என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

சு. குணேஸ்வரன்


என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து
-சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள்
சு. குணேஸ்வரன்-
அறிமுகம்
ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் மலையகப் பிரதேசத்துச் சிறுகதையாகும். தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் ஏழைத்தொழிலாளர் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டுவதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் பரம்பரையினரே இன்றும் மலையகப் பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும் இளம்பெண் லட்சுமியே இச்சிறுகதையின் பிரதான பாத்திரம். லட்சுமியைச் சுற்றியே கதையும் கதை நிகழ்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

கதைச்சுருக்கம்
அன்றையதினம் வேலைக்குச் சற்றுத் தாமதமாக வந்து சேர்கிறாள் லட்சுமி. வழக்கமாக அவள் கொழுந்தெடுக்க வருகின்றபோதெல்லாம் கலகலப்பாக உரையாடும் அவளின் தோழிப் பெண்களும் மற்றவர்களும் எதுவும் பேசாமல் மெளனமாகவும் அவளை எரிச்சலோடு பார்ப்பவர்களாகவும் இருப்பதைக்கண்டு இன்று இவர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது என்று எண்ணுகிறாள்.

தன் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்துக்கதைகூறும் கங்காணிக் கிழவனும் எதுவும் பேசாமல் நிற்கிறான். தனக்குரிய நிறை எதுவென கங்காணிக் கிழவனிடம் கேட்டபோது. பிந்தி வந்ததற்காக லட்சுமியின் மீது எரிந்து விழுகிறான். வழக்கமாகக் கொழுந்தெடுக்கும் இடத்தை விட்டு கடைசி மலையில் சென்று எடுக்குமாறு வேண்டா வெறுப்பாகக் கூறுகிறான்.
முதல் வரிசையிலோ அல்லது கடைசி வரிசையிலோ கொழுந்தெடுக்க பலர் விரும்புவதில்லை. காரணம் அங்கு அதிகமான கொழுந்து எடுக்க முடியாது. ஆனால் லட்சுமி அன்றையதினம் கடைசி வரிசைக்குச் செல்கிறாள். இவளின் அருகே வயதான கிழவி தன் நடுங்கும் கரங்களால் கொழுந்து எடுக்கிறாள். ‘என்னடி ஆயா இந்தப் பக்கம்’ என்று அவள் விசாரிக்கிறாள்.
முதற்கொழுந்து எடுத்து கூடைக்குள் போடும் போது ‘பொலி’ சொல்லுமாறு கிழவியைக் கேட்க கிழவி பொலி சொல்லுகிறாள். மாலையில் கொழுந்து எடுத்து முடித்து நிறுவைக்கு மற்றையவர்களும் செல்கின்றனர். அங்கு நிறுவைக்காக எல்லாப் பெண்களும் தங்கள் தங்கள் நிறையுடன் காத்திருக்கிறார்கள்.
நிறுவைத் தராசு தூக்கவும், கொழுந்துகளைத் தூக்கிப் படங்குகளில் கொட்டவும் வேலையாட்கள் தயாராக நிற்கின்றனர். கங்காணி, கணக்கப்பிள்ளையை அழைத்து வருகிறார். கூடையுடன் வரிசையாக நிற்கும் பெண்களை கணக்குப்பிள்ளை பார்க்கிறார். அவரின் பார்வை அந்த வரிசையில் நிற்கும் லட்சுமியில் தரித்து நிற்கிறது. லட்சுமியை அருகே வருமாறு அழைக்கிறார்.
லட்சுமி சில நாள்களுக்கு முன்னர் 25 ஆம் நம்பர் மலையில் எடுத்த 57 றாத்தல் கொழுந்து தொடர்பாக வினாக்களை அடுக்குகிறார். அந்த மலையில் பல வருடம் அனுபவம் உள்ளவர்கள் கூட 57 றாத்தல் எடையுள்ள தேயிலைக்கொழுந்தை இதுவரை எடுத்தது கிடையாது. அப்படியிருக்க லட்சுமி எடுத்த கொழுந்து நிறை மற்றவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார். இது லட்சுமிக்கு அதிர்ச்சியாக உள்ளது. தன் தொழிலின் மீதும் தன் கண்ணியத்தின் மீதும் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நினைத்து மனம் குமுறுகிறாள்.
கணக்குப் பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக தொடர்ந்து பேசுகிறார். லட்சுமி சொந்தக்காரப் பெண்ணாக இருப்பதால்தான் கணக்கைக் கூட்டி எழுதிவிட்டதாக மற்றவர்கள் சந்தேகப்படுவதாகவும், கணக்குப் பிள்ளைகளுக்கு பொம்பிளைக் கேஸ் பிரச்சனைக்குரியது என்பதும், மற்றவர்களின் சந்தேகப் பார்வைக்கு தான் ஆட்படக் கூடாது என்பதற்காகவும் அவள் எடுத்த 57 றாத்தல் கொழுந்தை இன்னொரு முறை எடுத்துக் காட்டவேண்டும் என்று லட்சுமியிடம் கட்டளையிடுகிறார்.
லட்சுமிக்கு ஏற்பட்;ட அதிர்ச்சியோடு அந்தக் கட்டளையை மனவைராக்கியத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். தன்னால் மீண்டும் ஒருமுறை அவ்வாறு கொழுந்தெடுத்து நிரூபிக்க முடியுமென கூறுகிறாள்.
இதன் பின்னர் மாலை லட்சுமியின் வீட்டில் அவளின் வருங்காலக் கணவன் ஆறுமுகம் இது சம்பந்தமாக அவளுடன் உரையாடுகிறான். 57 றாத்தல் கொழுந்தெடுத்த அன்றையதினம் ஆறுமுகம் சாப்பாட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது லட்சுமி தனியாக நின்றதைக் கண்டு அவளுடன் உரையாடியபடி அவனும் கொஞ்சம் கொழுந்தெடுத்து அவளின் கூடையில் போட்டான். அதுதான் இன்று 57 இறாத்தல் பிரச்சனையைக் கிளப்பி விட்டிருந்தது. அதனால் கணக்குப்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டு உண்மையைக் கூறிவிடலாம் என்கிறான் ஆறுமுகம். ஆனால் அதனை லட்சுமி ஏற்றுக் கொள்ளவில்லை. அது எதிர்பாராமல் நடந்தது. அவர்கள் தன் தொழிலில் சந்தேகப்பட்டதனால் தன்னால் முடிந்தவரை எடுத்துக் காட்டப் போவதாகவும் முடியாவிட்டால் மற்ற மலைக்கு போய் இலை பொறுக்கப் போவதாகவும் கூறுகிறாள்.
மீண்டும் நான்கு பேர் சாட்சியாக கங்காணி முன்னிலையில் காலை 9 மணியிலிருந்து மாலைக்கிடையில் கொழுந்து எடுக்கிறாள். எடுத்த கொழுந்து நிறுக்கப்;படுகிறது. 61 இறாத்தல் நிறை. எதிர்பார்த்ததை விட 4 றாத்தல் அதிகம். கணக்குப்பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக நிறையைக் கூறி விட்டுக் கொட்டச் சொல்லுகிறார்.

தன் கையால் கொழுந்துகளை அள்ளிப் பார்த்த கணக்குப்பிள்ளை முற்றல் இலையும் மொட்டைப் புடுங்குமாக அதிகமான பழுதுடன் கொழுந்து இருப்பதாகவும் எடையிலிருந்து 20 றாத்தல் கழிக்கப்போவதாகவும் எரிச்சலுடன் கூறுகிறார்.
லட்சுமிக்கு மீண்டும் அது அதிர்ச்சியாக உள்ளது. சவாலை ஏற்றுக் கொண்டு காலையிலிருந்து கஷ்டப்பட்டுக் கொழுந்தெடுத்தும் இறுதியில் 20 இறாத்தல் கழிப்பதாயின்
என்று அவள் எண்ணுவதற்கிடையில் கங்காணிக் கிழவன் முன்னே வந்து ஆத்திரம் மேலிட லட்சுமியின் வலகை ஆட்காட்டி விரலைப் பிடித்து கணக்குப் பிள்ளையிடம் காட்டி
ஆவோசத்துடன் பேசுகிறார்.
“ஐயா, இதைப்பார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா, இது நல்ல கொழுந்தோ கெட்ட கொழுந்தோ, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி! இந்த றாத்தலைத் தரமாட்டேன்னு சொல்றீங்க?”
என்று கங்காணிக்கிழவன் நியாயத்திற்காக வாதிடுகிறார். லெட்சுமியின் வலதுகை ஆட்காட்டி விரலின் ஓரப்பகுதிகள் இரண்டும் தோல் கிழிந்து இரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அவளின் கைகளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட கணக்குப்பிள்ளை ஒரு கதையும் இல்லாமல் துண்டை வாங்கி திரும்பவும் காலைக் கொழுந்துடன் 61 இறாத்தலையும் பதிந்து கொடுக்கிறார்.
தன் சபதம் நிறைவேறாவிட்டால் வேறு மலைக்குச்சென்று இலை பொறுக்கப் போவதாக தனது எதிர்காலக் கணவன் ஆறுமுகத்துடன் வீட்டில் உரையாடிய போது கூறிய லட்சுமி சபதம் நிறைவேறியபோதும் தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்ய விரும்பாது வேறு மலைக்குச் சென்று விடுகிறாள். இதுவே ‘ஒரு கூடைக் கொழுந்து’ சிறுகதையின் கதைச்சுருக்கம் ஆகும்.

கதைக்களம்
இச் சிறுகதை மலையகப் பிரதேசத்தின் தேயிலைத் தோட்டத்தைக் களமாகக் கொண்டது. கதை தேயிலைத் தோட்ட மலைப் பிரதேசத்தைச் சுற்றியும் கொழுத்தெடுத்த பின்னர் அவர்கள் நிறைபார்க்கும் ஸ்டோர் எனப்படும் இடத்தைச் சுற்றியும் இடம்பெறுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயம் என்று சொல்லப்படும் குடியிருப்பில் மிகுதிக் கதைச் சம்பவம் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து எடுக்கும் இடமும் தேயிலை நிறை பார்க்கும் இடமும் கதையின் முற்பகுதியாகவும் அப்பிரதேசத்தில் அவர்கள் வாழும் லயம் கதையின் பிற்பகுதியாகவும் இடம்பெறுகிறது. என் எஸ் எம் இராமையா 20 வரையான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் அவை அனைத்துமே தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் பிரச்சினைகளையே மையமாகக் கொண்டவை என்று கூறப்படுகின்றது.

பாத்திரத் சித்திரிப்பு
ஒரு கூடைக் கொழுந்தின் பிரதான கதாபாத்திரமாக லட்சுமி சித்திரிக்கப்படுகின்றாள். அடுத்து முக்கியம் பெறும் பாத்திரங்களாக கங்காணிக்கிழவன், கணக்குப்பிள்ளை மற்றும் கதையோட்டத்திற்கு இணையாக உதிரியாக வரும் பாத்திரங்களாக ஆறுமுகம், லட்சுமியின் தாய், கொழுந்தெடுக்கும் பெண்கள், வயதான கிழவி ஆகிய பாத்திரங்களையும் கூறலாம்.

லட்சுமி

ஒரு கூடைக்கொழுந்தின் பிரதான பாத்திரமாக லட்சுமி சித்திரிக்கப்பட்டுள்ளாள். லட்சுமி இயல்பிலேயே கலகலப்பானவளாகவும், எல்லோருடனும் சகஜமாகப் பழகுபவளாகவும் உள்ளாள். தன் வேலையில் கண்ணியம் மிக்கவளாகவும் இலட்சியத்தை அடைவதற்காக கடுமையாக உழைப்பவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். இரண்டாம் தடவை அவள் அதிக நிறை எடுத்து நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பத்திலே தன்னில் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக, தன் உண்மையான உழைப்பை நிரூபிப்பதற்காக தயங்காமல் முன்வருகின்றாள்.
அதனால்தான், தனது உழைப்பை நிரூபித்ததன் பின்பும் தனக்கு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகவும் வரப்போகின்ற பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு மலைக்குச் செல்வதாகக் கருதக்கூடியதாக உள்ளது.
அதுமாத்திரமன்றி வருங்காலத்தில் திருமணம் செய்யவிருக்கும் ஆறுமுகம் அவளின் குடும்பத்தினருடன் அந்நியோன்யமாக தொடர்புகொண்டிருப்பது கதையோட்டத்தில் எடுத்துக் காட்டப்படுகிறது. 57 றாத்தல் பிரச்சினைக்கு ஆறுமுகமும் காரணமாக இருந்து விட்டால் அவனுக்கு வேலை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதாலும் அதனைக் காட்டிக் கொடுக்காமல் தற்துணிவுடன் செயற்படுகிறாள்.
அவர்களின் சந்தேகம் தீர்ந்த பின்னரும் கூட தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்யாது வேறு மலைக்கு மாறிப் போக விரும்புவது தனது காதலைக் காப்பாற்றுவதற்கும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் ஆகும். இவ்வாறாக லட்சுமி என்ற பாத்திரம் கதையோட்டத்திற்கு ஏற்ப மிக யதார்த்தமாகவும் முற்போக்காகவும் படைக்கப்பட்டுள்ளது.

கணக்குப் பிள்ளை

தோட்டத் தொழிலாளர்கள் கங்காணிக்குக் கட்டுப்பட்டவர்கள். கங்காணி கணக்குப் பிள்ளைக்குக் கட்டுப்பட்டவர். கணக்குப் பிள்ளை தனக்கு மேல்நிலையில் இருக்கும் தோட்ட முதலாளிக்குக் கட்டுப்பட்டவர். இந்த அதிகாரநிலையில் தன் வேலையில் தனது கடமையை நிரூபிக்கவேண்டிய கடப்பாடு கணக்குப்பிள்ளைக்குரியது.
தெரிந்தவர் அல்லது உறவினர் என்று கூடுதல் கணக்கெழுத முடியாது. அது அவரது வேலைக்கு ஆபத்தைத் தேடித்தரும். அதனாலேயே லட்சுமி எடுத்த அதிக நிறையை நிரூபிக்க வேண்டிய சங்கடம் கணக்குப் பிள்ளைக்கு ஏற்படுகின்றது. தனது தோட்ட முதலாளிக்கு தன்னை உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் நிரூபிப்பதற்காக லட்சுமியை வருத்தி மீண்டும் 57 றாத்தல் கொழுந்தெடுக்க வைக்கிறார் கணக்குப்பிள்ளை.
மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு தான் ஆளாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு இவரிடம் மிகுந்திருப்பதைக் காணலாம். இதனை மலையில் இருக்கும் மற்றவர்கள் ஆங்காங்கு கதைப்பதில் இருந்தும் எல்லாத் தொழிலாளர் முன்னிலையில் லட்சுமியின் பிரச்சனையைக் கூறுவதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
நான்குபேர் முன்னிலையில் திரும்பவும் லட்சுமியின் உழைப்பு உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டதும் கணக்குப்பிள்ளைக்கு அவளில் உண்மையான விருப்பம் ஏற்படுகின்றது. ஆனால் அந்த விருப்பம் அவரின் மனதளவில் மட்டுமே சம்பந்தப்பட்டது. லட்சுமிக்கோ மற்றவர்களுக்கோ இது தெரிய வாய்ப்பில்லை. இதை லட்சுமியும் கூட அறியாதவளே.
இவ்வாறாக கணக்குப்பிள்ளை என்ற பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

கங்காணிக்கிழவன்

இச்சிறுகதையில் தொடக்கமும் முடிவும் ஒரு வகையில் கங்காணிக் கிழவனுடன் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. ஆரம்பத்தில் கங்காணிக்கிழவன் பற்றிய மனப்பதிவு ஆத்திரத்தைத் தரத்தக்கதாகவும் சிறுகதையின் இறுதியில் கங்காணிக்கிழவன் தன்னை நியாயத்திற்காக குரல் கொடுப்பவராக வெளிக்காட்டும் போதும், ஆரம்பத்தில் இருந்ததை விட கங்காணிக் கிழவன் பாத்திரத்தில் ஒரு விருப்பம் ஏற்படுகிறது.
வேலைக்கு நேரம் கழித்து லட்சுமி வந்தபோது அவள் அதிக நிறையுள்ள கொழுந்தை எடுத்தாள் என்பதற்காக கோபமாகவும் எரிச்சலாகவும் வேண்டாவெறுப்பாகவும் பேசும் கங்காணிக் கிழவன், அதிகார வர்க்கத்தோடு சேர்ந்து தன்னையும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்கிறார். லட்சுமியின் உண்மையான உழைப்பையும் நேர்மையையும் அறிந்த பின்னர் கங்காணிக்கிழவரும் இறுதியில் தொழிலாளரின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகத் தன்னை வெளிக்காட்டுகின்றார். இது அவருடைய நேர்மையினையும், மனிதாபிமான உணர்வினையும் எடுத்துக் காட்டுகின்றது.
நகைச்சுவையாக உரையாடக்கூடியவராகவும் எல்லோரும் விருப்புக் கொள்ளக்கூடிய பாத்திரமாகவும் வருகின்ற கங்காணிக்கிழவன் தன் வேலையில் மிக்க கண்ணியமானவராகவும் தன் கடமையினை செவ்வனே நிறைவேற்றுபவராகவும் இருக்கின்றார்.
கதையில் இறுதியில் வருகின்ற ‘இதைபார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா நல்ல கொழுந்தோ கூடாத கொழுந்தோ எல்லாவற்றையும் எடுத்தது இந்தக் கையி’ என்ற கூற்று உயிர்ப்பு மிகுந்த வரிகள். இந்த வரிகளே கங்காணிக் கிழவனை நிலைநிறுத்தப் போதுமானவையாகும்.

உதிரிப் பாத்திரங்கள்

ஆறுமுகம்
லட்சுமியின் எதிர்காலக் கணவன் ஆறுமுகம். லட்சுமி வேலை முடிந்து வந்த அந்தி நேரம் அவளின் வீட்டில் அன்றைய பிரச்சனை பற்றி அக்கறையாக உரையாடுகிறான். லட்சுமியின் வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்று எண்ணுகிறான். 57 றாத்தல் பிரச்சனைக்கு தானும் ஒரு காரணம் என்பதனால் கணக்குப் பிள்ளையிடம் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்றும் யோசனை கூறுகிறான்.
அவன் அன்றையதினம் சாப்பாட்டுக்கு வரும் வழியில் லட்சுமி தனியாக நின்று கொழுந்து எடுத்தபோது சற்றுநேரம் அவளுடன் உரையாடியபடி எடுத்த கொழுந்தே இந்தப் பிரச்சினையை இப்போது கிளப்பி விட்டிருந்தது. இதிலிருந்து ஆறுமுகம் என்ற பாத்திரம் லட்சுமியில் அக்கறை உள்ள பாத்திரமாகவும் உழைப்பு மிகுந்த பாத்திரமாகவும் அவளின் பிரச்சினை தனக்கு ஏற்பட்ட பிரச்சினையாகவும் அதிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற யோசனையை கூறும் பாத்திரமாகவும் ஆசிரியர் ஆறுமுகம் என்ற பாத்திரத்தைச் சித்திரித்துள்ளார்.
எதிர்காலத்தில் லட்சுமியைத் திருமணம் செய்ய இருக்கின்றவன் என்பதனால் அவன் காதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினையைக் கதைக்காமல் லட்சுமியின் தாய் தந்தையருடன் பொதுவாக உரையாடிவிட்டு லட்சுமியுடனும் உரையாடுவான். இதிலிருந்து தன்னை பொறுப்புள்ள ஓர் ஆடவனாகக் காட்டிக்கொள்கிறான்.

லட்சுமியின் தாய்
லட்சுமியின் தாய் தன் மகளிலும் அவளின் எதிர்காலக் கணவன் ஆறுமுகத்திலும் மிகுந்த அன்புடையவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். சிறுகதையில் ஓரிடத்தில் மட்டும் ‘ஆயி அத்தானுக்கு தேத்தண்ணி ஊத்திக் கொடுத்தியா?” என்று கேட்பதாக ஒர் உரையாடல் வருகிறது. தன் மகளுக்கு வரப்போகின்ற மருமகனிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்ட நிலை இதனூடாகத் தொpகிறது. ஆறுமுகம் வேலை முடிந்த பின்னர் சற்று ஆறுதலாக லட்சுமியுடன் வந்து உரையாடுவது வழக்கம். அது போன்ற நேரங்களில் மரியாதையாக லட்சுமியின் தாயும் தகப்பனும் சற்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

தோழிப்பெண்கள்
தோழிப்பெண்கள் லட்சுமியுடன் கலகலப்பாக உரையாடுபவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். அவள் வழக்கமாகக் கொழுந்தெடுக்க வரும்போதே லட்சுமிக்காக நிறைபிடித்து வைத்திருந்தும் தங்களுக்கு பக்கத்தில் நிறை பிடிக்க வேண்டும் என்றும் விருப்பப்படுபவர்கள் லட்சுமியின் தோழிப்பெண்கள். அவளுடன் குழந்தைகள் போல் உரையாடுவது கதையோட்டத்தில் தெரிகிறது.
“இங்கே வாடி லெட்சுமி! ஏன்கிட்டே நிறைதாரேன்” என்று கூறுவதும்,
“ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி”
என்றும் குழையக் குழையக் கதைப்பவர்கள். அதேபோல் லட்சுமியும் அவர்களை முறை சொல்லி ‘அக்கா எனக்கு எது நெறை’ என்று கேட்பதிலிருந்தும் தெரிகிறது.
ஆனால் முதற்சம்பளம் வாங்குபவளை எரிச்சலுடன் பார்ப்பவர்கள்போல் லட்சுமியுடன் கதைக்காது முகத்தைத் திருப்பிக் கொள்வதிலிருந்து மற்றவரின் உயர்வில் எரிச்சற்படுகின்ற மனிதஇயல்பு அந்தத் தோழிப்பெண்களுக்கு ஊடாக வெளிப்படுகின்றது. அந்த வகையில் மனிதர்களுக்கு இருக்கவேண்டிய இயல்பான உணர்வுகளுடன் ஆசிரியர் தோழிப்பெண்களைப் படைத்திருக்கின்றார்.

கிழவி

லட்சுமியின் அருகில் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் பொக்கைவாய்க் கிழவி லட்சுமியுடன் உரையாடும் சந்தர்ப்பம் ஒன்று கதையில் வருகின்றது. கடைசி நிறையிலே நின்று தான் தளர்ந்து போனபோதும் கூட பனிக்குளிரில் நடுங்கும் கைகளால் கொழுந்தெடுத்து உழைத்து, தன் வாழ்வை ஓட்ட வேண்டிய வயதான நிலை இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
அதிசயமாகவும் ஆதரவாகவும் அன்பாகவும் கதைகேட்கும் பண்பினை கிழவியிடம் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் லட்சுமி தான் எடுத்த முதற்பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது “அம்மாயி! பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிர்றேன்” என்று லட்சுமி கேட்ட போது “போடு அப்பனே, சம்முகா! பொலியோ…பொலி – பொலி – பொலி” என்று அன்பாகவும் பக்தியுணர்வோடும் அனுபவத்தோடும் கூறுகிறாள்.
உண்மையில் ஒரு சிறிய பாத்திரத்தைப் படைத்தாலும் மிக நுட்பமாக அப்பாத்திரத்தை பண்பாட்டு மரபுகளோடு படைத்துள்ளமை ஆசிரியரின் கதை கூறும் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

மலையக மக்களின் வாழ்க்கை அம்சம்
இச்சிறுகதையூடாக மலையக மக்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டு முகத்தை மிக கனகச்சிதமாக ஆசிரியர் வாசகர் மனக்கண்முன் கொண்டு வருகின்றார். லட்சுமியின் ஒருநாள் வாழ்வு சொல்லப்படுவதனூடாக இந்தப் போக்கை அறிந்து கொள்ள முடிகின்றது.
காலையில் கொழுந்தெடுக்கச் செல்லுதல், அங்கு கங்காணிமாரின் மேற்பார்வையில் வேலை செய்தல், பின்னர் நிறுவைக்காக ஸ்டோர் முன் எடுத்த கொழுந்துக் கூடைகளுடன் காத்திருத்தல், பின்னர் கணக்குப்பிள்ளை நிறை பார்த்தல், காலைமுதல் மாலை வரை கஷ்டப்பட்டு எடுத்த கொழுந்தில் பழுது கண்டுபிடித்து நிறைவெட்டுவேன் என அவர்களை ஏங்க வைத்தல், அதன் பின்னர்தான் தமது லயன்களுக்குச் சென்று சாப்பாடு மற்றும் தமது வீட்டு வேலைகளைச் செய்தல் என்பன கதையோட்டத்திற்கு ஊடாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

சிறுகதையின் சிறப்புக் கூறுகள்
1. தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளை வெளிப்படுத்துதல்
தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கழிப்பதற்குப் படும் பாடுகள் மிக நுட்பமாக கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. நாட்கூலிக்கு வேலைசெய்யும் அவர்கள் தமது தொழிலில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் கூறப்படுகின்றன. கொழுந்தெடுப்பதில் இருக்கும் சிரமம், தொழிலின் நிச்சயமற்ற தன்மை, மேலதிகாரிகளின் கண்காணிப்பிற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு வேலைசெய்ய வேண்டிய நிலை ஆகியன கூறப்படுகின்றன.
கொழுந்தெடுத்தல் மற்றைய வேலைகள் போல் இலகுவான தொழிலல்ல. நிறை பிடித்தல், கொழுந்தெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் செய்தல், படங்குச்சாக்கை இடுப்பைச் சுற்றிக் கட்டுதல், கூடையின் கயிற்றை தலைக்கூடாக மாட்டுதல், கொழுந்தெடுத்தல், முற்றல் இலைகளைத் தவிர்த்தல், எடுத்த கொழுந்தை நிறைபார்ப்பதற்கு கொண்டு செல்லல், அங்கு காத்திருந்து அதன் பின்னர் நிறைக்குரிய துண்டைப்பெற்றுக் கொண்டு செல்லல், ஆகியன இந்தத் தொழிலின் படிநிலை அம்சங்களாகச் சுட்டப்படுகின்றன.
எப்படித்தான் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் மேலதிகாரிகளின் கழுகுக் கண்களுக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தம் உண்மையான உழைப்பை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

மற்றும் இவ்வேலையில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது. தமது வேலையில்; அதிகாரிகள் பிழை பிடித்துவிட்டால் தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டு விடுவோம் என்ற அந்தர நிலையும் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.
வயதானவர்கள், பிள்ளைக்காரிகள்கூட அன்றாடம் தொழில் செய்தாலே தம் வயிற்றுப் பாட்டைப் பார்க்க முடியும் என்ற நிலையும் தெரிகிறது.
எனவே, உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து சுரண்டப்படுவதும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பதென்பதும் வெறும் கானல் நீராகவே இருப்பது இக்கதையூடாக வெளிப்படுகின்றது.

2. பிரதேசப் பண்பாட்டை வெளிப்படுத்துதல்
இச்சிறுகதையூடாக மலையக மக்களின் பிரதேசப் பண்பாடு வெளிப்படுகின்றது. எந்தவொரு தொழிலானாலும் கடவுளைத் தொழுதே எல்லோரும் செய்வது வழக்கம். இது மரபாகவும் கைக்கொள்ளப்படுகின்றது. லட்சுமி கொழுந்தெடுக்க ஆரம்பிக்கும்போது தேயிலைச்செடியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்குகின்றாள். அதேநேரம் முதற்கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது அருகில் நிற்பவர்கள் ‘பொலி’ சொல்வது வழக்கம் அந்த மரபு இங்கும் கைக்கொள்ளப்படுவது தெரிகின்றது.
இந்த வகையில் கிராமிய நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக ‘பொலி’ சொல்லும் மரபினையும் ‘ஒப்புராணை’ என்ற சத்தியம் செய்யும் நம்பிக்கையினையும் கருத முடிகின்றது.
உறவு நிலைத் தொடர்புகள் மிக நாகரிகமாகப் பேணப்படுவதும் இக்கதையில் வெளிக்காட்டப்படுகின்றது. லட்சுமியும் ஆறுமுகமும் வீட்டில் உரையாடும் போது லட்சுமியின் தாயும் தந்தையும் மரியாதையாக ஒதுங்கிக் கொள்வது கதையின் போக்கினூடே எடுத்துச் சொல்லப்படுகின்றது.

உறவினர் அயலவர் தெரிந்தவர் ஆகியோரை முறை சொல்லி அழைக்கும் வழக்கம் இக்கதையில் இழையோடுகின்றது. வயதானவர்களை அப்பச்சி, அம்மாயி என்று அழைப்பதும், இளம்பெண்களை ஆயி என்று பெரியவர்கள் அழைப்பதும்; இளம்பெண்கள் தங்கள் சகபாடிகளை குட்டி, பொட்டைச்சி, செட்டுகள் என்று அழைப்பதும் இது அவர்களின் உரையாடலைப் பொறுத்தும் உரையாடுபவரின் மனநிலைக்கு ஏற்ப மாறுவதும் அவதானிக்கத் தக்கது.

3. தொழில் சார்ந்த நுணுக்கத்தை வெளிப்படுத்துதல்
தேயிலைத் தோட்டத்தொழிலைப் பொறுத்த வரையில் கொழுந்தெடுத்தல் இங்கு பிரதானமான தொழிலாக உள்ளது. என்றாலும் தேயிலைத் தோட்டங்களில் இதனுடன் இணைந்த வேறு வேலைகளும் செய்யப்படுவதுண்டு. புல்வெட்டுதல், கவ்வாத்து வெட்டுதல், முள்ளுக் குத்துதல், கான் வெட்டுதல், உரம் போடுதல், மருந்தடித்தல், பழைய தேயிலையை பிடுங்கி விட்டு நிலத்தைப் பண்படுத்தி புதிய கன்றுகளை நாட்டுதல் ஆகிய பாரம்பரியத் தோட்டச் சில்லறை வேலைகளும் மலையக தோட்டங்களில் செய்யப்படுவதுண்டு.
இச்சிறுகதையில் கொழுந்தெடுத்தல், இலை பொறுக்குதல் ஆகியனவே சுட்டிக்காட்டப்படுகின்றன. கொழுந்தெடுக்கும்போது அது முறையாகச் செய்யப்படும் வேலையாகவும் கொழுந்தெடுப்பதற்கு முன்னர் அவர்களின் ஆயத்தமும் கதையில் புலப்படுகின்றது. அதிலிருந்து சில பகுதிளை எடுத்துக் காட்டலாம்.
“கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்கு மேலே தூக்கி – இல்லாவிடில் தேயிலைச்செடி கிழித்து விடுமே! மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞாண் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள் இருந்த தலைத்துண்டை உதறி, ….தலையில் போட்டுக்கொண்ட கூடைக் கயிற்றையும் தலையில் மாட்டிக் கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த தலைத்துண்டின் பகுதிகளைக் கயிற்றை மறைப்பதுபோல் மடித்துக் கயிற்றுமேல் போட்டுக் கொண்டாள்.”
“மெளனமாகத் தேயிலைச் செடியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, பனியில் நனைந்து நின்ற கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்கினாள் லெட்சுமி. இரண்டு வீச்சிலே இரண்டு கையும் நிறைந்து விட்டது. காம்புப் பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை. எல்லாம் பிஞ்சுக் காம்புதான்! ‘நார்க்குச்சி’ ஒன்றுகூட இல்லை…இளந்தளிர்கள் ‘சடசட’ வென ஒடிந்து கொண்டிருந்தன.”
பொதுவாக அதிக கொழுந்தெடுத்து எடை போட விரும்புபவர்கள் முதற்தொங்கலுக்கோ அல்லது கடைசித் தொங்கலுக்கோ போக விரும்புவதில்லை. காரணம் முதற்தொங்கல் என்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறைநிறைகளாகவே இருக்கும். அதிக தடவைகள் ஏறி இறங்க வேண்டியிருக்கும்.
அதேபோல் கடைசித் தொங்கல் என்றால் வயதானவர்களுடனும் பிள்ளைக்காரிகளுடனும் கொழுந்தெடுக்க வேண்டியிருக்கும். பிள்ளைக்காரிகள் ஆடி அசைந்து நேரம் கழித்து வந்து சில மணிநேரம் எடுத்து விட்டு லயத்திற்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அத்தோடு அவர்களின் நிறையையும் சேர்த்து எடுத்துக் கொள்வதோடு அவர்களின் கூடையையும் தூக்கிச்சென்று எடை பார்க்க வேண்டும்.
நல்ல கொழுந்து உள்ள மலையெனில் சாப்பிடக்கூடப் போகாமல் கொழுந்தெடுப்பார்கள். ஒவ்வொருவரும் நாற்பது ஐம்பது றாத்தல் என எடுப்பார்கள்.
இவ்வாறாக வேலை தொடர்பான நுணுக்கமான பார்வைகளைக் கொண்டதாக இக்கதை அமைந்துள்ளது.

4. மொழிப்பயன்பாடு
ஒரு கூடைக் கொழுந்து சிறுகதையில் விரவியிருக்கும் மொழிப்பயன்பாடு பற்றித் தனியாக எழுதலாம். அந்த அளவுக்கு அதிகமான மலையகப் பிரதேச மொழிச்சொற்கள் கையாளப்பட்டுள்ளன. மலையகப் பிரதேச வழக்குச் சொற்களை பேச்சு வழக்குச் சொற்கள், உறவுநிலைச் சொற்றொடர்கள், பிறமொழிச் சொற்கள் என மூன்றாக வகுத்து நோக்கலாம். அத்தோடு தொழில்சார் சொற்றொடர்களும் தனித்துவமான சொற்பயன்பாட்டை உடையனவாக உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து இக்கதைக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன.

(அ) மலையகப் பிரதேச வழக்குச் சொற்கள்
1. பேச்சுவழக்குச் சொற்கள்:-
நெறை, கொந்தரப்பு, சுணங்கி, ஒப்புரணை, செட்டு, வதிலு, மொகறை, ஆவுது, பிள்ளைக்காம்பிறா, ஆளுக, பேரு, குத்தம், ஒப்புராணை, எழவு, ஊடே, நெசம்னு, வெனை, அவுகளை, மொறைக்கிறே, பேசிடாப்புலே, போறாக, பொறகு, சாச்சி, கையி, பொடசக்காரி, ஒனக்கு, நெனச்சேன்

2. உறவுநிலைச் சொல்/சொற்றொடர்
அம்மா, அம்மாயி, அப்பச்சி, அய்யா, அப்பன், ஆயி, ஆயா, ஆயான், ஆத்தா, ஜயா, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிழவி, குட்டிக, தொரைச்சாணி, ஙொப்பன், சாக்குக்காரன், பிள்ளைக்காரிகள், பொட்டைச்சி, விடலைப்பிள்ளை, பொம்புளை, புள்ளே, வயசுப்பெண்கள்

3. பிறமொழிச்சொற்கள்
கிராக்கி, றாத்தல், செக்ரோல், லேபர், ஸ்டோர், டமில், கண்ட்றி, ஜபர்தஸ்து, சர்வீசு, மப்ளர், இஸ்டோர், கேஸ், பப்ளிக்கா, ஆசாமி, மாமுல்படி, லயம், ஜூவாலை.

(ஆ) தொழில்சார் சொற்றொடர்கள்
தலைக்கயிறு, கறுப்புநிறக்கயிறு, படங்குச்சாக்கு, தலைத்துண்டு, கூடைக்கயிறு, காம்புப் பகுதி, பிஞ்சுக்காம்பு, நார்க்குச்சி, இளந்தளிர், அந்திக்கொழுந்து, ஒருமணிக்கொழுந்து, சங்கு ஊதுதல், தராசுமரம், தட்டுக்கூடை, தட்டுக்கொட்டுதல், தேயிலை மிலாருக் குவியல், ரப்பு, எல பொறுக்குதல், முற்றல் இலை, பொலி, எடுவைக்காரிகள், குறைநிறை

5. அணிச்சிறப்பு
கதையின் போக்கிற்கு ஏற்ப இயல்பாகவே அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறுகதையின் இன்னொரு சிறப்புக் கூறாக உள்ளது. வர்ணனை, உவமை, உருவகம், மரபுத் தொடர் ஆகியன குறிப்பிடத்தக்கன.
வர்ணனைகளுள் தேயிலைத் தோட்ட வர்ணனையும் லட்சுமி குடியிருக்கும் லயன் வர்ணனையும் எடுத்துக்காட்டத்தக்கவை.
“பங்குனிமாதப் பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெற்றி கண்டவர்களுக்கோ, அது ஓர் இன்பப் போதைதரும் விளையாட்டு. இளந்தளிர்கள் ‘சடசட’வென ஒடிந்து கொண்டிருந்தன. ஆனால் இன்பப் போதையோடு அல்ல! மனதுக்குள்ளே சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக் கொண்டிருந்தது”
என்று தேயிலைத் தோட்டத்தையும்

“சின்னதொரு தகரலாம்பு மினுக்மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துக் கிடந்த நெருப்பைக் குனிந்து ஊதி விட்டான் ஆறுமுகம். நெருப்பு இலேசாகக் கனன்றது. பக்கத்தில் கட்டிக்கிடந்த தேயிலை மிலாருக் குவியலில் இரண்டொரு குச்சியை இழுத்து ‘படக் படக்’ கென்று ஒடித்து, அடுப்பில் வைத்து ஊதினான். குப்பென்று தீப்பிடித்தது. குளிருக்கு அடக்கமாக கைகளை நெருப்பருகே காட்டியவாறு ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தான். அவளும், அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைத்தான் எதிர்பார்ப்பதுபோல் அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். அடுப்பருகே சற்று நெருங்கி உட்கார்ந்தவாறு ஆறுமுகம் கேட்டான். ‘ஆமா அப்ப என்னதான் செய்யப்போறே?’ கனன்று எரிந்த தீயின் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜூவாலை ஒளி அவன்மீது வர்ணப் பூச்சு செய்து கொண்டிருந்தது”
என்று லட்சுமியும் ஆறுமுகமும் லயத்தில் இருந்து கதைக்கும் அழகினையும் நுட்பமாக வர்ணித்துள்ளார்.
உவமை உருவகங்கள் கதையின் போக்குக்கு ஏற்ப கையாளப்பட்டிருந்தல் கவனிக்கத்தக்கது. இங்கு உவமைத் தொடர்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை விரித்து உவமையணியாகக் கொள்ள முடியும்.

உவமை:-
காலால் மிதித்து அமுக்கப்பட்ட கொழுந்து சீமெந்து மாதிரி இறுகிப் போயிருந்தது
உவமைத்தொடர்கள் :-
முதல் சம்பளம் வாங்குபவளை எரிச்சலோடு பார்க்கும் பிள்ளைக்காரிகள் மாதிரி
ஆடி அசைந்து அம்மன் பவனி வருவது போல
மேட்டிலிருந்து பள்ளத்துக்குச் சரேலென இறங்கும் சாரைப்பாம்பு மாதிரி

உருவகம்:-
லெட்சுமியின் புருவங்கள் கேள்விக் குறியாக வளைந்தன
றாத்தல் விஷமாக ஏறிக் கொண்டிருந்தது
அரிசிப்பல் தெரியச் சிரித்தாள்
வெளிக்குப் பசுவாக நின்று கொண்டிருந்தார்கள்
கல்லாகக் கனத்தது
சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக் கொண்டிருந்தது
கட்டி மண்ணாக பொல பொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது

மரபுத்தொடர்கள்:-
பல்லைக் காட்டுதல், சூழ்கொட்டுதல், மாரடித்தல் (மாரடிக்க) ஆகிய மரபுத் தொடர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக கதையின் நகர்வுக்கு ஏற்ப அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறுகதைக்கு ஓர் இலக்கியச் சிறப்பை வழங்குகின்றது.

6. கதைகூறும் உத்தி

ஒரு கூடைக் கொழுந்து யதார்த்தமான கதைப் போக்கினைக் கொண்டது. கதைச்சம்பவங்கள் நிகழ்வுகளுக்கு ஊடாக கதை நகர்த்தப்படுகின்றது. ஒரு சிறுகதைக்கேயுரிய தொடக்கம் வளர்ச்சி முடிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
லெட்சுமி எடுத்த 57 றாத்தல் கொழுந்து பற்றிய விசாரணையில் அதேபோல் மீளவும் கொழுந்து எடுத்துக் காட்டவேண்டும் என்று கணக்குப் பிள்ளை கூறுகின்ற கதைப்பகுதியும், லெட்சுமி பின்னர் எடுத்த 61 றாத்தல் கொழுந்து நிறையில் 20 றாத்தல் கழிப்பேன் எனக் கூறுகின்ற நிலையிலே கங்காணிக்கிழவன் லெட்சுமியின் விரலைக்காட்டி நியாயம் கேட்பதுமாகிய இரண்டு சம்பவங்களும் இச்சிறுகதையின் மிக முக்கியமாக கதைக்கூறுகள் ஆகும்.
பிரதேச மொழிவழக்கினை அதிகமாகக் கையாண்டு இயல்பாகவே எந்தவொரு செயற்கைத்தனமும் இல்லாது கதைகூறும் உத்திமுறை கவனிக்கத்தக்கது. இது பிரதேச இலக்கியங்களுக்கு உள்ள சிறப்பம்சங்களில் முக்கியமானது. ஒரு கூடைக் கொழுந்து அதிகமான மலையகப் பிரதேச வழக்குச்சொற்களுக்கு ஊடாக கதை கூறினாலும் மிக எளிமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பொருத்தமான இடங்களில் வர்ணணையும் இடம்பெற்றுள்ளது.
கதையின் சில இடங்களில் எள்ளல் தொனிக்கின்றது. கங்காணியையும், கணக்குப் பிள்ளையையும் எள்ளலாக குறிப்பிடும்போது
“ஐயா ஒதுங்கி ஆட்களுக்கு முன்னால் வந்து நின்றார்.அவர் அரைந்து வந்த தோரணையும், ஆட்களைப் பார்த்த விதமும், ஏதோ தவறுதலாகக் கறுப்பாகப் பிறந்து விட்ட வெள்ளைக்காரனைப் போலிருந்தது. பேச்சும்கூடச் சுத்தத் தமிழாக இருக்காது. வெள்ளைத்துரை ஒருவன் சிரமப்பட்டு ‘டமில்’ பேசுவது போலிருக்கும். நாமாக இருந்தால் சிரித்திருப்போம். ‘அது’கள் ‘லேபர்’ கூட்டந்தானே? என்ன தெரியும் அந்தக் ‘கண்ட்றி’ களுக்கு? ‘அது’ களுக்கு முன்னால் இப்படி ஜபர்தஸ்து பண்ணுவதில் ஒருசில விடலைப் பிள்ளைகளுக்கு என்னமோ ஓர் இது!”

என்று கணக்குப் பிள்ளையின் செயற்பாட்டை எள்ளல் தொனிக்க ஆசிரியர் விபரிக்கிறார். அதேபோல் கங்காணியையும்,
“….அவரின் செயல்களைக் கவனித்துக் கொண்டு என்னவோ ஏதோவென்று நின்ற கங்காணி ஓடிவந்து ‘ஐயா’ என்றான். இந்த ஐயாப்பட்டம் போடும்போது ஏன்தான் முதுகு கூனுகிறதோ?”
என்று கிண்டல் செய்கிறார்.

தொகுப்பாக
என். எஸ். எம். இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து என்ற இச்சிறுகதையானது இலங்கையின் மலையகப் பிரதேச மக்களின் குறிப்பாக தேயிலைத் தோட்டத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கதையாக உள்ளது. தோட்ட நிர்வாகத்தினால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதனையும் அவர்களின் வாழ்க்கை முறையின் சில அம்சங்களையும் ஒரு குறுக்குவெட்டுமுகப் பார்வையாக இக்கதை முன்வைக்கின்றது.
இங்கு மக்களின் தொழில்முறை சார்ந்த பிரச்சினைகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஊடாகவே மலையக மக்களின் வாழ்க்கையின் சில கூறுகள் வெளிப்படுவதனையும் கண்டு கொள்ளலாம். இலங்கையில் மலையக மக்கள் இதுபோன்ற இன்னும் சொல்லமுடியாத பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை விளங்கிக் கொள்வதற்கான முதற்படியாக இக்கதையைக் கொள்ளலாம். அம்மக்களின் உயிர்த்துடிப்பான வாழ்வை யதார்த்தமாக தனது மொழியினூடே கொண்டு வந்து எம் மனக்கண்முன் நிறுத்தும் பாங்கு சிறுகதையாசிரியரின் வெற்றி என்றே கூறலாம்.
நன்றி :- ஜீவநதி, வைகாசி, 2010

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

author

சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன்

Similar Posts