எமன் – அக்காள்- கழுதை

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் அரைத் தூக்கத்தில், பின்னே ஒரு கழுதை தொடரக் கிராமத்துக்குள் நுழைந்தாயிற்று.. இனி அக்காளின் வீட்டைக் கண்டுபிடித்தாக வேண்டும். ‘உயிரை ‘ விடுவித்தாகவேண்டும். நேற்று இரவு, சோமபானத் தூண்டுதலில், அந்தப்புரத்தில் நுழைந்து பாரியாளை மஞ்சத்திற் சாய்த்து அந்தரங்கத்தைத்தேடிச் சுகிக்கும் நேரம்பார்த்து, சித்திராபுத்திரன் கணிப்பின்படி அக்காள் உயிரை எடுக்கவேண்டிய ‘நேரம் ‘ ஞாபகத்திற்குவந்து தொலைத்தது. விலகிச் ‘சுத்தி ‘ செய்து கொண்டு புறப்பட்டாயிற்று.. சாணியிற் படுத்திருந்த எருமையைக் கூட ஒழுங்காகக் கழுவாமல் அவசரமாகப் புறப்பட்ட பயணம்.. தொண்டைச் சவ்வுகளில் ஒட்டியிருந்த சோமபான வாடையையும், ஆடைகளிருந்த அத்தர் ஜவ்வாது மணத்தினையும், சாணத்தின்மணம் ஓரங்கட்டியிருந்தது. சகித்துக் கொண்டு, நீண்டபயணம்.. ‘காமா சோமா ‘ உயிர்களென்றால் உதவிக்கு பஸ், இரயில்,பயங்கரவாதிகள், ஆஸ்பத்ரிகள், போலீஸ் ஸ்டேஷன்களென இருக்கின்றன. இதுமுக்கியமான ‘உயிர் ‘ – ‘அக்காள் உயிர் என்பதால் அவனே கவனிக்கவேண்டிய பணி. மீண்டும் பணி முடிந்தவுடன், எமலோகம் திரும்பி, பாரியாளை மஞ்சத்தில் சாய்த்து.. அந்தரங்கத்தைத் தேடி… எமன் கெளபீனத்தை இறுக்க மறந்திருந்தான்..எருமை தன்னுடலை சிலிர்த்துக்கொண்டது.

அதுவொரு அமாவாசை இஇரவு. எமனுக்கு மிகவும் பரிச்சயமான இரவு. அசாதரண இரவு. உடற்கூட்டின் இம்சையில் வருந்தும் உயிர் விடுபட உகந்த இரவு. நரியா, பரியா என விளங்கிக்கொள்ள விருப்பமில்லாத காபாலிகக் குணத்துடனான இரவு. மரம், செடி, கொடி, கோபுரம், குடிசைகளென அனைத்தும் விழுங்கப்பட்டு மலைப்பாம்பாக, வயிறு புடைத்து, வேர்த்துக் கிடக்கும் இரவு. தெருநாய்களின் குரைப்போ, இடுகாட்டுத் திசைகளில் எழும் நரிகளின் ஊளையோ, கோட்டான்களின் அலறலோ இல்லாத இரவு. சுவற்றுக் கோழிகளின் தொண்டைக்குழி ச் சத்தங்களும், தொழுவத்தில் அடைபட்டுக்கிடந்த மாடுகளின் மூத்திரச் சலசலப்பும் இல்லை. முகமறைக்கும் இருட்டில் வானும் அதன் கீழ்ப் பூமியும் சோர்ந்து கிடந்தன. கார்த்திகை மாதமாகவிருந்தும், இப்படிப் பின்னிரவில் தூறல்கூட நின்றுபோய் வாய் மூடியிருப்பது எமனுக்கு ஆச்சரியம். வருண பகவானைச் சந்திக்க முடிந்தால், இதற்கான காரணத்தைக் கேட்கவேண்டும். என நினைத்துக் கொண்டான்.

வயிற்றிலிருந்த குடல்முழுக்க, தொண்டைக்குழியிற் கபத்தோடு கலந்து அடைத்துக்கொண்டு சுவாசத்தை நிறுத்தமுயற்சிக்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அக்காள் கனத்த இருமலுடன் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள். கனத்த சாரீரத்தைவைத்துக்கொண்டு இப்படி அடிக்கடி எழுந்து உட்காருவது சிரமமாகவிருந்தது. எச்சில் தெளித்து, கண்களில் நீர் தாரையாகக் கசிய இருமினாள். நா வரண்டிருந்தது. தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. கட்டிலைத் தள்ளியிருந்த மேசைமேல், ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருக்கவேண்டும். எவரேனும் கொஞ்சம் ‘ ஊற்றிக் கொடுத்தால் தேவலாம். அக்காள் அக்காள் ‘ என தன்னை சுற்றிவந்து காலடியில் கடக்கும் கனகம் எங்கே போய்த் தொலைந்தாள் ? மனதிற்குள் எப்பொதும்போல அதிகாரக் கேள்விகள். ஆனால் கைகட்டி, வாய் புதைத்து, சில நேரங்களில் காலில் விழுந்தும் பதில் சொல்வதற்கு எவருமில்லை. காவல் நாய்கள்கூட எஜமானவிசுவாசத்தை மறந்து இப்போதெல்லாம் ‘உர் ‘ரென்கின்றன. திரை விழுவதற்கும் முன்னே எழுந்திருக்கும் பார்வையாளர்களாக வெளியே உறவு மனிதர்கள். மெள்ள எழுந்திருக்க முயன்றாள். கால்கள் சோர்ந்திருந்தன. அவைகளுக்கான பலத்தினை எப்போதோ அவை இழந்திருந்தன. காலம் விசித்திரமானது. கோபுரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவளை வீதியில் மிகச் சுலபமாய்க் கடாசிவிட்டது. அவளது யோக திசையும், பெருவாழ்வும் ஊழிக்காற்றில் கூளமாக பறந்துவிட்டிருந்தன.

‘அக்காள் ‘ கீழ்வீதி நாய்க்கர் குடும்பத்தின் மூத்தமகள். அடுத்தடுத்து நான்கு தம்பிகளைக் கைப்பிடித்துக் கொடுத்துவிட்டு வேலு நாயக்கரும், அலமேலு அம்மாவும் ‘எம்பெருமான் திருவடியை ‘ சேர்ந்துவிட. அக்காள்தான் ‘அம்மாவும் அப்பாவுமாக ‘ தனக்கான மணவாழ்வுப் பந்தத்தைத் தவிர்த்துவிட்டுத் தம்பிகளை வளர்த்தெடுத்தாள். நாய்க்கர் குடும்பத்தின் நஞ்சையும் புஞ்சையும் நாலா திசைகளிலும் படர்வதற்குதவிய ‘அக்காளின் ‘ உழைப்பும் ‘ தந்திரமும் வெகுச்சுலபமாக உறவுகளால் மறக்கபட்டாயிற்று. எடுபிடிகள் எவரும் எதிரில் இல்லை. தீர்ப்பை மாற்றி எழுத முடிந்தகாலம். அதுவொரு காலம். இனி வராது. மீண்டும் வராது.

அந்திமக்காலத்துக்குத் துணையாகப் போதும் போதுமென்று சொல்லும் அளவிற்கு நோய்கள்.. கட்டிலைச் சுற்றிக் செய்தபாவங்கள் எறும்புகளாக ஊர்ந்து கொண்டிருந்தன.விழிகளிற் சுரக்கின்ற நீரில், உப்புக் கரைசலுக்குப் பதிலாக மிளகாய்ப்பொடி. முதுகில் நெருப்பைக் குழைத்துப் பூசியிருப்பதாக உணர்வு. இடுப்பிலும், முழங்கால்களிலும் சங்கிலியைப் பிணைத்துச் சமட்டியால் அடித்துக் கொண்டிருந்தார்கள். மனிதன் தீர்மானிக்கும் தண்டனைகளிலிருந்து தப்புவதற்குப் பணமும், அதிகாரம் உதவுகிறது. இப்படி அவதிப்படும் அவளது இறுதிக்கால முடிவைத் யார் தீர்மானித்திருப்பார்கள் ? தினந் தினம் விழிக்கும் போதெல்லாம் எழுகின்ற கேள்வி. இவள் மரணத்திற்காக, எதிரிகள் மேளம் கொட்டும் நேரம். வரிசையாகப் பறையடித்து மகிழ்ந்தார்கள் முதலில் சொக்கப்பன் குடும்பம். அக்காள் குடும்பத்தின் முதற் தலைமுறைத் தாயாதிகள். அய்யானாரப்பன் கோவிலுக்கு ஒதுக்குப் புறமாகவிருந்த பனையடியொன்றில் கிடாவெட்டிப் பொங்கல் வைத்ததாகக் காதில் விழுந்தது. பிறகு வரிசையாகப் பழைய புதிய முகங்களுடன் எதிரிகள். அவளுக்கு எதிரிகளா பஞ்சம். ‘நாயக்கர் கம்பத்தத்தில் ‘ பத்தாவது தலைக்கட்டாக படியாளாக இருக்கும் கோவிந்தன் கூடக் கோர முகத்துடன் எதிரிகள் வரிசையில் நிற்கிறான். அவ்வரிசையில் காதுகள் புடைக்க, தலைதாழ்த்தி, நேரான பார்வையைத் தவிர்த்து, கறுத்த அடிமுகத்தில் இரு நுங்குவடிவ மூக்குத் துவாரங்களுடன், கடைவாய் பற்கள் தெரிய, நுரையொழுகச் சிரித்தபடி கடைசியாக நிற்கின்ற சலவைத் தொழிலாளி முருகேசனின் கழுதையும் அடக்கம்.

அக்காளுக்கும் கழுதைக்கும் பகைக்கான முகாந்திரத்தை அறியத்தரும் வெள்ளை அறிக்கையை எவரும் அறிந்ததில்லை. இத்தனைக்கும் அக்காள் பிறந்தபோது, ஊற்றப்பட்ட முதற் பாலாடைப் பால் முருகேசன் கழுதைக்குச் சொந்தமானது.. கொழுகொழுவென்ற அக்காளின் குழந்தைப் பருவத்தின் ஆதாரம் முருகேசன் கழுதையின் பாலென, குடும்பத்தினர்பேசிக்கொண்டனர். எப்போது கழுதைக்கும், அக்காளுக்கும் பகையேற்பட்டது ? ஒருவேளை அவளது ஐந்தாவது பிராயத்தில் நடந்த சம்பவமாகக் கூடவிருக்கலாம். கிராமத்துக் குளத்திற்கு தோழிகளுடன் அக்காள் வந்திருந்தாள். முருகேசன், துணிமூட்டைகளை இறக்கிப் போட்டுவிட்டு, வெள்ளாவிக்கு உப்புக் கலந்த புழுதிமண் தேடப் போயிருந்தான். தோழிகளுடன் ஆரம்பித்த வம்பில் முறுகேசன் கழுதையின் ‘வாலை இழுத்துக் காட்டுவது. என ஒப்புக்கொண்டு அக்காள் செய்த காரியத்திற்கு, கழுதை மன்னித்திருக்கலாம். அன்றைக்கு காலொடிந்து, வீட்டிலிருந்த மற்றக் கழுதையின் துணிமூட்டையையும் சுமந்துவந்த கோபத்தில், விட்ட உதையில் முன்னிரண்டு பற்களும், கொஞ்சம் மூக்கும் உடைந்து இரத்தம் கொட்ட, அக்காள் சூர்ப்பனகையானாள்.

பிறகொரு கோடைநாளில் முருகேசன் குடிசையின் எதிரே பூவரசமரத்தடியில் அசைபோட்டுக்கிடந்த கழுதையின் வாலில் பனையோலையைப் பிணைத்து, எரித்து துரத்தியதும், சலவைத் தொழிலாளி முருகேசன், அக்காளின் தகப்பனார் பஞ்சாட்சர நாய்க்கரிடம் முறையிட்டதும், அதற்கு நாயக்கர், பத்து ருபாயை விட்டெறிஞ்சி ‘போடா போய் வேலையைப்பாரு. இதையொரு பஞ்சாயத்துண்ணு இங்க எடுத்துவந்துட்ட ‘ என்று,துரத்தியதில் தப்பில்லை, ஆனால் அவனைத் துரத்திய வேகத்தில் அக்காைளைப் பார்த்து ‘பொட்டை கழுதைக்கு கொஞ்சம் அடக்கம்வேணும் ‘ எனச் சொல்லாமலிருந்திருக்கலாம்..

பூப்டைந்த அக்காளுக்கு நாயக்கர் வரன்கள் தேடும் காலம் வந்தது. பொருத்தமானவனைத் தேடி நாயக்கர் கைளைத்துப் போக, பின்வாசல்வழி வரும் படியாள் கோவிந்தன், நாயக்கருக்கு உடல் பிடித்துவிடும் வேட்டைக்காரன் சின்னான் ஆகியோரின் வியர்வை உடல்களை லஜ்ஜையோடு பார்க்கத் தொடங்கி அக்காள் சோர்ந்திருந்த நாட்கள் அவை. முருகேசன் கீழ்வீதி வழியாக, நாயக்கர் வீட்டுப்பக்கம் ஒருப் புதுக்கழுதையை ஓட்டிப்போவதை வாசற் திண்ணையின் தூணைப் பிடித்துக்கொண்டு பார்த்தாள். முருகேசன் தனது பழைய கழுதையை மாற்றியிருப்பானோ, என்று மனதிற் சந்தேகம்..

‘என்ன முருகேசா, கழுதையை மாத்தியாச்சா ? இது புதுசா இருக்குது.! ‘

‘ஆமாம்மா.. புதுசுதான். வீட்டில இருக்குற கழுதைக்கு ஜோடி சேக்கணும். ‘நல்லாவூர் ‘ ல இருந்து வாங்கி வறேன். இது கிடாக் கழுதைம்மா.. ‘

அவன் கிடாக் கழுதை என்று சொன்னவுடன், அவளது பார்வை திடுமென்று பயணித்து, கழுதையின் அடிவயிற்றில் முடிந்தது. காட்சி மனத்திரையில் விழுவதற்குமுன் வீட்டினுள்ளே ஓடிக் கதவடைத்துக் கொண்டாள். அன்றுவெகு நேரம் இரவு உணவினைக் கூடத் தவிர்த்துவிட்டுப்

படுத்துக்கிடந்தாள். காரணமின்றிக் குமட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் மீண்டும் அக்காட்சி மனதில் விரிவதை தவிர்க்கமுடியவில்லை. அதற்குப்பிறகு எந்த விலங்கினைப் பார்த்தாலும் அடிவயிற்றினைத் தேடிச் செல்லும் அவளது பார்வையைத் விலக்க முடியவில்லை. இறப்பினை எதிர்பார்துகிடக்கும் இந்த நேரத்தில்கூட, விட்டத்தில் ஒட்டியிருக்கும் இரண்டொரு குளவிக்கூடுகள், ஊர்ந்து செல்லும் பல்லிகள், சுவர் க் கடிகாரம் இவற்றைத் தொடர்ந்து கழுதை..

கதவினைத் திறந்துகொண்டு நெடிய உருவம். அளவான அலங்காரங்களுடன், தலையில் கிரீடமும், இடது கரத்தில் ‘கதையும் ‘ வலது கரத்தில் ‘சுருக்கு ‘மாக நமது எமன். .

‘வந்தாச்சா ? உங்களுக்காகத்தான் கத்திருந்தேன் ‘.. அக்காளின் பார்வை எருமையின் அடிவயிற்றில் வந்து நின்றது. ‘பக்கத்திலென்ன கழுதையா ? உங்கள் எருமைக்கு என்ன நேர்ந்தது ? வாகனத்தை மாற்றிக் கொண்டார்களா ? ‘

‘இல்லை. இது எருமைதான். கொஞ்சம் இளைத்திருக்கிறது. இருட்டில் கொம்புகள் உனக்குத் தெரியவில்லை. வேறு நல்லதா வாங்கணும்.,

வெகுநாட்களாக இந்திரலோகத்துக்குப் போயிட்டு வரணும்.னு மெனக்கிடறேன், நேரமில்லை. ‘

‘ பொய் சொல்லாதீங்க. எருமை இல்லை இது.. கழுதை. ‘

‘ உன் கிட்ட வியாக்கியானம் செய்ய நேரமில்லை. வந்த வேலையை முடிச்சாகணும். எமலோகத்துலே நிறையவேலைகள் இருக்கு (அவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டது பாரியாளுடனான போக முஸ்தீபுகள் வேலைபற்றி) ‘..

‘ இல்லை.. என்னை கழுதைமேல ஏற்றவேண்டாம். விட்டுடுங்க.. ‘ ‘

‘ இது கழுதை இல்லை எருமை. உன் பார்வையிலே கோளாறு. எந்தக் கழுதையும் என்னோட இல்லை. இதற்காகவெல்லாம் என் ‘கதையில் ‘ அடித்து நான் சத்தியம் செய்துகொண்டிருக்கமுடியாது. கிளம்பு ‘

அமாவாசைக்காகக் காத்திருந்த அக்காள் உயிர் நல்லபடியாகப் போய்ச் சேர்ந்த சந்தோஷத்தில்( ?) , நாயக்கர் குடும்பம் ‘தாரை தப்பட்டியோடு பூதவுடைலைக் கொண்டு செல்ல, நடைபாவாடைக்காக முருகேசனைத் தேடி ஆளனுப்பியிருந்தபோது,. ..அன்றையதினம் குடிசையிற் போட்டிருந்த கழுதைக் குட்டிக்கு அக்காளின் பெயரைவைத்து, அவன் அழகுபார்த்துக் கொண்டிருந்தான்.

—————————————————————————————————————

Na.Krishna@wanadoo.fr

திண்ணை பக்கங்களில் நாகரத்தினம் கிருஷ்ணா

 • ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
 • நந்தகுமாரா நந்தகுமாரா
 • மோரிஷியஸ் கண்ணகி
 • எ(பெ)ருமை முயற்சி தரும்
 • சாமி.. பெரிய சாமி
 • அப்பா
 • அம்மா இங்கே வா..வா..
 • 39.1 டிகிரி செல்ஷிஇயஸ்
 • ர்..ர்..கீச்..கீச்..
 • அவனோட கணக்கு
 • பூர்விகம் இந்திரலோகம் பேரு தேவகுமாரன்

  Series Navigation

 • நாகரத்தினம் கிருஷ்ணா

  நாகரத்தினம் கிருஷ்ணா