருந்தியது மேடத்திற்குச் சந்தோசம் அளித்திருக்க வேண்டும்.

ஆனால் அன்றைய உதட்டு முத்தத்தில் கார்ப்பரேட் நகாசு வேலையில்லை. வித்தியாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. ட்ராவருக்குள் பயக்குருத்துகள் முளைவிட்டன. ஆனாலும் ஏதோ எங்கயோ சுரந்து, வயிறு கனமாகிப் பதற்றமாய் உணர்ந்தான்.

தன் நேர்முகத் தேர்விலிருந்து அவனால் உணர முடிந்த அந்தத் தனி வாசனை அவனுக்குள் பலவிதமான கலைடாஸ்கோப் உணர்ச்சிகளைப் பலமுறை ஏற்படுத்தியிருந்தது. மரியாதை, முன்னேறும் துடிப்பு, கிளர்ச்சி, பயம், துக்கம், நப்பாசை, குற்றணர்வு என அந்த வாசனை பல நேரங்களில் வெவ்வேறு உணர்வுகளைச் சுரக்கவைத்திருந்தது.

அந்த வாசனையை உணர்வது அது மாறுவது எல்லாம் ரேஸ்மா மேடம் அவன் எண்ணக்குளத்தில் எறியும் கல்லைப் பொறுத்தது. அதனோடு நேரடித் தொடர்புகொண்டது. ஆளைத் தூக்கியடிக்கும் வாசனைகளைவிட இயல்பான வியர்வை நாற்றம்தான் இப்போதெல்லாம் பிடிக்கிறது.

”ட்ராவர்” குளியலறையிலிருந்து குரல் வந்தது. எழுந்து போக வேண்டும். வியர்வையை நினைத்து நினைத்து லாவண்டர் வாசனையைத் துரத்த முயன்றான் ட்ராவர்.

டீம் லீடர் ரமேஷைப் பற்றி மெகுல் சொன்னது ஞாபகம் வந்தது. ரேஸ்மா மேடத்திடம் இரண்டு வருடம் இந்தியாவில் வேலை பார்த்திருந்தான். இப்போது ரமேஷ் லண்டனில் முழு ஆபிசுக்கும் இன்சார்ஜ். அங்கிருந்து மேடத்திற்கு ரிப்போர்ட் செய்கிறான்.

புதிதாகச் சேருபவர்களுக்கு இந்தியாவில் கொஞ்ச நாள் ஆஃப் சைட் அனுபவத்திற்குப் பிறகு வாடிக்கையாளரின் தலைமையகத்தில் வேலை. “வாடிக்கையாளரோடு பேசு. நெருங்கிப் பழகு. இன்னும் சில ஐடியாக்களைத் தெளி. புது வியாபாரத்திற்கான தூண்டில் போடு. கொஞ்சூண்டு இலவசமாய்ச் செய்துகாட்டு. பிறகு அதற்குப் பில் போடு.” இது கார்ப்பரேட் உலகின் அறிவுரை.

அங்குள்ள வாடிக்கையாளரின் அலுவலகத்திலிருந்து மேலும் சில வியாபாரங்களை இழுக்க வேண்டும். அதற்காக மேடம்தான் அவனை அங்கே அனுப்பி நிறுவனத்தைப் பலப்படுத்தியிருந்தார். ரமேஷ் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். போன மாதம் வந்திருந்தான். நீளத்திலும் அகலத்திலும் பரந்து, விரிந்த ஜந்து. வெளுப்பாய் ஜொலித்தான். பவ்யமாய் மேடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். ட்ராவரின் இண்டர்வியூவின்போது மேடம் அவனைத்தான் தன்னோடு வைத்திருந்தாள்.

இன்னும் இங்கிலாந்து, ஆஸ்திரிரேலியாக் கிளைகளை கூடிய விரைவில் திறக்கப்போவதாகச் செய்திகள் பரவுகின்றன. அவை உண்மையாயிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

“ஹூம். ஓகே சார் . . . ஐ வில் டேக் கேர் சார் . . .” ரேஸ்மா மேடம் பேசிக்கொண்டே எல்லாம் செய்தாள். ட்ராவரின் சட்டைப் பொத்தான்களைக் கழற்றினாள். எதிர் சீட்டில் கால் அகற்றி உட்கார்ந்தாள். அவன் கைகளை எடுத்துத் தன் தொடைகளில் தடவிக்கொடுத்தாள்.

தன் உடல் இப்படி ஆளப்படுவது கண்டு உள்ளுக்குள் எதுவோ சொடக்கியது. யாரும் அதிகமாய்த் தீண்டாத தன் ரகசிய உடல். ஒரு குறிப்பிட்ட வயதுவரை அம்மாவும் பின் – விகல்பமற்று ஒரு சில நேரங்களைத் தவிர – கிளாராவும் தொட்ட உடம்பு. ’மற்றவள் எப்படித் தொடலாம்?’ என்ற நினைப்பே அருவருப்பை ஏற்படுத்தியது.

லாவண்டர் வாசனை மறுபடி அவனுக்குள்ளே எழுந்தது. அழுகிய பூக்களின் வாசனையோடு வந்ததாய் உணர முடிந்தது. அது சீக்கிரம் தன்னைக் கடந்து போகட்டும் என ட்ராவர் எண்ணிக்கொண்டான்.

அந்த இரண்டு போலீஸ்காரர்களும் அவனை மடக்கிப் பிடித்து மூடியை முகர்ந்து பார்த்தார்கள். அவர்கள் வீடியின் இரயில்வே போலிசாகவோ தீவிரவாதக் கண்காணிப்புக்கான சிறப்பு இராணுவப் போலீசாகவோ இருக்கலாம். அவள் அருகே வந்து வாசனை பிடித்தார்கள். அவனுக்குப் பளார் பளார் என இரண்டு அறைகள் விழுந்தன.

அவன் குழந்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஏதோ கெஞ்சிக்கொண்டிருந்தான். ஒரு கையில் குழந்தையும் மறுகையில் அழுக்கு மூட்டையும் இருந்ததால் அவனால் அறைகளைத் தடுக்க முடியவில்லை. இன்னொரு போலீஸ்காரன் அவள் தலை முடியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனான். இவனும் பின்னாலேயே போய் ஏதோ சொல்லிப் பார்த்தான். அந்தச் சந்திற்குள் அவளை மட்டும் இழுத்துக்கொண்டு போனார்கள்.
கசக்கிக் குப்பைக்கூடைக்குள் எறியப்பட்ட காகிதச் சுருளாய் அவள் சற்று நேரம் கழித்து வெளியே வந்தாள். அவன் வேகமாக அந்த மூத்திரச் சந்தை நோக்கி ஓடினான். அவசரமாக அவளைப் போர்த்தி, ஸ்பிரிட் பாட்டிலை அவளிடம் தந்தான். பாட்டில் முழுக்கக் குடித்துவிட்டு மூன்றுமுறை சுற்றிவந்து மாரடித்துக்கொண்டு அவள் அழுதபோதுதான், முக்கால்வாசி திறந்திருந்த சட்டையைக் கூர்ந்து கவனித்தேன்.

இடமுலை காணாமல்போயிருந்தது

எதுவும் எரியும் முன் நான் டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். டையை இறுக்கிக்கொண்டேன். வெயில் சுட்டது. ஞாயிறு போற்றுதும்!

“வாப்பா. வீட்டில எல்லாம் சௌக்கியந்தானா?” ட்ராவரின் அம்மா. அவருக்கு எப்படி அவ்வளவு இனிய குரல் என்று ஆச்சரியப்பட்டேன். இனிமை குரலில் மட்டுமில்லை. பதிலே சொல்லாமல், தலையாட்டிக்கொண்டே ட்ராவரின் அறையை நோக்கி நகர்ந்தேன். பேசினான். பேசினான். பேசிக்கொண்டேயிருந்தான்.

தன் மேல் எப்போதும் லாவண்டர் வாடை வீசுவதாக ட்ராவர் புலம்பினான். அது தனது சகல பாகங்களிலிருந்து தீடீர் தீடீரென உற்பத்தியாவதாய் உணர்கிறானாம். உடனே நிறையக் குளித்துவிட்டோ பூசைக்குப் போயோ அதைப் போக்க வேண்டியிருக்கிறது என்றான்.

“இடியட். என்னடா ஆச்சு உனக்கு?”

“ஒரே வாடை. கிளாராவையோ அம்மாவையோ பாக்கவே முடியலை.”

“நான்சென்ஸ் . . . கம்மான் யார் . . . நீ சின்ன குழந்தையில்ல.”

“ஆமாம் ரமணி. நானும் அப்படித்தான் நினைச்சேன். ரமேஷ் மாதிரி எல்லாம் ஸ்மூத் ஆயிரும்னு. ஆனா முடியல.”

“எவ்வளவு நாளுக்குடா பயந்துக்கிட்டிருக்கப் போற? மூவ் ஆன்.”

நூற்றாண்டுக்காலப் பிழையும் தீயும் ட்ராவரின் கண்களில் எழுந்து அடங்கின.

“ஐ திங் நீ வேலையை விட்டிருக்கக் கூடாது. ஆஸ்திரிலேயா ஆஃபரை வேணான்னு சொல்லியிருக்கக் கூடாது. கொஞ்ச நாள் ஆன் சைட் எக்ஸ்பீரியன்ஸ்டா. அப்புறம் வேற கம்பெனிக்கு ஏன் கிளையண்டுகிட்டகூட ஜம்ப் பண்ணியிருக்கலாம்.” நான் ஆதங்கத்தோடு தொடர்ந்து பேசிக்கொண்டே போனேன்.

அவன் கவனம் முழுவதும் திடீரென்று வேறெங்கோ போயிற்று. மூக்கை உறிஞ்சிக்கொண்டே கேட்டான், “ஹேய் ரமணி, கேன் யூ ஸ்மெல் லாவண்டர்.” அவன் பார்வையில் எல்லா உணர்ச்சிகளின் கலவையும் ஊறிக்கிடந்ததாகத் தோன்றியது. அவன் அம்மா வந்து பால் ட்ம்ளரைக் கொடுத்துவிட்டுப் போக, நிலைமை மறுபடியும் சகஜமாயிற்று. நிறையப் பேசிய பிறகு சொன்னான்.

“ஹே சொன்னா நம்பமாட்டே. அன்னக்கிப் பாத்தேன். ரேஸ்மா மேடத்திற்கு லெப்ட் ஸைட்ல பால்ஸேயில்லை . . .”

ஜீபிஓ போஸ்ட் ஆபிசுக்கு அடுத்த சந்து. அந்தக் கடை. சந்தின் நடுவில் சின்னதாய் ஒரு கட்டடப் பொந்தில் செருகியிருந்தது. கடையில் விதவிதமான முலைகள் விற்கப் பட்டதைக்கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தது உண்மைதான். அணையாத அக்னியோடு எரிந்துகொண்டிருந்தன முலைகள்.

அப்புறம் ஒரு நாள் சினேகிதி திருநங்கை ராதா அந்த முலை வியாபாரியை அறிமுகப்படுத்திவைத்தாள். அந்த அக்கா மிகப் பருமானாய் இருந்தாள். பெரிய குங்குமப் பொட்டு, உயிருள்ள ஸ்தனங்கள்கொண்டு பயமுறுத்தினாள். கையில் சூலாயுதம் இல்லாதது மட்டும்தான் குறை.

“கண்ணகிக்கா. தம்பி நம்ப ஊருதான். தமிழுதான்.”

“பாத்தலே தெரியுதுல்ல.”

அக்கா சிரிக்கவேயில்லை. கடையில் நிறைய ப்ளாஸ்டிக் கூடைகளும் நார்க் கூடைகளும் துண்டுகளால் மூடப்பட்டிருந்தன. பலமாக வீசிய காற்றையும் மீறிச் சில ஈக்கள் வாசனைத் திரவியத்தை மோப்பம்பிடித்து அந்தக் கூடைகளைச் சுற்றிக்கொண்டிருந்தன.

“என்ன தம்பி இப்படி முழிக்கிறீங்க? ஏதாவது பாக்கறீங்களா?” பேசியபடியே மூடியிருந்த சில துண்டுகளை விலக்க, ஸ்பிரிட் வாடையும் லாவண்டர் வாடையும் ஒரு சேர எழுந்தன.

நன்றி : உயிரெழுத்து, செப்டம்பர் ‘ 10
Email : mani@techopt.com

Series Navigation