This entry is in the series 20031016_Issue

சத்தி சக்திதாசன்


என்னைத்தேடி
நன்மைகள் அற்றுத் தீமைகள் வந்தன
இன்பங்கள் இன்றித் துன்பங்கள் வந்தன
ஏற்றங்கள் அல்லாமல் ஏக்கங்கள் வந்தன
மரியாதையற்ற மாற்றங்கள் வந்தன

என்னைத்தேடி
நண்பர்கள் போர்வையில் சில நரிகள் வந்தன
சொந்தத்தின் பந்தத்தில் தீரா சோகங்கள் வந்தன
உறவு எனும் திறப்பைக்கொண்டு துறவு வந்தது
நன்றி எனும் வார்த்தையோடு நயவஞ்சகம் வந்தது

என்னைத்தேடி
தவறான நேரங்கள் தாரளாமாய் வந்தன
துரதிர்ஸ்ட தேவதை துள்ளியே வந்தாள்
வியாபாரத்தின் தோழனாய் நஸ்டம் வந்தது
உணர்வின் உச்சமாய் அழுகையே வந்தது

என்னைத்தேடி
வேதனை வேகமாக வந்த போதும் அத்துடனே
தமிழெனும் தேவதை நாவினில் வந்தமர்ந்தாள்
கவியெனும் மேகம் கவிதையாய்ப் பொழிந்தது
தமிழோடு கலந்து கவிதந்த சுகம் நிம்மதியாயிற்று

sathnel.sakthithasan@bt.com

Series Navigation