எதிர்காலத்தில் ஒரு நாள்………….

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

அலர்மேல்மங்கை


சித்தார்த்தன் கண்களை விழித்த போது, லேசாகத் தலையை வலித்தது. உடம்பெல்லாம் அடித்துப் போட்டாற் போன்ற அசதி. அவனுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வு சிறிதும் இல்லை. எதற்காக அந்த இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வும் இல்லை. மூளை சிறிது ஸ்தம்பித்திருந்தது. எழும்பாமல் அப்படியே சிறிது நேரம் கிடக்க வேண்டும் போல் தோன்றியது. எழும்ப அவனிடம் அப்போது சக்தி இல்லை. தாகம் தொண்டையை வறட்டியது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு அருகே லேசான சலசலப்பு…

மிகுந்த சிரமத்துடன் தலையைத் திருப்பிப் பார்த்தான். அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. அவனுடைய தந்தை கைகளில் ஒரு பெரிய தண்ணீர்க் குவளையுடன் நின்றிருந்தார்..இது எப்படிச் சாத்தியம் ? அவர் இறந்து போய்த்தான் இருபது வருடங்கள் ஆகிறதே ? அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். சந்தேகமே இல்லை…அவரேதான்..அவனைப் பார்த்த போதெல்லாம் மலரும் அதே புன்னகையுடன் நின்றிருந்தார். சித்தார்த்தன் மிகுந்த சிரமத்துடன் எழுந்து அமர்ந்தான். இல்லை, அவன் மூளை அவனிடம் ஏதோ ஒரு விளையாட்டு, குரூர விளையாட்டு விளையாடுவதாகப் பட்டது. அவன் தந்தை அவனுக்கு மிக அருகே முழங்காலிட்டு அமர்ந்தார். இதென்ன விந்தை..! இப்போது அருகில் அமர்ந்திருந்தது அவனுடைய தாய்..! கையில் இருந்த தண்ணீர் நிரம்பிய குவளையை அருகே வைத்து விட்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

சித்தார்த்தன் குழப்பத்துடன் சுற்று முற்றும் பார்த்தான். அவன் தந்தையைக் காணவில்லை. இதற்குள் அவனுடைய தாய் அவனை மிக நெருங்கி அவன் தலையைக் கோதினாள். அவனுக்கு ஒரு கணம் தான் இறந்து விட்டோமோ என்று தோன்றியது. அவன் தாய் அவனைத் தொட்டதும் அவன் உடம்பில் இருந்த வலியெல்லாம் மறைந்தது. உடம்பில் புத்துணர்வும், சக்தியும் பெருக்கெடுத்தது. அவன் தாயைப் பார்த்து புன்னகைத்தான். ஆனாலும் சித்தார்த்தனுக்கு ஏனோ அழுகையாகவும் வந்தது. சிறு பிள்ளையாக இருக்கும் போது அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுத போதெல்லாம் அவள் அவனை ஆரத் தழுவியபடியே,

‘அட என் கண்ணே..என்ன ஆச்சு ? .. ? ‘ என்று கேட்பது நினைவுக்கு வந்தது. எப்பேர்ப்பட்ட அம்மா இவள்! அவனை ஒரு உயர்ந்த மனிதனாக்க

எவ்வளவு பிரயத்தனம் எடுத்துக் கொண்டாள் ? ஒரு குருவாக, ஒரு ஆசிரியையாக, ஒரு தாதியாக, ஒரு ராஜ தந்திரியாக எல்லாமாக இருந்த அம்மா..

‘அ ப்ரெண்ட், பிலாசபர் அண்ட் அ கைட்… ‘

எத்தனை பேருக்கு இத்தகைய தாய் கிடைத்திருக்க முடியும் ? அம்மா இப்போது அவனை மிக நெருங்கி அவனை ஒரு சிறு பிள்ளை போல அள்ளி எடுத்துத்

தழுவிக் கொண்டாள். அவனுக்கு உடல் சிலிர்த்தது… அழுகையும், தாபமும் முட்டி கொண்டு வந்தது…அவள் கழுத்தைக் கட்டி கொண்டு சிறு பிள்ளை

போல அழுதான். அம்மா அவனை இன்னும் இறுக்கிக் கொண்டாள். அவன் தலையிலும், கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

அவன் முகத்தை நிமிர்த்தி அவன் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.. அதே மந்தகாசச் சிரிப்புடன்,

‘அட என் கண்ணே…என்ன ஆச்சு.. ? ‘ என்றாள். அதே குரல்…

சித்தார்த்தன் சுதாரித்தவனாக,

‘ஒன்றுமில்லையம்மா…..உன்னைப் பார்த்து பதினெட்டு வருஷங்களாகி விட்டதே…அதுதான் அழுகை வந்து விட்டது.. ‘ என்றான்.

‘அட என் அசடு… ‘ என்பது போலச் சிரித்தாள் அம்மா.

சிரித்துக் கொண்டிருக்கும் போதே அம்மா மறைந்து விட்டாள். இப்போது மீண்டும் அப்பா இருந்தார். அவனுக்குத் தான் இறந்து விட்டோம் என்ற

எண்ணம் வலுப்பட்டது. இல்லையென்றால் இப்போது அவன் கண்ணெதிரே நடப்பதெல்லாம் எப்படிச் சாத்தியம் ? ஒன்று அவன் இறந்திருக்க வேண்டும், அல்லது அவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்… அவனுக்கு மீண்டும் ஆயாசமாக வந்தது. அதைப் புரிந்து கொண்டவர் போல அவன் தந்தை

அவசரமாகத் தண்ணீர்க் குவளையை எடுத்து அவனிடம் தந்தார். அதை வாங்கியவன், ‘மடக் மடக்கென்று வேகமாகக் குடித்து விட்டு மீண்டும் குவளையைத் தரையில் வைத்தான். இப்போது சிறிது தெம்பு கூடியிருந்தது. ஆனாலும் எதிலேனும் சிறிது சாய்ந்து அமர்ந்தால் பரவாயில்லை என்று

தோன்றியது. சுற்று முற்றும் பார்த்தான். அப்பா அதே புன்னகையுடன், ‘என்ன தேடுகிறாய் ? ‘ என்றார். அப்பாவுக்கும் குரல் மாறவில்லை.

‘இல்லை…சிறிது சாய்ந்து உட்கார வேண்டும் போல் உள்ளது… ‘

‘இதோ இந்த மரத்தில் சாய்ந்து கொள்ளேன் ‘ என்றார் அப்பா.

அவனுக்குப் பின்னால் ஒரு மேப்பிள் மரம் நின்று கொண்டிருந்தது. சித்தார்த்தனுக்கு மீண்டும் குழப்பமாக இருந்தது. ஒரு கணத்துக்கு முன் அந்த இடத்தில் ஒரு

மரமும் இல்லை. அவன் அந்த மேப்பிள் மரத்தை கூர்ந்து பார்த்தான்.

‘அடடே…இது என் வீட்டின் பின்னே நிற்கும் அதே மரமல்லவா ? அப்படியானால், நான் என் வீட்டின் பின்னால்தான் இருக்கிறேனா ? இது என் வீட்டின் பின்னால் என்றால் இங்கு அப்பாவும், அம்மாவும் இருப்பது எப்படிச் சாத்தியம் ? ‘

அவனுக்கு மீண்டும் குழம்பிக் கொண்டு வந்தது. இதற்குள் அப்பா மரத்துக்கு மிக அருகில் அமர்ந்திருந்தார், அதே புன்னகையுடன்.

‘என்ன யோசிக்கிறாய் ? ‘ என்றார் அப்பா.

‘இல்லை, இது என் வீட்டின் பின் புறம் போல இருக்கிறது…ஆனால், நீங்களும் அம்மாவும் இங்கு இருப்பது எப்படி ? என்று புரியவில்லை… ‘

அப்பா கலகலவென்று சிரித்தார். அவன் மரத்தின் மேல் சாய்ந்து கொண்டு மீண்டும் சுற்று முற்றும் பார்த்தான். புகை மண்டலத்தில் இருந்து வெளியே வந்தது போல அவன் வீடு இப்போது தெரிந்தது. அதன் பின் பக்கத்து வீடும், அதற்கடுத்த வீடுகளும்… சித்தார்த்தன் சட்டென்று எழுந்து நின்றான். லேசாகத் தள்ளாடியது.

‘என்ன செய்கிறாய் நீ ? உட்கார் கீழே.. ‘ என்றார் அப்பா சிறிது கடுமையான குரலில். அப்பாவுக்கு அவனிடம் எவ்வளவு கோபம் வந்தாலும் குரலில் கடுமை ஒரு அளவுடனே நிற்கும். அவன் திரும்பி அவன் வீட்டின் பின்னே பார்த்தான். அவன் மகன் அங்கே கிடந்த லான் நாற்காலியில் அமர்ந்து ஏதோ வாசித்துக் கொண்டிருந்தான். அருகே பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை காதரின் .. இது அவன் வீடேதான்..பரபரப்புடன் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான். இப்போது அப்பா ஒன்றும் கூறவில்லை. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா எப்போதுமே அப்படித்தான். ஒன்றிரண்டு முறை கூறுவார். பின் அவன் போக்குப் படியே விட்டு விடுவார். ஆனால் சித்தார்த்தனுக்கு அங்கேயே அப்பாவை விட்டுப் போகவும் சம்மதமில்லை. அவர் அங்கே தோன்றிய விதம் அவனுக்கு இன்னும் புரியாத புதிராக இருந்தாலும், அதைப்

பற்றியெல்லாம் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம், இப்போது அவரையும் வீட்டினுள்ளே அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் அவர் அருகே வந்தான். அப்பா அவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறே ‘என்ன ? ‘ என்றார்.

‘ நீங்களும் என்னுடன் வாருங்கள்.. ‘

‘எங்கே ? ‘

‘இதோ இது என் வீடுதான். அதோ அந்த மரத்தடியில் கிடக்கும் சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பவன் என் மகன்..உங்கள் பேரன்.. ‘

அப்பா அவன் காட்டிய திக்கை நோக்கவில்லை. சிறிது யோசனையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு,

‘ நான் வரவில்லை.. நீ போ… ‘ என்றார். சித்தார்த்தன் சில கணங்கள் யோசித்தான். அவனுக்கும் அது சரியென்று பட்டது. வீட்டினுள் சென்று அவன் மனைவியிடமும், மகனிடமும் அப்பாவைப் பற்றிச் சொல்லி விட்டு அவரை உள்ளே அழைக்கலாம் என்று நினைத்தான். ஆனால், அவர்கள் இருவரிடமும் இருபது வருடங்களுக்கு முன் இறந்த தந்தை

மீண்டும் வந்துள்ளார் என்று எப்படிச் சொல்வது. அவர்கள் நம்பாமல் சிரிக்க மாட்டார்களா ? குழப்பத்துடன் வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் நடக்க, நடக்க வீடு சிறிது நகர்ந்து பின்னோக்கிப் போவது போல் இருந்தது. தன்னுடைய பிரமைதான் என்று நினைத்துக் கொண்டான். ஒரு வேளை அப்பாவும் பிரமைதானோ என்று தோன்றியது. திரும்பி அவர் இருந்த பக்கமாகப் பார்த்தான். இல்லை…அவர் பிரமையில்லை. அவர் இன்னும் மரத்தடியில் அமர்ந்து இவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் மகனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

‘ஆல்பர்ட்….ஆல்பர்ட்….. ‘ என்று மகனுடைய பெயரை அழைத்துக் கொண்டே நடந்தான். ஆனால், என்ன இது அவன் ஏன் இவனைத் திரும்பிப் பாராமல் இருக்கிறான் ? அவன் இன்னும் குரலை உயர்த்தியவாறு நடந்தான். இவன் நடக்க நடக்க வீடு இன்னும் பின்னோக்கித்தான் போய்க் கொண்டிருந்தது. இவனுக்கு மூச்சு வாங்கியது. மீண்டும் திரும்பி அப்பா இருக்கிறார என்று பார்த்தான். அவன் இவ்வளவு தூரம் நடந்தும் அவருக்கும் அவனுக்கும் உள்ள இடைவெளி கூடவில்லை. ஆனால் எவ்வளவுதான் வீட்டை நோக்கிச் சென்றாலும், அவனுக்கும் வீட்டுக்கும் இடையே இருந்த தூரம் கூடிக் கொண்டேதான் போனது. அவனுடைய மகனுக்கு ஏன் இவன் உரத்த குரலில் கூப்பிட்டும் கேட்கவில்லை என்று புரியவில்லை. ஆனால் அவனுக்கு காதரின் உடைய குரலும், ஆல்பர்ட்டின் குரலும் மிக அருகே கேட்டது. இப்போது அவன் மனைவி வீட்டினுள்ளே இருந்து வெளியே வந்து ஆல்பர்ட்டிடம் ஏதோ பேசுவது தெரிந்தது.

அவன், ‘ஷீலா… நான் இங்கே இருக்கிறேன், பார், ‘ என்று கத்தினான். ஆனால் அவளுக்கும் அவன் கத்துவது கேட்கவில்லை.

அவர்கள் எல்லாம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியாதவனாக நின்றான். அதற்கு மேல் அவனால் தொண்டை கிழிய கத்த முடியாது.

இன்னும் பக்கத்தில் போனால் அவன் அங்கு நின்று கத்துவது புரியும் என்ற எண்ணத்தில் மீண்டும் நடக்கத் துவங்கினான். இப்போது ஷீலா, ஆல்பர்ட்டிடம் ஏதோ கூறி கலகல வென சிரித்துக் கொண்டிருந்தாள். ஆல்பர்ட்டும் சிரிப்பது தெரிந்தது. ஒரு வேளை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும்

சத்தத்தில்தான் இவன் கூப்பிடுவது அவர்களுக்குக் கேட்கவில்லையோ என்று நினைத்தான். இருக்கட்டும். தாயும், மகனுமாக அவர்கள் இருவரும் சந்தோஷமாகச் சிரிப்பதைப் பார்ப்பதே அழகாக இருந்தது. அவன் இன்னும் அவர்களை நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினான். இப்போது ஆல்பர்ட் புத்தகத்தை மூடி வைத்து விட்டு எழுந்து நின்று சோம்பல் முறிப்பது தெரிந்தது.

‘ஆல்பர்ட்தான் எவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டான். ‘ என்று நினைத்துக் கொண்டான். அவனுக்கு மேலும் நடக்கச் சக்தி இல்லை.

மீண்டும், ‘ஷீலா, ஆல்பர்ட்..இங்கே பாருங்கள்.. நான் இங்கே இருக்கிறேன்.. ‘ என்று கத்தினான். பலனில்லை. இப்போது ஆல்பர்ட் உள்ளே போய் விட்டான். பக்கத்து வீட்டுக் குழந்தை காதரின் தன் வீட்டுக்குள் ஓடியது. ஷீலா மட்டும் நின்று அங்கிருந்த பூச்செடிகளை ஆராய்ந்தாள். ஒரு சிறிய பூ வாளியால் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினாள். அப்போது வீட்டினுள்ளே இருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். ஷீலா அவனைப் பார்த்ததும் புன்னகைத்து அவனை அருகே அழைப்பது தெரிந்தது. அந்த மனிதன் யார் என்பதை இவனால் இங்கிருந்து கணிக்க முடியவில்லை. ரெம்ப பழக்கப்பட்ட முகமாகவும் இருந்தது.

‘இதென்ன ஷீலா அவனருகே சென்று அவன் தோள்களைச் சுற்றி தன் கைகளை வளைத்துக் கொள்கிறாள் ? ‘

இவனுக்கு அந்த ஆயாசத்திலும் கோபம் வந்தது. இதற்குள் அந்த மனிதன் ஷீலாவை மிக மென்மையாகக் கன்னத்தில் முத்தமிட்டான். இவனுக்கு ஆத்திரத்தில் அந்த மனிதனின் குரல் வளையை நெரிக்க வேண்டும் போல் இருந்தது.

இன்னும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தான். வீடும் அவனை விட்டு விலகிப் போய்க் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது ஷீலாவின் குரலும் அந்த மனிதனின் குரலும் கேட்டது. இவன் அதிர்ச்சியில் மேலே நடக்க முடியாமல் நின்றான். அந்த மனிதனின் குரல் இவனுடைய குரலை போலவே இருந்தது.

அவன் சிரிப்பது கூட இவன் சிரிப்பதை போலவே இருந்தது. அட, அவன் நடப்பது, நிற்பது கூட இவனைப் போலவே இருக்கிறதே!

இல்லை…இல்லை..அந்த மனிதன் உருவத்திலும் இவனை போலவே இருக்கிறாற் போலத்தான் தெரிகிறது.

இவனை போல என்ன ? இவனேதான் அவன், அவனேதான் இவன்!

தலை கிறு கிறுக்கப் புல்தரையில் அமர்ந்து விட்டான்.

‘என்ன நடக்கிறது இங்கே ? இது என்ன இடம் ? இது இடம்தானா அல்லது சூன்யமா ? அவர்கள் எல்லாம் யார் ? ஷீலாவை முத்தமிட்டுக் கொண்டிருப்பவன் நானென்றால், இப்போது, இந்த மண்ணில் கிடக்கும் நான் யார் ? ஒரு வேளை நான் இறந்து விட்டேன் என்றால், ஷீலாவும் ஆல்பர்ட்டும், நான் போல அங்கு நின்று கொண்டிருப்பவனும் இங்கு வந்தது எப்படி ? என் வீடு இங்கு இருப்பது எப்படி ? ஐயோ நான் என்ன செய்வேன்..எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்ன ? ‘

குழப்பத்தில் மீண்டும் மயங்கி விழுந்தான்.

அவன் மீண்டும் கண்களை விழித்த போது அப்பா அருகிலேயே இருந்தார். அவனைப் பார்த்தவுடன் புன்னகைத்தார். அவன் சிரமத்துடன் எழுந்து அமர்ந்தான்.

‘ஒரு அஸ்ட்றோ பிசிஸிஸ்ட் இப்படி பலகீனமானவனாக இருப்பது வேடிக்கைதான்… ‘

அவன் அப்பாவை அதிர்சியுடன் பார்த்தான். ஆம்…அவன் எப்பேர்ப்பட்ட விஞ்ஞானி…அதுவும் நூற்றாண்டுகளாக இருந்த ஒரு ஆய்வை, உண்மையாக்கிய பேராய்வாளன் அல்லவா அவன்! காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் போவதற்கு விடை கண்டவனல்லவா அவன்! ஐன்ஸ்டான் – ரோசன்* பாலத்தை உண்மை என்று அமெரிக்க விஞ்ஞானிகளை அதிர அடித்தவனல்லவா அவன். காலத்தை ஏமாற்றி முன்னும் பின்னும் போக முடியும் என்று உணர்ந்த மறு வினாடியே, அமெரிக்க ஜனாதிபதி அவனை அழைத்து (ரகசியமாக) விருந்து கூட வைத்தாரே! NASA உடனே, காலப் பிரயாணத்திற்காக, ஒரு அதிவேக ராக்கெட்டையும், அதற்கு வேண்டிய மிக மிக வீர்யமிக்க ராக்கெட்டுக்கான ப்யூயலையும் கண்டு பிடிப்பதற்கான தீவிர ஆராய்ச்சியில் பதினான்கு வருடங்களாக இறங்கி, வெற்றியும் பெற்று விட்ட பின், காலப் பயணத்தில் இவனையும் அனுப்பி வைத்ததெல்லாம் நினைவுக்கு வர, சந்தோஷமும், குழப்பமுமாக அப்பாவைப் பார்த்தான்.

‘அப்பா, நான் வென்று விட்டேன். காலத்தில் பின்னோக்கி வந்து விட்டேன் போல இருக்கிறதே! இப்போது புரிகிறது… நீங்களும் அம்மாவும் எப்படி இங்கே இருக்கிறீர்கள் என்பது…அப்பா உங்கள் மகன் காலத்தை வென்ற முதல் மனிதன்… ‘

அப்பாவை ஆனந்தத்தில் அணைத்துக் கொண்டான். அப்பா ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் இதழ்களில் லேசான புன்முறுவல் வழிந்தது. அவர் பார்வையில் ஒரு, ‘கெட்டிக்கார அசடே ‘ என்ற தொனி இருந்தது.

‘என்ன அப்பா…ஒன்றும் கூறாமல் மெளனமாக இருந்தால் எப்படி ? ஏதேனும் பேசுங்கள்… ‘ என்றான்.

‘பின்னோக்கி வந்த காலத்தில் உன்னுடைய மகனும், மனைவியும் இருப்பது எப்படி ? ‘ என்றார் அப்பா மெதுவாக.

‘அது ஒன்று மட்டும் எனக்கும் புரியவில்லை… ‘ என்றான் குழப்பத்துடன்.

இப்போது லேசாகத் தலையை வலிப்பது போல இருந்தது.

‘ஒரு மாபெரும் விஞ்ஞானியாக இருந்து கொண்டு, ஊகங்களுக்கு இடம் கொடுத்து விட்டாயே! காலப் பிரயாணத்தில் காலத்தை வென்று விட்டதாக மார் தட்டிக் கொள்கிறாயே ? காலத்தில் பின்னோக்கித்தான் வந்துள்ளாய் என்பதற்கு ஆதாரங்களைக் கூடத் தேடவில்லை நீ..! ‘ என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.

அவனுக்கு ஒரு கணம் அவர் கூறுவது சரி என்று பட்டாலும், உடனே கோபமும் எழுந்தது. மகனே என்றாலும் ஒரு மாபெரும் விஞ்ஞானிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டாமோ ?

‘இதில் ஆதாரத்தைத் தேட என்ன இருக்கிறது ? காலப் பயணம் எப்படிச் செய்ய முடியும் என்பதை நிருபித்தவனே நான் தானே ? ‘

அப்பா ஒன்றும் பேசாமல் இருந்தார்.

அவன் அயர்ச்சியுடன் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். இதென்ன ? அவன் வந்த ராக்கெட் இப்படி சின்னா பின்னமாகிக் கிடக்கிறதே. அவனுடன் வந்தவர்களை எங்கே ? பர பரப்புடன் எழுந்தான். சிதறிக் கிடந்த ராக்கெட்டின் அருகே சென்றான். மனதில் சோகம் வெடித்துக் கிளம்பியது. எத்தனை வருட ஆராய்ச்சி! எத்தனை பெரிய விஞ்ஞானிகளின் கனவு! மனித குலத்தின் அறிவின் ஆழமும், உயரமும் வீழ்ந்து கிடப்பதாகப் பட்டது. அவன் நெஞ்சிலிருந்து எழும்பிய ஓலம் அழுகையாக வெடித்தது. அப்பா அவனருகே ஓடி வந்தார். அவனை ஆதரவுடன் அணைத்து அமர வைத்தார். அவன் சிறிது நேரம் அழுதான். அப்பா அவனருகே அமர்ந்து அவன் முதுகைத் தடவிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அழுகை அடங்கியது. சில நிமிடங்கள் மெளனத்தில் கரைந்தது. பின் மெதுவாக, ‘அப்பா… ‘ என்றான்.

அப்பா அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, ‘ நான் உன் அப்பா அல்ல… ‘ என்றார்.

அவனுக்கு எரிச்சல் வந்தது.

‘இது விளையாடும் நேரமாகப் படுகிறதா, உங்களுக்கு ? ‘ என்றான் சிறிது கடுமையாக.

‘இதில் விளையாட்டு என்ன இருக்கிறது ? நான் உன் அப்பா அல்ல… ‘ என்றார் மீண்டும்.

‘சரி… நீங்கள் என் அப்பா இல்லையென்றால் யார் ? ‘ என்றான் கோபத்துடன்.

அவர் ஒன்றும் கூறாமல் மெளனமாக இருந்தார்.

‘சொல்லுங்கள்…என் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் ? ‘

அவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். அவன் ஒன்றும் கூறாமல் அவரை வெறித்தான்.

‘இந்த அண்ட சராசரங்களும், விண்ணும், மண்ணும், நட்சத்திரங்களும், சூரியனும், மனிதனும் உருவாகக் காரணமாக இருந்தவன்…என்னை சக்தி என்றும் கூறலாம் அல்லது சில யோசிப்பிலும் வாசிப்பிலும் குறைந்த மனிதர்கள் அழைப்பது போல கடவுள் என்றும் கூறலாம். ஆனால், உனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால் நீ என்னை எதுவாக வெண்டுமானாலும் அழைக்கலாம்… ‘ கூறி விட்டு நிறுத்தினார்.

ஒரு கணம் அதிர்ந்தவனாக அவரைப் பார்த்தவன் பின் பெரிதாகச் சிரித்தான். அவரும் சிரித்துக் கொண்டார்.

‘ இந்த நேரத்திலும் வேடிக்கை செய்யத் தெரிகிறதே உங்களுக்கு… ‘ என்றான் கசப்பாக.

‘இதில் வேடிக்கை என்ன இருக்கிறது ? உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். நீ எப்படியும் இங்கு வருவாய் என்று தெரியும்… ‘

‘ நல்ல வேடிக்கை.. ‘ என்றான் கசப்புடன்.

‘வேடிக்கைதான்…உலகின் தலை சிறந்த விஞ்ஞானி…தப்புக் கணக்குப் போட்டதும் வேடிக்கை அல்லவா ? காலத்தில் பின்னோக்கிப் போவதாக எண்ணிக் கொண்டு, இன்னொரு இணை உலகத்துக்கு (parallel universe)** வந்திருப்பது வேடிக்கை இல்லாமல் வேறென்ன ? ‘

‘என்ன ? ‘ அதிர்ச்சியில் எழுந்து விட்டான் அவன். அவர் முகத்தில் இன்னும் புன்னகை மாறவில்லை.

அவன் ஆவேசத்துடன் அவர் தோள்களை உலுக்கினான்.

‘என்ன சொல்கிறீர்கள் ? இது சம உலகமா ? இப்போது சொல்லப் போகிறீர்களா ? இல்லை… ‘

அவர் அதீத பலத்துடன் அவனை கீழே அமரச் செய்தார். அவன் வெறி கொண்டவனாக அலறினான்.

‘அப்பா…என்னுடன் விளையாட வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்… ‘

‘அட முட்டாள் விஞ்ஞானி…என்னைப் பார்.. நான் உன் தந்தையா ? ‘

அவன் ஆவேசத்துடன் தலை நிமிர்ந்தான். அவனால் காண்பது எதையும் நம்ப முடியவில்லை. இப்போது அவன் தந்தையைக் காணோம். ஆனால், இப்போது எதிரே நிற்பவரை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே! இந்த நீண்ட தாடியும், கண்களில் கருணையா, சோகமா என்று பிரித்துக் கூற இயலாத ஒரு பார்வையைத் தாங்கித் திரியும் இந்த மனிதரை அவன் எங்கோ பார்த்திருக்கிறான். எங்கே ?

எதோ மின்னல் போன்ற உணர்வு அவனைத் தாக்கியது. இது என்ன ? ஜீஸஸ் க்ரைஸ்ட் அல்லவா இவர் ? இவர் எங்கே இங்கு வந்தார் ? அவர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவனை அருகில் வருமாறு அழைத்தார். அவன் தயக்கத்துடன் அருகில் சென்றான்.

‘இதெல்லாம் என்ன ? என் தந்தையை எங்கே ? உங்களைப் பார்க்க ‘ஜீஸஸ் அப் நாசரேத் ‘ போல அல்லவா இருக்கிறது ? ‘

‘ நான் ஜீஸஸ் அப் நாசரேத் தான். நீ வந்திருக்கும் உலகின் பெரும்பாலான மக்களால் வணங்கப் படுபவன்தான்…. … ‘ என்றார் புன்னகையுடன்.

‘ஹஹ்ஹா…ஹா.. நல்ல வேடிக்கை… நீர் யார் என்பதைச் சொல்லும்..என்ன மாயாஜால தந்திரம் இது…என்னை ஏமாற்ற முடியாது.. ‘ என்றான் கோபத்துடன்.

‘ நான் இந்த உலகை ஆக்கிய சக்திதான் என்பதை நீ நம்பத்தான் வேண்டும். விஞ்ஞானிகளுக்கு எதற்கும் ஆதாரம் வேண்டும் அல்லவா ? இதோ நான் உன் முன்னே நிற்கிறேன். இதை விட என்ன ஆதாரம் வேண்டும் உனக்கு ? ‘

‘உருவத்தை மாற்றி விட்டால், என்ன ? இது போன்ற சித்து விளையாட்டுக்கள் செய்யும் பலரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அடுத்தது என்ன ? புயல் வரவழைக்கப் போகிறீரா அல்லது ஏதேனும் விக்ரகத்தை எடுத்துக் காட்டப் போகிறீரா ? ‘

ஜீஸஸ் கலகலவென்று சிரித்தார்.

‘என்னுடைய பெயர் எப்படியெல்லாம் மாசு படுத்தப் பட்டிருக்கிறது, பார். போகட்டும். நான் யாரென்று நம்பினால்தான் நான் சொல்லப் போவதையும் நம்புவாய். ‘

‘ நீர் ஜீஸஸ் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், எதற்காக முதலில் என் தந்தையாகவும், தாயாகவும் இருந்தீர் ? இப்போது ஜீஸஸாக இருக்கக் காரணம் ? ‘

ஜீஸஸ் அவனை ஆழப் பார்த்தார்.

‘ உன் கண் முன்னே நான் ஒரு கிருஷ்ணனாகவோ, ராமனாகவோ அல்லது உன் உலகத்தில் கடவுள் என்று அடையாளம் கொண்டிருக்கும் எந்த உருவாக்கப் பட்ட உருவமாகவோ, உன் முன்னே தோன்றியிருந்தால், உன் குழப்பம் அதிகரித்திருக்கும். எனவேதான் உன்னைப் பொறுத்த வரை உயர்ந்த ஜீவன்களாக நீ கருதும் உன் பெற்றவர்கள், ஜீஸஸ் போன்ற உருவங்களைத் தேர்ந்தேன். ‘

அவன் இதையெல்லாம் நம்ப முடியாதவனாக அவரை வெறித்தான். ஜீஸஸ் சில கணங்கள் கழித்து, ‘சரி, என்னுடன் வா ‘ என்றார்.

‘எங்கு வர வேண்டும் உம்முடன் ? ‘

‘ஒரு விஞ்ஞானியை மேய்ச்சடைப்பது மிகச் சிரமம்தான். எத்தனை கேள்விகள் கேட்கிறாய் ? ‘

‘மேய்ச்சடைப்பதில் உமக்கு அதிகச் சிரமம் இருக்கக் கூடாதே ? நீர் நல்ல மேய்ப்பன் அல்லவா ? ‘

ஜீஸஸ் மீண்டும் கலகலவென்று சிரித்தார். பின் வேகமாக நடக்கத் துவங்கினார். அவன் அவரைப் பின் தொடர்ந்தான்.

‘எங்கே போகிறோம் என்று சொன்னால் நல்லது ‘ என்றான். ஜீஸஸ் அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார். பின்,

‘இந்த உலகத்தில் வசிக்கும் உன்னுடைய வீட்டுக்கு. அப்போது ‘ஷீலா, ஆல்பர்ட் ‘ என்று கதறினாயே அதே வீட்டுக்கு ‘ என்றார்.

அவன் பதில் கூறாமல் அவரைத் தொடர்ந்தான். அவனிடம் லேசான பரபரப்பு சேர்ந்து கொண்டது. அவனுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ளும் ஆவலில் நடந்தான். சில வினாடிகளில் அந்த வீட்டுக்கு முன்னே இருவரும் நின்றனர். இப்போது வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஜீஸஸ் மிகவும் சுவாதீனமாக உள்ளே நுழைந்தார். அவன் பின் தொடர்ந்தான். ஷீலா மட்டுமே டி.வி முன்னால் அமர்ந்திருந்தாள். ஆனால் இவர்கள் நுழைந்ததைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஜீஸஸ் ஷீலாவுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அவனையும் அங்கு அமரச் சொன்னார். அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் ஒன்றும் கூறாமல் அமர்ந்து கொண்டான்.

‘இந்தப் பெண்ணிடம் உனக்கு ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா ? ‘ என்றார்.

‘இந்தப் பெண் என் மனைவி ‘ என்றான் அவன் கடுப்பாக.

ஆனால் என்ன இது ? அவர்கள் பேசுவதும் ஷீலாவுக்குக் கேட்கவில்லை போலும். அவள் இன்னும் டி.வி.யில் ஆழ்ந்திருந்தாள்.

‘உன் மனைவியாகவே இருக்கட்டும். ஆனால் இவளிடம் ஏதேனும் மாறுதல் தெரிகிறதா ? ‘

அவன் ஷீலாவை ஆழப் பார்த்தான். அவள் ரெம்பவும் சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தது. அவனுக்குத் தெரிந்த வரை ஷீலா இவ்வளவு சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்ததில்லை. எதோ உண்டேன், வாழ்ந்தேன் என்றுதான் இருந்தாள். கணவன் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி என்பதெல்லாம் அவளிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை.

‘ஆமாம், மாறித்தான் இருக்கிறாள், அதற்கென்ன ? ‘ என்றான்.

‘ நீ அப்போது தூரத்தில் இருந்து பார்க்கும் போது உன் மகன் எப்படி இருந்தான் ? ‘

‘அவனும் ரெம்ப சந்தோஷமாக இருப்பதாகத்தான் பட்டது…ஆனால், அதற்கும் நீர் கடவுள்தான் என்பதற்கும் என்ன சம்பந்தம் ? ‘ என்றான் ஏளனமாக.

அவர் பக்கமாகத் திரும்பிய போது மீண்டும் அதிர்ந்தான். இப்போது அங்கு இருந்தது, புத்தரின் வடிவம். அவன் மனதில் சாந்தத்தை எப்போதும் கொணர்ந்த வடிவம்…

கருணையும், காருண்யமும், காந்தமும் பொங்கியது அந்த விழிகளில். இதற்குள் அவன் மகனும் வந்து அமர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒன்று புரிந்தது. அவனும், தன்னை உயரிய சக்தி என்று சொல்லிக் கொண்டு அங்கு இருக்கும் வடிவையும் அவர்களால் பார்க்கவோ, கேட்கவோ முடியவில்லை என்பது.

புத்தர் பேச ஆரம்பித்தார்.

‘ நீ வந்திருக்கும் இடம் நீ நினைப்பது போல இறந்த காலம் அல்ல. இது சம காலத்தின் சம உலகம் (parallel universe). நீ அமர்ந்திருக்கும் இந்த வீடு உன்னுடையதல்ல. உன் மனைவிக்கு முத்தம் தந்தது நீயல்ல. அவன் இந்த உலகின் சித்தார்த்தன். ‘

புத்தர் நிறுத்தினார். சித்தார்த்தன் நம்ப முடியாதவனாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இது எப்படி சாத்தியம் ? எப்படி சாத்தியம் ‘ என்று அவன் மூளை உரத்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தது. புத்தர் அவன் எண்ணத்தை அறிந்தவராக மீண்டும் பேசினார்.

‘சித்தார்த்தா…எதுதான் சாத்தியமில்லை ? இறந்த காலத்துக்குப் போகவே வழி கண்டு கொண்ட உன் அறிவுக்கு இதை ஏன் ஏற்க முடியவில்லை ? ‘

‘அதுவல்ல… நான் ராக்கெட்டில் ஏறும் போது இறங்குவேன் என்று நினைத்த இடம் இறந்த காலம்…அனால் இப்போது நான் இருக்கும் இடம் என் உலகைப் போன்ற இன்னோர் உலகம்..இதை நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய விஞ்ஞான மூளை நான் எங்கே தவறினேன் என்று யோசித்துக் கொண்டிருகிறது… ‘

‘யோசி… நன்றாக யோசி…கூடவே உன் மனைவி உன்னுடைய வீட்டில் எப்போதும் துயரத்தில் அலைய இங்குள்ள சித்தார்த்தனின் மனைவி எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று யோசி. உன்னுடைய மகன் உன்னுடைய ஆளுமையைத் தாங்க முடியாமல் போதைக்கு அடிமையாகிக் கிடக்க, இந்த சித்தார்த்தனின் மகன் வேடிக்கையும், குதூகலமுமாக எப்படி இருக்கிறான் என்று யோசி…. ‘

சித்தார்த்தன் ஒன்றும் கூறாமல் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த ஷீலாவையும், ஆல்பர்டையும் வெறித்தான்.

அவன் மனைவிக்கும், மகனுக்கும் கிடைக்காத சந்தோஷம் இவர்களுக்கு எப்படிச் சாத்தியமானது ? புத்தர் கண்களை மூடி அமர்ந்திருந்தார். டி.வி. இப்போது ஓடவில்லை. ஆல்பர்ட் அம்மாவின் அருகே அமர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய தந்தையும் (இந்த உலகின் சித்தார்த்தன்) இப்போது ஷீலாவின் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தான். ஷீலா சத்தமாக ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். ஒரு கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு அருமையான கவிதையை மிகவும் அழகான குரலில் சத்தமாக வாசித்துக் கொண்டிருந்தாள்.

‘இது யாருடைய காட்டு நிலங்கள் என்று தெரியும்

அவனுடைய வீடு கிராமத்தில் உள்ளது… ‘

ஷீலாவின் குரலில் ஒரு கவிஞனின் தாகமும், ஏக்கமும் இருந்தது. ஆல்பர்ட்டும், அவனுடைய தந்தையும் மிகுந்த ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இடையிடையே ஷீலாவின் கைகள் ஆல்பர்ட்டைத் தேடி அவன் தலையை வருடியது. உடன் ஆல்பர்ட் தாயின் கையை எடுத்துத் தன் கன்னத்துடன் இழைத்துக் கொண்டான். ஷீலாவின் கணவன் எல்லாவற்றையும், ஒரு புன்னகையுடனும், ஆழ்ந்த நேசத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

சித்தார்த்தனுக்கு மனதை வலித்தது. அந்தக் கவிதையை இனம் கண்டு கொண்டான் அவன். ராபர்ட் ப்ராஸ்ட்டின், ‘Stopping by woods on a snowy evening.. ‘ என்ற கவிதை அது. அவன் மனைவிக்குப் பிடித்த அதே கவிதை….இங்கே இந்த ஷீலாவும் இதையே வாசிக்கிறாள். ஆனால் என்ன வித்தியாசம்… இங்கு இந்த ஷீலாவின் கணவனுக்கு மனைவி வாசிக்கும் கவிதை முட்டாள்தனமாகத் தெரியவில்லை. அவளுடைய கவிதை ஆர்வம் எரிச்சல் தரத் தக்கதாகத் தெரியவில்லை. அப்பாவின் எரிச்சலையும், கோபத்தையும் காணாத இந்த ஆல்பர்ட் ஒரு சந்தோஷமான மகனாக வளர்கிறான்….

புத்தரைப் பார்த்தான். அவர் இவன் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

‘என்ன பதில் கிடைத்து விட்டது போல் இருக்கிறதே ? ‘ என்றார்.

அவன் ஒன்றும் கூறாமல் மெளனமாக இருந்தான். ஒரு நாளைக்கு அழுத அழுகை போதும் என்று தோன்றியது.

அவன் எழும்பி வீட்டின் பின்னே தோட்டத்துக்குச் சென்றான். புத்தர் அவன் பின்னேயே வந்தார். இப்போது, ஷீலா,

‘The tree the tempest with a crash of wood

Throws down in front of us is not bar…….. ‘ என்று இன்னொரு கவிதையை வாசிக்கத் துவங்கி இருந்தாள். தோட்டத்தில் ரோஜாச் செடிகளின் அருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். புத்தர் இன்னொரு நாற்காலியில் அமர்ந்தார். வெகு நேரம் ஒன்றும் பேசாமல் நேரம் நகர்ந்தது. பின்,

‘இதெல்லாம் நிஜம்தானா, அல்லது நான் காண்பது கனவா என்று தோன்றுகிறது.. ‘ என்றான் மெதுவாக. புத்தர் ஒன்றும் கூறவில்லை. அவன் பேசட்டும் என்பது போல இருந்தார்.

‘ஆனால் இதெல்லாம் நிஜமாகத்தான் இருக்க வேண்டும்…வேறு எப்படியும் இதை விளக்க முடியாது…இதோ என் முன்னே மாபெரும் சக்தி என்றோ கடவுள் என்றோ கூறிக் கொண்டு நிற்கிறீரே இதையும் நம்பத்தான் முடியவில்லை…. ‘ என்றான். புத்தர் அவனைப் புரிந்து கொண்ட பாவனையில் சிரித்தார். பின் மெதுவாகப் பேசத் துவங்கினார்.

‘ நீ பார்ப்பது எல்லாம் நிஜமே. நீ இதில் எதை நம்ப வேண்டும் என்றெல்லாம் நான் கூற முடியாது. அனால் சில உண்மைகளைச் சொல்லியே ஆக வேண்டும் ‘ கூறி விட்டுச் சிறிது நிறுத்தினார். சிறிது நேரம் ரோஜாச் செடிகளை வெறித்து விட்டு மீண்டும் தொடர்ந்தார்.

‘ உன்னுடைய உலகுக்கும் இந்த உலகுக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஆனால் எவ்வளவு வித்தியாசம்! எதனால் ? ஒன்று சொர்க்கம் என்றால், ஒன்று நரகம் ஆகி விட்டது. இந்த அண்ட சராசரங்களும், வான் வெளியும், கிரகங்களும் பின் சிற்றுயிர்களும், மனிதனும் உண்டான போது, அது இயற்கையின் அழகிய உருவாக்கமே. கடவுள் என்று எதுவும் இல்லை. நானாகிய இந்தச் சக்தி முதல் பெருவெடிப்புக்குக் காரணமான சக்தி! முதல் உயிர், ரசாயன மாற்றங்களால் உருவாகத் துடித்த போது அதை உயிர்ப்பித்த சக்தி. அதுதான் இயற்கை! மழையும், புயலும், மின்சாரமும், காற்றும் எப்படித் தாங்கள்தான் மனிதனின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு என்று சொல்ல முடியாதோ, அதே போல என்னாலும் முடியாது. ‘

‘அப்படியானால் நீர் கடவுள் இல்லை ? ‘ என்றான் கேலியாக.

‘ நான் எப்போது என்னைக் கடவுள் என்று சொல்லிக் கொண்டேன் ? நீங்களாக என்னைக் கடவுள் என்றும் உங்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் என்னால்தான் தீர்வு என்றும் நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ? சரி, கடவுளைத்தான் உருவாக்கி விட்டார்கள். ஆனால் அதோடு நிறுத்த முடிந்ததா ? எத்தனை மதங்கள் ? மதத்துக்குள் எத்தனை உட்பிரிவுகள் ? பிரிவுகளுக்குள் எத்தனை பிரிவுகள் ? மனிதனை மதத்தாலும், நிறத்தாலும், பிரித்து பின் கடவுள் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு ? எந்தக் கண்டுபிடிப்பும் மனித குலத்தின் மேம்பாட்டிற்கு உதவ வேண்டுமே தவிர, அதன் அழிவுக்கு வழி வகுக்கக் கூடாது. விஞ்ஞானமும், மதமும், கடவுளும் மனிதனை மேம்படுத்த மட்டுமே. ஆனால், இது போன்ற எல்லாச் சக்திகளையும் உன் உலகம் ஒருவரை ஒருவர் அழிக்கப் பயன்படுத்துவது என்ன அறிவீனம் ?

எதற்காக உலகம் உருவானது ? கோடிக்கணக்கான வருடங்கள் உருவான ஒரு உலகத்துக்கு நீங்கள் தரும் மரியாதை என்ன ? பரிணாம வளர்ச்சியில் மனிதன் இப்போது இருக்கும் நிலைக்கு வர எத்தனை கோடி வருடங்கள் ஆனது ? அறிவு வளர்ச்சிதான் மனித குலம் தழைக்க உதவுமே தவிர, மதம் உதவாது. மனிதனுக்கு ஒரு கடவுளோ அல்லது ஒரு நம்பிக்கையோ ( a faith) தேவை என்பதில் ஒரு தவறும் இல்லை. கடவுளும், நம்பிக்கையும் மனிதனுக்கு ஒரு தோழனாகவோ, அல்லது ஒரு வழிகாட்டியாகவோ இருக்கலாமே தவிர மனிதனுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் எப்படித் தீர்வாக முடியும் ? எப்பேர்ப்பட்ட அறிவு ஜீவிகளை இயற்கை உங்களுக்குத் தந்தது ? டார்வினிலிருந்து எத்தனை எத்தனை அறிவு சார்ந்த ஞானிகள், விஞ்ஞானிகள்! நீ கூட உன் மகனுக்கு ‘ஆல்பர்ட் ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டானுடைய பெயரைத்தானே வைத்தாய் ? சரி, மனிதனுக்கு மதம் தேவைப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், மதம் மனிதனின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் என்று நினைத்த மனிதன் எவ்வளவு முட்டாள்! வியாதியும், இறப்பும் இயற்கையின் நியதி அல்லவா ? இன்பமும், துன்பமும் இயற்கை அல்லவா ? இது எதற்கும் அறிவு பூர்வமான தீர்வைக் காணாமல் மதத்தின் பெயரால் பலப் பலப் அப்பாவிக் கடவுள்களை உருவாக்கி மக்களை யோசிக்க விடாமல் முட்டாளாக்கிய கொடுமையை என்னவென்பது ?

வாழ்க்கையையும், அதன் ஓட்டத்தையும் அதன் போக்கில் விடாமல், முட்டாள்தனமாக பிரச்னைகளுக்குத் தீர்வு என்று நினைத்துக் கொண்டு உலகில் எத்தனை எத்தனை ‘இஸங்களைத் தோன்றச் செய்து விட்டார்கள் உன் உலகத்தில் ? எல்லா இஸங்களையும் விட மேலானது மனிதனும், மனித குலத்தின் வளர்ச்சியுமே அல்லவா ? அந்த வளர்ச்சிக்கு தீவிர சிந்தனையும், அதன் விளைவால் ஏற்படும் தீர்வுகளும், மாற்றங்களும், மனித குலத்துக்கு நன்மை தரக் கூடிய விஞ்ஞானமும் மட்டுமே அல்லவா உதவ முடியும் ? உன் உலகத்தின் சீரழிவுக்கு இதுதான் காரணம். ஆனால் இப்போது இருக்கிறாயே இந்த உலகத்தின் சந்தோஷத்துக்கும், சுபிட்ஷத்துக்கும் என்ன காரணம் தெரியுமா ? இங்கு இன்னும் மதமும் இல்லை, கடவுளும் இல்லை. இங்கு அறிவை நம்பியே மக்கள் வாழ்கிறார்கள். வியாதியும், இறப்பும், இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள். அவரவ்ர் விருப்பம் போல வாழ்க்கையைத் தெரிவு செய்யும் சுதந்திரம் உள்ளது. தேர்ந்த்தெடுத்த வாழ்க்கை தவறு என்றால், அதை மாற்றிக் கொள்ளும் அறிவும் இருக்கிறது. அதனாலேயே அவர்களுக்கு எதை வாழ்க்கையில் இருந்து எதிர் பார்க்கலாம், எது சாத்தியம் என்று தெரிந்து விடுகிறது. சாத்தியமில்லாத ஒன்றை நினைத்து ஏங்கி, அது நடக்க இல்லாத கடவுளைக் கூப்பிடும் அவலம் இல்லை… ‘ புத்தர் நிறுத்தினார். அவர் முகத்தில் ஆழ்ந்த சோகம் தெரிந்தது.

‘ நீர் சொல்வதெல்லாம் முற்றிலும் சரி…அந்த உலகின் வாழ்க்கை முறை அப்படியாகி விட்டது….எப்படிப் போகிறதோ அப்படியே போகட்டும்..என்னுடைய கவலையெல்லாம் நான் இப்போது என் உலகத்துக்குப் போக வேண்டும் என்பதே. என் உலகத்தார்க்கு இந்த உலகத்தைப் பற்றிக் கூற வேண்டாமா ? ‘

புத்தரின் முகத்தில் லேசான கவலை தெரிந்தது.

‘வேண்டாம்…உன் உலகம் இதைப் புரிந்து கொள்ளும் அளவு பக்குவப்படவில்லை. மதங்களும், மத குருக்களும், தங்கள் பிரச்னைகளைக் கடவுளே தீர்க்க முடியும் என்று நம்பும் மனிதர்களிடமும் போய் இந்த உலகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம். ‘

‘அதெப்படி ? மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு இந்தக் கண்டு பிடிப்பு முக்கியமல்லவா ? சம உலகம் என்ற ஒரு உலகம் இருக்கிறது என்பது இது வரையில் ஒரு தியரியாக மட்டுமே இருந்தது. அது உண்மை என்று அறிந்த முதல் மனிதனாக, விஞ்ஞானியாக இதை என் உலகத்துக்கு நான் கூற வேண்டாமா ? ‘

‘வேண்டாம். உன்னுடைய உலகில் மனித குலம் அறிவியலில் முன்னேறிச் செல்லும் பாதை எவ்வளவு அற்புதமோ அதே அளவு வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் பாதை அதி பயங்கரம். அற்புத சிந்தனைகளும், விஞ்ஞானமும் மனித குலத்தை முன்னேற்றத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வேளை, மதங்களும், இன்னும் மனித பலவீனங்களும் மனித குலத்தை அழிவை நோக்கி இழுத்துச் செல்லுகிறது. அறிவு சார்ந்த பாதையும், பொய்யான, மூட நம்பிக்கைகள் சார்ந்த பாதையும் தனித் தனிப் பயணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு சென்று இந்த உலகத்தைப் பற்றிக் கூறினால் பெருங் குழப்பங்கள்தான் உண்டாகும். நீ இந்த உலகைப் பற்றி மறந்து விடு… ‘ என்றார் புத்தர் உறுதியாக.

சித்தார்த்தனுக்குக் கோபம் வந்தது.

‘இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது இதையெல்லாம் கூற ? ‘ என்ற எண்ணம் எழுந்தது. அவனுடைய எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட புத்தர்

அவனருகே வந்தார்.

‘சித்தார்த்தா…மேலும் தவறு செய்ய எண்ணாதே. வேண்டாம். இந்த உலகைப் பற்றி உன் உலகத்துக்குத் தெரியவே வேண்டாம். அது இந்த உலகத்தையும் அழித்து விடும். நான் சொல்வதைக் கேள்… ‘

‘ நீர் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் ? என் செயல் மீதோ, எண்ணங்களின் மீதோ உமக்கு ஒரு உரிமையும் கிடையாது.. ‘ ஆத்திரத்துடன் கூறினான், அவன்.

புத்தரின் முகத்தில் ஒரு சாந்தமான புன்னகை தவழ்ந்தது. அதே கருணையுடனும், காருண்யத்துடனும் அவன் தலையை கோதினார் அவர்.

சித்தார்த்தன் மீண்டும் கண் விழித்த போது, அவன் ஒரு கடற்கரையில் கிடந்தான். அது அவனுடைய உலகம். அப்போது அவனுக்கு இணை உலகத்தைப் பற்றிய நினைவே இருக்கவில்லை.

*[வான வெளியில் ப்ளாக் ஹோல்ஸ் (black holes)என்று அழைக்கப்படும் கறுப்புத் துளைகள் தன்னுள் எதனையும் ஈர்க்கும் சக்தியை உடையது, ஒளியையும் உட்பட. ஈர்த்து தன்னுள்ளே வைத்துக் கொள்வது மட்டுமே கறுப்புத் துளைகளின் வேலை. ஈர்த்தவற்றை வெளியே விடுவது அல்ல. ஆனால் இவற்றுக்கு வேறு பல குணாதிசயங்களும் உள்ளன. இவை இடம்-காலம் (space-time) அருகே வளையத் தக்கது. கறுப்புத் துளைகள் மிகுந்த அடர்த்தி (density) கொண்டிருப்பதால் இடம்-காலம்இவற்றை தனக்குள்ளே இழுக்கும் போது அவற்றில் ஒரு சிறு கிழிசலை (a rip) ஏற்படுத்தும் வல்லமை உள்ளது. 1935ல், ஐன்ஸ்டானும், சக விஞ்ஞானியான நேதன் ரோசனும், உருவாக்கிய னியதி என்னவென்றால், இவ்வாறு கறுப்புத் துளையில் ஏற்பட்ட சிறு கிழிசல் துளையை, இன்னொரு கறுப்புத் துளையின் கிழிசலுடன் இணைத்தால், இன்னொரு இடம் – காலத்தை இந்த சிறு குறுகிய பாதையால் இணைக்கலாம் என்பதே. இதுவே ‘ஐன்ஸ்டான் – ரோசன் பாலம் ‘ (bridge) என்று அழைக்கப் பட்டது. .]- Popular Science, March 2002.

** குவான்டம் தியரியைக் கொண்டே இணை உலகை (parallel universe) விளக்க முடியும்.

குவாண்டம் தியரி: உலகின் அடிப்படைப் பொருட்களான ப்ரோட்டான்கள், எலக்ட்றான்கள், மற்றும் துணை அணுத் துகள்கள் (subatomic particles) பிரிக்க முடியாதவை அல்ல. அவை துகள்களாகவும், அலைகளாகவும் செயல்படும். அவை வெற்றிடங்களில் தோன்றும், மறையும். ஒற்றைத் துகள் (a particle) ஒரு இடத்தை மட்டுமல்லாது பல இடங்களை ஆக்ரமிக்கலாம். ட்யூட்ஷ் என்ற பெளதீக விஞ்ஞானியின் வாதமானது, இந்த விஞ்ஞான உண்மை துகள்களுக்கு மட்டுமல்லாது, எல்லா வகைப் பொருட்களுக்கும் பொருந்தும் என்கிறார். ஒரு துகள் எப்படி பல இடங்களை ஒரே நேரத்தில் ஆக்ரமிக்க முடியுமோ, அது போலவே, நாமும் ஒரே நேரத்தில், பல இடங்களை ஆக்ரமிக்க முடியும். ஒரே நேரத்திலும் காலத்திலும் ஒரே உலகங்கள் பல இருக்கலாம், ஒரே அண்டங்களும், அண்ட சராசரங்களும் (universe) பல இருக்கலாம். ஒரே காலத்தில் ஒரே உலகம் பல இடங்களில் இருப்பது பன்னுலகம் (multiverse). இதுவே இணை உலகம் (parallel universe). – Discover magazine, September 2001.

***

சொல்புதிது 10 இதழில் வெளியான சிறுகதை

***

alamu_perumal@yahoo.com

***

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை