எனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

பாவண்ணன்


இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நான் சொந்தமாக ஒரு கணிப்பொறியை வாங்கினேன். சற்றே காலாவதியான உதிரிப் பாகங்களுடைய கணிப்பொறி. அதற்கு முன்பு எழுதியதைக் கணினியாக்கம் செய்துகொள்ளவும் மின் அஞ்சல்கள் பார்க்கவும் அனுப்பவும் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு கணிப்பொறி மையத்தை நாடிச் செல்வதுண்டு. பார்த்துப் பேசிய பழக்கத்தில் அந்த மையத்தை நடத்திவந்தவர் நெருக்கமான நண்பரானார். என் வேலை முடிந்தபிறகும் அரைமணிநேரம் நின்று பேசிவிட்டு வருவது வழக்கமாயிற்று. அவருக்குச் சொந்த ஊர் திருச்சி. சதாநேரமும் காவேரியைப்பற்றியும் சீரங்கத்தைப்பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார்.

அவரது மையத்தில் ஒருபுறம் கன்னடம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் கணினியாக்கம் நடைபெறும். பல வழக்கறிஞர்கள் அவரிடம் வாடிக்கைக்காரர்களாக இருந்தார்கள். வழக்கு தொடர்பான பல அறிக்கைகளையும் கடிதங்களையும் கணினியில் ஏற்றும் வேலை நடந்தபடி இருக்கும். மறுபுறம் மின் அஞ்சல்களையும் இணையத்தளங்களையும் பார்க்க வருகிறவர்களை வரவேற்கும் வேலையும் நடக்கும். ஒரு சின்னத்திரை மட்டுமே பிரிக்கிற மற்றொரு பாகத்தில் கணிப்பொறி வகுப்புகளுக்குத் தேவையான ஏற்பாடுகளும் நடக்கும். இத்தனைக்கும் பொறுப்பு ஓர் இளம்பெண். பெயர் ப்ரியா. இன்னும் திருமணமாகாதவள். ஒரு கணமும் சும்மா இராமல் பம்பரம் மாதிரி சுழன்றபடி இருப்பாள். அவள் சுறுசுறுப்பைப் பார்க்க கண்கோடி வேண்டும். கன்னடத்தில் ஏற்கனவே வந்திருந்த என் சிறுகதைகள் சிலவற்றைப் படித்திருந்ததில் அவளுக்கு என்மீது அபார மதிப்பிருந்தது.

ஒருநாள் இணைய தளங்களைப் பார்வையிட்ட பிறகு எடுத்துக்கொண்ட நேரக்கணக்கை பதிவேட்டில் எனக்குரிய பக்கத்தில் பதிந்தபிறகு இருக்கையில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். ப்ரியா யாருக்கோ கன்னடத்தில் திருமண அழைப்பிதழ் அடித்துக்கொண்டிருந்தாள். நண்பருடைய பேச்சில் சற்றே வாட்டம் தென்பட்டது. காரணம் கேட்டேன். முக்கியமான இரண்டு கணிப்பொறிகளில் முக்கிய பாகமான வன்தகடு பழுதாகிவிட்டன என்று சொன்னார். கணிப்பொறியின் விலையில் பாதிவிலை இந்த வன்தகட்டுக்குரியதாகும். இரண்டு நாள்களாக அவற்றையே எப்படியாவது பழுதுபார்த்துப் பயன்படுத்த எடுத்த எல்லா முயற்சிகளும் வீணானதாகச் சொல்லிக் குறைபட்டார். அவர் முன்னால் மேசையில் கணிப்பொறியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட வன்தகடுகள் சதுரமான கேக்குகள் போல வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கட்டிகளாக அவை மினுமினுத்தன. கையில் எடுத்துப் பார்த்தபோது கண்ணாடியில் முகம்பார்ப்பதைப்போல பிம்பம் தெரிந்தது. புதுசாக இரண்டு வாங்கிப் போட்டால்தான் கணிப்பொறிகளை இயக்க முடியும் என்கிற நிலை. வாடிக்கைக்காரர்களைக் காத்திருக்க வைப்பது சிரமமாக இருந்தது. யார்யாருக்கோ தொலைபேசியில் பேசி கடனுக்கு இரு வன்தகடுகளை வரவழைத்தார். அப்பாகங்கள் வரும்வரை காத்திருந்த பொறியாளர் அவற்றைக் கணிப்பொறியில் பொருத்தி உயிர்கொடுத்த பிறகே திரும்பிச் சென்றார். நண்பருடைய முகத்தில் அப்போதுதான் ஓரளவு ஒளியைக் கண்டேன். அந்த இழப்பின் வலியை என்னாலும் ஒரளவு உணர முடிந்தது.

சில நாள்களுக்குப் பிறகு இணையதளத்தைப் பார்வையிடச் சென்றிருந்த சமயத்தில் வழக்கம்போல வணக்கம் சொன்னாள் ப்ரியா. பிறகு நிதானமாகத் தன் கைப்பைக்குள் இருந்து அழைப்பிதழ் ஒன்றை எடுத்து நீட்டினாள். ‘வர இருபத்தியேழாம் தேதி கல்யாணம் சார். பனசங்கரி கோயில்ல வச்சி. அவசியம் வரணும் சார் ‘ என்று கன்னடத்தில் சொன்னாள். அவள் திருமணச் செய்தி எனக்கும் மகிழ்ச்சியையே தந்தது. அவசியம் வருவதாக வாக்களித்தேன். பிறகு அவளுடைய எதிர்காலத் திட்டங்களைப்பற்றிக் கேட்டேன். திருமணத்துக்குப் பிறகு வேலைக்கு வர முடியாது என்றும் மாப்பிள்ளைக்குச் சொந்த ஊரான அரிசிகெரெக்குச் செல்ல வேண்டியதாக இருக்கும் என்றும் சொன்னாள். இதைச் சொல்லும்போது அவள் தொண்டை இடறியது. எனக்கும் மனவருத்தமாக இருந்தது. ப்ரியா இனிமேல் ஒரு நினைவாக மட்டுமே தேங்கி நிற்கப்போகிறாள் என்பதை என்னாலும் சீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

அன்றைய தினம் வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்ட பிறகு நானும் மைய நண்பரும் வெளியே தேநீர் பருகச் சென்றோம். இத்தனை காலமும் மையத்தைத் திறமையாக நிர்வாகித்த ஒரு பெண் வெளியேறுவதைப்பற்றி எந்த மனக்குறையும் இல்லாதவராகக் காணப்பட்டார் அவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் வேலைவேகத்தையும் ஞாபகசக்தியையும் மனத்தில் கொண்டு வழக்கமாக அஷ்டாவதானியென்று நான் சொல்வது வழக்கம். அவ்வளவு சுறுசுறுப்பு மிகுந்த ஒரு பெண் வேலையைவிட்டு நின்று போவதை மிகப்பெரிய இழப்பாகவே நான் நினைத்தேன். வாடிக்கையாளனான நானே பெரிய இழப்பென்று நினைக்கும் நிலையில் மையத்துக்குச் சொந்தக்காரரான நண்பருடைய இழப்புணர்வு அதிகமாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் நினைத்தற்கு நேர்மாறாக அவர் அதை மிகவும் சகஜமாக எடுத்துக்கொண்டார். சொல்லப்போனால் அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதுஆபால நடந்துகொண்டார். ஜடப்பொருளாக கணிப்பொறியின் உதிரிப்பாகம் பழுதானபோது பட்ட கவலையில் நுாற்றில் ஒரு பாகம் கூட அவர் முகத்தில் தெரியவில்லை. எனக்கு அது பெருத்த ஆச்சரியமாக இருந்தது. அக்கேள்வியைச் சுமந்தபடி வெகுநேரம் இருக்க முடியவில்லை. மனம் தாளாமல் கேட்டுவிட்டேன். அதைக்கேட்டு நண்பர் வேடிக்கையாகச் சிரித்தார். ‘இந்த சென்டிமென்ட்ஸ்லாம் வியாபாரத்துக்கு ஆகாது சார் ‘ என்றார் முதலில். பிறகு ‘புது ஹார்ட் டிஸ்க் வேணும்ன்னா செலவாகும் சார், புதுசா வேலைக்கு ஆளு வேணும்ன்னா எந்தச் செலவும் இல்ல சார் ‘ என்றார்.

எனக்குப் பொட்டில் அறைந்தமாதிரி இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என் முன்னிலையில் தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனமின்றி அவர் பேசிச் சமாளிப்பதாகத்தான் நினைத்தேன். ப்ரியா திருமணத்தக்கு ஒரு வாரம் முன்னாலேயே வேலையை விட்டு நின்று விட்டாள். அந்த இறுதி நாளன்றும் அவசியமாக நான் திருமணத்துக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினாள். நிச்சயம் கலந்துகொள்வதாக நான் வாக்களித்தேன். மறுநாள் மையத்துக்குச் சென்றபொழுது புதுசாக இளம்பெண்ணொருத்தி வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அதே துறுதுறுப்பு. வேகம். அஷ்டாவதானத் திறமை. பெயர் ஸ்வேதா. எந்தச் சிரமமும் இல்லாமல் வேலைக்கு ஆளை நியமித்து விட்டதாகச் சொன்னார் நண்பர். தகுந்த ஆள் கிடைக்காமல் அவர் திண்டாடக்கூடும் என்று நான் நினைத்தது நடக்கவில்லை.

திருமணத்துக்குக் கூட அவர் வரவில்லை. நான் மட்டும்தான் சென்று வந்தேன். என்னைப் பார்த்ததும் அவளுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. சந்தனம் பூசிய முகமும் பட்டுத் தலைப்பாகையுமாக இருந்த தன் கணவரிடம் ‘சார் பெரிய எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினார். பிறகு என் பக்கம் திரும்பி சென்டருக்கு யாராவது வந்துட்டாங்களா, பாவம், நான் இல்லாம எங்க சாருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் ‘ என்று என்னைப் பார்த்ததும் கேட்டாள். ஒருகணம் எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மறுகணமே சமாளித்து ‘ஆமாம் ப்ரியா, நீயில்லாம ஒரு வேலையும் ஓடலை. எல்லாமே போட்டது போட்ட மாதிரி இருக்குது. யார் வந்தாலும் ஒன்ன மாதிரி வேலை செய்ய முடியுமா ? ‘ என்றேன். என் பேச்சு அவளுக்கு மிகுந்த நிறைவை அளித்திருக்க வேண்டும். வேலை செய்த காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புணர்வோடு ஈடுஇணையற்ற வகையில் வேலை செய்தோம் என்று இன்னொருவர் வாயால் சொல்லக் கேட்பதில் உருவாகிற திருப்தி அது. என் மனத்தில் நிறைந்து நிற்கிற பல மானுட சித்திரங்களில் ஒன்று ப்ரியாவின் சித்திரம். அவளை நினைக்கும்போதெல்லாம் இருவித எண்ணங்கள் என் மனத்தில் ஓடும். இப்படிப்பட்ட அப்பாவி உழைப்பாளிகளும் இன்னும் இருக்கிறார்களே என்பது ஒருவகையான எண்ணம். இப்படிப்பட்ட கபடற்ற உழைப்பாளிகளை எந்த மதிப்புமில்லாமல் பயன்படுத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்களே என்பது இன்னொரு வகையான எண்ணம். இந்த எண்ணங்கள் தோன்றியதும் விந்தனுடைய சிறுகதையொன்றும் நினைவில் மிதக்கத்தொடங்கும். கதையின் பெயர் ‘மாடும் மனிதனும் ‘.

ஏறத்தாழ இரண்டரைப்பக்க அளவே நீளும் இக்கதையில் விந்தன் ஒரு சிறிய சித்திரத்தையே நமக்குக் காட்டுகிறார். அச்சித்திரத்தின் மூலம் மனத்தின் நுட்பமான இயக்கத்தை உணர வழிவகுத்திருப்பதே இக்கதையின் வெற்றியாகும். மாணிக்கம் பிள்ளையின் வீட்டில் இருக்கும் மயிலைக்காளைகள் இரண்டும் மோசமான கோமாரியால் தாக்கப்பட்டுத் துவண்டு கிடக்கின்றன. அதிகாலை நேரத்தில் வைத்தியர் வந்து மருத்துவம் பார்க்கத்தொடங்குகிறார். அந்தப்பண்ணையில் முப்பது ஆண்டுகளாக வேலை பார்த்து வருபவன் முனியன். ஏதோ வியாதியால் மூன்று நாட்களாக அவன் வேலைக்கு வரவில்லை. மாட்டுக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் வந்திருந்த நேரத்தில் முனியனை வேலைக்கு அழைத்துவர அவன் வீட்டுக்குச் செல்கிறார் கணக்குப்பிள்ளை. முற்றத்தில் பத்துப்பன்னிரண்டு பேர்கள் கிடைக்கும் வேலையைச் செய்யக் காத்திருக்கிறார்கள்.

ஒருபுறம் தொழுவிலிருந்து வரும் வைத்தியர் வியாதியின் கடுமையால் காளைகள் இரண்டும் இறந்துவிட்டதாகச் சொல்கிறார். இன்னொரு புறத்தில் ஆளைத் தேடிப்போன கணக்குப்பிள்ளை திரும்பி வியாதியால் படுத்த படுக்கையான முனியன் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவருகிறார். ஒரே நேரத்தில் இரு மரணச் செய்திகள். மனித மரணத்தைவிட மாடுகளின் மரணம் அவருக்குப் பெருத்த வேதனையையும் இழப்புணர்வையும் தருகிறது. ஒரே கணத்தில் முனியனுடைய இடம் வாசலில் நின்றிருக்கிற கூட்டத்திலிருந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்த ஒருவன் மூலம் நிரப்பப்பட்டு விடுகிறது. காளைகளின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீளவியலாமல் தவிக்கிறார் மாணிக்கம்பிள்ளை. வீட்டிலிருந்து வெளிப்பட்ட மனைவி ‘முப்பது வருடமா வேலை செஞ்ச முனியனே போயிட்டானாம், மாடு போனா என்னவாம் ‘ என்று கேட்கிறாள். கொஞ்சமும் யோசிக்காமல் பிள்ளை ‘மனுஷன் எந்த முதலுமில்லாமல் கிடைப்பான், மாடு முதலில்லாமல் கிடைக்குமா ? ‘ என்று கேட்டு மனைவியின் வாயை அடைக்கப்பார்க்கிறார்.

எதையும் பணத்தால் எடைபோடுகிற மனத்தைப்போல கேவலமான ஒன்று வேறில்லை. மனிதர்களுக்குக் கிடைக்காத கெளரவம் மாடுகளுக்குக் கிடைப்பதற்குக் காரணம் அவை பணம்கொடுத்து வாங்கப்பட்டவை என்பதால்தான். ஒரு கூலியாள் போனால் மற்றொரு கூலியாள் எந்த முன்பணமும் இல்லாமல் கிடைத்துவிடுவான். ஆனால் மூலதனம் இல்லாமல் ஒரு மாட்டைக்கூட வாங்கவியலாது. இந்த அளவு அகங்காரத்தையும் வெறுப்பையும் உள்ளூரச் சுமந்தபடி நாள்முழுக்க ஒரு மனத்தால் எப்படி இயங்க முடிகிறது என்பது பெரிய புதிர். அவன் அகங்காரத்தையும் வெறுப்பையும் புரிந்துகொண்டாலும் தன் புரிதல் வெளிப்பிட்டுவிடாதபடி ‘உங்க காலு செருப்பா இருப்பேனுங்க ‘ என்று சொன்னபடி எந்த நிபந்தனையுமற்ற விதத்தில் தன் உழைப்பை வழங்க முனவரும் மனிதமனம் மற்றொரு விசித்திரப்புதிர்.

உலகத்திலேயே மகத்தானது மனித உழைப்பு என்றும் உழைப்பதாலேயே மனிதன் மகத்தானவனாக மாறுகிறான் என்றும் அறிஞர்கள் சொல்வதுண்டு. உலகில் பிறந்த அனைவருமே உழைப்பவர்களாகவும் உழைப்பின்மீது தீராக்காதல் உள்ளவர்களாகவும் ஏதோ ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்தச் சமநிலை சீர்குலைந்து மனித இனம் இரண்டாகப் பிரிந்து ஒரு கூட்டம் உழைப்பை விற்கும் கூட்டமாகவும் மறுகூட்டம் தம் வசதியின் காரணமாக உழைப்பை வாங்கும் கூட்டமாகவும் மாறிப்போனது. மெல்லமெல்ல மிகமலிவான ஒரு விற்பனைச் சரக்காக மாறியது மனித உழைப்பு. உழைப்புக்குக் கெளரவமில்லாத நிலை உருவானது. உழைப்பவனும் கெளரவமற்றவனாக மாறிப்போனான். இது பெரிய சரித்திர விந்தை. இந்த முரணையொட்டி உலகெங்கும் பற்பல தத்துவங்களும் விவாதங்களும் எழுந்ததுண்டு. ஆயிரமாயிரம் பக்கங்களில் அதன் சாரத்தைக் காணலாம். தகவலாக அப்புள்ளிவிவரங்கள் நம் மனத்தில் பதியும் வேகத்தைவிட இரண்டரைப்பக்கக் கதையின் வழியாக நம்மை வந்தடையும் அனுபவம் அம்பைவிட வேகமாகத் தைப்பதை உணரலாம்.

*

முக்கியமான மூத்த தலைமுறை எழுத்தாளர்களுள் ஒருவர் விந்தன். கசக்கும் வாழ்வின் வெக்கையை எந்தவித மேற்பூச்சும் இல்லாமல் கதைகளில் முன்வைத்தவர். ஏவிந்தன் கதைகள்ஏ என்கிற தலைப்பில் 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த இவருடைய தொகுப்பில் ‘மாடும் மனிதனும் ‘ என்கிற கதை இடம்பெற்றுள்ளது.

Series Navigation