என் கிராமத்துக்-குடிசைப்பேத்தி!

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

கவியோகி வேதம்


அழுக்கில் குளித்து,இiருட்டு நிறத்தில்
..அம்மணமாய் ஓடுகிறாள்!-என் ‘பேத்தி ‘
அழுவேனா என்ன ?கிராமிய மணத்தில்
..அதிலும்-ஓர் சுகம்தான்!நாடுகிறேன்!

பன்றிகள் புரண்ட சேற்றை எறிந்து
..பயல்கள் அவள்மேல் வீசிடினும்,
கன்றுக் குட்டிபோல் தப்பிச் செல்லு(ம்)அக்
..கனலின் துள்ளலை ரசிக்கின்றேன்!

குடிசைக் குள்ளே நோயில் முனகிக்
..குலைந்து கிடக்கிறாள் அவள்பாட்டி!
தடியை ஊன்றிநான், நாட்களை எண்ணி,
..தவசிபோல் ‘விரக்தியில் ‘ கழித்தாலும்,

கருகிய மரங்களின் உச்சிக் கொம்பிலும்
..காதல்செய்க் கிளிகளின் மயக்கம்போல்,
உருகுகின் றேன்நான்என் பேத்தியின் கொஞ்சலில்!
..உயிரைத் தேக்குவேன் ‘வற்றல் ‘உடம்பினில்!

பாலை நிலத்திலும் ஒற்றை ஒட்டகம்
..பசும்முள் தின்றுநாள் ஓட்டலையா ?
வாலைக் குமரியாய் பேத்தியின் திருமணம்
..வரும்வரை ‘எமனையே ‘எதிர்த்து நிற்பேன்!

***

Series Navigation