என் தேசம் விழித்தெழுக !

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

ரவீந்திரநாத் தாகூர் (தமிழாக்கம் சி. ஜெயபாரதன்)


கீதாஞ்சலி

எங்கே நெஞ்சம் அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
எங்கே அறிவுக்குத் தடைஅரண் இல்லையோ,
எங்கே உலகை, வீட்டின் குட்டிச்சுவர்கள்
தூளாக உடைக்க வில்லையோ,
எங்கே மொழிகள் வாய்மையின் ஆழத்தி
னின்றும் எழுகின்றனவோ,
எங்கே விடாமுயற்சி முழுமையை நோக்கித்
தன் கரங்களை நீட்டுகிறதோ,
எங்கே ஆராய்ச்சி எனும் தெளிந்த ஆற்றுநீர்
பாழடைந்த பழக்கம் எனும் பாலை வனத்தில்
வழிதவறி மாய்ந்து விடவில்லையோ,
எங்கே இதயம் பரந்த நோக்கத்திலும்
இயக்கத்திலும் முன்னேற
நீ வழி நடத்துகிறாயோ,
அந்த சுதந்திர சொர்க்க பூமியில், என் பிதாவே !
என் தேசம் விழித்தெழுக !

********************

என் பிரார்த்தனை

இதுவே என்துதி உனக்கு, இறைவா !
நெஞ்சில் எழும்என் கீழ்மையின் வேரை
நோக்கி அடி ! ஓங்கி அடி !
என் இன்ப துன்பத்தை எளிதில் தாங்கிக்
கொள்ள எனக்குப் பொறுமையைத் தா !
பணி புரிகையில் என்பாசம் பயனடைய
எனக்குப் பலத்தைக் கொடு !
ஏழையரை என்றும் ஒதுக்காமலும், மடமையில்
பலத்தோர் முன்அடி பணியாமலும்
இருக்க எனக்குத் திடனைக் கொடு !
தினச் சச்சரவிலிருந்து விடுபட்டு
எனது நெஞ்சம் உயர்ந்து எழ
எனக்குத் திறனைக் கொடு !
எனது சக்தியைப் பாசமோடு
உனது ஆணைக்கு அர்ப்பணிக்க
எனக்கு உறுதியை அளித்திடு !

*************

என் பயணத்தின் முடிவு !

முதுமையில் சக்தி குன்றி, பயணம்
முடிந்து போனதோ இறுதியாக ?
இதுவரை நடந்து வந்த பாதை
எதிரே மூடப்பட்டு விட்டதோ ?
தேவைக் கிருந்த என்பொருள் யாவும்
தீர்ந்து தான் போயினவோ ?
கண் காணா நிசப்த மூலையில்
காலம் தள்ளும் நேரம் வந்ததோ ?
எனக் கலங்கி நின்றேன் !

ஆயின் முடிவில்லை எனக்கு என்பதுன்
நியதி எனக் கண்டேன் !
பழைய பாக்கள் நாவில் அழிந்ததும், நெஞ்சில்
புதிய கீதம் பொங்கின எனக்கு !
பண்டைய தடங்கள் மறைந்த இடத்தில்,
புத்துலகம் பூத்தது வ்ிந்தையோடு !

**************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா