எண்கள் + எண்ணங்கள் + எதிர்பார்ப்புகள்

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

நரேந்திரன்


எண்கள் + எண்ணங்கள் + எதிர்பார்ப்புகள்
– நரேந்திரன்

Whoever fights monsters should see to it that in the process he does not become a monster. And if you gaze long enough into an abyss, the abyss will gaze back into you.
– Friedrich Nietzsche

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை அடைந்திருக்கின்றது. தேர்தல் நாளான நவம்பர் நான்கின்கிற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்களே பாக்கி இருக்கையில், இரு தரப்பும் ஒன்றின் மீது ஒன்றாகச் சேற்றை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றன. சென்ற வாரக் கடைசியில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னை விடவும் முன்னனியில் இருப்பதாகத் தெரிகிறது. கருத்துக் கணிப்பு பத்திரிகைக்கு பத்திரிகை மாறுபடும் என்றாலும், பெரும்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு பொதுவான அனுமானத்தின் அடிப்படையில், ஒபாமாவிற்கு 45% அமெரிக்கர்களும், ஜான் மெக்கெய்னுக்கு 39% அமெரிக்கர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவுள்ள FOX நியூஸ் சேனலின் கருத்துக் கணிப்பின்படி, ஆண்களில் 5% அதிக ஓட்டு ஒபாமாவிற்கும், பெண்களில் 8% அதிக ஓட்டு ஜான் மெக்கெய்னுக்கும் கிட்டியுள்ளது.

பராக் ஒபாமா, தறிகெட்டுத் தடுமாறும் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்திருத்தக் கூடியவர் என்று 10% பேர்களும், வரி போன்ற பிரச்சினைகளில் சரியான முடிவு எடுக்கக் கூடியவர் என்று 7% பேர்களும், நாட்டின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவை அடையச் செய்யக்கூடியவர் என்று 10% பேர்களும் நம்புகின்றனர். அதே சமயம், ஜான் மெக்கெய்ன் பயங்கரவாதம் மற்றும் இராக் போரினைத் திறமையாகக் கையாளக் கூடியவர் என 20% (12% + 8%) அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னுக்கு இது சோதனைக் காலம். பொதுவாக GOPயானது (Grand Old Party/குடியரசுக் கட்சி) வர்த்தகத்திற்கும், தொழில்களுக்கும் ஆதரவான ஒரு அமைப்பு என்ற எண்ணம் பொதுவில் உண்டு. குடியரசுக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் பங்கு வர்த்தகம் ஏறுமுகமாக இருக்கும் என்பதும், அரசாங்கச் செலவினங்கள் குறைவாகவும் இருக்கும் என்பது ஒரு நீண்டகால நம்பிக்கை. அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்கப் பங்குச் சந்தை மாபெரும் சரிவினைக் கண்டிருக்கிறது. ஜார்ஜ் W. புஷ்ஷின் ஊதாரித்தனமான செலவினங்களும், அவர் மீதான அதிருப்தியும் ஜான் மெக்கெய்னை நோக்கித் திரும்பி இருக்கின்றன. வேலையின்மை ஏறக்குறைய 6 சதவீதமாக ஆகியிருக்கிறது. அமெரிக்கர்களின் வாங்கும் சக்தி குறைவானதால், தொழிற்சாலைகளின் உற்பத்தியும் குறைந்திருக்கிறது.

வியட்நாம் போரின் போது பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வியட்நாமியச் சிறையில் வாடிய மெக்கெய்ன், தனது ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறார். தேர்தலில் வெல்லாவிட்டாலும், ஒரு கவுரமான தோல்வியாவது தனக்குக் கிட்டாதா என்று ஏங்கும் நிலை அவருக்கு உண்டாகி இருக்கிறது. அவரின் உப ஜனாதிபதித் தேர்வும் அவரைப் படுகுழியில் தள்ளி இருக்கிறது. அதிகம் அனுபவமற்ற பெண்மணியும், அலாஸ்கா மாநில கவர்னருமான சாரா பெலினினை (Palin) தனது உபஜனாதிபதி போட்டியாளராகத் தேர்ந்தெடுத்தது, அமெரிக்கர்களின் மத்தியில் அவர் மீது ஏமாற்றத்தையே உண்டாக்கி இருக்கிறது.

விஞ்ஞான முன்னேற்றங்கள் மிகுந்த அமெரிக்கா, அடிப்படையில் பழமைவாதம் மிகுந்த ஒரு நாடு. இது பெரும்பாலோருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஏறக்குறைய 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தீவிர மத எண்ணமுடையவர்கள். பைபிளின் வாசகங்களை வரிக்கு வரி நம்புவர்கள். அவர்களில் பெரும்பகுதியினர் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள். குறிப்பாக ‘பைபிள் பெல்ட்’ எனப்படும் மத்திய மேற்கும் (MidWest), பெரும்பாலான சிறு நகரங்களும், கிராமங்களும் இன்னும் குடியரசுக் கட்சியின் பக்கமே இருக்கின்றன (மதமாற்றம் ஒன்றையே குறியாகக் கொண்டு, இன்று இந்தியாவெங்கும் புற்றீசல்களாகக் கிளம்பி இருக்கும் மிஷினரிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்த பைபிள் பெல்ட் பகுதியிலிருந்து வந்தவர்கள்). எனவே அவர்களின் ஓட்டுக்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில், சாரா பெலின் போன்ற ஒருவரைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர மெக்கெய்னுக்கு வேறு வழியில்லை. சாரா பெலின் தீவிர கிறிஸ்தவ மதப்பற்றுடையவர். ‘இராக்கிய யுத்தம், கடவுளின் கட்டளை’ என்று முழங்கியவர் பெலின். ஜார்ஜ் W. புஷ் தனது வெளிநாட்டுக் கொள்கை கடவுளினால் கூறப்பட்டது என்று கூறியதனை நினைவில் கொள்ளுங்கள். பைபிளின் அடிப்படையில் கூறப்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சி குறித்தான பாடங்களைப் பள்ளிகளில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கொள்கையுடவர் சாரா பேலின் என்றால் அவரது மத நம்பிக்கை எத்தகையது என்பதினைப் புரிந்து கொள்ளலாம்.

இன்னொரு புறம், ஹிலரி கிளிண்டனின் ஆதரவாளர்களாக இருந்த அமெரிக்கப் பெண்மணிகளின் ஓட்டுக்கள், சாரா பெலினைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஜான் மெக்கெய்னுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அதுவே அவருக்கு ஆபத்தானதாக மாறி இருக்கிறது. சாரா பெலின் போகுமிடமெல்லாம் பராக் ஒபாமா மீதான வெறுப்பினை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார். சென்ற வாரம் நடந்த ஒரு கூட்டத்தில், ‘பராக் ஒபாமா ஒரு தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறார்’ என்ற ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். உடனே ‘(ஒபாமாவை) சுட்டுத் தள்ளுங்கள்; (அவர் மீது) வெடிகுண்டு வீசுங்கள்’ என்று கூட்டம் ஆரவாரித்தது. வெள்ளை இனவாதத்திற்கு மறைமுகமாக தூபமிட்டுக் கொண்டிருக்கிறார் பேலின் என்றால் அது மிகையாகாது.

பராக் ஒபாமா இதற்குச் சளைத்தவரல்ல என்றாலும், கத்தியின் மேல் நடக்கும் வித்தை அவருடையது. அதனை மிக நன்றாகவே செய்து கொண்டிருக்கிறார். அனுபவசாலியான ஜான் பைடனை (Joe Biden) தனது உப-ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது அவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அமெரிக்க உப-ஜனாதிபதியானவர், ஜனாதிபதியின் முக்கிய முடிவுகளை முன்னின்று நிகழ்த்துபவர். எதிர்பாராத விதத்தில் ஜனாதிபதி மரணமடைந்தால், அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்று நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியவராகையால் அவரின் தேர்வு மிக முக்கியமான ஒன்று. ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் பராக் ஒபாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இந்நிலையில், ஜோ பைடன் போன்றவர்களின் தேவை மிக அவசியமான ஒன்றாகிறது. பெரும்பாலான அமெரிக்கர்கள், ஜோ பைடனின் தேர்வு சரியான ஒன்றாக ஆமோதித்திருக்கிறார்கள்.

ஹார்வர்ட் பல்கலையில் சட்டம் படித்தவரான ஒபாமா மிகவும் ஏழ்மையான பின்னனியிலிருந்து முன்னேறியவர். வெள்ளையினத் தாய்க்கும், கறுப்பினத் தந்தைக்கு பிறந்தவர். பலவர்ணம் பிள்ளை! புத்திசாலி. ஜான் F. கென்னடி, பில் கிளிண்டன் போன்றவர்கள் வரிசையில் வருபாவர். நல்ல பல திட்டங்கள் அவரிடம் இருந்தாலும், அதனை எந்த அளவிற்கு வெற்றிகரமாகச் செயல்படுத்த அவரால் முடியும் என்பது கேள்விக்குறி. அதிக நிர்வாக அனுபவம் இல்லாதவர் என்பதால் ஜான் மெக்கெய்ன் அதனைச் சுட்டிக்காட்டியே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் மெக்கெய்னின் பின்னனியில் அமெரிக்காவின் பெரும் தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள். ஒபாமா போன்ற சுயமாகச் சிந்திக்கக்கூடிய ஜனாதிபதிகள் அவர்களுக்குத் தேவையில்லை. டான் குவாயில் போன்ற ஜார்ஜ் புஷ் மற்றும் பேலின் போன்றவர்களையே அவர்கள் அதிகம் விரும்புவார்கள். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடும் ஜனாதிபதிகளே அவர்களுக்கு வேண்டும். நிர்வாகத்தை டிக் செனி போன்ற கார்ப்பரேட்டுகள் கவனித்துக் கொள்வார்கள் என்பது அவர்களின் எண்ணம்.

அமெரிக்காவை சிகப்பு மற்று நீல மாநிலங்களாகப் பிரித்திருக்கிறார்கள். சிகப்பு மாநிலங்கள் தொடர்ச்சியாக குடியரசுக் கட்சிக்கும், நீல மாநிலங்கள் ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களித்து வருபவை. மாறி வாக்களிக்கும் எந்த ஒரு மாநிலமும் (Swing States), அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவினை மாற்றி அமைக்கக் கூடியவை. குறிப்பாக ·ப்ளோரிடா மற்றும் ஒஹையோ மாநிலங்களைச் சொல்லலாம். எனவே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இது போன்ற மாநிலங்களில் தனிக் கவனம் செலுத்துவார்கள். வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் பராக் ஒபாமாவிற்கு அதிகம் வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பில்லை என்றாலும், அவர் தொடர்ந்து அந்த மாநிலங்களை முற்றுகையிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை, இந்தியத் தேர்தல் நடைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியப் பாரளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு எனப் பொதுவான அமைப்பு, அகில் இந்திய அளவில், ஒன்று இருக்கின்றது (Election Commission) என்பது நமக்குத் தெரியும். அதன் சட்ட, திட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுவானவை. அதிகக் குழப்பங்களற்றவை எனலாம். ஒரு பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராகிறார் மற்றவர் தோற்கிறார் என்பது நேரடியான ஒன்று. நமது தேர்தல் முறை சரியான ஒன்றா? என்பது விவாதத்திற்குரிய விஷயம். எனவே அதனை விட்டு விடுவோம்.

அமெரிக்கத் தேர்தல் முறையில், தேர்தல்களை நடத்தும் உரிமை அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த மாநில அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது(!). ஒவ்வொரு மாநிலத்திலும் உள்துறை அமைச்சர் மட்டத்தில் இருக்கும் (Secretary of State என்பார்கள் அமெரிக்காவில்) ஒருவர் அந்தத் தேர்தல்களை மேற்பார்வையிடுவார் (சிக்கல் அங்கேதான் ஆரம்பமாகிறது. அதனைப் பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்). ஆனால் தேர்தல் முடிவினை அறிவிக்கும் உரிமை, எலக்ட்ரல் காலேஜ் (Electoral College) என்ற அமைப்பினுக்கு மட்டுமே உண்டு.

அது என்ன எலக்ட்ரல் காலேஜ்?

தற்போதைய தேர்தல் வழிமுறைகள் இல்லாத 1800களில், அமெரிக்கக் குடிமக்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுப்பட்ட சில பிரதிநிதிகளை, அவர்களின் சார்பாக அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உபஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்க அனுமதித்தார்கள். பின்னாட்களில் அது அமெரிக்காவின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றாக (12th Amendment) ஆகியது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும், குடிமக்கள் வாக்களித்து முடித்து, எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர், அவர்களின் சார்பாக 538 தேர்ந்தெடுப்பட்ட குடிமக்கள் வாக்களித்து (Electoral College) ஜனாதிபதி, மற்றும் உபஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரல் காலேஜ் ஓட்டுக்கள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாராளுமன்ற, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்து எலக்ட்ரல் ஓட்டுக்களின் எண்ணிக்கையும் அமையும். உதாரணமாக, each state gets a number of electors equal to its number of members in the U.S. House of Representatives plus one for each of its two U.S. Senators. ஒவ்வொரு எலக்ட்டருக்கும் ஒரு ஓட்டு உண்டு. அந்த முறையின் அடிப்படையில், எந்த ஒரு வேட்பாளர் 270ற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ, அவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். சிக்கல்கள் பலவும் நிறைந்த ஒரு நடைமுறை இது என்பதுடன் நிறுத்திக் கொள்வோம்.

தற்போதைய நிலவரப்படி, பராக் ஒபாமா மயிரிழையில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலன கறுப்பினத்தவரும், ஹிஸ்பானிக்குகளும் ஒபாமாவின் பக்கமே நிற்கிறார்கள். சென்ற இரு தேர்தல்களிலும் நடந்த முறைகேடுகளைப் போல இந்த முறையும் நடக்கும் வாய்ப்பு இருப்பதினை மறுப்பதற்கில்லை. உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் இந்தத் தேர்தலில் அவ்வாறு நடக்கும் வாய்ப்பு குறைவானதாகவே நான் கருதுகிறேன். அதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான உலகத்தின் நம்பிக்கையை நிலை நாட்டுவதாக இருக்கும்.


narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்