ஊதுகிற சங்கு

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

பாரதிராமன்


பிரபல ரஷ்ய டென்னிஸ் வீரர் காஃபல்னிகாவ் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வென்றவுடன் பாாிஸ் நகரப் பார்வையாளர்களுக்கு நன்றி கூறியபோது ஆங்கிலத்தில் பேசினார். அவாிடம் தோல்வியுற்ற மைக்கேல் ஸ்டிக் அடுத்து பேசும்போது ஃப்ரெஞ்ச் மொழியில் பேசி கூட்டத்தினாிடம் பலத்த கைதட்டல் பெற்றார். மொழி தொியாது தவித்துக்கொண்டிருந்த காஃபல்னிகாவைப் பார்த்து ‘நீங்கள் சீக்கிரம் ஃப்ரெஞ்ச் கற்றுக்கொள்ளுங்கள் ‘ என்று கூறிவிட்டு அவர் மேலும் பலத்த கைதட்டல்கள் பெற்றார். அப்போது காஃபல்னிகாவ் இதே போட்டியும் வெற்றி விழாவும் மாஸ்கோவில் நடைபெற்றிருந்தால் ரஷ்ய மொழியை விரைவில் கற்றுக்கொள்ளும்படி மைக்கேல் ஸ்டிக்கை கேட்டுவிட்டு மிகப் பலத்த கைதட்டல்களை ரஷ்யப் பார்வையாளர்களிடமிருந்து தான் பெற்றிருக்க முடியுமே என்று எண்ணியிருக்கக்கூடும். உண்மைதான், மொழி விசுவாசமோ, கர்வமோ, வெறியோ இன்று அந்த அளவிற்குப் போய்விட்டிருக்கிறது உலக விளையாட்டு அரங்கிலேயே.

செப்புமொழி பதினெட்டு உடைய நம் நாட்டிலோ கேட்கவே வேண்டாம். மொழி எங்குமே, என்றுமே பிரச்சனைதான். அரசியல்வாதிகளும், சமூகத்தலைவர்களும், பொழுதுபோகாதவர்களும் தீர்வு காண முடியாத பிரச்சனையாக அதை வைத்திருப்பதிலேயே ஈடுபட்டு வருகிறார்கள். நம் நாட்டின் பொது மொழியாக இந்தி வேண்டுமா, இருக்க முடியுமா, ஆங்கிலம் வேண்டுமா, இருக்க முடியுமா அல்லது அனைத்து இந்திய மொழிகளுமே– சென்னைத்தமிழ் உள்பட, ஏனெனில் இன்றைய அளவிற்குப் பாிணாம வளர்ச்சி அடைந்திராவிட்டாலும் செப்பு மொழி பதினெட்டில் பாரதியார் அன்றைய சென்னைத் தமிழையும் சேர்த்திருக்கத்தானே வேண்டும்– போட்டியின்றி சம அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல் படுத்தப்பட முடியுமா என்ற கேள்விகளுக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் இறுதியான தீர்ப்பை இன்னும் வழங்கவில்லை. மக்களோ இதைப்பற்றிய சிந்தனை இன்றி தமக்குத் தொிந்த வழியில், தங்கள் வசதிக்கேற்ப, அதிகமான வித்தியாசங்களைக் கற்பித்துக் கொள்ளாமல் தங்களது அன்றாட அலுவல்களைக் கவனித்து வருகிறார்கள். இதை இப்படியே இருக்க விடலாமா ?

‘ பாத் மே தேக் லேன் ‘-( பிறகு பார்த்துக் கொள்ளலாம் )- டெல்லியில் தினசாி வாழ்க்கையிலிருந்து தான் கற்றுக்கொண்ட சில இந்தி வார்த்தைகளை மக்களவையில் சுட்டிப்பேசிய ப. சிதம்பரம் அப்போதைய பிரதமருக்கு இந்தி தொியாதது வெட்கப்படவேண்டிய விஷயமல்ல என்கிறார். ஏன், ஆங்கிலமோ, இந்தியோ அல்லது வேறு இந்திய மொழியோ தொியாதிருப்பது வெட்கத்துக்குாியதல்ல என்ற அவர் வட இந்திய எம்.பிக்களைப் பார்த்து ‘ ஏன் நீங்கள் தமிழ் கற்றுக்கொள்ளக்கூடாது ? ‘ என்றும் கேட்கிறார். அன்றைய பாரதப்

பிரதமரோ தேச மக்களுக்கு இந்தியில் உரையாற்ற முடியாத்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மூன்று மாதங்களில் இந்தியை கற்றுக்கொண்டுவிடுவதாக வாக்களிக்கிறார். கோவாவைச் சார்ந்த எம்.பி. தன் கன்னிப் பேச்சை கொங்கணியில் முழங்குகிறார், அவரது பேச்சு அவரைத் தவிர வேறு எவருக்குமே புாியவாய்ப்பில்லை என்று தொிந்தும்கூட. இவையெல்லாம் மொழிப்போர்களில் முடியப்போகின்றனவா அல்லது ‘ 30 நாட்களில் கற்பது எப்படி ? ‘ என்ற தலைப்பில் வெளியிடப்படும் மொழி ஆசான் புத்தகங்களின் விற்பனைக் கூடுதலில் முடியப்போகின்றனவா என்பதை அனுமானிப்பது கடினம்தான். என்றாலும் நான் சொல்லிய ‘ மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ‘ எந்த நிலப்பாடை கைக்கொள்வார்களோ அதைப் பொருத்துதான் எல்லா முடிவுகளும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘ தென்னிந்தியர்கள் இந்தியைச் சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள் ஆனால் தென்னிந்திய மொழிகளைக் கற்பது எங்களுக்குக் கடினமாக உள்ளது ‘ என்கிறார்கள் பெரும்பாலான வட இந்தியர்கள். இது உண்மையா அல்லது அவர்களுடைய முயலாமையும் பிடிவாதமும்தான் இதற்குக் காரணமா ? கடினம் என்பது ஓரளவு உன்மை என்றால் தென்னிந்திய மொழிகளை, குறிப்பாக தமிழை எளிமைப்படுத்துவது எப்படி ?

எல்லா முன்னேற்றச் செயல்களுக்கும் வெறும் ஆர்வம் மட்டுமே போதாது. திறந்த மனம், பரந்த நோக்கு, சமரச பாவம், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, பெரும்பான்மையோடு ஒத்துப்போதல், சிறுபான்மை கருத்துக்களாயினும் சீர்தூக்கிப் பார்த்தல், இவற்றோடு பழைமைகளின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடும் துணிச்சலும், முட்டுக்கட்டுகளை முறியடித்து மக்களை ஈர்க்கும் வழி காட்டுதலும் மிகவும் தேவை. இவை அமைய நாம் அனைவரும் கூடி முயற்சிப்போமானால் தமிழின் முன்னேற்றத்தை எவர் தடுக்கமுடியும் ?

இன்னமும் சங்க காலப் பெருமைகளைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பது நமக்குப் பெருமையல்ல. நமக்குப் பின்னால் ஓட ஆரம்பித்தவர்கள் நம்மைக் கடந்து வெகு தூரம் சென்றுவிட்டார்கள். அவர்களைக் கடக்க முடியுமோ இல்லையோ அவர்களை எட்டிப் பிடிக்கும் அளவுக்காவது நாம் ஓடியாகவேண்டும். சங்கத் தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் பொக்கிஷங்கள்தான். ஆனால் அவற்றிலிருப்பது போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய பழைய காலத்து முத்திரைக் காசுகள், இன்றைய உலகச் செலாவணிக்கான டாலர் நோட்டுகள் அல்ல. பலவேறு மொழிகளை உருவாக்கிய ஆதிகால வல்லுனர்களை நாம் போற்றக் கடமைப் பட்டுள்ள அதே நேரத்தில் ஒரு புதிய மொழியைத் தோற்றுவித்தபோது ஏற்கெனவே இருந்த மொழியாளர்களிடம் ‘ எங்களுக்குத் தேவையான சொற்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள், நாங்களும் உங்கள் மொழியையே ஏற்றுக்கொள்கிறோம் ‘ என்று அவர்கள் சமரசம் பேசத் தவறிவிட்டார்களே என்ற வருத்தமும் நமக்கு ஏற்படுகிறது. நம் நாட்டைப் பொருத்தவரையில் தமிழும் சமஸ்கிருதமுமாகவே நாடு முழுவதும் இருந்திருக்கவேண்டியதுபோக இன்று செப்புமொழி பதினெட்டாக கிளைகள்விட்டு இன்றைய மாறிவரும் சூழலில் பிரச்சினைகளுக்கிடமாகவும் ஆகிவிட்டிருக்கிறது. மக்களின் வழக்காற்று மொழிக்கும் அறிஞர்களின் இலக்கியப் புலமை சார்ந்த மொழிக்கும் இடையே ஏற்பட்ட வேறுபாடுகளும், கிராம, நகர, காட்டு மாந்தர் ஆகியோர்களுக்கிடையே கிளைத்த வேற்றுமைகளின் வெளிப்பாடுகளும், விாிவடைந்துகொண்டேவந்த மனித நாகாிகத்தின் தேவைகளும் மொழிகளின் திாிபுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கலாம். சங்ககாலத் தொகை நூலகளின் தமிழ் மொழிவகையில் பிற்காலத் த்மிழினும் பார்க்க எவ்வாறு வேறுபட்டுக் காணப்படுகிறதோ அதனினும் பார்க்க அதிக அளவில் வேத காலத்து பாலி மொழி அர்த்தமாகதி, பிராகிருதம், அபப்ரம்சம் என வேறுபட்டு இன்றைய சமஸ்கிருதமாகிப்போனதை நாம் பார்க்கவில்லையா ?

பேச்சு மொழிகளின் வேறுபாடுகளுக்கான இந்த அடிப்படைக் காரணங்கள் அம்மொழிகளுடைய எழுத்துக்களின் வாி வடிவங்களிலும்வேறுபாடுகளைத் தோற்றுவித்திருக்கின்றன. மனிதன் சார்ந்திருந்த உலகத்தின் காட்சிப்பொருட்களின் வேறுபாடுகளும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இவைகளையெல்லாம் மொழி ஆராய்ச்சிக்காரர்களிடம் விட்டுவிட்டு இன்றைய இருப்பில் குறைந்தபட்ச இழப்புக்களுடன் நமது மொழியை வளப்படுத்துவது எப்படி என்பதை மட்டும் நாம் கருத்தில் கொண்டு தொடரவேண்டியிருக்கிறது.

நல்ல வேளையாக நம் தமிழ் மொழிக்கான இலக்கணம் எளிமையானதாகவே அமைந்திருப்பதால் இத்துறையில் அதிகமான மாற்றங்கள் தேவைப்படா. நன்னூலில் விவாிக்கப்பட்டுள்ள எழுத்து, சொல் அதிகார விதிகள் இன்றும் கடைப்பிடிக்க முடிந்தவைகளாக உள்ளன. இருப்பினும் சில எழுத்துகள் மொழிமுதலாகா என்ற விதிகளை முன்னிருத்தி இராமன், இலட்சுமணன்,

இடம்பம் என்று எழுதவேண்டியிருப்பதை தளர்த்திக்கொண்டு சொற்களைப் பேசுவதுபோலவே எழுதுவதை அனுமதிக்கவேண்டும். எழுதியபடியே உச்சாிப்பு இருக்கவ்வேண்டுமென்றாலும் சில சமயங்களில் உச்சாிப்பு எழுத்தினின்றும் மாறுபடுகிறது. பழக்கத்தின் வாயிலாக தமிழர்கள் சில உச்சாிப்புகளைச் சாியாகச் செய்தாலும், தமிழை புத்தகத்தின்மூலம் கற்பவர்களும் அவ்வாறு செய்ய இயலுமாறு அவற்றுக்கான வாிவடிவங்கள் இல்லை. வட இந்திய மொழிகள், தமிழ் நீங்கிய தென்னிந்திய மொழிகளில் இக்குறைபாடுகள் இல்லாமைக்குக் கரணம் அவை ஒவ்வொரு மெய்யெழுத்து வாிசையிலும் நான்கு ஒலி பேதங்களைக் குறிக்கும் வாிவடிவங்களை ஏற்றுக்கொண்டதுதான். உதாரணமாக தமிழில் படம் (PADAM),பலம் (BALAM),பயம் (BHAYAM) என்ற சொற்களில் உள்ள ப என்ற எழுத்தை வெவ்வேறு ஒலிகளில் உச்சாித்தாலும் எழுத்து வடிவத்தில் ஒரே விதமாகவே எழுதுகிறோம். இதை வேறுபடுத்திக்காட்ட ப, ப(ஒரு அடிக்கோடு) , ப (இரண்டு அடிக்கோடு) என்று அடிக்கோடுகளைப் பயன்படுத்தலாம். சிலர் தடிமனான எழுத்தை சிபாாிசு செய்வர். திராவிடத்தன்மை மேலிட மேலிட நாம், தமிழிலிருந்து ஜ,ஸ,ஷ,க்ஷ,ஹ போன்ற எழுத்துக்களை நீக்கிவிட்டோம். அவை தனியான ஒலி அமைப்புகளைக் கொண்டிருப்பதால் தூய்மை என்ற பெயாில் சுத்தமாய் அவற்றை நீக்கிவிட்டு ச, க, ட்ச, அ என்ற எழுத்துக்களே போதும் என்று எண்ணுவது சாியல்ல. தமிழர்களில் நிறைய முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களிலும் பேச்சிலும் இவ்வெழுத்துக்களின் ஒலி நிறையவே இருப்பதால் இவை தமிழுக்குத் தேவையே.

வேறு சில எழுத்துக்களைப் புறக்கணிப்பதும் பகிரங்கமாகவே நடந்துவருகிறது. நமது டி.வி. அறிவிப்பாளர்களும் நாடக நடிகர்களும் தமிழுக்கு ா ளா தேவையில்லை என்று மக்களை சுலபமாக நம்பிக்கை கொல்ல வைத்திருக்கிறார்கல். தமிளனுடைய ா ழா வுக்கும் ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. இந்தப் போக்கையும் நிறுத்தவேண்டும். ஒலிக்கு ஏற்ற வகையில் எழுத்துக்களை அமைத்துக்கொள்வதில்

எந்தவிதமான மானப்பிரச்சனையும் இருக்க முடியாது. திராவிடம் என்பதை DRAVIDAM என்றுதான் உச்சாிக்கிறோமே தவிர THIRAVITAM என்று எழுத்துப்படி சொல்வதில்லை. எனவே த்ராவிடம் என்றே எழுத அனுமதிக்கலாமே! இன்னும் F,Z,குறிக்கும் ஒலிகளுக்கான வாிவடிவங்களையும் தமிழ் ஏற்க வேண்டும்.

தொலைநோக்குடன் பார்க்கும்போது ஆங்கில மொழிக்கான ரோமானிய எழுத்துக்களையே நாம் சுவீகாிப்பது உலக விவகார அளவில் பயனுள்ளதாக அமையும். அதிலும்கூட நமக்குத் தேவையான சில மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். உதாரணமாக ஆ என்ற நெடிலைக்குறிக்க A என்றும், ண் என்பதை N என்றும் இவ்வாறே ள், ற் , ஆகியவற்றை L;R, என்றும் குறிப்பிட்டு எழுதலாம். அதேபோல ரோமானிய எழுத்தில் ழ வாிவடிவத்தை ஏற்கலாம். தற்போதைய சமஸ்கிருத ஆங்கில இணைப்பு நூல்கள் பலவற்றில் சமஸ்கிருத உச்சாிப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஆங்கில எழுத்துக்களில் சில குறியீடுகள் தரப்பட்டுவருகின்றன. இவையும் இந்தவகையில் உபயோகமாக இருக்கும். மேலும் கணினி உபயோகத்தை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு இக்குறிகளை அமைத்துக்கொள்ளலாம். இந்த விஷயங்களையெல்லாம் தமிழ் இலாகா வல்லுனர் குழுக்களின் மூலம் தீர்மானித்து வரையறுப்பது நல்லது.

ஆங்கில மொழியிலும் உச்சாிப்பு, வாிவடிவக் குறைபாடுகள் உண்டு. PUT என்றால் புட்,CUTஎன்றால் கட். SANJOSE ஸேன் ஜோஸ் என்று எழுதவேண்டும்; SANOSAY ஸேனோஸே என்று படிக்கவேண்டும்.இப்படி எவ்வளவோ. தம் மொழியில் எழுத்துக்கள் குறைவு என்று எண்ணியோ என்னவோ ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு எழுத்துக்கும் நான்குவித வாிவடிவங்களை அமைத்துக்கொண்டனர். கொட்டை எழுத்து, அச்சு எழுத்து, அலங்கார எழுத்து, தொடர் எழுத்து என வகைப்படுத்தினர். அச்சு எழுத்துக்கள் அச்சிலும் , தொடர் எழுத்துக்கள் எழுதுவதிலும் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் குளறுபடிகள் ஏதும் ஏற்படுவதில்லை.இவைகளும்கூட காலத்தின் தேவைக்கேற்ப மாற்றப்படக்கூடியவைதான்.

பேச்சிலுள்ள ஒலிகளுக்கேற்ப வாிவடிவங்களை அமைத்துக்கொள்வதாலும், எழுதுகிறபடியே உச்சாிப்பதாலும், இலக்கண விதிகளைப் பேச்சுவழக்கிற்கேற்ப மாற்றிக்கொள்வதாலும், உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய ரோமானிய வாிவடிவங்களைத் தேவையான மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்வதாலும் நம் தமிழ் மொழி எளிமைப்படும்.பல்லாயிர வருஷங்களாக உயிர்த்துவரும் நம் மொழியை இம்மாற்றங்கள் பலப்படுத்துமே தவிர க்ஷீணப்படுத்தா.

அடுத்து நம் மொழியின் வளர்ச்சிபற்றிச் சிறிது ஆலோசிப்போம். முன்னரே கூறியபடி சங்க காலச் சொற்களின் பொருள் இன்றும் மாறாதிருந்தாலும் அக்காலத்திய பல சொற்களுக்கு இன்று தேவை ஒழிந்து பேச்சுவழக்கற்றுப்போயிருக்கிறது. இன்னொருபக்கம் பிரம்மாண்டமான விஞ்ஞான வளர்ச்சி, மற்றும் மனித நாகாிகத்தின் முதிர்ச்சி காரணமாக ஏராளமான புதிய சொற்கள் இதுவரை அறிந்திராத குறிப்பிட்ட பொருள் பொதிந்தனவாக புனையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன் போன்ற முன்னேறியுள்ள ஐரோப்பிய மொழிகளிலேயே உள்ளன. நம் அன்றாட வாழ்விலும், உலக நாடுகளுடனான தொடர்புவாழ்விலும், எல்லாத்திசைகளிலுமான முன்னேற்றங்களுக்கும் அத்தியாவசியமாகிவீட்ட புதிய பொருட்கள், தன்மைகள், செயல்பாடுகள், விளக்கங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களை நம் மொழியிலும் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். இதை எப்படிச் செய்வது என்பதில் பல கருத்துகள் இருக்கலாம். ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் மூலச் சொல்லை ( அது லத்தீனோ கிரேக்கமோ ) அடையாளம் தொிந்துகொண்டு அதற்கு நேரான தமிழ்ச் சொல்லை கண்டுகொள்வது அல்லது உருவாக்குவது என்பது ஒன்று. மாறாக புதிய ஆங்கிலச் சொற்களை அப்படியே அகப்படுத்திகொள்வது என்பது மற்றொன்று. இரண்டையும் கலந்து உபயோகிப்பது என்பது வேறொன்று.

ாபுதிய சொற்களூக்காக எதற்கு ஆங்கிலத்தை நாடவேண்டும் ? நம்மாலேயே ஆக்க முடியாதா ? ா என சில தமிழ் வல்லுனர்கள் கேட்கலாம்.முடியும்தான். டிங்கிாி டிங்காலே, டோலாக்கு டோல்டொப்பிமா, அசக்குன்னா அசக்குதான் என்ற பொருள் பொதிந்த வார்த்தைகளை ஆக்கமுடிகின்றபோது மற்றவையெல்லாம் எம்மாத்திரம் ? ஆனால் இவற்றில் எது ஒசத்தி என்ற போராட்டம் வெடித்து தீர்வு காண முடியாமற்போகக்கூடிய ஆபத்து இருக்கிறது.மேலும் நமக்கு இப்போது காத்திருக்க நேரமில்லை.எனவே நமது அனுபவங்களுக்கு ஒத்துவருவதும் விரைவில் நம் மொழியில் கலந்துவிடக்கூடியதுமான வழிமுறையையே நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்.

இத்தருணத்தில் என் கிராமத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. கணக்கு வழக்குகளச் சாிபார்க்கவேண்டி என் நிலத்தைப் பயிாிடும் விவசாயி சின்னதுரையை பத்து கி.மீ.தூரத்தில் நான் தங்கியிருந்த நகரத்துக்கு வரச்சொல்லியிருந்தேன்.குறிப்பிட்ட நாள் காலையில் வராமல் பிற்பகல்தான் வந்தான். அவனிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டேன். அவன் பதிலை அப்படியே தருகிறேன்.

‘ லேட்டாய்ட்சி ஐயா.அயர் சைக்கிள் எடுத்த்க்கினு கரெக்ட் டயத்துக்குத்தான் பொறப்பட்டேன்.என் மச்சானும் கூட கிளம்பிச்சி.கோியாில் டபுள்ஸ் ஏத்திக்கினு வந்தனா வழிலே மழை ஸ்டார்டாயிடுச்சி. ரோடு பூரா சேறு. பெடலை ஃபாஸ்டா மித்ச்கினு சைக்கிளை ஓரமா ஓட்டியாறேன் எதிர்லே லாாி ஒண்னு வந்ச்சி. டிரைவர் ஓவரா தண்ணி அட்சிருப்பாம்போல. ஸ்பீடா வரான். நாங்க டென்ஷ்னாய்ட்டோம். சைக்கிள் எலெக்டாிக் போஸ்டுலே மோதி நாங்க கீள விளுந்தூட்டோம்.டைனமோ லைட் கிளாஸ் தூள் தூளாப்போச்சி. மட்கார்ட் நசுங்கி ஃபிரண்ட் வீல் பெண்டாய்ட்ச்சி. ரெண்டு ஸ்போக்ஸ்கூட ஒடிஞ்சிருச்சி. போஸ்டுலே மோதினதுலெ ட்யூப் வெடிச்சி பஞ்சர் வேற. கெழண்டுபோன செயின மாட்டிக்கினு வண்டிய உருட்டிக்கினே சைக்கிள் ஷாப்புக்கு வந்தோம்.அயர் சைக்கிளாச்சே, எடுத்த கண்டிஷன்ல திருப்பி வுடணமே அதனாலே ஃபுல்லாவே ாிபேர் பாக்க சொன்னோம். அதுக்கு மூணு மணி நேரம் ஆவும்னான். சாி, ரெடி பண்ணி பில் போட்டு வையி. ாிடர்ன்ல வந்து வாங்கிகறோம்னு அவங்கிட்ட சொல்லிட்டு களம்பினோம். அதுக்குள்ள சி டிலைட் கொட்டாலே லவ்ஸ்டோாி மார்னிங் ஷோ பாக்கலாம்னு மச்சான் இட்டுகினு பூட்டான். அதுக்கப்பாலே மணீஸ் கேப்புலே சாப்டுட்டு நேரா இதோ வரேன். கணக்கெல்லாம் க்ளீனா கொண்டாந்திருக்கேன். செக் பண்ணிகுங்க. ‘

சின்னதுரை தான் தாமதமாக வந்த சிறு சம்பவத்தைத்தான் இங்கு விவாித்திருக்கிறான். அவன் கூறியது எனக்கு நன்றாகப் புாிந்தது. அவனும் புாிந்துதான் பேசியிருக்கிறான்.நாங்கள் இருவருமே தமிழர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவன் பேசிய தமிழில் இரண்டு சிறப்பு அம்சங்கள் தென்படுகின்றன. முதலாவதாக நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை தன் சிறு பேச்சில் அவன் பயன்படுத்தியிருக்கிறான். அவனோ ஆங்கிலம் படித்ததில்லை. என்றாலும் அவன் பயன்படுத்திய வார்த்தைகளின் பொருளை அவன் அறிந்து பேசியிருக்கிறான். அச்சொற்கள் அவனுடைய பேச்சில் மிக இயல்பாகவே வெளிப்பட்டவை. இரண்டாவதாக அவன் பேசிய மீதித் தமிழ் சொற்களில் ஒரு சில தவிர மற்றவை சங்க காலத் தமிழ்ச்சொற்களில் காணக்கிடைக்காதவை. எப்போதோ முளைத்து, எப்படியெல்லாமோ உருமாற்றம் பெற்றவை. இருந்தும் இன்று உயிரோடு இருப்பவை என்பதால் ஏற்கப்படவேண்டியவை. வெறும் சைக்கிள் ஓட்டிவந்த சம்பவத்தை விவாிக்கும்!போதே இத்தனை ஆங்கிலச் சொற்கள்! சின்னதுரைக்கு இன்னும் பம்புசெட், யூாியா வகைகள்,சேர், டேபில்,ஃபேன், ரேடியோ, டி.வி போன்ற மற்ற எலெக்டாிக் சாதனங்கள் சம்பந்தப்பட்ட பல ஆங்கில வார்த்தைகளும் அத்துபடி, எல்லா தமிழ் நாட்டு விவசாயிகளைப்போல. இயல்பாக வரும் இவ்வாங்கிலச் சொற்களைப்பேச அனுமதியாமல் சைக்கிள் என்பதை துவிச்சக்கரவாகனம் (சமஸ்கிருதம் மன்னிப்பதாக), இருசக்கரவண்டி, ஈருருளைவண்டி, மிதிவண்டி என்று மொழி பெயர்ப்பதால் சின்னதுரை போன்றவர்கள் உளம் மகிழ்ந்து உடனடியாக அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்களா ? இதே போன்றவைதான் மற்றவையும்.சின்னதுரை என்ற தமிழனுக்கு பதிலாக சின்னராஜூ என்ற தெலுங்கனோ, சின்னகெளடா என்ற கன்னடியனோ, சோட்டு என்ற ராஜஸ்தானியோ, சோட்டேலால் என்ற குஜராத்தியோ, சோட்டாசிங் என்ற பஞ்சாபியோ பேசியிருந்தால்கூட இந்த ஆங்கில வார்த்தைகளையெல்லாம் அப்படியேதான் உபயோகித்திருப்பார்கள், மற்ற வார்த்தைகள் அவரவர் மொழிகளிலிருந்தாலும். இதிலிருந்து ஒன்று நிரூபணமாகிறது. எல்லா இந்திய மொழிகளிலுமே ஆங்கிலத்தின் தாக்கம் பரவலாக இருக்கிறது. அதனால் நமது மொழிகளுக்குள் அகப்படாத வார்த்தைகளுக்காக காலத்தை விரயம் செய்யாமல் புதிய ஆங்கிலச் சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது.வெட்கப்படவும் தேவையில்ல, பிற இந்திய மொழிகளுக்கும் இதுதான் சுலபமானது என்ற வகையில்.

மொழிகளுக்குள் ரகசியம் தேவையில்லை. பள்ளி நாட்களில் ரகசியமாகப் பேசிக்கொள்ள சில உத்திகளை நாங்கள் கையாண்டதுண்டு. ‘ சீனு! சினிமா போலாமா ‘ என்பதை ‘ கசீ கனு! கசிகனிகமா கபோகலாகமோ ‘ என்றோ, ‘னீசூ! னிசிமா லோபாமா ‘ என்றோ ‘ னூசீ! மானிசி மாலாபோ என்றோ பேசிக்கொள்வோம் வேகம் பழகிக்கொண்டு. மைக்கேல்ஸ்டிக் மாதிாி கேலி செய்யும் எண்ணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்குப் புாியாதபடி பேசுவதில் ஒரு கர்வம் இருந்தது.இன்று எல்லாமே வெளிப்படை.அரசாங்கக் காாியங்கள் (ஊழல்கள் உள்பட)எல்லாமே வெளிச்சத்தில் நடக்கின்றன.மொழிக்கு மட்டும் ரகசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது ?எல்லா மொழிகளையும் எல்லா மொழிக்காரர்களும் பேசவேண்டும் என்பதுதானே நமது குறிக்கோள் ?

இவ்வளவு சிக்கல்களைத் தீர்த்துவிட்ட பின்பும் இன்னொரு பொிய சிக்கலிலிருந்து நம்மால் மீளமுடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. எழுதுவதைப்போலவே பேசுவது, அவ்வாறே பேசுவதைப்போல எழுதுவது என்று சங்கல்பித்துக்கொண்டாலும் நாம் பேசப்போவதும் எழுதப்போவதும் எந்தத் தமிழ் ? நாஞ்சிால் நாட்டுத்தமிழா, கொங்குநாட்டுத்தமிழா, மதுரைத்தமிழா, யாழ்ப்பாணத்தமிழா, சிங்கை, மலேசிய, மொாீஷஸ் தமிழா, தொண்டைமண்டலத்தமிழா, அல்லது சென்னை ாிக்ஷாத் த்மிழா என்பதில் பெரும் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. பேச்சு மொழி, புத்தக மொழி இவற்றுக்கிடையேயான பெரும் வேறுபாடுகளை நம்மால் குறைத்துக்கொள்ள முடியவில்ல. பத்திாிகை, வானொலி, டி.வி, சினிமா போன்ற சாதனங்கள் அவற்றை நிரந்தரப்படுத்துவதிலேயே ஈடுபட்டுள்ளன. ாிக்ஷாவை ஒழித்துவிட்டோம், ஆனால் ாிக்ஷாத்தமிழை ஒழிக்க முடியவில்லை. சந்திரபாபு, சோ, சுருளிராஜன், லூஸ் மோகன், மனோரமா போன்ற சிாிப்பு நடிக நடிகையர் மூலம் சென்னைக்குமட்டும் சொந்தமாக இருந்த அம்மொழி தமிழுலகம் பூராவுக்கும் சொந்தமாகிவிட்டது.

இதுஇன்னும் தொடர்ந்துவருகிறது. இது நிறுத்தப்பட்டு நமது எழுத்து, பேச்சு சாதனங்கள் சிறிது சிறிதாக சுத்தமான ஒருங்கிணைப்பான தமிழின் பக்கம் தம் பார்வைகளைத் திருப்பவேண்டும்.ஆரம்பப் பள்ளி நிலையிலிருந்தே இந்த உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கத் துவங்கவேண்டும்.இய்ல், இசை, நாடகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் ஒருங்கிணைப்பு ஏற்பட்டு எளிமையான இலக்கணத்தமிழே எல்லா வீடுகளிலும் புழங்க ஆரம்பிக்க வழிவகைகள் காணவேண்டும்.எல்லா மொழிகளிலும்தான் இத்தகைய வேறுபாடுகள் உள்ளனவே, ஹைதராபாத்,ராஜமுந்திாி, சித்தூர் தெலுங்கு எல்லாமே ஒன்றா, காசி,கான்பூர்,டில்லி, போபால் ஹிந்தி எல்லாமேகூட ஒன்றுதானா என்று கேட்டு சுணக்கத்துக்கு வழி காட்டக்கூடாது. தமிழ் என்றால் எல்லாத்தமிழர்களும் ஒரே மாதிாியாகத்தான் பேசுகிறார்கள், எழுதுகிறார்களென்று அனைவரும் கூறுமளவிற்கு தமிழை நாம் கொஞ்சமாவது உயர்த்தித்தான் ஆகவேண்டும்.இதற்கு நாளாகலாம். இருந்தாலும் நாளைக்காவது நாம் இதைச் செய்தே தீரவேண்டும்.

===

+

Series Navigation