எனக்குப் பிடித்த கதைகள் – 8 -ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘ – தர்மமும் சட்டமும்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

பாவண்ணன்


தொடக்கப்பள்ளியில் எங்கள் ஓவிய ஆசிரியர் வரைந்த சித்திரமொன்று என் மனத்தில் பசுமையாகப் பதிந்து கிடக்கிறது. ஒரு புழு. அதை விழுங்கக் காத்திருக்கும் சிறிய மீன். அதை விழுங்கப் பக்கத்திலேயே வாயைத் திறந்தபடி இருக்கும் சற்றே பெரிய மீன். அதை விழுங்க வாத் திறந்தபடி நெருங்கும் பெரிய மீன். அந்த மீனைக் கவ்விச் செல்லக் காத்திருக்கும் கொக்கு.

‘கொக்கை யார் சார் சாப்பிடுவாங்க ? ‘ என்றான் ஆறுமுகம் அவசமரமாக.

‘அவசரப்படாதடா முந்திரிக்கொட்ட. வேட்டைக்காரன் சுட்டு எடுத்தாந்தா நீயும் சாப்புடலாம். நானும் சாப்புடலாம் ‘ என்றார் ஆசிரியர்.

வகுப்பில் சிரிப்பலை எழுந்தது. சிரிப்பின் முடிவில் ‘இதுதான் உலகின் தத்துவம் ‘ என்றார். அவர் கண்களில் ஒளியை ஏற்றுக் கொண்ட பரவசம். ‘ஒன்றைத் தின்று ஒன்று ‘ என்றார் மீண்டும். அவர் குரலின் கம்பீரம் ஏதோ ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல இருக்கிறார் என்ற தோற்றத்தைக் கொடுத்தது. சரியாகப் புரிபடாததால் ஆழந்து கவனிக்கத் தொடங்கினோம்.

உலகின் தொடக்கத்தில் தொடங்கிய ஆசிரியர் அரைமணிநேரத்தில் வரலாற்றையே வார்த்தைகளால் சித்திரித்தார். முற்றிலும் ஏதோ ஒரு உலகில் நாங்கள் இருப்பதைப் போல இருந்தது. ‘எதுவுமே முழுக்கச் சரி என்ற ஒன்றில்லை. எதுவுமே முழுத்தப்பு என்று ஒன்றுமில்லை. நமது சந்தர்ப்பச் சூழலுக்கேற்பத்தாம் நாம் முடிவெடுக்க வேண்டும் ‘ என்றார். ‘அப்படியென்றால் ஒரு வழக்கில் எப்படி சார் தீர்ப்பளிக்க முடியும் ? ‘ என்றான் ஆறுமுகம். ‘ஒரு வழக்குக்கு இரண்டு முகம் உண்டு. சட்டப்படி என்பது ஒருமுகம். தர்மப்படி என்பது மற்றொரு முகம். மனிதர்கள் தர்மத்தைப் போதித்தால் போதும் ‘ என்று முடித்தார். ‘புரியலையே சார் ‘ என்றான் மறுபடியும் ஆறுமுகம். ஆசிரியர் சிரித்தபடி நல்லதங்காள் கதையைச் சொன்னார். பசி தாளாமல் ஒவ்வொரு குழுந்தையாகக் கிணற்றில் வீசிக் கொன்ற கதை. முடிவில், சந்தேகத்தோடு ‘இப்போது புரிகிறதா ஆறுமுகம் ? ‘ என்று கேட்டார். உணர்ச்சிமயத்தில் இருந்த நாங்கள் எல்லாரும் ‘புரியுது சார் ‘ என்று சத்தமிட்டோம். ‘அவள் செய்தது சரியா தப்பா ? ‘ என்று கேட்டார். பாதி வகுப்பு ‘சரி ‘ என்றது. மீதி வகுப்பு ‘தப்பு ‘ என்றது. ‘என்னதான் புள்ளையா இருந்தாலும் உயிரக் கொல்றதுன்னா கொலைதானே சார் ‘ என்று கேட்டான் தப்பு என்று கைதுாக்கியவர்களில் ஒருவனான ரவி. ‘அனாதையா பிச்சை எடுத்து புள்ளைங்க அலையக் கூடாதுன்னு அந்த புள்ளைங்களுக்கு உயிர கொடுத்தவளே அந்த உயிர எடுக்கறதுலே தப்பே இல்ல சார் ‘ என்றான் சரி என்று குரல் கொடுத்தவர்களில் ஒருவனான சண்முகம். ‘ரவி சொன்னது சட்டம். சண்முகம் சொன்னது தர்மம். இரண்டுமே சரியான விடைகள். எந்த அடிப்படையிலிருந்து பிரச்சனையை அணுகுகிறோம் என்பதற்கேற்ப விடையும் மாறும் ‘ என்று முடித்தார் ஆசிரியர். ஆறுமுகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பும் போதே ‘இப்ப புரியுது சார் ‘ என்று சிரித்தான் அவன். கதை கேட்டு அவன் கண்கள் தளும்பி நின்றன.

உலகில் நடக்கிற ஒவ்வொரு பிரச்சனைக்கும் சட்டப்படி ஒரு முகம் உண்டு. தர்மப்படி இன்னொரு முகம் உண்டு. பசிக்குத் திருடுகிற ஆள் சிறைப்பட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். திருடுவது குற்றம் என்கிற சட்டப்படி அவன் செய்கை தவறாகலாம். திருடுவது குற்றம் என்று மதிப்பீட்டுக்குப் பொருந்தாத தளத்தில் வாழ்கிற ஒருவன் பசியைத் தணித்துக் கொள்ளத் திருடுவதைத் தவிர வேறு என்ன வழி இந்த உலகத்தில் உள்ளது ?

ராஜ்ஜியத்தைப் பறிகொடுத்து, மனைவியைப் பிரிந்து, மகனைப் பறிகொடுத்து, சுடுகாட்டில் வெட்டியானாகத் தாழ்ந்த நிலையிலும் ‘என் நாக்கு ஒருபோதும் ஒரு பொய்யையும் சொல்லாது ‘ என்பதில் உறுதியாக இருந்த அரிச்சந்திரனின் கதையை அனைவரும் படித்திருக்கிறோம் ‘இறந்தது அஸ்வத்தாமன் என்னும் யானை ‘ என்று கூனிக்குறுகி ஒரே ஒரு பொய்யைச் சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த தர்மரை மகாபாரதத்தில் பார்த்திருக்கிறோம். தினந்தோறும் நீதிமன்ற வாசலில் பொய்சாட்சி சொல்லி வயிற்றைக் கழுவுகிற ஆட்களையும் பார்க்கிறோம். இவற்றில் எது சரி, எது தப்பு என்று யார் சொல்வது ? எப்படிச் சொல்வது ? இவர்கள் எல்லாரையும் ஒரே தராசால் எப்படி நிறுக்க முடியும் ? மதிப்பீடே முக்கியம் என்பது இன்னொரு வித வாழ்வு. புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்யைக் கையாண்டு பார்க்கலாம் என்பதைச் சலுகையாகக் கொள்வது மற்றொரு வித வாழ்வு. பொய்சொல்லாவிடில் சோற்றைப் பார்க்க முடியாது என்ற விதத்தில் ஒவ்வொரு நாளும் அமைந்து போவது வேறொரு வித வாழ்வு. ஒவ்வொருவருக்கும் வாழ்வின் தளம் வேறுவேறாக இருப்பதைப் போல, ஒவ்வொன்றுக்கும் மதிப்பீடுகளும் அளவுகோல்களும் வேறுவேறாகவே இருக்கும்.

மதிப்பீடுகள் வளமான வாழ்வுக்கு முக்கியம் என்பது முக்கியமாக இருக்கலாம். வாழ்வே வளம் குன்றிப் போனவர்களிடம் மதிப்பீடுகளை எப்படி வற்புறுத்த முடியும் ? மதிப்பீடுகள் இருப்பவனுக்குத்தான் மனசாட்சி. மனசாட்சி இருப்பவனுக்குத்தான் குற்ற உணர்ச்சி. வளம் குன்றிய வாழ்வில் நலிகிறவனிடம் மனசாட்சியையும் குற்ற உணர்ச்சியையும் எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்க முடியுமா ? இப்படி ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் மனம் ஊசலாடும் போதெல்லாம் நெஞ்சில் எழுகிற சிறுகதை ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘

ஒரு பக்கம் அப்புக்குட்டன். அரைப்பட்டினியும் திண்டாட்டமுமாக அலைகிறவன். மறுபக்கம் உடலை விற்க வந்த பெண். பந்த் தினம். நடமாட்டம் இல்லாத நாள். நாள் முழுக்க அலைந்தும் வருமானமில்லாததால் சோர்ந்துேடிபாய் பள்ளிக்கூடத்துத் திண்ணையில் படுத்துத் துாங்குகிறான் அப்புக்குட்டன். நாலு பேராக ஒரே சமயத்தில் வந்து விட்ட ஆட்களிடம் தொடக்கத்திலேயே பணத்தை வாங்கிக் கொண்டு உடலை விற்க அதே பள்ளிக்குள் இருட்டுக் கூடத்துக்குள் ஒதுங்கி வருகிறாள் அந்தப் பெண். யார் அவளோடு முதலில் ஒதுங்குவது என்று வந்தவர்களுக்குள் ஒரு சின்ன வாய்ச்சண்டை. இருட்டில் இருந்த அப்புக்குட்டனை பள்ளிக்கூட வாட்சர் என்று தவறாக எண்ணி கையிலிருந்த இருபத்திரண்டு ரூபாய் சொச்சத்தைக் கொடுக்கிறாள் அவள். ‘சங்கதி முடிஞ்சதும் கையில உள்ளத புடுங்கிட்டு போயிட்டா என்ன செய்ய முடியும் ? ‘ என்றபடி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச் சொல்கிறாள். முதல் ஆள் உள்ளே நுழைந்ததைத் தொடர்ந்து அவள் அந்தப் பக்கம் நகர்ந்ததும் அப்புக் குட்டன் பணத்தோடு மதில் ஏறிக் குதித்து வெளியே சென்று விடுகிறான்.

புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்க முக்கால் ரூபாய் பணத்துக்கு இருட்டில் மறைந்த பொன்னகரத்து அம்மாளுவை நமக்குத் தெரியும். சொந்த வயிற்றுக்குச் சோறிட இருட்டில் நாலு பேருடன் மறையும் அளவுக்கு நசுங்கிப் போன வாழ்வு ஒரு பக்கம். பாதுகாக்கச் சொல்லிக் கொடுத்த பணத்தைத் துாக்கிக் கொண்டு போய் சாப்பிடுகிற அளவுக்கு வாழ்வு நசுங்கிப் போன அப்புக்குட்டன் இன்னொரு பக்கம். தர்மப்படி அப்புக்குட்டன் செய்தது சரியா தப்பா ?

‘பிச்சை எடுத்ததாம் பெருமாளு. அத்தப் புடுங்கிச்சாம் அனுமாரு ‘ என்று சின்ன வயதில் பாடிய பாட்டுதான் நினைவில் சுழல்கிறது. தொடர்ந்து ஓவிய ஆசிரியர் சொன்ன ஒன்றைத் தின்று ஒன்று வளரும் கதையும் ஞாபகத்துக்கு வருகிறது. நல்லவனாகத் தோற்றம் தருகிற நான் என்னையுமறியாமல் யாரைத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ? என்னைத் தின்று வாழ எனக்குப் பின்னால் காத்திருக்கும் சக்திகள் எவை ? என்று பல கேள்விகள் எழுகின்றன. பெருகிக் கொண்டே போகும் கேள்விகள் மட்டுமே மனத்தில் பரிவுணர்ச்சியைத் துாண்டும். அப்புக் குட்டனும் இளம்பெண்ணும் பாவப்பட்டவர்கள். பாவப்பட்டவர்களின் தர்மப் பிசகுகளைப் பரிவுடன் அணுகத் துாண்டுவதே எழுத்தின் அழகு.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்