எரிமலைப் பொங்கல்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

-இரா. சீனிவாசன், தைவான்


தைத்திங்கள் முதல் நாள்
தன்மானத் தமிழரின் நன்னாள்
உழவிலே உழல்வோரின்
உன்னதத் திருநாள்
உலகுக்கு நன்றி சொல்லும்
உணாிவுமிகு பெருநாள்

ஆனால் – நான்
யாருக்கு நன்றி சொல்ல ?
எப்படி நன்றி சொல்ல ?

கரும்பு போட்டேன்
கசக்குது வாழ்க்கை
பிழியப்பட்டது கரும்பாய் இருப்பின்
பிழைத்திருப்பேன்
நானன்றோ பிழியப்பட்டு
நடுத்தெருவில் சக்கையாய்

பருத்தி பயிரிட்டேன்
பஞ்சாய்ப் பறக்குது
வாழ்க்கை

கரை புரண்ட காவிரி
கனவாகிப் போனதால்
தரை தட்டிய கப்பலாய்
தவிக்கின்றேன்

கருகிய பயிர் கண்டு
பெருகுது கண்ணீர்
கரைபுரளும் கண்ணீருக்கு
அணையேதும் தடையில்லை

எது எப்படியாயினும்
என் வீட்டிலும் பொங்கும் –
பொங்கல் பானை அல்ல
எரிமலையாய் என்னுள்ளே
குதிபோடும்
துயரத்தின் தூதுவாிகள்

amrasca@netra.avrdc.org.tw

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்