எட்டிப் பாரடி..

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

தேன்சிட்டு.


கால் மடக்கி, கை ஒடுக்கி
என் வயிற்றுப்பையில்
இருட்டு தவமா ?

அழுத்தமாக கொடுத்து விடடி
உன் அசைவுகளை!
ஓங்கி கொடுத்து விடடி
உன் உதைப்புகளை!

முகமறியா முத்துப் பெண்ணே!
முன் கோபம் வருமோடி ?
‘அம்மா ‘ என்று
உனக்குள்ளே அழைப்பாயா ?
கனவில் என் முகம் கண்டு,
கன்னம் குழிய சிரிப்பாயா ?

ஒட்டு மொத்த கனவுகளை
உனக்குள்ளே பதித்துவிட்டேன்.
உனக்கோர் உலகம் காட்ட
உறங்காமல் துடிக்கிறேன்.

தாளம் தப்பாமல்,
தந்திகளை அனுப்பி விடடி!
இருட்டுப் போர்வை
கிழித்து போட்டு
எட்டி பாரடி!

தாழம் பூவே!
கண்கள் இடுக்கி, முதல் அழுகை
முத்தாய் பூக்கையில்
உன் மேனி நுகர்ந்து
உணர்வேனடி
முழுப் பெண் நானென்று…..

***
thenchittu@yahoo.com

Series Navigation