என்னவளே

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

பவளமணி பிரகாசம்


வளர்மதியே! தளிர் மலரே!
வசியம் என்னை செய்தனையே!
மகுடிமுன் நாகமானேன்,
மந்திரித்த கோழியானேன்,
மதி மயங்கி நிற்கிறேன்.

பிறை நுதலே!பிள்ளை மொழியே!
பித்துப் பிடிக்க வைத்தனையே!
விட்டத்தை வெறிக்கிறேன்,
விடிந்தபின் தூங்குகிறேன்,
விடை தேடி அலைகிறேன்.

சித்திரமே!நித்திலமே!
சித்தம் கலக்கிச் சென்றாயெ!
தன்னிலை மறந்தேன்,
தழுவத்துடிக்கிறேன்,
தயவின்றி உயிர் தரியேன்.

செந்தமிழே! செங்கனியே!
செருக்கழித்து விட்டனையே!
பிறந்த பலனறிந்தேன்,
பிறிதொரு நினைவற்றேன்,
பிதற்றலே பேச்சானேன்.

தென்றலே! தெள்ளமுதே!
தெரிந்தே இதயம் திருடினையே!
சுழலும் சருகானேன்,
சுகமாய் சுற்றுகிறேன்,
சுற்றம் மறந்து போனேன்.

அஞ்சுகமே! அருமருந்தே!
அடிமையாய் ஆக்கினையே!
சொன்னதைச் செய்வேன்,
சொர்க்கமென்றிருப்பேன்,
சொல்லடி உன் சம்மதத்தை.
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்