என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

க. உதயகுமார்எனக்கு தெரியும் ….
ஒரு பாசிபடர்ந்த குளத்தின் கீழ்
சலனமற்று கிடக்கிறது என் உடல் ….

நீலம் பாரித்த
என் கண்கள்
தண்ணீரை கிழித்துக்கொண்டு
எதையோ வெறிக்கிறது ……

என் இளமையின் மீது
சிலந்தி கட்டி இருந்த
வலையின் மீது
லாவகமாய் ஊர்ந்து செல்கிறது
இன்னதென்று புலப்படாத பூச்சி ஒன்று ….

தூரத்தில் எவனோ
வாசிக்கும் புல்லாங்குழலின் இசை
என் காதுகளின் ஓரம்
தழுதழுத்த குரலில்
விசும்பி வழிகிறது ….

நான் எழுத மறந்த
கவிதைகள் ,
விறைத்து கிடக்கும்
என் விரல்களின்
நுனியில் கசிந்துகொண்டே இருக்கிறது ….

இப்போது
வலிகள் வலிகளாகவும் இல்லை ,
காயங்கள் காயங்களாகவும் இல்லை …..
ஆனால் என் கனவுகள்
இன்னும் உயிர்ப்போடு உலவுகிறது ….

எனக்கு தெரியும் ,
இனி என் வீதிகளில்
உங்களின் கவிச்சி வாடை வீசப்போவதில்லை …..

நான் விரும்பியே கிடக்கிறேன் ,
பாசிபடர்ந்த இந்த குளத்துக்கடியில்
சலனமில்லாமல் ….
இது எனக்கு மட்டும்
தெரிந்த மோன நிலை …
இதற்கு பெயர்
நீங்கள் மரணமென்றால் ,
என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது …….

— க. உதயகுமார்

Series Navigation

க. உதயகுமார்

க. உதயகுமார்