எதார்த்த ஞானம்தான் இன்றைய தேவை

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

தேவமைந்தன்



எவ்வளவு படித்தென்ன? எத்தனை பட்டங்களும் விருதுகளும் பெற்று என்ன? எவ்வளவு சம்பாதித்து என்ன? வீடுகள் பல கட்டிவிட்டாலென்ன? யிரம் புத்தகங்கள் போட்டால் என்ன? இன்னும் ‘என்ன?என்ன?”…கே.பி. சுந்தராம்பாள் அம்மையார் பாடிய பாணியில் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் இருந்தும் அறிந்தும் தெரிந்தும் எதார்த்த ஞானம் இல்லையேல் வீண். இன்றைய இளைய தலைமுறை பாணியில் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சொன்னால் ‘வேஸ்ட்.’

வாழ்க்கை ஒருமுறைதான். சிலர் வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கைக்கேற்ப மறுபிறவிகள் எடுத்துவிட்டுப் போகட்டும். இந்த வாழ்க்கையை எதார்த்தத்தோடு நடத்திச் செல்லத் தெரிந்து கொள்வது நல்லது. இது என்னவோ புதியது அல்ல. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தத்துவ ஞானிகளான ஜாபாலி முனிவர், சார்வாகர் ஆகிய நம்மவர்களும் எபிகூரஸ் என்ற கிரேக்க ஞானியும் சொல்லிச் சென்றதுதான்.(Epicurus: Greek philosopher who maintained that freedom from pain and peace of mind constitute the chief good, to be gained by self-control and the pursuit of virtue; mistakenly regarded as the philosopher of pleasure and indulgence of the senses. – FUNK & WAGNALLS, p.426) ஜாபாலி முனிவர் இராமனிடம் சொல்லியிருக்க முடியாதவற்றைச் சொன்னார்கள்; சார்வாகரைக் ‘காமுக ஞானி’ என்றார்கள்; எல்லாவற்றையும் திரித்துக் கொட்டினார்கள் – யார்?….அவர்களுக்குப் பின்னர் நெடுங்காலம் கழித்துப் பிறந்த விளக்கவுரைகாரர்கள். அதனால்தான் ஞானி ஜே.கிருஷ்ணமுர்த்தி எல்லாருக்கும் விளங்கும்படியாக ஒரு கதை சொல்ல வேண்டி வந்தது.

வறுமையில் வாடிய ஒருவன் ஆளரவமற்ற பாதையொன்றில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவன் வறுமையைப் போக்க விரும்பிய தேவதை ஒன்று அவன் முன்னால் விலை மதிப்பரிய மாணிக்கமொன்றை இட்டு வைத்தது. அதனுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்த அதன் நட்புத் தேவதை “ஏன் அவ்வாறு செய்தாய்?” என்று கேட்க, தான் இரக்கப்பட்டு அவ்வாறு செய்ததாகச் சொன்னது. நட்புத் தேவதை மொழிந்தது: “அதை அவன் எடுத்து, அதன் அருமையை அறிந்து, பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய முறையில் விசாரித்து, சரியான நவமணி வணிகனிடம் விற்று தன் வறுமையைப் போக்கிக் கொள்ளப் போகிறான் என்றுதானே நினைத்தாய்? இப்பொழுது என்ன நடக்கிறதென்று பார்! அவன் என்ன செய்யப் போகிறான் தெரியுமா? பக்கத்து ஊர் வந்ததும் தான் பார்க்கிறவர்களிடமெல்லாம் மாணிக்கத்தைக்காட்டி விசாரிப்பான். ஏமாற்றுக்காரன் எவனாவது ஒருவன் அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அதை அவனிடமிருந்து அபகரித்துக் கொள்வான்!”

கதை சொல்லிவிட்டு ஜே.கே. சொன்னார். “அந்த வறியவன்தான் அறிவைத் தேடுபவன். தேவதை அவன் முன்னால் இரக்கப்பட்டுப் போட்டு வைக்கும் மாணிக்கம்தான் ‘உண்மை.’ அதைப்போய் அவன் எல்லாரிடமும் காட்ட ஒவ்வொருவரும் அது பற்றிச் சொல்கிறார்களல்லவா? அவைதாம் ‘விளக்கங்கள்.’ திரித்துப் பேசி ஏமாற்றி அவனிடமிருந்து மாணிக்கத்தை அபகரிக்கிறானல்லவா? அவன்தான் உண்மையைத் தனக்கேற்பத் திரித்துக் கொண்டு மூல உண்மையை அறவே மறைத்து விடுபவனான விளக்கவுரைகாரன்.”

கற்பனை கலைஞனுக்குத் தேவை. நடைமுறைக்கு உதவாது. கற்பனையால்தான் ஒருவருக்கு எதிர்பார்ப்புகள் தோன்றுகின்றன. எதிர்பார்ப்புகள், எதிர்வினைகளாக ஏமாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. ஏமாற்றங்கள் சினத்தையும் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுகின்றன. எதார்த்தம், அமைதியை உருவாக்குகிறது.

‘ஆகாசம்பட்டு’ என்ற சுவாரசியமான கவிதைத் தொகுதி.. வெண்பாக்கள் கொண்டது. அதன் ஆசிரியர் கவிஞர் சேஷாசலம். ஆகாசம்பட்டு சேஷாசலம் என்று நாங்கள் அழைப்போம். ஆகாசம்பட்டு, உலக நகரமான ஆரோவில்லின் அருகே உள்ள பேரூர். இயல்பான எதார்த்தமான வெண்பாக்களை எழுதுவதில் வல்லவர் நண்பர். ‘நக்கல்’ அடிப்பதிலும் வல்லவர். அவருடைய வெண்பாக்கள் சில:


தந்த சுத்தி
செங்காமுட் டிக்கல்தான்; இல்லேன்னா முட்டசாம்பல்;
அங்கங்க ஆலம் விழுதில்ல? – எங்கும்
மெனக்கெட்டுப் பூப்பூக்கும் வேலமரக் குச்சி;
எனக்கெதுக்குப் பேஸ்ட்டு? ப்ரஷ்ஷு?

விவசாயம்
என்ன விவசாயம்! எழவு விவசாயம்!
பொன்னு வெளையற பூமியாம்ல! – இண்ணைக்கும்
போர்வையில் பாதியே சோமனாச்சி! அன்னாச்சி!
வேர்வையில பாதி மழை!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவரா? – அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சை எண்ணிப்பார்த் தா*தெரியும்
ட்ராக்டருக்கு வள்ளுவனாரே!
[பதிப்பு 1991 என்பதால் டிராக்டர் ரேட் வேறுபடும்]

வாய்ப்புக் கிடைக்கும்பொழுது இவர் வெண்பாக்கள் வேறு சிலவற்றையும் குறிப்பிடுவேன். மேலே, ‘தந்த சுத்தி’ என்ற கவிதையைச் சற்று ஆழமாக நோக்கினால் நாம் ‘எதை’ப் பல்விளக்கப் பயன்படுத்துகிறோம் என்பது ‘லகே ரஹோ முன்னாபாய்’[Lage Raho Munnabhai] பாணியில் விளங்கிக் கொள்வோம். பரவலாகப் பெருநகரங்களில் பயன்படுத்தப்படும் விளம்பரப் புகழ் பற்பசையில் மனித எலும்புகளின் தூள்[பஸ்பம்] இருப்பதாகப் பல் மருத்துவர் ஒருவர் சொன்னார். அந்தத் தூள் எங்கே கிடைக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே?

‘விவசாயம்’ என்ற கவிதை, இப்பொழுது கேள்விப்படும் குஜராத், ஆந்திரா விவசாயிகள் நிலையைவிடவும் சற்றுக் குறைந்த அழுத்தத்தில்தான் வெளிப்பட்டிருக்கிறது என்றாலும் அது இயற்றப்பட்ட காலம் பதினைந்து ஆண்டுகளுக்கும் முந்தியது என்பதை நினைவில் கொண்டால் மிக எதார்த்தம்தான்.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation