எனக்கொரு வரம்

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

‘அனந்த் ‘ அனந்தநாராயணன்


ஐயா! என்னைப் படைத்தவனே!
அடியேன் பணிந்தோர் வரம்கேட்பேன்:

கையால் ஆகா நிலையிலுள்ளேன்
கடவுள் நீதான் கதியெனக்கு

மெய்யாய்க் கவனம் செலுத்திடநீ
வேண்டு மிலையேல் சொலமாட்டேன்!

பொய்யாய் எதையும் புனைந்துரைக்கும்
புன்மைப் பழக்கம் எனக்கிலைகாண்!

எதிலே தொடங்கி என்குறையை
ஈசன் உனக்குச் சொல்வதுநான் ?

இiதுபோ லின்னும் பலகுழப்ப
மிருத்தற் கெல்லாம் காரணமென் ?

எதையும் செயநான் முனையுமுன்னே
என்னுள் மறைந்தே யிருந்தொருவன்

மெதுவே என்றன் எண்ணமெலாம்
மேவி என்னை அழிப்பதுதான்!

ஓரோர் கணமும் உணர்கின்றேன்
உள்ளதைச் சொன்னால் அவ்வரக்கன்

வேரொ டென்றன் வாழ்வினையே
வேறோர் திசைக்கு மாற்றுவதைப்

பாரோர் அறியார் பழிவாங்கும்
பாழாய்ப் போன பாவியவன்!

யாரென் நிலையைப் புரிந்துகொண்டு
ஐயோ, பாவம்! எனச்சொல்வார் ?

காலையில் எழுந்து கண்திறக்கக்
காப்பி வாயில் ஊற்றுமுன்னே

ஆலைச் சங்கு போலவொரு
அலறல் ஒலியென் உளமெழும்பி

வேலை யின்னும் பலவிருக்க
வீணே யிந்தக் காப்பியதன்

மேலே காலம் போக்கிவிட்டால்
வேறே என்ன நடக்கும் ?போய்க் காலைக் கடனை முடித்துவிட்டுக்
கடிதே காக்காய்க் குளிகுளித்துக்

காலைச் சுற்றும் குழந்தைகளும்
கனிவாய் நோக்கும் காதலியும்

நாளை யிருப்பார் எனஉணர்ந்திந்
நாளை அவர்பால் போக்காமல்

வேலை செய்ய அலுவலகம்
விரைவாய்! எனவே விரட்டிடுவான்

மாலையில் வீடு மடங்கியபின்
மதியம் விழுந்த அஞ்சல்களில்,

மூலையில் படிக்கா தெடுத்துவைத்த
முதல்நா ளிதழில் இiவைபோக

வேலையின் நடுவே மடித்துவைத்து
மேலும் படிக்க நினைத்தவற்றில்

காலை நீட்டி ஒருநிமிடம்
கண்ணை ஓட்ட விடமாட்டான்!

இiருட்டிய பின்நா னிரவுணவை
ஏனோ தானோ எனவிரைவில்

உருட்டி அடைத்து விழுங்கியபின்
உட்கார்ந் தொருபோ தாகிலுமே

திருட்டுத் தனமாய்த் தொலைக்காட்சித்
திரையில் மனத்தைச் செலுத்திடுமுன்

வெருட்டி விழித்தீ காட்டிமறு
வேலை உளபார்! எனவைவான்

இiத்தனை கூறி என்நிலையை
இiறைவா! உனக்கு விளக்கிவிட்டேன்;

பித்தனைப் போல எனைஆக்கிப்
பேயாய் விரட்டும் அரக்கன்தரும்

அத்தனைத் துன்பம் பொறுத்திடுவேன்;
ஆனா லினும்அப் பெரும்பெரிய

எத்தன் விளைக்கும் ஒருகேட்டை
என்னால் தாங்க வியலாது!

அத்தா! அதனை அறிந்துவிட்டால்
அலட்டிக் கொள்வாய் எனைவிடநீ!

புத்தகப் புழுநீ எனப்பிறர்வாய்ப்
புன்சொல் கேட்டும் பெருந்தமிழ்நூல்

எத்தனை கற்றேன் என்பதையே
எல்லாச் சனமும் அறிவதற்கு

முத்துச் சரமாய் மிளிர்கவிதை
முந்நூ றேனும் எழுதிடநான் எண்ணிக் கணினி முன்அமர்ந்து
எனக்கு நீயருள் எனத்தொழுது

எண்ணி ஒருசொல் லிட்டிடுமுன்
எழுவான் என்னுள் ளிரக்கமின்றி

கண்ணின் மணியாய் நான்கருதும்
கவிதைத் திறனைக் கணப்பொழுதில்

மண்ணில் மடியச் செய்திடுவான்
மடையன் கணக்கைக் காட்டிஎன்றன்

நேரச் செலவை நித்தமுமொரு
நிமிடம் விடாது நினைவுறுத்தும்

சோர னிவன்செய் துன்பமதால்
சோகக் கடலில் வீழ்ந்துவிட்டேன்

மார னுடன்அக் காலனையும்
மடியச் செய்தாய் எனஉனையே

ஆரத் துதிக்கும் அடியவர்கள்
கூறக் கேட்ட(து) உண்டதனால்

இiன்றோர் வரத்தை எனக்களிப்பாய்
என்ன அதுவென் றெடுத்துரைப்பேன்

நன்றாய்க் கேட்பா யின்றுமுதல்
நானிப் புவியில் வாழும்வரை

என்றன் பிடரி ஏறியுள்ள
இiந்தக் கணக்கன் என்னையினி

ஒன்றும் செய்தற் கியலாமல்
உன்கால் அடியில் நசுக்கிவிடு!

இiன்னும் கொசுறாய்ச் சிறுவரமொன்(று)
ஈசா! கேட்க விரும்பிடுவேன்:

என்னா லிதுநாள் வரையியலா
ஏவல் பலவும் நான்முடிக்கப்

பின்னால் தள்ளு என்வயதைப்
பத்தே ஆண்டு; பிறர்க்கிதனைச்

சொன்னால் அடிக்க வருவார்கள்
சும்மா யிருப்போ மிருவருமே!

Series Navigation

அனந்த் (அனந்தநாராயணன்)

அனந்த் (அனந்தநாராயணன்)