எண்ணச் சிதறல்கள் – நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்..

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

நேச குமார்


நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல், சாப்பாடும் கலாச்சாரமும், கால்கரி சிவாவின் அரேபிய அனுபவங்கள், பாட்டி சுட்ட பர்கர்

நளினி ஜமீலா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதத்தை எழுதிய பெண்மணி. அண்டை மாநிலமான கேரளத்தைச் சேர்ந்தவர். சென்ற வருட இறுதியில் வெளிவந்து நிறைய செய்தியை உண்டு செய்த பெயர். நண்பர் ஒருவருக்கு மலையாளிகளின் மீது நிறைய மரியாதை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு புத்தகம் இன்னும் பத்தாண்டுகளுக்கு வரும் என்று தோன்றவில்லை என்றார்.

தைரியமுள்ள பெண்மணி என்றவுடன் எனக்கு, சுரையாவாக மதம்மாறி பின்பு ஒரு இஸ்லாமியனின் காதல்வார்த்தைகளால் ஏமாறினேன் என்று இஸ்லாத்துக்கு எதிராக கருதக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு தாம் பழையபடி மாதவிக்குட்டியாகவே ஆகிவிட்டேன் என்று அறிவித்த கமலாதாஸ் நினைவுக்கு வந்தார்.அவர் தாம் மாதவிக்குட்டி என்பதை நிரூபிக்க நினைத்தாரோ என்னவோ, தஸ்லிமா நஸ்ரீனை தலையில் போட்டிருந்த வெள்ளை தலையங்கியுடன் தம்வீட்டில் வரவேற்றிருந்தார் – அதை பத்திரிகைகள் புகைப்படம் சொல்லும் செய்தியாக பிரசுரித்திருந்தன. மாதவி சுரையா என்று நான் மனதில் நினைத்துக் கொண்டேன். அல்லாஹ்வாக உருவெடுக்கும் கிருஷ்ணனின் குல்லாவுக்குள் மயிலிறகு இருக்கும் – அதுவே இந்திய மண்ணின் மகிமை.

“என்ன கேரள சாகித்ய அகாடமிக்காரர்கள் அவரது நிலதானத்தை ஏற்றனரா” என்று வினவினேன். ஆம், ஒருவழியாக அதை ஏற்று சர்ச்சைகளுக்கு முடிவு கட்டிவிட்டார்கள் என்றார் அவர். உண்மையா என்று தெரியவில்லை. அவர் திருச்சூரிலிருக்கும் தமது பூர்வீக நிலத்தை கேரள சாகித்ய அகாடமிக்கு தானமாக தரமுன்வந்தார். அந்த இடத்திலுள்ள(இருந்த..?) மாதுளை மரம் மிகவும் பிரபலம் – அவரது தாயார் பாலாமணி அம்மாவின் கவிதைகளிலும் இடம்பிடித்த அந்த மரம் – அனைத்து மலையாளிகள் மனதிலும் உறைவது. வழக்கம்போல சர்ச்சை அதில் கிளம்பியது. அதில் அரவக்காவு இருப்பதால் அதை கே.சா.அ எடுக்கக்கூடாது என்று இந்து அமைப்புகள் கோரின. சாகித்ய அகாடமியின் தலைவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலோ என்னவோ உடனடியாக இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று அறிவித்து அவர் அதை ஏற்க மறுத்தார். உடனடியாக இரு பிரிவுகள்(வழக்கம்போல) தோன்றின. ஒன்று அதை ஏற்றே தீரவேண்டும் என்றது, இன்னொன்று ஏற்காதே என்றது. ஒருவழியாக இப்போது பிரச்சினை தீர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

கேரளத்தில் மாதத்துக்கு எதாவது ஒரு சர்ச்சை இருக்க வேண்டும். இல்லையென்றால் காலை எழுந்தவுடன் சாயா குடித்துக்கொண்டே பேப்பர் படித்து வாதிடும் மலையாளிக்கு தாம் கேரளத்தில் இருக்கின்றோமா இல்லையா என்று சந்தேகம் வந்துவிடும். இல்லாததை ஊதிப்பெருக்கி விவாதிப்பதும், இருப்பதை விட்டுவிட்டு போவதும்(பூட்டப்பட்டிருக்கும் பெரும் அழகிய வீடுகள் அங்குதான் அதிகம் என்று நினைக்கின்றேன்) அவர்களுக்கு பொழுதுபோக்கு. ஆனாலும் இந்தப் பொழுதுபோக்கால்தானோ என்னவோ, அவர்களுடைய இலக்கிய ஆர்வம், எழுத்தார்வம் தமிழகத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போய்ப்பாருங்கள் பத்திரிகைத் துறையில் பாதிப்பேர் மலையாளிகளாகத்தான் இருப்பார்கள். இன்று கூட அருந்ததி ராய், சஷி தாரூர் போன்றவர்களது எழுத்துக்களெல்லாம் உலகெங்கும் போணியாகிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் தொழில்முறை எழுத்தாளர்களென்று இவர்களைப்போன்றவர்களைச் சொல்ல முடியாது. மலையாளிகளே தவிர கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் கிடையாது இவர்கள். இவர்கள் ரேஞ்சுக்கு தமிழர் ஒருவரை சொல்லுங்கள் பார்ப்போம்? டெக்னோகிரட்-கம்-எழுத்தாளர் என்று சுஜாதாவைச் சொல்லலாம், ஆனால் அவரைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே யாருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆனால், பொதுவான மலையாளத்தில் எழுதிய வைக்கம் முகமது பஷீரை தெரியாத இந்திய இலக்கியவான்களே இல்லை எனலாம். எப்படியோ, சராசரித் தமிழர்களுக்கு கோபிகா-பாவனா-மீரா ஜாஸ்மின் ஆகியோரே போதுமாக இருக்கின்றனர். இதைத் தவிர வேறென்ன கேரளத்தைப் பற்றித் தெரியும் என்றால், கொஞ்சம் விகாரமாக சிரிப்பார்கள். அத்துடன் பேச்சை நிறுத்திவிட்டு நகர்ந்துவிடுவது நமக்கு நல்லது. ஆனால், பொதுவான மலையாளிகளுக்கு நமக்கு கேரளத்தைத் தெரிந்ததைவிட அதிகமாகவே நம்மைப் பற்றித் தெரியும். இங்கு நமக்கு அவர்களைப்பற்றி இருக்கும் இளக்காரமான மனோபாவத்தைப் போலவே, அங்கும் அவர்களிடையே நம்மைப்பற்றிய ஒரு இளக்காரமான மனோபாவம் உண்டு. ஆனால், அதையும் தாண்டி நமது சமூகம் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் படிக்கிறார்கள், கேட்கிறார்கள், விவாதிக்கிறார்கள். இந்தியாவெங்கும் உள்ள பெண்களைப் போன்று, கேரளப் பெண்களிடையேயும் பிரபலமானவர் ஜெயலலிதா. அவரை ஒரு சாதனையாளராகவே பல பெண்கள் பார்க்கிறார்கள்.

***
பெஸண்ட் நகரில் ஒரு டாபாவுக்கு நண்பர்களுடன் சென்றோம். கீழே காரைக்குடி உணவகம், மேலே பஞ்சாபி டாபி என்று இரண்டு வகையும் எனக்குப் பிடித்தமானவையே. ஆனாலும் கடைசியாக எழுத்தாளர் மலர்மன்னனது வழிகாட்டலில் அங்கு சென்றிருந்ததால், டாபாவையே தேர்ந்தெடுத்தேன் நான். நண்பர்களது குடும்பத்தில் பிரச்சினை. வேறென்ன மாமியார் மருமகள் பிரச்சினைதான். மருமகள் நன்கு சம்பாதிப்பவர், உலகம் சுற்றும் சா·ப்ட்வேரினி. மாமியாரோ, வழக்கம்போல, வெள்ளிக்கிழமை வாசலில் கோலம்போட்டு, தீபமேற்றி மனாளனை வரவேற்கக் காத்திருக்கும் மருமகளை மனதில் இத்தனை வருடங்களாக உருவகித்திருந்தவர். பிறகு உரசல்களுக்கும் தீப்பந்தங்களுக்கும் பஞ்சமா என்ன?
நான் என்ன சொல்வது, அமைதியாயிருந்தேன். “இவருகிட்டப் போயி சொல்றீங்களே ” என்றார் என் இணை. நான் உணவகத்தின் விதானத்தைப் பார்த்தேன். அழகான லாந்தர் விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன.அவை அழகுக்காக மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள, பயன்படுத்த முடியாது என்பதை அறிந்து கொள்ள சிறுவர்களால் முடியாது. திருமண பந்தமும் அப்படித்தான். எதற்காக என்பதை எப்போது புரிந்து கொள்வோம் என்பதைப் புரிந்து கொள்ளாமலே இருக்கின்றேன். இப்படி நொந்து போகிற தருணங்களில் ஒன்று, மாமியார்-மருமகள் சண்டையில் நடுவில் அமர்ந்து வாய்மூடி கச்சேரியை அனுபவிப்பது. மத்தளமே கச்சேரியை அனுபவிப்பது இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானிருக்கும்.
துணையின் வருத்தம், கோபம், எரிச்சல் எல்லாம் புரிகிறது. ஆனாலும் அன்னையை விட முடியுமா? எனது பாட்டிக்கு சர்க்கரை நோய் இருந்தது. முதுகெல்லாம் புண் வந்து ஆறவில்லை. படுத்த படுக்கையாய்த்தான் பலவருடங்கள் இருந்தார். முகச்சுளிப்பில்லாமல் எனது தாயார் சேவை செய்தார். இத்தனைக்கும் ஏச்சுக்கள் வேறு இருக்கும் எனது பாட்டியிடமிருந்து. இப்போது எனது தாயார் அதே நிலையில். உடலெல்லாம் நல்ல வேளையாக நன்றாகத்தான் இருக்கிறது. ஏச்சுப் பேச்சும் எப்போதும் வராது அவரிடமிருந்து. ஆனால், எப்போதாவது வாய் தவறி எதாவது ஒரு ஒப்பீனியன், ஒப்பீடு, ஓசை வந்துவிடும் – அதுபோதாதா இந்தக்காலப் பெண்மணிகளுக்கு அடுத்த ஒரு வாரத்துக்கோ, ஒரு மாதத்துக்கோ, ஒரு வருடத்துக்கோ(சிலவற்றிற்கு கால எல்லை கிடையாது) அது என் தலையைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும். கழண்டு கொள்ளவும் முடியாது, ஓட்டவும் முடியாது, ஓடவும் முடியாது.
இமயமலையில் தவம் செய்யும் முனிவர்கள் இன்று யாரும் இருக்கிறார்களென்றால், அவர்களிடம் உறுதியாகச் சொல்வேன். அவர்களை விட நான் சிறந்த தவசீலனென்று. நான் மட்டுமல்ல கணவன்மார்கள் அனைவரும் இவ்விஷயத்தில் தவசீலர்கள்தாம். இந்த விஷயத்தில். நண்பர் திருகையை நினைவுகூர்ந்தார். திருகையை நீங்கள் பயன்படுத்தியிருக்கின்றீர்களா? இரண்டு வட்ட கற்கள். நடுவே அரிசியை கொட்டக் கொட்ட அது இரண்டு கற்களுக்குமிடையே மாட்டி பொடிந்து போய் மாவாக சுற்றிவரக் கொட்டும். இன்றைய சுமீத்,மகாராஜாக்கள் நொடியில் அதைச் செய்து முடித்துவிடுகிறார்கள். நாம் நிமிடத்தில் பொடிந்து போகிறோம், முன்பு போலவெல்லாம் அரையரையென்று அரைப்பது – அந்த கால அவகாசம் இப்போது கிடையாது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் வந்து பக்கத்துவீட்டுப் பெண்மணிகள் திருகையை இரவல் வாங்கிப் போய் மாவு அரைத்துவிட்டு திருப்பிக் கொடுப்பார்கள். இன்றெல்லாம் வீட்டுக்கு வீடு மிக்ஸி இருக்கிறது. அரைபடுதலும் சத்தமில்லாமல், கனகச்சிதமாக, அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்குத் தெரியாமல் நடைபெறுகிறது.

***
எங்கள் வீட்டில் ரொம்ப நாள் அம்மியில் தான் மிளகாய் அரைப்பார்கள் – அதுவும் குறிப்பாக மீன்குழம்புக்கு. மீன் குழம்பில் கவுச்சி வீச்சத்தை மாற்றுவதற்குத்தான் இப்படி அதீத மிளகாய் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து மலையாளிகளின் மோலி மட்டும்தான் மிளகாயும் அதிகமில்லாமல், வீச்சமும் இல்லாமல் இருக்கிறது. அது எப்படி என்று புரியவில்லை. உப்பும், கரித்தூளும் போட்டு செதில் நீக்கிய மீனை தேய் தேயென்று வீட்டில் தேய்ப்பார்கள் அந்தக் காலத்தில். இப்போது எங்கள் வீட்டில் மீனே சமைப்பதில்லை – இதற்கெல்லாம் பயந்துகொண்டு. இப்போது அனைவருக்கும் பிடித்தது சிக்கன்(சிக்கன் தான் ஈஸியாகக் கிடைக்கிறது. சமைப்பதும் ஈஸி – ஆகையினால் பிடித்துவிட்டது). இந்த அனைவருமில் நான் அடங்கியது வாழ்க்கையின் திருக்கோலம்.

வாழ்க்கைதான் எப்படி மாறிவிட்டது எனது ஒருவனின் வாழ்வுக்காலத்துக்குள். அப்போது சாப்பிட்ட மீன் குழம்பின் வாசம் இப்போதும் நெஞ்சில் நினைவுக்கு வந்து நாவில் நீரூறவைக்கிறாது. அது எப்படி மெஷின் அரைக்கும், அம்மியின் அரைபடுதலுக்கும் இந்த சுவை வித்தியாசம் ஏற்படுகிறது என்பது புரியவில்லை. உரம்போடாத நீரோடைகளில் வாழ்ந்த மீன்கள் ருசியுடனும் இருந்தன. கடல் மீன்களில் இப்போது கல்பாக்கக் கழிவு இருக்குமோ என்று அஞ்சி அஞ்சித்தான் சாப்பிட வேண்டியிருக்கின்றது. சாப்பாடும் அதைச் சுற்றிய கலாச்சாரமும் எந்த அளவுக்கு மாறிவிட்டது, உபகரணங்களால், வசதிகளால், ரசாயணங்களால், தொழில் நுட்பத்தால் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
எனக்குத் தெரிந்துதான் இட்லிமாவு அரவை மெஷின் வந்தது. எங்களது வீட்டிற்கு அருகாமையில் ஒரு கடை இருந்தது. அங்கே மூன்று மெஷின்கள் ஓடிக்கொண்டிருக்கும். போய் பாத்திரத்தை வைத்துவிட்டு வந்தோமானால், இரவு போய் மாவை அதே பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதில் மாவு விரைவாக புளித்துப் போகும் என்பதால் கூடுமானவரை வீட்டில் கொல்லையில்தான் குடக்கல் அரையல் நடக்கும். நான் பலதடவை சுற்றுவேன். இப்போது யார் வீட்டிலாவது குடக்கல் இருக்கிறதா என்பது தெரியவில்லை. என் காலத்திலேயே அரிசி குத்தும் அக்கா மகள்கள் காணாமல் போய்விட்டார்கள். வீட்டில் கொல்லையில் நெல்லைப்போட்டு குத்தும் கல் கேட்பாரின்றிக் கிடக்கும். அரவை இயந்திரம் வந்துவிட்டது. பத்தாயத்திலிருந்து விசும் நெல்லை மரக்காலில் பிடித்தளந்து, விறகடுப்பில் வேகவைத்து(அப்படி வேகவைத்த நெல்லை சூட்டோடு உரித்து சாப்பிடச் சுவையாக இருக்கும் – வீட்டாரின் திட்டுகளையும் மீறி) முத்தத்தில் கொட்டி வெயிலில் காயவைத்து மெஷினுக்கு எடுத்துச் செல்வோம் – சாணி மெழுகிய கூடைகளில். இப்போது சாணி மெழுகிய கூடைகளும் காணாமல் போய்விட்டன, எங்கள் வீடுகளில்.
உணவு என்பது பலகதைகளைச் சொல்வது. உணவு தயார் செய்யும் விதம், பயன்படுத்தப்படும் விஷயங்கள், அவற்றை உண்ணும் முறை என்று ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு நீண்ட கலாச்சாரப்பிண்ணனி, நம்பிக்கைகள், வரலாறு இருக்கின்றது. தமிழ்நாட்டில் ஜாதிக்கு ஜாதி சமையல் மாறுபடுவதற்கு இதுதான் காரணம். ஒரே ஜாதியில் கூட இடத்துக்கு தகுந்தபடி சமையல் மாறுபடும். அய்யங்கார் வீட்டு புளியோதரை எதனால் பிரபலம் என்று எனக்குப் புரியவில்லை, ஆனால் சவுராஷ்டிராக்காரர்களின் வீட்டுப் புளியோதரைக்குப் பின்னே புலம்பெயர்ந்து வந்த அவர்களது வரலாற்றுப் பிண்ணனி இருக்கிறது. ஆனால் காலம் மாறும் சூழலில் சாப்பாடும் மாறுகிறது. எனக்குத் தெரிந்த வலைப்பதிவு நண்பர் ஒருவர், கனடாவில் கால்கரி என்றவூரில் வசிக்கிறார். அவரது ” என் அரேபிய அனுபவங்கள் ” வலைப்பதிவு மிகவும் சுவாரசியமானது. மாட்டுக்கறிதான் அவருக்கு மிகவும் பிடித்த உணவுவகை என்கிறார், இன்றைய சூழலில் புளியோதரையின் அவசியம் இல்லை அல்லவா.
இப்படி எத்தனை விஷயங்கள், நவீன இயந்திரங்களால் – மாறிய வாழ்வு முறைகளால், மாறி அல்லது காணாமல் போய்விட்டன என்று பொறுமையாக கணக்கெடுக்க வேண்டும் ஒரு நாள் என்று நினைத்துக் கொண்டுள்ளேன். காணாமல் போனது அம்மி, குடக்கல், உரல் மட்டுமல்ல, அவற்றோடு இணைந்த வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள், வழக்குகளும்தான். உதாரணமாக, அப்போதெல்லாம் எங்கள் வீட்டுப் பெண்கள் ஒரு மலையாள மந்திரவாதிக் கதையைப் பற்றி தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்கள். சாயந்திர நேரமாக ஒரு பெண் தலைக்கு எண்ணை தடவி சீவிக்கொண்டிருந்தாளாம். அங்கே பக்கமாக ஒரு மலையாள மந்திரவாதி(அவன் மந்திரவாதி என்பது அந்தப் பெண்ணுக்கு தெரியாதாம்) வந்து இந்த எண்ணையை தடவினால் கூந்தல் நன்றாக வளரும் என்று ஒரு குமிழியைக் கொடுத்தானாம்…..
நிற்க.கூந்தல் நன்றாக வளரும் என்றவுடன் இங்கே இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. இந்தக் கூந்தல் மோகம் என்று நமது பெண்களுக்கு போகுமோ தெரியவில்லை. இன்று பலவித ‘ஆயில்கள்’ என்றால், அன்று வீட்டின் கொல்லைப்புறம் எதேதோ வேர்கள்(குறிப்பாக ஆலவேர்) போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள் பெண்கள். என் பாட்டியின் காலத்தில் அவரது சகோதரர் வேட்டைக்குப் போய் முயலைக் கொன்று வருவாராம். முயல்ரத்தத்தைத் தடவி சீவினால் முடிவளருமாம் (வாடை எப்படி வீசுமென்று போய்ச்சேர்ந்த பாட்டனாரைத் தான் கேட்க வேண்டும்).
அது போகட்டும், கதைக்கு மீண்டு வருவோம். இப்படியாக மந்திரவாதி கொடுத்த எண்ணையை தடவப்போன பெண்ணை தடுத்தாளாம் ஒரு கிழவி .’வெளக்கு வச்ச நேரத்துல எண்ணையத் தலையில தடவக்கூடாதுன்னு சொல்லி”. ‘அந்தப்பெண்ணும் சரின்னுட்டு என்னையைத் தூக்கி பக்கத்துல இருந்த உரலுல வீசிட்டு போக, ராத்திரியானா உரலு உருள ஆரம்பிச்சுச்சாம்’. ‘உரலு உருளுறதப்பாத்துட்டு பின்னாடிப் போன ஊருக்காரனுங்க, மந்திரவாதியப்புடிச்சு அடிச்சுத் துரத்தினாங்களாம்’ என்கிறபடி உரலை மையமாக வைத்த கதையன்று கேட்கும் பெண்களின் விரிந்த விழிகள் மூலம் விரிந்து மாலைவேலையில் செவ்வானத்தில் பரவும் இருளைப் போன்று பரவத்துவங்கும்.
இந்தக் கதை சொல்வதே நின்று போய்விட்டது இன்று. “காக்கா பர்கரைத் தூக்கிச் சென்ற கதையை” நானும் எனது பிள்ளைகளுக்கு சொல்ல முயன்றுகொண்டிருக்கிறேன் இப்போது!
***
இஸ்லாம் பற்றி எழுதாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இன்னமும் நான் பெறவில்லை என்பதால், எண்ணங்களைக் கட்டுப்படுத்தி கடவுளை அடையும் விஷயத்தில் நம்பிக்கையில்லாதவன் என்பதால், எழுகிற இஸ்லாம் பற்றிய எனது எண்ணச் சிதறல்களில் சிலதை இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
நான் மீண்டும் மீண்டும் இஸ்லாம் பற்றிய விவாதங்களின்போது குறிப்பிடுவது, இஸ்லாமியத் தீவிரவாதத்தின் ஆணிவேரை உற்று நோக்கவேண்டும், அது குறித்து பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என்பது. அதை பல்லாயிரக்கணக்கான மைல்கள் தள்ளியிருக்கும் டெஹல்காவும் காலச்சுவடும் பிரதிபலித்துள்ளன.
காலச்சுவட்டின் தலையங்கம் இப்படிப் பேசுகிறது:
“சில தமிழக முற்போக்குவாதிகள் இந்துத்துவத்திற்கு எதிராகச் சிறுபான்மை அடிப்படைவாதத்தை ஆதரித்ததும் கோவை குண்டு வெடிப்பை நியாயப்படுத்திப் பேசி வந்ததும் இன்று மீள் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதச் செயல்களின் வேர்கள், அவற்றின் வெளிப்பாடுகள் ஆகியவை குறித்த வெளிப்படையான, விரிவான விவாதங்கள் இக்கட்டத்தில் இன்றியமையாதவை.” ( காலச்சுவடு )
டெஹல்காவின் பத்திரிகையில் ·பரூக் டொண்டி இப்படி எழுதுகிறார்:
“Their stance is fundamentally ideological, and being the ideology of religion, with 72 virgins on offer in paradise, it is fundamentally illogical. They dare not articulate these fantasies of faith. Their basic Western education makes them aware of becoming the butt of ridicule. They may even be challenged in these fantasies by more enlightened arguments of other Islamic persuasions. Instead, their spokesmen and suicide notes refer to Iraq and British foreign policy and lend a veneer of logic, of cause and effect, to murder.
The ideology of mass murder is by definition a guerrilla ideology and no spending plans in poor areas, multicultural reform or anti-terrorist detention laws, or for that matter withdrawal of Britain’s armies from Iraq, will deal firmly and finally with it.”
(டெஹல்கா )

நாகர்கோவிலுக்கும் பிரிட்டனுக்கும் என்னவொரு ஒற்றுமை பார்த்தீர்களா? – மேலே குறிப்பிட்டுள்ள இரு எழுத்துக்களும் இந்துத்துவ எழுத்துக்கள் கிடையாது. ·பரூக் டொண்டி ஒரு பார்ஸி, சூ·பிஸத்தின் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர்(அவரது இந்த ஆழமான கட்டுரையில் அவரது கருத்துக்களை விரிவாகக் காணலாம் : திரு. டொண்டி அவர்களின் கட்டுரை– பிரித்தானிய பெருந்தன்மை கிஞ்சித்தும் இஸ்லாமிஸ்டுகளிடம் செல்லுபடியாகாத கதையைச் சொல்லுகிறது திரு. டொண்டி அவர்களின் கட்டுரை). காலச்சுவடோ தொடந்து இஸ்லாமிஸ்டுகளை ஆதரித்து, சில வேளைகளில் அரசியல்வாதிகளையும் விஞ்சும் அளவிற்கு அவர்களுக்கு தாளம்போட்டு வந்த பத்திரிகை.
மாறிவரும் சூழலை இந்த எழுத்துக்கள் காட்டுகின்றன. இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய உண்மைகளைப் பேசுபவர்களையெல்லாம் மேலை நாடுகளில் ரேஸிஸ்ட் என்ற அடைப்புக்குறிக்குள் போட்டு வாயடக்கி வந்தது ஒருகாலம். இன்றோ, அந்த முதல் கட்டத்தைத் தாண்டி, மேலை நாடுகளில் எல்லாம் தினம் தினம் சுவனத்தின் கன்னிப்பெண்கள் பற்றியும், எது இந்த இஸ்லாமிய இளைஞர்களை இந்த அளவுக்கு தூண்டுகிறது என்பது பற்றியும் நுணுக்கமாக விவாதிக்கின்றார்கள். தமிழகம் இப்போதுதான் முதல் கட்டத்தை தாண்டியுள்ளது என்று நினைக்கிறேன். காலச்சுவடு பத்திரிகையின் தலையங்கம் அந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல். தமிழ் இணையம் இரண்டாவது கட்டத்தை எட்டிவிட்டது. நல்ல உதாரணம், வெங்கட் சாமிநாதன் அட்லாண்டிக்குக்கு அப்பால் நூல் விமர்சனத்தில் இப்படி எழுதுவது:
“நேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளைச் சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. “உண்மை 7ஆம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல், மொராக்கோவின்ருந்து ·பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது? இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் கா·பிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜிகாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த கா·பிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? ஸல்ன்னிகளுக்கு ஷியாக்களும் கா·பிர், அகமதியாக்களும் கா·பிர், முஜாஹித்துகளும் கா·பிர், என்றால் என்ன செய்வது? இவர்கள் எல்லோருக்கும் ஸல்·பிகள் கா·பிர் என்றால் என்ன செய்வது? அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு இந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸாகேப்’, ‘”ஜனாபேவான், ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார்தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸல்·பி பாட்டுகள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக் கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்லல்லாஹ், முகம்மது ரஸீல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது? பாரதி “அல்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தே மாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத் தலைவரை, அரசியல் தலைவரை என்னென்பது? செக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே”( வெங்கட் சாமிநாதன் ).

இப்படி எதிர் கேள்வி கேட்பதே அவதூறு, பெருந்தன்மையல்ல என்றால் – நாம் நமது கலாச்சாரத்தை, மரபுகளை, கேள்வி கேட்கும், விமர்சிக்கும் நீண்ட நெடிய பாரம்பர்யத்தை மறுத்து உலகை வெறும் கறுப்பு வெள்ளை என இரண்டு அடைப்புக்குறிகளுக்குள் வைத்துப் பார்க்கும் அரபிக்கலாச்சாரத்திற்கு அடிபணிந்துவிட்டோம் என்றே அர்த்தம். ·பரூக் டொண்டிக்கு பிரித்தனின் கலாச்சாரமும், போராடிப் பெற்ற கேள்விகேட்கும் சுதந்திரத்தின் மகத்துவமும் புரிந்த அளவுக்கு நம்மூர் சிந்தனையாளர்களுக்கு உண்மையை உரத்துப் பேசவேண்டியதன் அவசியம் புரியவில்லை, கருத்துச் சுதந்திரத்தின் அவசியம் பற்றிய பாரம்பர்யக் கதைகள், கருத்துக்கள், தத்துவங்கள் அவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட சம்பவங்கள் புரியவில்லை – நக்கீரனெல்லாம் இன்றிருந்திருந்தால், மதநல்லிணக்கத்தைக் குலைக்க முற்படுகிறார் என்று குற்றம் சாட்டும் நமது சிந்தனையாளர் வர்க்கம். ஒருவேளை அவர் சிவனிடம் முரண்பட்டால்கூட முற்போக்குவாதியென்ற பட்டம் கிடைக்கலாம். ஆனால், அல்லாஹ்விடம் கேள்வி கேட்டால் அவர் கதி அதோ கதிதான். நல்ல வேலை , அவரின்றில்லை.
இந்த இறக்கம் நமக்கு படிப்படியாக ஏற்பட்டது. அச்சத்தின், தீவிரவாதத்தின் காரணமாக நாமே நமது சிந்தனைகளை குறுக்கிக் கொள்ளத் தீர்மானித்துவிட்டோம். இந்தியாவின் வலிமைக்கு குந்தகம் ஏற்படும் என்கிற பயத்தில் நாம் நம்மை இரண்டாம் தரக்குடிகளாக இறக்கிக் கொண்டு முதலிடத்தை வன்முறைக்கும், வன்முறையை அடிப்படையாகக்கொண்ட கோட்பாடுகளுக்கும் சகலமரியாதையுடன் தந்துவிட்டோம்.

இது சொல்லும் செய்தி என்னவென்றால், அவதாரங்கள் தத்தமது கடவுள் தன்மையிலிருந்து கீழிறங்கி நபியாவது போல, அந்த அவதாரங்கள் நிலைக்கு உயரவேண்டிய கடவுள் தன்மையை தமது இயல்பான இருப்பாகக் கொண்ட மனிதன், ஜன்னத்-க்கு ஆசைப்பட்டு ஏக இறைவனின் நித்திய அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்படுவது போல, நமது கலாச்சாரமும் தொன்மையும் உயர் சிந்தனைகளும் பாரம்பர்யமும் அரபியாதிக்கத்துக்கு கட்டுப்பட்டு இரண்டாம் ஸ்தானத்தை ஏற்கின்றன. இந்த வித்தியாசம் பாமர மக்களுக்குப் புரிகிறது. அதனாலேயே ஆயிரமாண்டுகளாக கஷ்டப்பட்டும் இந்திய ஞானப் பாரம்பர்யத்தை நிராகரிக்கவில்லை பாமரர்கள். ஆனால், அறிவுஜீவி வர்க்கமோ இந்த நெடிய பாரம்பர்யத்தின் ஓட்டைகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை வைத்து தமது அறிவுக்குறைபாட்டை மறைக்க முயல்வதுதான் வருத்தமானது. இந்த யுக்தி காலத்தின் முன் நிற்கவும் நிற்காது – காலச்சுவடு தலையங்கம் அதைத்தான் காட்டுகிறது.

நான் சாரு நிவேதிதாவின் விசிறியாகிவிட்டேன் என்று சில நண்பர்கள் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாருவின் விசிறியாக நான் ஆகவில்லை. பொதுவான ஜனரசனையின் பின்னாலும் ஒரு தாத்பர்யம் இருக்கிறது என்பதை இப்போது மெதுவாக உணர ஆரம்பித்துள்ளேன். அதன் விளைவே இந்த மாற்றம். ரஜினிகாந்தைப் பார்த்து ‘தலீவா’ என்று ஒரு சாதாரண ரசிகன் புல்லரிக்கிறான் என்றால், அதில் எனக்கு என்ன பிரச்சினை – அந்த நம்பிக்கையினால் எனக்கு பாதகம் ஏற்படும் என்றால் மட்டுமே நான் அதைக்குறித்து விமர்சிக்க வேண்டும். அதில்லாமல், நாளெல்லாம் பாடுபடும் ஒரு உழைப்பாளி ‘தலைவரின்’ கூலிங்கிளாஸ் சுழற்றலில் தன்னை நிறுத்திப் பார்த்து பரவசமடைந்து தனது கவலைகளை மறக்கிறான் என்றால், அதைக் குறை சொல்வதுதான் அறிவுஜீவித்தனமான வக்கிரம் என்று கருதுகிறேன். கமல்ஹாசனின் நடிப்பை விவாதிக்கலாம், உலகத்தரத்துக்கு இருக்கிறது என்று பத்தி பத்தியாய் எழுதலாம் – ஆனால், ஒரு சாமான்யனுக்கு உற்சாகத்தை, கிறக்கத்தை ஏற்படுத்துகிற ரஜினி வழிபாட்டை நான் விமர்சித்தால், நான் எங்கோ தவறு செய்கிறேன் என்று பொருள். இந்த சிந்தனை எனது ஆதிக்க மனோபாவத்தைக் காட்டுகிறது என்று பொருள்.
இந்த மாற்றத்தை என்னில் கொண்டுவந்தது இஸ்லாம் பற்றிய ஆழ்ந்த புரிதலே. மக்கத்து பாகன்மார்கள் கல்லில் கடவுளைக் கண்டது எவ்வகையில் இன்று மக்காவில் கடவுளைக்காணும் இஸ்லாமியர்களிடமிருந்து தாழ்வானது? கடவுளுக்கு கேட்கும் சக்தியிருந்தால் – காபா என்னும் சதுர அறையை நோக்கி வழிபட்டால் எப்படி கடவுளுக்கு கேட்கிறதோ அதே போன்றுதான் அங்கே ஒரு சிலையையை வைத்து வழிபட்டாலும் கடவுளுக்கு கேட்கும். நாகூராண்டவரின் சமாதியை நோக்கி கதறினாலும் கடவுளுக்குக் கேட்கும், நங்கநல்லூர் ஆஞ்சநேயரை நோக்கி கதறினாலும் கடவுளுக்கு கேட்கும்.
ஆனால், பிந்தயது பகுத்தறிவானதாகக் கருதப்படுகிறது. முந்தயது மூடர்களின் வழக்கமாக கருதப்படுகிறது. இதேபோன்றதொரு ஆதிக்க சிந்தனையைத்தான் நான் இன்று வெகுஜன ரசனையை பழிக்கும் மனிதர்களிடத்தும் காண்கிறேன்.
– நேச குமார் –
nesakumar@gmail.com

Series Navigation