எங்கே செல்லுகிறது இந்தியா ?

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

அ.குமார்


இந்திய ஜனநாயகத்தின் இழிவு நிலை. எங்கும் அமெரிக்க சேவை செய்வதே இந்த பாரளுமன்ற ஜனநாயகத்தின் ஒரே அம்சமாக உள்ளது. மேலே மன்மோகன் சிங்-லிருந்து, கீழே ஒரு அல்ப கான்ஸ்டபிள் வரை. சமீபத்தில் போடப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள், தண்ணீர் தனியார் மயம், வங்கி, இன்சூரன்ஸ், மற்றும் லாபமீட்டும் தொழில்துறைகள் தனியார் மயம், பெட்டிக்கடை, மளிகைக்கடை சிறு முதலாளிகளுக்கு ஆப்பு வைக்கும் சில்லரை வியாபாரத்தில் அன்னிய முதலீடு, VAT…என்று .பட்டியில் நீளூகிறது.

ஒரு பக்கம் பட்டினியில், மறுபக்கம் வாழ்விழந்த விவசாயிகள் என ஒட்டு மொத்த இந்திய கிராமங்களும் செத்துமடிகின்றது. கல்வி வசதியில்லை – கல்வி தனியார்மயம், படித்தால் வேலையில்லை – ரிசர்வ் வங்கி சொல்லுகிறது, TCS சேர்மன் சொல்லுகிறார் – 40 கோடி இளைஞர்கள் 2014-ல் வேலையின்றி இருப்பர் என்று, மருத்துவம் செய்ய வக்கற்ற மக்கள் ரேபிஸ்-நாய்க்கடி நோயால் மடிய – வாங்கிய பணத்துக்கு சேவை செய்த திருப்தியில் BJP மேனகா காந்தி பிராணிகள் வதையை தடுத்த திருப்தி என்று நாடகமாடுகிறார். காப்புரிமைச் சட்டமோ – மருந்து விலையை எவரெஸ்டு உயரத்தில் தொங்கவிட்டுள்ளது.

எத்தனை உதாரணங்கள்….

மிக எடுப்பான உதாரணமாக நமது தாமிரபரணி ‘கோக் ‘ பிரச்சனை உள்ளது. கங்கைகொண்டான் மானூர் ஏரி, தண்ணீர் தடுக்கப் பட்டு வறண்டு பல பத்து வருடங்களாக உள்ளது. அதற்கு எதுவும் செய்யத் துப்பில்லாத அரசு, இருக்கிற ஓரே வாழ்வாதாரத்தையும் லிட்டர் 1.2 பைசாவுக்கு சுரண்ட கோக்கிற்கு மாமா வேலை பார்க்கிறது. அதை எதிர்த்து கருத்து சொல்லக் கூட உரிமையில்லை என்கிறது. நாம் என்ன காலணியாதிக்கத்தில் உள்ளோமா ?, ஆம் என்பது போல் வரிசையாக எங்கும் சம்பவங்கள் நடக்கின்றன. ‘கோக்கே வெளியே போ ‘ என்று எழுதப்பட்ட சுவரெழுத்தின் படம் கீழே உள்ளது. அதற்காக இருவர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சுவரெழுத்தில் தேசத் துரோகமாக என்ன உள்ளது என்று தெரியவில்லை. சமீபத்தில், தமிரபரனியின் அவல நிலை பற்றி எடுக்கப்பட்ட ‘முழ்கும் நதி ‘ என்ற ஆவணப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை அமெரிக்க தேச துரோகமோ ? ஆம், அப்படித்தான் உள்ளது.

கோக் பூச்சிகொல்லி மருந்து என்று தெரிந்தும் குடிக்கிறார்கள் மாநகரில் வாழும் நாகரிக கோமான்கள். பண்பாடற்றவர்கள் என்று அவர்களால் கேலி செய்யப்படும் பட்டிக்காட்டு பாமர மக்களோ கோக்கின் நடைமுறைப் பயன்பாடு அறிந்து மலிவு விலை பூச்சி மருந்தாக பயன்படுத்துகிறார்கள்(ஆந்திர பருத்தி விவாசாயிகள்). நாகரிகம் மித மிஞ்சித்தான் போய் விட்டது. யாரிடம் என்பதுதான் கே(லி)ள்விக்குறியது.

இது கோக், அல்லது தண்ணீர் தனியார்மயம் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. இது நம் நாட்டின் இறையான்மை பற்றிய, சுயநிர்ணய உரிமை பற்றிய, ஜனநாயகம் பற்றிய, நாடு மீண்டும் அடிமையாவது பற்றிய பிரச்சனை.

புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் கடந்த இரு மாதங்களாக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

**** **** **** **** **** ****

<இங்கே புகைப் படத்தை இணைக்கவும்>

புதிய ஜனநாயகம், பிப். 2006 (கட்டுரையின் ஒரு பகுதி)

கொலைகார கோக்கின் பணபலம் – அதிகாரத் திமிருக்கு விழுந்த அடி

கொக்கோ கோலா நிறுவனத்தின் ஆணவத்திற்கு முதலடி விழுந்திருக்கிறது. ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் ‘கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் ‘ என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது. 9 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6,500 வாக்காளர்களைக் கொண்டது இந்தக் கிராமசபை. எமது செப்.12 மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, அக்.2 காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கோக் ஆலையை எதிர்த்ததால், தீர்மானத்தை நிறைவெற்றவிடாமல் அன்று கிராமசபை, மாவட்ட நிர்வாகத்தால் கலைக்கப்பட்டது. ‘அதிகமான மக்கள் கூடினால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் ‘ என்ற கேலிக்கூத்தான காரணத்தைக் கூறி நவம்பர் மாதம் நடைபெறவிருந்த கூட்டத்தை ரத்து செய்தார், ஆட்சியர்.

இந்தக் ‘குடியரசு ‘ தினத்தன்று நடைபெற வேண்டிய கூட்டத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்தால் வேறெந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குடியரசு தினத்தன்று மக்களாட்சியின் மாண்பை நிரூபிக்க கூட்டத்தை நடத்த வேண்டும். அதே நேரத்தில் மக்கள் யாரையும் வர விடாமல் செய்வதன் மூலம் கோக் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற விடாமல் தடுக்க வேண்டும். ‘ – என்ற இரண்டு அம்சத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘கிராமசபைக் கூட்டத்தில் பெரிய கலவரம் நடக்கும், எனவே யாரும் வராதீர்கள் ‘ என்று ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தது, போலீசு.

போலீசின் கோக் எடுபிடித்தனத்தை அம்பலப்படுத்தி ‘எல்லோரும் கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்லுங்கள் ‘ என்று கிராமம் கிராமமாகப் பிரசுரம் விநியோகித்தார்கள் எங்களது தோழர்கள். கூட்டத்திற்கு வந்த மக்களை மிரட்ட நூற்றுக்கணக்கில் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கியவுடன் கோக் எதிர்ப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. நடலிங்கம் (அ.தி.மு.க). கருப்பையா (தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ) ஆகியோர் தலைமையிலான சிறு கும்பல் உடனே ஆத்திரம் அடைந்தது. குறைந்தபட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்கள்(கோரம்) இல்லையென்பதால் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது எனக் கூச்சலிட்டது. ‘உங்கள் ஆட்களைப் பெருமளவில் திரட்டி வந்து கோக் ஆதரவு தீர்மானம் போட வேண்டியதுதானே ‘ என்று அந்த எடுபிடிகளுக்கு நக்கலாக பதிலடி கொடுத்தனர் மக்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ‘எல்லோரும் கலைந்து செல்லுங்கள் ‘ என்று மக்களை விரட்டத் தொடங்கியது போலிசு. மக்கள் முழக்கமிடத் தொடங்கினார்கள். செப். 12-ஆம் தேதியன்று நெல்லை ஜவகர் திடலில் நாங்கள் எழுப்பிய ‘அமெரிக்க கோக்கே வெளியேறு! ‘ என்ற அந்த முழக்கம் ஜன.26 அன்று கங்கை கொண்டானில் எதிரொலித்தது. அவமானமும் ஆத்திரமும் அடைந்த கோக்கின் கைக்கூலிகள் அங்கிருந்து தப்பி வெளியேறினர். இரண்டு நாட்களுக்கு முன் இதே முழக்கத்தை சுவரில் எழுதியதற்காக எமது தோழர்கள் இருவரை சிறையில் அடைத்த போலீசு, அதே முழக்கம் நூற்றுக்கணக்கான மக்களின் குரலாகத் தம் கண் முன்னே வெடித்து வருவதைக் கண்டு செய்வதறியாமல் திகைத்தது. கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வெண்டுமென்ற தீர்மானம் கிராமசபையால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு சட்டரீதியான தகுதி எதுவும் கிடையாது என்பது உண்மைதான். ஆனால், அப்பகுதி மக்கள் ஆலையை எதிர்க்கிறார்கள் என்ற உண்மை, தன்னால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் வழியாகவே வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு எந்திரம் செய்த தந்திரங்கள் எல்லாம் அன்று தவிடுபொடியானது. அந்த வகையில் இது கோக்கின் அதிகாரத் திமிர் மீது விழுந்த ஒரு அருமையான அடி.

**** **** **** **** **** ****

புதிய ஜனநாயகம், மார். 2006

கொலைகார ‘கோக் ‘ குடன்

சர்வகட்சி கூட்டணி

மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நெல்லை கங்கைகொண்டான் கொக்கோ கோலா ஆலைக்கு இயங்குவதற்கான உரிமத்தை மானூர் ஒன்றியம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதியன்று வழங்கியுள்ளது. இந்த துரோகம் எப்படி நிறைவேறியது என்பதை மறுநாள் வெளியான நாளிதழ்களின் செய்திகளிலிருந்தே தொகுத்து தருகிறோம்.

பஞ்சாயத்து யூனியன் கூட்டப்பொருட்குறிப்பில் குளிர்பானக் கம்பெனிக்கு ரன்னிங் லைசென்ஸ் வழங்கும் பொருள் சேர்க்கப்பட வேண்டும் என்று 21 யூனியன் கவுன்சிலர்களில் 14 பேர் யூனியன் தலைவர் விஜயாவுக்கு கடந்த 23.1.2006 அன்று மனு அனுப்பினர். யூனியன் தலைவர் விஜயா உடனடியாக கவுன்சிலர்களுக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் கட்டிட அனுமதி, நகரமைப்பு அனுமதி பிற சான்றுகள் உரிய முறைப்படி, உரிய இடத்தில் பெறவில்லை; பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது; எனவே கம்பெனிக்கு லைசன்ஸ் வழங்க வேண்டுகோள் கூட்டம் நடத்த இயலாது என்று தெர்ிவித்தார். இந்நிலையில் மானூர் யூனியன் துணைத்தலைவர் பாலகுமார் 9.2.2006 அன்று மானூர் யூனியன் வேண்டுகோள் கூட்டம் நடைபெறும் என்று யூனியன் கவுன்சிலர்களுக்கு அழைப்பு அனுப்பினார்.(தினத்தந்தி).

ஆலைக்கு இயக்க உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதற்கான ஆவணங்களும் தனது பார்வைக்கு வைக்கப்படவில்லை என்றும் கூறி கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஊராட்சிக் குழுத் தலைவி விஜயா, உறுப்பினர் சி.எஸ்.மணி ஆகியோர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சிறப்புக்கூட்டம் துணைத் தலைவர் பாலகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிதாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு பார்வையாளராக உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) பரமசிவம் கலந்து கொண்டார். மொத்த உறுப்பினர்கள் 21 பேரில் 17 பேர் கலந்து கொண்டனர். தலைவி உள்ளிட்ட 4 பேர் கலந்துகொள்ளவில்லை.(தினமணி)

நேற்று மானூர் சுற்றுப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். மானூர் பஸ் ஸ்டாப், யூனியன் அலுவலகத்தில் நேற்று மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. யூனியன் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் பரவியதையடுத்து மதவக்குறிச்சி, எட்டான்குளம், கங்கைகொண்டான், ரஸ்தா உட்பட பல்வேறு கிராமங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணிகளை மாவட்ட எஸ்.பி.ஆனந்தகுமார் சோமானி பார்வையிட்டார். (தினமலர்)

தி.மு.க.வைச் சேர்ந்த துணை சேர்மன் பாலகுமார் நடத்திய இந்த கூட்டத்தின் ஒரே நிகழ்ச்சி நிரல் கோக் (எஸ்.ஐ.பி.சி.எல்.) கம்பெனிக்கு அனுமதி வழங்குவதுதான். கூட்டம் தொடங்கியவுடனே இந்த ஆலையை எதிர்த்து வருபவரான கவுன்சிலர் சி.எஸ்.மணி பேசினார். அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள கோக் கம்பெனி கொடுத்துள்ள ஆவணங்களின் பட்டியலையும், நகலையும் தருமாறு அதிகாரிகளிடம் கோரினார். அவருடைய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. (தி இந்து).

‘கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த துணைத்தலைவராகிய நீங்கள் கூறுங்கள் ‘ என்று மணி கேட்டார். உடனே துணைத்தலைவர் ‘தீர்மானம் நிறைவேறிவிட்டது ‘ என்று அறிவித்தார். இதையடுத்து ஆவேசமடைந்த மணி கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டம் துவங்கிய 15 நிமிடத்தில் முடிந்தது. (தினமலர்)

கொக்கோ கோலாவிற்கு ரன்னிங் லைசென்ஸ் வழங்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்ட கவுன்சிலர்கள் அனைவருக்கும் பெப்சி குளிர்பானம் வழங்கப்பட்டது. அனைத்து கவுன்சிலர்களும் ரசித்து உறிஞ்சி மகிழ்ந்தனர். கவுன்சிலர்கள் அனைவரும் தனி வேனில் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு, அதே வேனில் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டனர். (தினகரன்).

குளிர்பானக் கம்பெனிக்கு ஆதரவாக தங்கள் கட்சியின் கம்பெனி எதிர்ப்புக் கொள்கையை ‘கண்டுகொள்ளாமல் ‘ புதிய தமிழகம் கட்சி கவுன்சிலர்கள் ஜெயபால், லட்சுமி, சவுரியம்மாள், கணபதி உள்ளிட்ட கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு, ம.தி.மு.க. கவுன்சிலர்கள் ‘ஒற்றுமை ‘யுடன் செயல்பட்டு கம்பெனிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினர். (தினமலர்).

—- —- —-

இந்த துரோகம் எதிர்பாராதது அல்ல, கொக்கா கோலா ஆலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் இந்தச் சம்பவத்தினால் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அடைவதற்க்கும் எதுவும் இல்லை. மாறாக, இச்செய்திகளை கூர்ந்து நோக்கினால் மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் கண்டு எதிரிகள் அடைந்திருக்கும் பீதியைப் புரிந்து கொள்ள முடியும். மக்களின் போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைப் பெறவும் முடியும்.

கூட்டம் நடப்பதற்க்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே கொக்கிற்க்கு ஆதரவாக வாக்களித்த 16 கவுன்சிலர்களும் தத்தம் ஊர்களிலிருந்து காணாமல் போய் விட்டார்கள். புண்ணியஸ்தலமான திருப்பதிக்கு கவுன்சிலர்களை ஓட்டிச்சென்றது கோக் நிர்வாகம். செய்தியறிந்த எமது தோழர்கள் கங்கைகொண்டான் சுற்று வட்டாரம் முழுவதும் சுவரொட்டிகள் மூலம் இதை அம்பலப்படுத்தினர். கோக்கின் சதியை அன்பலப்படுத்தி எல்லா கிராமங்களிலும் பிரசுரம் விநியோகித்தனர். 10 ஆம் தேதியன்று மானூர் பஞ்சாயத்து யூனியனுக்குத் திரண்டு வருமாறு அறைகூவல் விடுத்தனர். ‘ஜாலி டூர் விவகாரம் ‘ பத்திரிகைகளிலும் சந்தி சிரித்தது.

கொக்கோ கோலாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘கியூ ‘ பிரிவு போலீசு பிராணிகள் உடனே விழித்துக்கொண்டன. கோக்கின் ‘தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி ‘’யாகச் செயல்படும் மாவட்ட போலீசு நிர்வாகமோ, ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியே போலீசு படையை அனுப்பி மக்களை அச்சுறுத்தியது. இந்தக் கெடுபிடிகளையெல்லாம் மீறி, 10-ஆம் தேதியன்று தங்கள் கைகாசைப் போட்டு பேருந்தைப் பிடித்து மானூர் வந்து சேர்ந்த மக்கள், பஞ்சாயத்து அலுவலகத்தை நெருங்கக்கூட முடியவில்லை.

மக்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் சோமானியின் தலைமையில் ஒரு போலீசு படை பஞ்சாயத்து யூனியன் கட்டிடத்தை முற்றுகையிட்டிருந்தது. உள்ளே ஜனநாயகம் வேலை செய்த லட்சணத்தை நேரில் கண்ட பத்திரிக்கையாளர்கள் எழுதியுள்ளதைத்தான் நீங்கள் ஏற்கெனவே படித்துள்ளீர்கள்.

மறுகாலனியாதிக்கம் என்பது தன் இயல்பிலேயே ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொறு சான்று. எந்த ஒரு ஆலையும் இயக்க உரிமம் பெற வேண்டுமானால் அதற்குறிய தரவுகளையும் ஆவணங்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதா, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையின்மைச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால், தண்ணீர் பயன்பாடு குறித்து குடி நீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையின் மதிப்பீடு என்ன – என்பன போன்ற எந்த விவரங்களையும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்காமல் ‘கையெழுத்து போடு ‘ என்று மிரட்டுகிறது கோக். கேள்வி எழுப்பினாலோ வாய் திறக்க மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

வாய் நிறைய எலும்பைக் கவ்வியிருக்கும்போது எப்படித் திறக்க முடியும் ? அமைச்சர்களும், மெத்தப்படித்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இந்தப் பன்னாட்டு மூத்திரக் கம்பெனியின் பின்னால் ரொட்டித்துண்டுக்கு அலையும் தெரு நாய்களைப் போல அலையும்போது, ஒரு சாதாரண கவுன்சிலரது கேள்விக்கு எப்படி பதில் கிடைக்கும் ? அதனால்தான் பயங்கரவாதியைப் பின் தொடர்வது போல கவுன்சிலர் மணியைப் பின்தொடர்கிறது போலீசு.

கவுன்சிலர் மணி ஒரு மில் தொழிலாளி. ஊராட்சி மன்றத் தலைவர் விஜயாவோ தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண். கோக்கை எதிர்க்கும் மற்ற 3 கவுன்சிலர்களும் பெரிய படிப்போ அந்தஸ்தோ இல்லாத எளிய மனிதர்கள். ஆனால், தாம் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் விசுவாசமானவர்கள். தம் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து வரக்கூடும் என்று தெரிந்தும் கோக்கிற்கு விலை போக மறுக்கும் நேர்மையாளர்கள்! வாங்கிய காசுக்காகவும், வாங்க விரும்பும் பதவி உயர்வுக்காகவும் சட்டத்தை வளைத்து எட்டப்பன் வேலை பார்க்கும் கைக்கூலிகளுக்குப் பெயரோ அதிகாரிகள், ஆட்சியாளர்கள்! இவர்கள் நடத்தும் நிர்வாகத்துக்குப் பெயர் ஜனநாயகம்!

16 கவுன்சிலர்களும் கோக்கினால் குளிப்பாட்டபட்டவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம். கவுன்சிலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது ?

கங்கைகொண்டானில் 16 கவுன்சிலர்கள் அமைத்துள்ள சர்வ கட்சிக் கூட்டணியிலிருந்து தமிழகமே பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். வற்றாத தாமிரவருணியை, வறண்டு போன தென்மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்தை, நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயத்தை – என அனைத்தையும் அழிக்கவிருக்கும் ஒரு அமெரிக்க கம்பெனிக்கு கைக்கூலிகளாக செயல்பட்டுள்ளவர்கள் இந்த கவுன்சிலர்கள் மட்டுமல்ல. ஜெயலலிதா, கருணாநிதி, வை.கோ., ராமதாசு போன்ற அனைவரும்தான். தொகுதிப் பங்கீடு, பேச்சு வார்த்தை போன்ற எதுவும் இல்லாமல் காதும் காதும் வைத்தாற்போல் இயங்கும் இந்த சர்வகட்சிக் கூட்டணியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் விதத்தில் கோக் ஆலைக்கெதிராகக் குரல் கொடுத்து வருகிறது ‘மார்க்சிஸ்டு ‘ கட்சி. மேற்கு வங்கத்தில் கோக்-பெப்சி ஆலைகள் இயங்கி வருகின்றன: ‘உலகப் புகழ் பெற்ற ‘ பிளாச்சிமடா ஆலைக்கு உரிமம் வழங்கியதும் ‘மார்க்சிஸ்டு ‘ அரசுதான். இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்கட்டும்; தோழமைக் கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரசு போன்ற கட்சிகளும், சுற்றுச்சூழலுக்காக பசுமைத்தாயகம் என்றொரு தனி அமைப்பை வைத்து நடத்தும் பா.ம.க.வும் கோக் ஆலைக்கு ஆதரவளித்து வருவதை ‘மார்க்சிஸ்டு ‘ கட்சி அம்பலப்படுத்துமா ? இவர்களுடைய கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கோக் ஆலைக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி இடம் பெறுமா ? அல்லது 3 மாவட்ட மக்களின் வாழ்க்கை சோரம் போவதை அனுமதித்து விட்டு ‘மார்க்சிஸ்டு ‘ கட்சி தி.மு.க.வுடன் தொகுதி பேரம் பேசுமா ?

வரவிருக்கும் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும் கொக்கா கோலாவிற்குக் கவலை இல்லை. கங்கைகொண்டான் மக்களுக்கும் விடிவு இல்லை. ஆனால், ஓட்டுக் கட்சிகளின் இந்த நாடகம் நெடுநாள் நீடிக்க முடியாது. மக்கள் முகத்தில் விழிக்க அஞ்சி, தலைமறைவான கவுன்சிலர்களைப் போல் எல்லா எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் ஒளிய வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மானூர் பஞ்சாயத்து கவுன்சிலர்களை மக்களிடமிருந்து பாதுகாக்க போலீசு படை குவிக்கப்பட்டதை போல சட்டமன்ற, நாடாளுமன்றக் கூட்டங்களுக்கும் போலீசைக் குவிக்க வேண்டியிருக்கும். கவுன்சிலர்களுக்கே கறுப்புப் பூனைகள் தேவைப்படுவார்கள்.

இராக்கில் நடப்பது மட்டுமல்ல, இங்கே கங்கை கொண்டானில் நடப்பதும் ஆக்கிரமிப்புதான் என்பதைப் பாமர மக்களும் புரிந்து கொள்வார்கள். அப்போது கோக் எதிர்ப்புப் போராட்டம் விடுதலைப் போராட்டமாக வடிவெடுக்கும்

—-

arangakumar@yahoo.com

Series Navigation