என்னவள் சொன்னது….

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

சுந்தர் பசுபதி


பாட்டு கேட்டுவிட்டு
தனக்குள்ளே சிரித்ததற்கும் ,
காலணி மாற்றிப் போட்டு
தடுமாறி விழுந்ததற்கும் ,
நீளப் பின்னல் பார்த்துவிட்டு
கண்ணீர் கசிய கவிழ்ந்தததற்கும்,
புதுப்படத்து அரையிருட்டில்
கை தேடிக் கோர்த்ததற்கும்,
தலை சாய்த்து சிரித்தபோது
ஆகாயத்தில் வெறித்ததற்கும்,
‘கடிதம் நன்றாய் எழுதுகிறாய் ‘ என்றபோது
முகம் வறல தலை அசைத்ததற்கும்,
சிகை கோதி விளையாடினால்
சிலை போல் சமைந்ததற்கும் ,

அவளின் நினைவே காரணம் எனில்…
எனக்கான நினைவுக்காய்
என்ன உளது உன்னிடம்…

மனசு நுரைக்க ஸ்னேகித்து விட்டு
இன்று பிணமாய் என்னுடன்
கண்மூடி மோகிக்க..
உனக்கு இந்த வாழ்வெதற்கு. ? ?.

என் பிரியம் உனக்கு புரிய…
நானும் உனை பிரிய வேண்டும் எனில்….
அதற்கு நான் தயாரில்லை…

இன்னொரு முறை உன் மனம் கொன்று
எனக்கந்த பிரியம் வேண்டாம்…
என் பிரியம் நிஜமெனில் …
உனை உயிர்ப்பிக்கட்டும்…!!

***

Series Navigation