எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue


2025இல் பூமியில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையால் கஷ்டப்படுவார்கள்; இதே வீதத்தில் பூமியில் உள்ளவர்கள் தண்ணீரை உபயோகித்துக்கொண்டிருந்தால், 270 கோடி மக்கள் 2025இல் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்றூ ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

உலக தண்ணீர் தினமான சென்ற வெள்ளிக்கிழமை அன்று (22 மார்ச் 2002) வெளியிட்ட அறிக்கையில், இது தவிர 250 கோடி மக்கள் நல்ல தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

தற்போதைய தண்ணீர் நிலைகளை தவறான முறையில் பயன்படுத்துவதும், சீர்கெட்ட நீர் மேலாண்மையும், மக்கள் தொகைப் பெருக்கமும், மாறி வரும் தட்பவெப்பமும் இதன் காரணங்களாக குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கப்போகும் இடங்களாக, சஹாரா சார்ந்த ஆப்பிரிக்க நாடுகளையும், ஆசியாவையும் குறித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் ஐரோப்பிய பொருளாதார கமிஷனின் அறிக்கையின் படி, ஐரோப்பாவில் இருப்பவர்களில் சுமார் 12 கோடி பேருக்கு நல்ல தண்ணீர் கிடைக்காமலும், சுகாதாரமான வாழ்க்கை முறையும் இல்லாமல் இருப்பதை குறிப்பிட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் நீர்நிலைகளைக் காப்பாற்றவும், அவைகளில் இருக்கும் தண்ணிரை சரியான முறையில் உபயோகப்படுத்தவும் அதிகமான முயற்சிகள் வேண்டும் என்று இந்த கமிஷன் கோரி உள்ளது.

வீணாகும் தண்ணீரின் மதிப்பு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைக்கே சுமார் 110 கோடி மக்கள் சுகாதாரமான நல்ல தண்ணீர் இல்லாமலும், சுமார் 250 கோடி மக்கள் சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பதாகவும், சுமார் 500 கோடி மக்கள் நோய்கள் தாங்கிய தண்ணீரை உண்டுவருவதாகவும், சுமார் 50 லட்சம் மக்கள் தண்ணீரின் வழி வரும் நோய்களால் இறப்பதாகவும் கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை உலகெங்கும் போர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம்.

பூமியில் இருக்கும் தண்ணீரில் சுமார் 3 சதவீதமே நல்ல தண்ணீர். அதுவும், துருவங்களில் பனிப்பாறையாகவும், நிலத்தடி நீராகவும் கிடக்கிறது.

ஏரிகள், ஆறுகள், அணைகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் மொத்த தண்ணீரில் சுமார் 1 சதவீதத்துக்கும் குறைவு.

‘தண்ணீர் நிறைய இருக்கும் இடங்களிலும், அசுத்தத்தாலும், அதிகரிக்கும் தண்ணீர் தேவையாலும், போதுமானவை அல்லாமல் போகின்றன ‘ என்று கோஃபி அண்ணன் (Kofi Annan) தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பற்றாமல் போவதால், இது எதிர்காலத்தில் போர்களுக்குக் காரணமாகலாம்.

‘தேசிய, உள் தேசிய அளவில் தண்ணீருக்கு நடக்கும் சண்டைகள், பெரும் போருக்கான விதைகளை தங்களிடத்தே கொண்டிருக்கின்றன ‘ என்று கோஃபி அண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Series Navigation

செய்தி

செய்தி