எண்ணச் சிதறல்கள் – குமுதத்தில் சாரு நிவேதிதா, கலகம், கள்வனின் காதலி, டாக்ஸி நெ.9211, கோபம் கொள்ளும் ஐயப்பன்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

நேச குமார்


சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் குமுதத்தில் வெளிவரத்துவங்கியுள்ளன. கடந்த சில இதழ்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு நட்சத்திர ஓட்டலில் உயர்வகை மதுவை வெளியில் விற்பதைவிட ஐந்து ரூபாய் குறைத்து விற்கிறார்கள் – சிம்ரனும் அந்த ஹோட்டலுக்கு(அல்லது அங்கிருக்கும் பாரை குறிப்பிட்டுள்ளாரா என்று தெரியவில்லை. பின்னதாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்) வருவது போன்றவற்றைப் பற்றி எழுதியிருந்தார். குமுதத்திலும் சிம்ரனின் படமொன்றையும் பத்திரிகைக்காரர்கள் வெளியிட்டிருந்தனர்(பழைய படம் – தற்போதைய படத்தைப் போட்டால் பலரது கனவுகள் சிதைந்துவிடும்). மற்ற சில கட்டுரைகளில் ரஜினிகாந்த் அருந்தும் மதுவகை, அவர் சென்ற மதுக்கடைக்கு தாமும் சென்றது, செக்ஸ் ஜோக்(அல்லது புதிர் – எனக்கு ஒன்றும் புரியவில்லை), காமத்திற்கும் கடவுளுக்கும் இந்திய ஆன்மீக மரபுகளில் இடம் தந்திருப்பது, தாம் பிரபலமாவதை விரும்பாதது, சில்க் ஸ்மிதாவுக்கு ஏன் ஒரு புத்தகத்தை அர்ப்பணித்தேன் என்ற விளக்கம் என்று வார்த்தைகளின், எண்ணங்களின் நாட்டியத்தை நடத்தியிருந்தார்.

***
இன்றைய தமிழிலக்கியச் சூழலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள் இரண்டுபேர் என்பது எனது கருத்து. ஒன்று, சந்தேகமே இல்லாமல் ஜெயமோகன். இரண்டாவது, நமது சாருநிவேதிதா. இங்கே ‘நமது’ என்று நான் குறிப்பிட்டுள்ளதற்குக் காரணம் உள்ளது. முந்தயது பண்டிதத்தனம் மிகுந்த,நுணுக்கமான, சாமர்த்தியமான, உரைத்து உரைத்து உருவேற்றிய எழுத்து. பின்னது குதூகலமும், நகைச்சுவையும், கலகத்தனமும் கலந்த, நாமனைவரும் எதோ ஒருவகையில் எழுத்தைவிட எழுத்தாளருடன் ஒன்றிப்போகவைக்கும் எழுத்து. ஜெயமோகனின் எழுத்துடன் கூட நம்மால் ஒன்றமுடியும், அவருடன் ஒன்றமுடியாது – நமது மனதின் உயர் படிமங்களுக்கு அவரது எழுத்தின் உள்ளர்த்தங்கள் மெதுவாகவாவது உரைத்து, என்றோ ஒரு நாள் எதோ ஒரு அனுபவம் அவரது எதோ ஒரு எழுத்தை நினைவுறுத்தும். ஆனால், சாரு நிவேதிதாவின் எழுத்து அப்படியல்ல. எழுத்து ஒன்றரைநிமிடம்தான் நினைவில் நிற்கும். ஆனால், சாருநிவேதிதா நம்முள்ளே தங்கிவிடுவார். இந்த இருவரும் தான் இன்றைய தமிழிலக்கியத் தேரை இழுத்துச் செல்லும் பெரும் சக்கரங்கள், ஒப்புக்குப் பல சக்கரங்களும் உள்ளன – அவை நாளடைவில் நம் மனதிலிருந்து விடைபெற்றுவிடும் என்றே தோன்றுகிறது எனக்கு.

***
எனது நண்பர்களிலும் இரு குழுக்கள் இருக்கின்றன. ஒன்று ஜெமோவை தூக்கிவைத்துக் கொண்டாடும். நண்பர் திருநா ஜெமோவைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார் – இப்படியரு ஜித்தன் தமிழிலக்கிய உலகில் இதுவரை இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை என்று. இன்னொரு நண்பரோ, சாருவின் அதீத விசிறி, “·பாரின் சரக்கு அடிக்கிறான் தமிழ் எழுத்தாளன் என்பது நமக்கெல்லாம் பெருமைதான்” என்பார் அவர். சாரு பற்றி குற்றச்சாட்டுகள் நிறைய உண்டு. தம்மூர் முஸ்லிம் அன்பர் ஒருவர் தமது சமுதாயத்தை மையமாக வைத்து எழுதியிருந்த கதையை தம் பெயரில் அனுப்பிவிட்டார் என்று ஒரு பெரும் படையே பிளாக்கியரிசம், அப்பட்ட காப்பி, நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் என்றெல்லாம் நெடுநாளாக அவருக்கு எதிராக ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து செய்து வருகிறது. நான் ஒருமுறை சந்திக்க நேர்ந்த இன்னொருவரோ, சாருவின் பிரபலமான ஒரு புத்தகமே வெளிநாட்டு புத்தகம் ஒன்றைத் தழுவி எழுதியது என்று (“ரெண்டு பேரும்தான் அமெரிக்கன் லைப்ரரில எடுத்துப் படிச்சோம். அவன் புக்காப் போட்டு பெரிய ஆளாயிட்டான்”) புலம்பினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் உண்மையாயிருந்தாலும் சாருவின் முக்கியத்துவம் குறையப்போவதில்லை. இலக்கிய உலகின் சுழற்சியில், வளர்ச்சியில் – இதுவும் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வென்றே நினைக்கின்றேன். இந்த சர்ச்சைகளும் தமிழிலக்கிய வளர்ச்சியின் சரித்திரம் எதிர்காலத்தில் எழுதப் படும்போது முக்கிய இடம்பிடிக்கும். “ஆமாய்யா, பணத்தேவை இருந்தது, சும்மா கிடந்ததை என் பேரைப்போட்டு அனுப்பினேன், என்ன இப்ப” என்று கேட்கும் கலகத்தன்மை வளர்ச்சியின் ஒரு அங்கமே, முக்கிய மைல்கல்லே என்பது எனது எண்ணம்.

***
கலகம் என்றவுடன் இயக்குனர் சூர்யா நினைவுக்கு வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கள்வனின் காதலியை இரண்டாம் முறை பார்த்தேன். தமிழ் சினிமாவில் இந்தக் கலகம் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பொது மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. மென்மையாக விரசம்(ஸா·ப்ட் போர்ன்) எப்போதுமே பெண்களின் ஆதரவைப் பெறும். அடக்கி வைக்கப்பட்டுள்ள எந்தக்குழுவிடமும் இந்த ரசிப்புத் தன்மையை, பங்கேற்றலைப் பார்க்க முடியும். சமீபத்தில் வெளியான சல்மாவின் இரண்டாம் சாமங்களின் கதையைப் படித்தபோது அதுதான் எனக்குத் தோன்றியது. ஒரு காலத்தில் எனது நண்பர் இஸ்லாமியத் திருமணங்களைப் பார்த்துவிட்டு அங்கு அப்பெண்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்டு அதிர்ந்து என்னிடம் சொல்லியபோது நான் இதையே சொல்லியிருக்கின்றேன். இன்று சல்மாவின் புத்தகம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது, அந்தச் சமூகத்தில் உள்ள ஆண்கள் இதெல்லாம் எங்க சமூகத்தில் இல்லவே இல்லை என்று சாதிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் நிதர்சனம் இதுதான். இந்த காமம் தூவப்பட்ட சமையல், அடக்கிவைக்கப்பட்டு புழுங்கிய நெஞ்சங்களின் எரிச்சல் நெருப்பில் சமைக்கப்பட்டவை.

இந்நிலையில் சூர்யாவை விமர்சிக்கும் நமது சமூகத்தின் ‘ஒழுக்கக் காவலர்கள்’ மனச்ச்¢தைவின் வெளிப்பாடு என்றெல்லாம் வசைபாடுவதைக் கேட்கும் போது அவர்களை நினைத்து பரிதாபமே ஏற்படுகின்றது. பெண்ணாயிருந்தால் வேசிப்பட்டம், ஆணாக இருந்தால் அலைபவன் அல்லது மறை கழண்டவன் என்கிற முத்திரைகள் இவர்களை நிதர்சனத்தை மறுக்க உதவி செய்கின்றவன். இப்படியான முத்திரகளால் நிதர்சனத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை பாருங்கள். கண்ணகியை ஆதர்சனமாக தூக்கிப் பிடிக்கும் தமிழ் பாசிஸத்தைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும் ஒரு முறை. இப்போதைக்கு சூர்யாவின் “நடிப்புத் தெரியும் நடிப்பு” எனக்குப் பிடித்திருந்தது என்பதை மட்டும் இங்கு பதிவு செய்துவிட்டு நகர்கிறேன்.

***

சமீபத்தில் பார்த்த இன்னொரு படம் டாக்ஸி நெ.9211. மிலன் லுத்ரியா இயக்கியுள்ள படம். ஒரே நாள்தான் கதை. டாக்ஸியில் போகும் பணக்கார இளைஞன்(ஜெய் மித்தலாக நடிக்கும் ஜான் ஆபிரகாம் – பிபாஷா புகழ் என்றால் அனைவருக்கும் இவரை உடனடியாக அடையாளம் தெரியும்), ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையென்றால் சொத்து முழுவதும் போய்விடும். அவரால் ஆக்ஸிடெண்ட் ஆகி, டாக்ஸி போய், போலீசில் மாட்டி, மனைவியிடம் இதுநாள்வரை சொல்லிவந்த பொய் கலைந்துபோய் டாக்ஸி டிரைவராக தாம் இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் உண்மையுடன் சேர்ந்து தாமும் உடைந்து போகும் நானா படேகர் இருவருக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சினை என மிகவும் வித்தியாசமான கருவில், விறுவிறுப்பாகவும் சுவையாகவும் எடுக்கப் பட்ட படம் இது. நானா படேகரே படம் முழுக்கவும் வியாபித்துள்ளார் – என்ன நடிப்பய்யா இது என்று வியந்துபோனேன்(சமீரா ரெட்டியும் இப்படியே வியந்திருக்கிறார்) – தமிழில் நானா படேகர் போன்று ஒருவரைக் கூட என்னால் யோசிக்க முடியவில்லை. எப்படி இப்படி இயல்பாக நடிக்க முடிகிறது இவரால் என்று வியந்து போனேன் படம் பார்த்தபோது.
மும்பையின் கீழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியும், வெறுப்பும், பிரச்சினைகளும், எதிர்த்துப் போரிடும் குணமும், குமிழ்த்தெழும் கோபமும் பொங்கிப் பிரவாகமெடுத்திருக்கின்றன நானா படேகராக. இரு தலைமுறைகளை , இரு வர்க்கங்களை அப்படத்தில் காணமுடிகின்றது. வாழ்க்கையை மிகவும் கேஸ¤வலாக எதிர்கொள்ளும் ஜான் ஆபிரகாம், அவரது காதலியாக சமீரா ரெட்டி ஊறுகாயாக வந்து போயிருக்கிறார்(தமிழ் நடிகைகள் இவரிடம் டான்ஸ் கற்றுக் கொள்ளலாம் – குறைந்த மூவ்மெண்டுகளில் நிறைந்த நாட்டியத்தை பழகுவது எப்படி என்று). ஆனால், சோனாலி குல்கர்னி அப்பவித்தனமும், கோபமும், அறியாமையும், தெளிவும் ஒருங்கே கொண்ட சாதாரண குடும்பத்தலைவியாக வந்து கலக்கியிருக்கிறார்(மார்கழிப்பூவே, மார்கழிப்பூவே உன்மடி மீது ஓரிடம் வேண்டும்.. இனிமையான அந்த பாட்டு நினைவில் இருக்கிறதா – அவரே தான்). கடைசி ஒரு காட்சியில் மட்டும் பிரியங்கா சோப்ரா வந்து போகிறார் – அவருக்கும் சமீராவை ஒதுக்கிய ஜான் ஆபிரகாமுக்கும் பார்த்தவுடன் காதல்(!) ஏற்படுவதை நகைச்சுவையாக காட்டியுள்ளார் இயக்குனர். நிறைவான படம்.

***
சீரியஸான டாபிக்குக்கு வருவோம், ஐயப்பன் ஜெயமாலா தொட்டதால் கோபம் கொண்டாரா. பாலியல் தொழிலாளியுடன் இருந்தார் என்று இப்போது மாட்டியுள்ளாரே அர்ச்சகர் இதைக் கண்டு அய்யப்பன் கோபம் கொள்ளவில்லையா என்று வலைப்பதிவுகளில் மாறி மாறி விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கோபப்படும் சாமி, அல்லாஹ், ஜெஹோவா போன்றவை பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதவேண்டும். அப்படிக் கோபம் கொள்ளும் சாமிகள் எப்படி விபச்சாரம், தமது பெயரால் நிகழ்த்தப்படும் புனிதப்போர்கள், பாலியல் கொடுமைகள் போன்றவற்றை சகித்துக் கொண்டு ஏழு உலகங்களுக்கு மேல் உப்பரிகைகளில் உல்லாசமாய் அமர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் தனியே எழுதவேண்டும்.
ஆனால், இப்பிரச்சினை வந்தது நல்லதுதான் என்பதை மட்டும் இங்கே சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். ஆகமத்தில் பிராம்மணர்தான் பூசை செய்யவேண்டும் என்றிருக்கிறது என்று குறிப்பிடும் சடங்காளர்கள், அந்த ‘பிராம்மணர்கள்’ யார் – பிறப்பா, குணமா எது வர்ணத்தை முடிவு செய்கிறது என்பது போன்ற கேள்விகள் குறித்து இந்து மதத்தின், இந்திய மரபுகளின் சான்றோர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் என்ன சொல்லியுள்ளனர் என்றெல்லாம் பார்க்க விரும்புவதில்லை. அதே போன்றே, பெண்கள் கருவறைக்குள் சென்றால் தீட்டு என்கிற மாயையும் உடைபடும் நாள் அதிக தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. அந்நியப் படையெடுப்பகளில் அதிகம் பாதிக்கப்படாத இடங்களில் எல்லாம் பெண்களின் நிலையும் ஆன்மீகப் படிகளும் உயர்ந்தே இருந்திருக்கின்றன இந்தியாவில். கேரளத்தில் தொன்று தொட்டு பெண் பூசாரிகள் இருந்து வந்திருக்கின்றனர். நமது தமிழகத்தில் கூட அவ்வையார் கலாச்சாரத்துக்கு, அவ்வை என்ற பெண்குலத்தின் ஆன்மீகச் சான்றோருக்கு சமூக அங்கீகாரம் இருந்து வந்திருக்கின்ற நிலையில், இவற்றை மீட்டெடுப்பது – எப்படி ஒரு ஜாதி ஆதிக்கத்திலிருந்து கோவில்களை மீட்டெடுப்பது அவசியமோ அதே போன்று, முக்கியமானவொன்றாகக் கருதுகிறேன்.
இது குறித்து என்னிடம் பேசும்போது நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நிறையக் கோபப்பட்டார். இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைக்க முற்படும் விதேசி மதங்களின் சதி , இதுவும் ஒரு பாசிஸம், ஏன் அய்யப்பன் இருக்கும் அதே கேரளத்திலேயே அம்மா என்றழைக்கப்படும் அமிர்தானந்தமயி அவர்களின் கோவில்கள் – பெண்கள் பூஜை செய்யும் கோவில்கள் – அமிர்தானந்தமயி அவர்களால் பிரதிர்ஷ்டை செய்யப்பட்ட கோவில்கள் இல்லையா, ஆற்றங்கால்
பகவதி அம்மனுக்கோ செண்பகராமன்புதூர் அவ்வையாரம்மனுக்கோ ஆண்கள் பொங்கல் போட முடியுமா? அல்லது மண்டைகாட்டுக்கு ஆண்கள் இருமுடி எடுக்க முடியுமா – அவர்களில் பெண் இமாம்கள் இருக்கிறார்களா, பெண் போப் இருக்கிறார்களா என்று கோபப்பட்டார். சரிதான் என்றேன். எம்.என்.நம்பியாரும் குமுதத்தில் இது மற்ற மதத்தவர்களின் சதியாக இருக்கலாம் என்று அபிப்ராயம் தெரிவித்துள்ளார். இதில் எனது தனிப்பட்ட அபிப்ராயம் என்னவென்றால், இவை உண்மையோ பொய்யோ, இச்சர்ச்சைகளைப் பயன்படுத்தி நமது மத வழக்குகளை, புரையோடிப்போன சீர்கேடுகளை நாம் ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்பதே அது. அதனாலேயே, நாத்தீக வாதியாக தம்மை காட்டிக் கொள்ளும் கருணாநிதி அவர்களின் “அனைவரும் ஆகலாம் அர்ச்சகர்” திட்டத்தை வரவேற்கிறேன். யார் எந்த உள்நோக்கத்துடன் செய்தால் என்ன, நல்ல செயல்கள் நல்ல செயல்களே.
– நேச குமார் –
26.07.2006
http://nesakumar.blogspot.com/

Series Navigation

நேச குமார்

நேச குமார்