ஊருப்பொண்ணு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சுஜாதா சோமசுந்தரம்


மெத்தையில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.இமைகள் இணைய மறுக்கின்றன.புதிய வீட்டின் சூழலா ? மனிதனின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அடைந்துவிட்ட திருப்தியா ? ஒரு வீட்டுக்கு அதிபதி என்ற பூரிப்பா ?நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை கிழித்துக்கொண்டு ஓடிய சந்தோசமா ?அர்த்தம் விளங்காமல் எழுந்து உட்கார்ந்து இரண்டு பக்கமும் பார்வையை திருப்புகிறேன்.வளர்ந்தும் ஈன்றவள் கண்களுக்கு குழந்தையாய் காட்சி அளிக்கும் மகனும்,மகளும் நிம்மதியாய் உறங்குகின்றனர்.

ஹாலுக்கு போவதற்காக சப்தமில்லாமல் எழுந்து நிற்கிறேன்.அடடடா…ஐந்தடி அடி உயரத்தில் பட்டமரமாக உழைத்து மெலிந்த மேனியுடன்,கவலைகளைமுகத்தில் தேக்கி வைத்து,நாற்பது வயதை அறுபதாக கூட்டி காட்டிய பொல்லாத முதுமையுடன்.விடிவிளக்கின் வெளிச்சத்தில் ஒரு மாது தொரிகிறாளே அவள் யார் ? உற்றுநோக்குகிறேன்.அவள் வேறுயாருமில்ல நானே தான்.

என் கணவர் இறந்தபிறகு நானும் கண்ணாடியும் வெகுதூரம் ஆகிவிட்டோம்.கண்ணாடியில் தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்தது ஒரு காலம்.புத்தகங்களில் வரும் அழகுக் குறிப்புகளையெல்லாம் வெட்டி பொருள்களை சேகரித்து அம்மாவிடம் தயாரிக்கச்செய்து முகத்தில் பூசி அழகு பார்த்தது எனக்காக.திருமணத்திற்கு பிறகு கணவன் தன்னை அழகியாக புகழ வேண்டும் என்பதற்காக பொட்டு வைப்பதில் கூட ஒருமுறைக்கு பலமுறை அழித்து அழித்து அழகுபடுத்தி ரசித்தது கணவனுக்காக.ஆனால் இன்று…

அறையை விட்டு மெல்ல நடந்து போய் ஹாலில் கிடந்த சோபாவில் சப்தம் எழாமல் அமர்ந்து சுவற்றில் மாட்டியிருந்த கணவனின் படத்தை நோக்குகையில் கவலை கூடுகிறதே தவிர குறைந்தபாடில்லை.என்னையும் அறியாமல் கண்களிலிருந்து அருவியாய் நீர் கொட்டுகிறது.ஏன் ?என் கணவரை மரணம் தழுவிய பொழுது அழாத நான் திடாரென இப்படி அழுகிறேன்.ஆமாம் மனம் பழைய நினைவுகளை கிளறிவிட்டு சுவடு பதிக்க போகிறதாம்.நானும் நினைவு என்ற பெருகி வரும் வெள்ளத்தில் முழ்கப்போகிறேன்.

கற்பனையில் உருவாகும் கதைகள் சில சமயங்களில் நிஷவடிவம் தாங்கி வருவதில் ஆச்சரியப்படுதற்கில்லை.நான் எவ்வளவுக்கெவ்வளவு சீறோடும் சிறப்போடும் வளர்ந்தேனோ அதற்கு மேலாக சீரழிந்தேன் என்பது முற்றிலும் உண்மை.என்னை கொடுமையும்,துன்பமும் துவட்டி எடுத்ததைப்போல வேறெந்த பெண்ணையும் புரட்டக்கூடாது.ஒரு பெண்ணுக்கு எதிரி பெண்ணே! வாழ்க்கையில் அனுபவபூர்வமா அனுபவித்து சொல்கிறேன்.அதற்காக எல்லா பெண்களும் ஓரே மரத்தில் காய்த்த பழங்கள் இல்லையே.

இந்தியாவில் தரணி பேசும் தஞ்சையில் சின்ன கிராமத்தில் மான்குட்டியாய் துள்ளி திரிந்து கள்ளம்கபடமில்லாத என்னை திருமணங்கிற கூட்டில் அடைத்து தாலி என்ற விலங்கை மாட்டச்செய்தனர் அருமை பெற்றோர்.திருமணத்தை ஊரார் மூக்கின் மேல் விரல் வைக்க நடத்திக்காட்டினார் அப்பா.மறுவாரமே பாலுக்கு அழும் குழந்தையை அழவிட்டு வந்ததுப்போல மாமியாரும் கணவரும் இறக்கைக்கட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு பறந்து விட்டனர்.

கணவனின் முகங்கூட மூன்றுமாத கனவில் அரைகுறையாகவே தெரிந்தது.இந்த இலட்சணத்தில் கழுத்தை ஆமையாக நீட்டி இழுத்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்.நான்கு மாதங்கள் வரை பதிலேதும் வரவில்லை.ஒரு பெண் திருமணமாகாமல் பெற்றோருடன் தங்குவது சாதாரண விசயம்.அதே பெண் திருமணமாகி இருந்தால் சமுதாய வாழ்வில் விழுந்து வரைமுறையில்லாமல் மெல்லப்படுவது நிச்சயம்.என் பெற்றோர் மகளை ஊரார் வாயில் போட்டுவிட்டு துடித்த துடிப்புக்கு அளவே இல்லை.

ஆறு மாதங்களுக்கு பிறகு உங்கள் மகளை அனுப்பி வைக்க வேண்டுகிறேன் சரசு.தந்தி வரவும் அப்பா பம்பரமாக சுழல ஆரம்பித்தார்.ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருந்தபடியால் மறுவாரமே சொக்கையா மாமாவுடன் அனுப்பிவைக்க தடபுடலாயின.பதினேழு வருடங்களாக கண்ணுக்குள் மணியாக போற்றி வளர்த்த ஓரே மகளை வெளிநாட்டில் தாரைவார்த்து கொடுத்த துயரம் தாள மாட்டாமல் அம்மா சேலைத்தலைப்பாலும்,அப்பா அங்கவஸ்திரத்தாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுது ஆசிர்வதித்த காட்சி உயிர் பிரியும்வரை மறக்கவே முடியாது.

கப்பலில் ஏறி அமர்ந்ததும் கப்பலின் அமைப்பு பிரமிப்பை ஏற்படுத்தவில்லை.ஓவியங்களில் கண்டு ரசித்த, பள்ளி பாடங்களில் பவனி வந்த நிஷக்கப்பலில் பிரஞ்ஞையே இல்லாமல் உணர்ச்சியற்ற பிண்டமாக உட்கார்ந்திருக்கிறேன்.ஒரு கவிஞனாக இருந்திருந்தால் முதல் பயண அனுபவத்தில் வார்த்தைகளைக் கொட்டி கவிதை பாடியிருப்பான்.ஓவியனாக இருந்திருந்தால் கற்பனையில் கருவான ஓவியத்திற்கு உயிர்க்கொடுத்திருப்பான்.நானோ பெற்றோரையும்,சகோதரனையும் பிரிகிற வேதனையில் உடலிலுள்ள தண்ணீர் முழுவதையும் கண்ணீராக வடித்துக்கொண்டிருந்தேன்.

அக்கா என்று அழைக்கும் அன்பு குரலுக்கு சொந்தமான தம்பியை நிறைக்கையில் இருதயமே வெடித்து சிதறுவது போலிருந்தது.பெண்களுக்கு மட்டும் ஏன் ? கடவுள் ஓரவஞ்சனையாக பிறந்த வீடு என்ற இரண்டை அருளியிருக்கிறான்.பாசத்தை பிளந்து பிரிவை ஏற்படுத்துவதன்கா..உள்ளுக்குள்ளயே பொருமினேன்.

கப்பலில் இருக்கும்வரை பிறந்த வீட்டை நினைத்து உருகிய எனக்கு கெப்பல் வார்ப் துறைமுகத்தை கப்பல் அடைந்ததும் புகுந்த வீட்டு ஷனங்களின்பால் எண்ண ஓட்டம் ஓடியது.கண்ணினைக்கும் நேரத்தில் அழுது வடிந்த கண்களில் பிரகாசமான ஒளியை உண்டு பண்ணிய மனத்தின் சக்தியை என்னவென்று சொல்வது.புதிய மனிதர்களை காணப்போகிற ஆனந்தத்தில் சுவாசிக்க முடியாத அளவு இருதயத்தை இன்பத் திரைகள் மறைத்தது.கற்பனை தந்த போதையில் கால்கள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து நகர மறுத்தது.மாமியாரிடமும் மற்றவர்களிடமும் முதன் முதலில் என்ன பேசுவது ? என்னை நாகரிகமானவள் என்பார்களா ?சுத்தப்பட்டிக்காடு என்பார்களா ? அவர் என்னை காண ஓடோடி வருவாரா ? கேள்விகள் எழுந்த வண்ணமிருக்கையில் கண்கள் நாலாபக்கமும் உரித்தானவரை தேடி அலைந்தது.

ஆவலோடு தேடிய கண்களை அச்சுறுத்துவது போலிருந்தது மாமியாரின் கம்பீரமான நடை.அத்தை செளக்கியமாயிருக்கீங்களா ? கேட்கவே பயமாக இருந்தது.மளமளவென்று சாமான்களை தூக்கி வாடகை மோட்டார்வண்டியில் ஏற்றிவிட்டு மசமசன்னு நின்னு வேடிக்கை பார்க்காம டேக்ஸில ஏறி உட்காரு.சொக்கையா வீட்டுக்கு வந்துட்டு போகலாம் வா..மாமியார் பதவியின் அதிகாரம் துள் பறக்க அப்பாவியாக சொக்கையா மாமாவை பார்த்தேன்.

ஏன் அத்தை அவர் வரலை ?கேட்க துடித்த நாவை மடக்கிக்கொண்டேன்.சில நேரங்களில் சிலவற்றை பேசாமலிருப்பது நல்லதில்லையா.சுவாசங்கள் மட்டும் சத்தமில்லாமல் யுத்தம் செய்தது.

நான் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தபோது முறையான ஆரத்திக்கூட இல்லை.மாமியார் வந்ததும் வராததுமாக சாமான்களை வெளியேவே போட்டுவிட்டு தொலைபேசியில் கதை அளக்க;நாத்தனார் இருவரும் தொலைக்காட்சியில் விழிகளை தொலைத்துவிட்டு அமர்ந்திருக்க;கொழுந்தனாரோ பகலவன் உடம்பை பதம்பார்க்கும்வரை நெளிந்து நெளிந்து உறங்கிக்கொண்டிருக்க;உலகிற்கு புதிதாக அறிமுகமாகும் குழந்தையாய் மலங்க மலங்க விழித்தப்படி ஒன்றுமே புரியாதவளாக கணவனை ஏறிட்டு நோக்குகிறேன்.அவரோ உலக நடப்புகளை குனிந்த தலை நிமிராமல் புரட்டிக்கொண்டிருக்கிறார்.

ச்சே…இது என்ன வந்தவர்களை மதிக்காத குடும்பம்.ஆள் அரவம்கூடவா புலன்களுக்கு எட்டவில்லை.தமிழர்களின் பண்பாடே விருந்தினரை வாய்கொள்ளாமல் உபசரிப்பதுதானே.நானும்,சொக்கையா மாமாவும் எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க நிற்பது.அடுத்தவர் வீட்டில் நாற்காலியை தானே இழுத்துப்போட்டு அமர்வதற்கும்,பணிவாக இருக்கையை காட்டி உட்கார சொல்வதற்கும் வித்தியாசமில்லையா ?என்னை அல்ல சொக்கையா மாமாவைதான்.

என்னை பார்த்து சிரிக்க முடியாமல் சிரித்த சொக்கையா மாமா,கலா…சமத்தா இருந்து சத்திரமா இருக்கிற வீட்டை பல்கலைக்கழகமா மாற்றி ரங்கன் பேரை காப்பாற்றும்மா விடைப்பெற்ற பொழுது கண்கள் பனித்தது.

அப்படியே எல்லாத்தையும் போட்டுவிட்டு ஓடிப்போய்,மாமா…என்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிடுங்களேன்னு காலை பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் வாழ்ந்துதான் தீரவேண்டும் கழுத்தில் தொங்கிய தாலி நெஞ்சுக்கூட்டை அழுத்தி எச்சரித்தது.

என் உள்ளம் அழுதது சொக்கையா மாமா காதுகளில் விழுந்திருக்குமோ இரண்டு அடி நடந்தவர் திரும்ப என்னிடம் வந்தார்.வாயிற்படியில் பண்ணி வைத்த சிலையாக நிற்கிறேன்.

கலா…பெண்கள் கடைசிவரை ஆண்களைச்சார்ந்தே வாழனும்னு எதிர்பார்க்கிறது தவறு.குறிப்பா நீ இந்தியாவிலிருந்து வந்திருக்கே.அதனால உன்னை நீயே நம்பி வாழ கத்துக்க முயற்சி பண்ணு அவர் கடைசி நிமிடத்தில் உதிர்த்துவிட்டுபோன வார்த்தைகள் வாழ்க்கைக்கு உதவியது உண்மையே.

ஷனநெரிசலில் உலவிவிட்டு திடாரென திக்கு தெரியாத காட்டில் வாயில்லா ஜீவன்களுக்கு நடுவில் இருப்பது போன்ற உணர்வு.என்னையும் அறியாத சக்தி கட்டளையிட்டு குளியலறைக்குள் இழுத்துச்சென்றது. குளித்துவிட்டு திரும்பியபோது வீடு நூலகத்தைவிட அமைதியாய் இருந்தது.இது மாயமா ?மந்திரமா ? ஒன்றுமே புரியாமல் ஹாலில் பிரவேசித்தேன் யாருமே இல்லை.

கலா…சிங்கப்பூர் பிடிச்சிருக்கா ?சத்தம் வந்த திசையில் கணவர் கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

அட..பெயர்கூட ஞாபகம் வைச்சிருக்கீங்க போலிருக்கு நக்கலாகவே கேட்டேன்.

வாழ்க்கை முழுவதும் துணைவர்றவளோட பேரை எப்படி மறக்க முடியும்.வயது வந்த தங்கைகளுக்கு முன்னால அதிகபிரசங்கித்தனமா அசடு வழிய இளிக்கிறது பேசுறது அம்மாவுக்கு பிடிக்காது.அதனாலதான் பேசாம இருந்துட்டேன்.

எனக்கு பகீரென்றது.புதுப்பொண்டாட்டியை பலபேர் முன்னிலையில் கட்டி பிடித்து காதல் கானமா பாடச் சொன்னேன்.கண்ணே.! மணியே..! முத்தே என்று குலாவச் சொன்னேனா ?இல்லையே..! தாலி கட்டின கையோடு விட்டு வந்த மனைவியை எப்படி இருக்கே ?கடல் பிரயாணம் நல்லாயிருந்ததா ? மனதை குளிர வைக்கும் வார்த்தைக்குத்தானே ஒவ்வொரு பெண்ணும் ஏங்குகிறாள்.நான் மட்டிலும் விதிவிலக்கா என்ன ? தொண்டையிலிருந்து திமிறிக்கொண்டு வெளிவர துடித்த சொற்களை மென்று விழுங்கினேன்.

ஆமாம்…சொக்கையாவுக்கு மாரை போட்டு மரியாதை செய்யலன்னு சொல்லாம,கொள்ளாம ஓடிட்டாரா ?

அவர் மரியாதை தேடி அலைபவர்ன்னா மதியாதார் வீட்டுக்கு வருவாரா.அத்தை அவரை அவமானப்படுத்தனும்னே அழைச்சிட்டு வந்திருக்காங்க.

கலா…நீ வீட்டுக்கள்ள நுழைந்து முழுமையா இரண்டு மணிநேரங்கூட ஆகலை.அதுக்குள்ள குறைகூற ஆரம்பிச்சிட்டியா ?

நான் குறை சொல்லங்க.எனக்காக வந்தவரை அர்த்தமில்லாம அவமதித்ததை ஏத்துக்க முடியல..அவ்வளவுதான்.

கலா…குற்றம் குறைகளை பொறுத்து போறதுக்கு பெயர்தான் வாழ்க்கை.எதிர்கால நலன்கருதி சிலவற்றை வெளிப்படையாகவே பேசுறேன்.அம்மா அறிந்தோ,அறியாமலோ முடிஞ்சிட்டு என்கிட்ட அவுத்துவிட்ற பழக்கம் வைச்சிக்காதே.நம்ப குடும்ப பிரச்சனையை நபக்குள்ளயே போட்டு புதைச்சிடணும்.மத்தவங்ககிட்ட விட்டியன்னா சின்ன விசயத்தை பெரிசுபடுத்தி பூகம்பத்தையே உண்டு பண்ணிடுவாங்க.பல குடும்பங்கள் பத்தி எரியிறதுக்கு காரணமே எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறவங்க வீசுற தீப்பொறிதான். என்னால மீனுக்கு வாலையும்,பாம்புக்கு தலையையும் காட்டி ஏமாத்த முடியாது.அம்மாவுக்கு பாசமுள்ள பிள்ளையாகவும்,மனைவிக்கு அன்புமாக்க கணவனாகவும் இருக்க ஆசைப்பட்றேன். எல்லாம் மனைவியாகிய உன் கையாலதான் இருக்கு.

அன்று அவர் அரைமணிநேரம் அளித்த அறிவுரைக்கு கொஞ்சம் கொங்சமாக விளக்கவுரை நடைமுறை வாழ்க்கையில் கிடைத்தது.மாமியாரின் திருவாய்க்கு பயந்தே சிங்கையில் பெண் கொடுக்க யாருமே முன்வரவில்லை.அப்படியே வந்தாலும் தான் அடிக்கும் லூட்டிகளை கண்டு சும்மாயிருப்பாளா ?புருசன்கிட்ட சொல்லுவா.அவன் ஆ,ஊன்னா போடா நீயும் உன் அம்மாவும்னு கிளம்பிடமாட்டா.மகனுக்கு திரும்பவும் பெண் பார்ப்பது சாதாரண விசயமா ?கணக்கு போட்டு விடை கிடைக்காததால் பிறந்தகம் வந்திருக்கிறாள்.

ஊரும்பொண்ணு என்றால் அடித்தாலும்,உதைத்தாலும் வேறு வழியில்லாமல் ஒட்டுண்ணியாக நம்பளை ஒட்டியாக வேண்டும்.எதிர்த்து வாதம் செய்ய திறணில்லாதவள்;எதை சொன்னாருப் ஆம் போட்டுக்கொண்டு கிழித்த கோட்டை தாண்டமாட்டாள்;உலக நடப்புகளை அறிந்து சட்டம் பேசமாட்டாள்;எள் கேட்கும்முன்னே எண்ணெய்யோடு வந்து நிற்பாள்;இப்படி மாமியாரின் கம்பியூட்டர் மூளையில் உதித்த எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவள் நான்.

வெகுவிரைவில் குடும்ப உறுப்பினரிடையே அதிவேகமாக பேசப்பட்டேன்.அன்பு என்ற கோட்டைக்குள் உலவிய என்னை அதிகாரக்கூண்டில் அடைத்தார்கள்.ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும்,மனிததோல் போர்த்திய விலங்குகளுக்கு மத்தியில் பரவாயில்லையாக தோன்றியது.என்னை தீண்டதவளாக கருதி தனித்தே விட்டார்கள்.அதையும் ஏற்றுக்கொள்ளகூடிய பக்குவம் என்னிடம் அதிகமாகவே இருந்தது.

நாட்களை நகர்த்த முடியாமல் நகர்த்தினேன்.இந்நிலையில்தான் ஒருநாள் கோவிலில் விசேசம்னு சொல்லி கோவிலுக்கு அழைத்தார் மாமியார்.கடவுளை தரிசித்துவிட்டு மண்டபத்தில் உட்கார்ந்தோம்.

சரசு….பக்கத்துல யாரு மருமகளா ?

ஆமாம் போட்டதுதான் அருகிலிருந்த பத்து பெண்கள் குழுமிக்கொண்டு கேள்வி கேட்க தொடங்கினர்.ஊருப்பொண்ணா…சொல்லவே இல்லை.காதும் காதும் வைச்சமாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டியா ?

ஏண்டி சரசு..மருமவளுக்கு நாகரிகம் கத்துக் கொடுக்கிறதில்ல.தலையை வழிச்சி சீவி,முகத்துல எண்ணெய் வழிய அழைச்சிட்டு வந்திருக்கே.நீ நகத்திலிருந்து உதடுவரை சாயம் பூசியிருக்கே.மருமவளுக்கு பவுடரை கண்ணுலயே காட்டலையா ?

ஏம்மா ஊருப்பொண்ணு புடவை கட்ட தெரியுமா தெரியாதா ?மரப்பாச்சிக்கு சுத்தினமாதிரி புடவையை சுத்திண்டு வந்திருக்கே.மாமியார்கிட்ட மடிப்பு வைத்து ஊக்கு குத்த கத்துக்க.

அவ கல்யாணத்துக்கு பிறகுதான் புடவை கட்ட ஆரம்பிச்சா.இது மாமியார். என்னை கேலி பொருளாக நிற்க வைத்து ஓரே சிரிப்பும் களிப்புமாக பேச்சு சூடு பிடித்தது.

கோவிலுக்கு சாமி கும்பிட வந்தீங்களா ?என்னை விமர்சனம் செய்ய வந்தீங்களா ?நான் எப்படி இருக்கனும்னு நீங்க சொல்ல தேவையில்லை.இதை எதிர்பார்க்காத மாமியாரின் முகம் செத்துவிட்டது.

சரசு…கொஞ்சம் விட்டியன்னா தலையில உட்கார்ந்து மிளகாய் அரைச்சிடுவா ஷாக்கிரதை…முகத்தை சுளித்தபடி நடந்தனர்.

ஒரு பெண்ணை பெண்ணாக மதிக்க தெரியாதவள் பெண்ணாக மண்ணில் பிறந்து என்ன பயன்.மதியத்தில் உறங்கி,கேளிக்கையில் பொழுதை செலவிட்டு,அண்டைவீட்டு கதையை மெருகு போட்டு பேசி வாழ்வது குடும்ப பெண்களுக்கு அழகா ?இச்சம்பவத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து வெளியே செல்வது நின்றது.முகங்கொடுத்து பேசுவது இல்லையென்றாலும்,நடத்தையில் கடுமை காட்ட தொடங்கினார்.

நாட்டில் பிரச்சனைகள் பெருகி கிடக்கையில் நான் ஒரு பிரச்சனையாக தினந்தோறும் மெல்லப்பட்டது வேதனை அளித்தது.நடை,உடை,பாவனை பரிகசிக்கப்பட்டபோதும் முன்னால் விட்டு பின்னால் பழித்தபோதும் வலதுகாதின் வழி வாங்கி இடதுகாதின் வழி விட்டேனே தவிர அவர்களுக்காக என்னை மாற்றி கொள்ள விரும்பவில்லை.

என்னால் முடிந்த அளவு நன்றாக சமைத்தாலும் உப்பு இல்லை,காரம் இல்லை, புளி இல்லை,கறியா இது ?கொழுந்தனார் தட்டுகளை சோற்றோடு பறக்கவும் விட்டிருக்கிறார்.நான் கண்டு கொண்டதாக காண்பித்து கொள்வதே இல்லை.அவரிடம் முறையிடுவது முறையாக படவில்லை.

அவர் இளங்கதிர் எழாத நேரத்தில் வேலைக்கு செல்பவர் சூரியனின் அஸ்தமத்துக்கு பிறகுதான் வீடு திரும்புவார்.அவரிடம் கூடுமானரை சிரித்து சந்தோசப்படுத்துவனே தவிர சங்கடத்தில் ஆழ்த்தமாட்டேன்.போக போக மாமியாரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் திராவமாக விழுந்தது.நிற்பதில் குற்றம்;நடப்பதில் குற்றம்;பேசுவது,சிரிப்பது எல்லாத்திலேயும் குற்றமென்றால் எதில் குற்றமில்லை.குடும்பம் என்பது அன்பின் பிணைப்பா இருக்கையில் இவர்களிடம் மட்டும் ஏன் ஆணவம்,அலட்சியம்,அதிகாரம்,ஏளனம்,இறுமாப்பு பெறுகி கிடக்கிறது.எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமலே போய்விட்டது.

பல இன்னல்களையும்,இடர்பாடுகளையும் தாங்கிய இதயத்தால் பெற்றவர்கள் மற்றவர்கள் முன் தரக்குறைவாக பேசப்பட்டபோது,இருதயம் எகிறி அனலில் குதித்த புழுவாக துடித்தது.இரவு முழுவதும் தலையணையை தாயின் மடியாக்கிக் கொண்டு அழுது தீர்த்தேன்.

அம்மா….நீங்கள் பெற்ற பொல்லாத மகளொருத்தி படும் வேதனையை அறிவீர்களா ?ஐம்பது வயது வாழ்க்கை பயணத்தில் நீங்கள் அனுபவிக்காத போராட்டதை ஆறே மாதத்தில் சந்தித்து விட்டேனேம்மா. தலையணையிடம் சொல்லி அழுதேனே தவிர அம்மாவுக்கு கடிதத்தில் கூட தெரியபடுத்தவில்லை.பணத்தை பாராம செலவு திருமணம் செய்தும் பெண்ணோட வாழ்க்கை இப்படி ஆயிட்டேன்னு காலம் முழுவதும் கவலைப்படகூடாது என்பதற்காக அம்மா நல்லாயிருக்கியான்னு கடிதம் எழுதினாலும் நல்லாயிருக்கேன்னு பதில் போடறதோட சரி.

மனம் பாறையாக இறுகி கிடந்த வேளையில் ஆண்மகவு ஒன்றை ஈன்றெடுத்தேன்.குழந்தையின் வரவு குடும்பத்தில் ஓரளவு குதூகலத்தை கொண்டு வந்தது.பக்குவப்படாத இருதய ஏட்டில் சொல் அம்புகளால் குத்தப்பட்டு ரத்தம் வடிந்த புண்ணுக்கு ராஷுவின் பால் வடியும் முகம் மருந்திட்டது. குடும்ப உறுப்பினர்களின் போக்கிலும் நிறைய மாற்றம் தெரிய ஆரம்பித்தது.குழந்தையை ஆளாளுக்கு வாரி எடுத்து முத்த மழையில் நனைத்தார்கள்.நானும் கடந்த காலத்தை மறந்து எதிர்காலம் பற்றிய சிந்தனையில் முழ்கினேன்.

அவ்வப்போது குழந்தையை தூக்கிக்கொண்டு காற்றாட போகும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தபொழுது பக்கத்து புளோக்கில் குடியிருந்த தேவகியம்மாளின் அறிமுகம் கிடைத்தது.தேவகியம்மாளுக்கு ஓரே பெண்.அவள் திருமணம் வேண்டாமென்று இருக்கிறாளாம்.வயது வித்தியாசமில்லாமல் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம்.அந்த ஆழமான நட்புதான் உறவுகளால் உதறிவிடப்பட்டபோது உதவிக்கரம் கொடுத்து தாங்கிப்பிடித்தது.

ராஷு பிறந்து ஒரு வருடம் ஆகுமுன்பே மீண்டும் கருவுற்றேன்.இந்நிலையில் கணவர் இருதய நோயாளி என்பது தெரியவந்தது.அவருக்கு இருதய வியாதி அறிந்தும் இதயமில்லாதவர்கள் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.ஒரு ஆன்மாவுடைய ஆத்ம திருப்திக்காக மூன்று ஆன்மாக்கள் அவதிப்பட வேண்டும் என்பது மாமியாரின் கொள்கை.

இவராவது வாயை திறந்திருந்தால் அடித்தளத்தை உறுதியா அமைக்குமுன்னே கட்டிடத்தை எழுப்பியிருக்கமாட்டேன்.என் தலையில் எழுதி வைத்ததை யாரால் மாற்ற முடியும்.கணவர் படுத்த படிக்கையானார்.ஒரு அப்பாவி பொண்ணை நயவஞ்சகமாக ஏமாற்றி இடுப்பில் ஒன்று,வயிற்றில் ஒன்று என்று இரண்டு ஜீவன்களை தலையில் கட்டி வாழ்க்கையையே கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்களே ?நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவரிடம் கத்த முடியுமா ?

என் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டதாக இடிந்து உட்காராமல்,அவரை அன்பு என்ற வஸ்துவால் குளிப்பாட்டி,தைரியம் என்ற மருந்தை நாடி நரம்புகளில் ஏற்றினேன்.இதன் விளைவு நாட்களை மட்டுமே நீட்டமுடிந்ததே தவிர சாவித்திரிபோல் எமனிடம் போராட முடியவில்லை.

எட்டுமாத கர்ப்பிணியாய் இடுப்பை பிடித்து நடந்தபொழுது ஈவு இரக்கமில்லாத மரணம் அவரை தழுவிக்கொள்ள செய்வதறியாது திகைத்து நின்றேன்.இவ வயித்துல சனியன் பிடிச்ச பீடை என்ன நேரத்திலோ தரிச்சதோ பிறக்குமுன்னே அப்பனே போட்டு விழுங்கிட்டு.காதில் விழுந்ததுதான் தொண்டை அடைத்துக்கொள்ள கண்களில் ஓடிய கண்ணீர் மடைபோட்டு அப்படியே நின்றது.என் கணவர் இறந்ததற்கு என் பிள்ளை காரணமென ஆளாளுக்கு இஸ்டப்படி கதை ஷோடித்தது செவிகளை தாக்கியது.நான் ஏன் அழவில்லை ?கருத்து பரிமாற்றம் நடந்தேறியது.உடலாலும்,உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவள் கருங்கல்லாய் அமர்ந்திரக்க ,துக்கம் விசாரிக்க வந்தவர்கள் மெழுகாய் உருகியது வெறுப்பாய் இருந்தது.

நாளைய நினைத்தபோது நம்பிக்கையே இல்லை.பார்வைக்கு எட்டியதூரம் வரை வறண்ட பாலைவனமாக காட்சியளித்தது.இந்த பாலைவனத்தில் இரண்டு கன்றுகளை நட்டு மரமாக்க வேண்டும்.கணவன் அருகிலிருக்கும் போதே துரும்புக்கு மதிக்காதவர்கள் தற்போது தூசிக்கு மதிப்பார்களா ?பால் மாவு வாங்குவதற்கே யாரிடம் கையேந்துவது என்கிற நிலையில் முடிகிற காரியமா ?கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றால் கேட்பவர்கள் கேலி செய்யமாட்டார்களா ?

மருமகனை இழந்த துயரத்தில் மகளை ஊருக்கு வரச்சொல்லி புலம்பி கடிதம் எழுதியிருந்தாள் அம்மா.பதினேழு வருடங்கள் கொடுத்த தொல்லை போதாதென்று இனிமேலுமா ? தம்பி தங்க கம்பியாகவே இருந்தாலும் வாக்கப்பட்டு வருபவள் எப்படியோ…வேண்டாம்.என் பிள்ளை என்னை முழுமையாக நம்பி உலகிற்கு அறிமுகமானவர்கள்.அப்படியிருக்கையில் மனம் ஏன் மற்றவர்களை நாடி ஓடுகிறது;தேடுகிறது;வாடுகிறது.இரண்டு குழந்தைகளை பெறுவதற்கு உடம்பிலுள்ள சக்தி வளர்ப்பதற்கு இல்லாமலா போய்விடும்.

ஆண்டவன் உழைப்பதற்காகதான் திடமான கை கால்களை அளித்திருக்கிறான்.அடுத்தவரை அண்டிபிழைப்பதற்காக அல்லவே.எனக்குள் தைரியம் திடாரென முளைத்து மூச்சு முட்ட சிந்திக்க வைத்த போதிலும் செயல்படுத்த ஊக்கமில்லை.

கணவன் இறந்த தினத்திலிருந்து ராஷுவுக்கு செவிலிதாயாக இருந்து பராமரித்தது தேவகியம்மாளின் மகள் மேகலைதான்.இரண்டுவாரம் மூலையில் முடங்கிகிடந்த என்னை தட்டி உட்காரவைத்ததும் மேகலைதான்.

கலா…சுவற்றை வெறிக்கிறதால இழந்தது திரும்ப கிடைக்க போறதில்ல.புருசன்கிட்ட சேமிப்பு இல்லாத நிலையில அறையில அடைப்பட்டுகிடக்கிறது எனக்கு நியாயமா படலை.சம்பிராதாயங்களையும், சடங்குகளையும் மதிக்க வேண்டாம்னு சொல்லலை.அம்மா…பசிக்குதேன்னு வாய்விட்டு அழும் குழந்தைக்கு சம்பிராதாயங்களும், சடங்குகளும் சோறு போடுமா ?ங்கிறது கேள்வி.வயிற்றுக்குள்ள வளரும் சிசு நிம்மதி காற்றை சுவாசிக்குமா ?மாமியார் கருமாதி முடிந்த கையோடு இந்தியாவுக்கு கப்பலேத்திவிட பிளான் பண்ணிட்டுயிருக்காங்க.நீ போகபோறீயா ?எங்கே போனாலும் உட்கார்ந்து பிள்ளைகளை வளர்க்க முடியாது.அதனால…இங்கேயே வேலைக்கு போகலாம்.என்ன சொல்றே…. ?

இந்த நிலையில போனா யாரும் ஏதும் சொல்லமாட்டங்களா ?

இந்த உலகம் என்ன பேசும்னு கவலைப்படாதே.நீ என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.சமுதாயம் குறைகளை தேடிபிடித்து அலசி தூற்றுவது சகஷம்.அதுல விழாம எழறது கஸ்டம்.துற்றுபவர்கள் தூற்றட்டும்னு துடைச்சி எறிஞ்சிட்டு நடக்கணும்.வாழ்க்கையின் ஆரம்பத்தில் துவண்டு விழுந்தா பின்னால நிமிர்ந்து நிற்க முடியாம போயிடும்.நல்லா சிந்தித்து பார்த்து முடிவுக்கு வா.

மேகலையின் கருத்தில் முரண்பாடு இல்லாததால் கருமாதி மறுநாளே ராஷுவை தேவகியம்மாளிடம் விட்டுவிட்டு வயிற்றுப்பிள்ளையோடு தொழிற்சாலையில் துப்புரவு வேலைக்குச்சென்றேன்.சாயங்காலமே என் உடைமைகள் வெளியே நாதியில்லாமல் கிடந்தது.சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லாத நிலையில் எங்கே போறது.உலகத்தில் நடக்காததையா செய்துட்டேன்.திருமணமாகாத மூன்று பிள்ளைகளையும் நினைத்து பாராம குடும்ப கெளரவத்தை காற்றில் பறக்க விட்டதாக மாமியார் திட்டினார்.கொழுந்தனாரோ கதவை அறைந்து முகத்தில் அடிப்பதுபோல சாத்தினார்.

தேற்றுவார் இல்லாத குழந்தையாய் அழுதபடி இறுக அணைத்த ராஷுவுடன் சிலையாக நிற்கிறேன்.இதை எதிர்பார்த்தவர் போல தேவகியம்மாள் தோளை தட்டிக்கொடுத்து வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.அவரின் மடியில் தலையை கவிழ்த்து,அம்மா.. பொல்லாத பெண் பிறவியை ஏன் எடுத்தேன்.ஓவென்று அழ ஆரம்பித்து விட்டேன்.முடியை கோதி முதுகை தடவிக்கொடுத்து தாயின் பரிவை காட்டி ஆறுதல் கூறினார்.

கலா…உன்னை அந்த வீட்டுலயிருந்து வெளியாக்கணுங்கிறது என்னோட எண்ணம் கிடையாது.உனக்கு வாழ்க்கை பற்றிய தவறான அபிப்ராயம் வந்துடக்கூடாதுங்கிறதுக்காகதான் வெளியே வரசெய்தேன்.இதிலில் தவறு எதாவது இருந்தால் என்னை மன்னிச்சுடு.

மேகலை..மனிதபிறவியில மன்னிப்புங்கிற வார்த்தையே தேவையில்லை.நீ என்னை நகரத்திலிருந்து வெளியே கொண்டு வந்துருக்கே.மனிதர்களை இனங்கண்டுக்க அருமையான சந்தர்ப்பத்தை நல்கி வாழ்க்கையை புரிய வைத்ததுக்கு காலம் முழுவதும் கடமைபட்டிருக்கேன் என்றபோது என் மனம் விம்மி வெடித்தது.

அதன்பிறகு கிட்டதட்ட இருபத்தி மூன்று ஆண்டுகள் தேவகியம்பாள் வீட்டில்தான் பிள்ளைகளுடன் இருந்தேன்.இன்று புதிதாக வாங்கிய என் வீட்டில் நான்,மகன் ராஷு,மகள் அல்லி மூவரும் வசிக்கிறோம்.அல்லி பிறந்தபோதுகூட மாமியார் வந்து பார்க்கவே இல்லை.இன்றைக்கு என் மகன் பத்திரிக்கை துறையிலும்,மகள் ஆசிரியர் துறையிலும் படிப்பதற்கு பக்கபலமாக இருந்தவர் மேகலைதான்.தாயின் பாசத்தையும்,தங்கையின் அரவணைப்பையும் அவர்களிடம் முழுமையாகவே பெற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.பல சந்தர்ப்பங்களில் மாமியாரை சந்தித்து பேசகூடிய வாய்ப்பை வலுகட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டு பேச முயலுகையில்,என்னை கடுஞ்சொற்களால் காயப்படுத்தியதோடு களங்கத்தை கட்டியதுதான் கண்ட பலனாக இருந்தது.

என் வெளிநாடு என்றவுடன் விவாதிக்க நேரமில்லாமல் அவசர அவசரமாக செய்த தவறினால் என் வாழ்க்கையின் திசையே மாறிவிட்டது.என் திருமணம் மார்கழி மாதத்து பனியில் நனைந்த கோலமாக மறைந்தாலும்,அதில் இரண்டு எறும்புகள் ஜீவன் பெற்ற திருப்தி எனக்குள்.

முற்றும்.

சுஷாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்