எனக்குள் ஒரு….

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

அனந்த்


எனக்குள்ஒரு புனலாய்ச்சிறு நதியாய்அலை கடலாய்
…. இழைந்தோடுநல் லமுதேஇயல் இசைநாடகத் தமிழே!

மணக்கும்புது மலரேஎழிற் பொழிலேகவின் வனமே
…. வருடும்மிளந் துளிரேஉயர் பொதிகைவளர் மொழியே!

நினக்கும்பொழு(து) எளிதேமனம் நிறைந்தென்கரம் வழியே
…. நெடுநாள்நிலை கவியாய்உரு வெடுக்கும்என துயிரே!

உனைக்கும்பிட உனைஏத்திட உயரும்உன(து) அடியேன்
…. ஒருநாளொரு பொழுதாகிலும் மறவேன்உன தருளே! (1)

எனக்குள்ளொரு துணையாய்ப்புது உறவாய்ப்பெரு நிதியாய்
…. இணையம்வழி இனிதெய்திய பலதோழர்கள் உலகம்

அனைத்தும்நிறை கவிபாடுநர் அவரோடள வளவி
…. அடையும்சுகம் அடடா!அதுபெரிதேமிக அரிதே!

வனைக்கும்பல கவியோவிய மடலாம்அவை மனத்தில்
…. வளர்க்கும்உணர் வதனால்வரு நெகிழ்வால்நம துடலம்

நனைக்கும்விழி மழையேதமிழ் புரக்கும்புனல் புவியில்
…. நமக்கென்றொரு இடமேபெற வழிகாட்டிடும் அதுவே! (2)

எனக்குள்ஒரு நிலவாயெரி கதிராயகல் விளக்காய்
…. இருள்நீக்கிடும் ஒளியேபழ மறையேஎன(து) இறையே!

மனக்கோவிலில் புகுவாய்அதில் உனைக்காட்டியென் உளநோய்
….. மறைந்தேகிடத் தருவாய்உன தருளானநல் மருந்தே

கனக்கும்பவச் சுமைதாங்கிட இயலாமலுன் கழலே
…. கதியேஎன வருமேழையின் கவல்தீர்த்திடும் நிழலே

தமக்குள்உனைத் தெளிவாயெவர் அறிவாரவர் அகத்தே
…. தழைக்கும்சுக நிலையேஎனைத் தலையாட்கொளும் பரமே! (3)

dbsvsa@nus.edu.sg

Series Navigation

அனந்த்

அனந்த்