உ.வே.சா வின் நினைவில்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

வெங்கட் சாமிநாதன்


உ.வே.சாமிநாதய்யர் வாழ்ந்த உத்தமதானபுரத்தில் அவர் நினைவில் ஒரு நினைவகம் கட்டப்பட்டு தமிழக அரசின், அமைச்சர்கள், மதிவாணன், பரிதி இளம்பரிதி ஆகியோர் வருகைபுரிந்து அதைத் திறந்து வைத்தனர் என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. நினைவகத்தின் பின்னணியில் நினைவகத்தின் திறப்பு விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்த அமைச்சர்களின் மற்ற பிரமுகர்களின் புகைபடமும் பத்திரிகைச் செய்தியுடன் பிரசுரமாகியிருந்தது. பெரும் பெரும் நிறுவனங்கள் பெரும் பணச்செலவில் நிறைய தமிழறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் பலவருடங்கள் நீண்ட காலம் உழைத்து செய்திருக்கக்கூடிய ஒரு பெரும் காரியத்தை தனியொரு மனிதராகவே தமிழ் மீதும் இலக்கியத்தின் மீதும் தான் கொண்டிருந்த ஈடுபாட்டின் தூண்டுதல் ஒன்றினாலேயே உ.வே.சா சாதித்துக் காட்டியுள்ளதை அங்கு உரையாற்றிய பிரமுகர்கள் குறிப்பிட்டதாகவும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தோம். அச்செய்திகளில் முதல்வர் கலைஞரின் வாழ்த்துச் செய்தியும் காணப்பட்டது. அவரும் பாராட்டுச் செய்தியும், தமிழுக்குத் தொண்டாற்றிய உ.வே.சா எந்த இனத்தைச் சேர்ந்தவர் எந்த ஜாதிய்னர், குடியினர் என்பதையெல்லாம் புறமொதுக்கித் தான் அவரது தமிழ்த் தொண்டை போற்றத் தான் நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் தான் இருந்தது. எந்த ஜாதி, எந்த இனம் என்ற சிந்தனை இல்லையென்றால் அதைச் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியிராது தானே. யாரும் ஏதும் கேட்காமலேயே ‘எங்களுக்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது” என்று சொன்னால் அந்த சிந்தனை தான் மேலோங்கியிருக்கிறது என்று தானே பொருள் படும். இது தான் இன்றைய தமிழ் நாடு.

உ.வே.சா மறைந்தது 1942-ல். ஆக, அவர் மறைந்து 66 வருடங்களுக்குப் பிறகு தான் அவருக்கு ஒரு நினைவகம் என்பது சாத்தியமாகியுள்ளது. தமிழ்த் தாத்தா என்றும், மகாமகோபாத்யாயா என்றும், தக்ஷ¢ணாத்திய கலாநிதி என்றும், – இன்னும் கூட நிறைய என்னென்னவோ பட்டங்கள் விருதுகள் இருக்கக்கூடும், எனக்கு ஞாபகம் இருப்பவை இவ்வளவு தான் – பலவாறாக அவர் சிறப்பிக்கப் பட்டிருந்தாலும், உ.வே.சா என்ற மூன்றெழுத்துக்களே போதும் அவரைத் தனித்துக் காட்ட. மூன்றெழுத்து என்றாலே முகம் சுளிக்கத் தோன்றும் அளவுக்கு தமிழ் நாட்டின் பிரசாரத் தலைமைகள் கொச்சைப்படுத்தியுள்ள அனேக மற்றவற்றுள் மூன்றெழுத்து என்ற பதமும் ஒன்று. தன் பெயரைக் குறிப்பிடுதலே நாகரீகமும் பண்பும் அற்ற செயலாக கருதப்படும் அளவுக்கு விருதுகளையும் பட்டங்களையும் கட்டியணைத்துக் கொள்ளும் கலாச்சாரமாக தமிழ் வாழ்க்கை மாறிவிட்ட இன்றைய சூழலில், உ.வே.சா தன் பெயரிலேயே தன் வாழ்நாளிலேயே ஒரு legend (இதைத் தமிழில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை) ஆகிவிட்ட ஈடற்ற சாதனையும் ஆளுமையும் கொண்டவர் அவர். அப்படியிருக்க அத்தகைய ஒரு legend-க்கு நினைவாலயம் என்பது சாத்தியமாக 68 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அதுவும் வேறு எந்த மொழி பேசும் உலகத்திலும் காணாத அளவிலும் குணத்திலும், தமிழ் நாட்டில் தமிழ் பற்றிய பிரசாரத்தின் இரைச்சலும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் காணப்படும் காலத்தில், 66 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. இதை நான் சொல்லக் காரணம் இந்த பிரச்சாரத்தில் இரைச்சலும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் தான் காணப்படுகின்றனவே தவிர உள்ளீடோ உத்வேகமோ இல்லை என்ற காரணத்தால் தான் ஒரு legend-ன் நினைவகத்திற்கு இத்தனை காலம் தேவையாக இருந்திருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின் வந்த நமது ஆட்சியாளர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தான் உ.வே.சா தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் உணர்வுகளுக்கும் ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றிய நினைவுகள் இல்லாது போயிற்றெனத் தோன்றுகிறதே ஒழிய, ஒரு சில இடங்களில் அவர் நினைவு தொடர்ந்துள்ளது. சென்னையில் அவரது பெயரில் உள்ள நூல் நிலையம் அவரது நூல்களை பதிப்பித்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் முச்சந்தியிலும் சிலை வைப்பதே ஒருவரது நினைவைப்போற்றும் ஒரே வழியென ஒரு கலாச்சாரம் இப்போது பரவியுள்ளதைப் போல் அல்லாது, அவரது நினைவைப் போற்றும் வகையில் உள்ள ஒரே சிலை ஒன்று சென்னைப் பல்கலைக் கழக வெளியில் அமைந்துள்ளது. அது தான் அவர் சிலை இருக்கவேண்டிய இடம். அந்த இடத்தில் உள்ளது அதன் சிறப்பு. அவரது நினைவின் சிறப்பு.

ஆனால் அவர் பழம் இலக்கியங்களைத் தேடி, சரி பார்த்து பதிப்பித்த முறையின் ஒழுங்கும் விஞ்ஞான பூர்வமான கட்டுப் பாடும் அவரே தன் இயல்பில் வளர்த்து கடைப்பிடித்த ஒன்று. அது பின்னர் வையாபுரிப்பிள்ளை போன்றோரிடம் காணப்பட்டது போல் அது ஒரு மரபாயிற்றா என்பது சந்தேகத்திற்குரியது. அம்மரபு போற்றலும், உ.வே.சா விட்ட இடத்திலிருந்து அவ்வழியில் தொடர்வதும் அவரது நினைவைப் போற்றல் தான். ஆனால் அது நம் இந்தமிழ் மரபில் இல்லாத ஒன்று. சிலை வைத்தலும், வருடம் ஒரு நாள் மாலை அலங்காரம் செய்து அலங்காரத்தமிழில் சொற்பொழிவாற்றி பத்திரிகைகளில், தொலைக்காட்சியில் இடம் பெற வழிவகைகள் செய்து கொண்டப்பின் வீடு திரும்பலும் தான் நம் தமிழ்ப் பண்பு. எனக்குத் தெரிந்து அறுபதுகளில் ஒரு தமிழ் பற்று கரைபுரண்டு ஓடிய ஒரு பதிப்பு முறை தலை நீட்டியது. வேதநாயகம் பிள்ளையின் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்தில் உள்ள வடமொழிச் சொற்களையெல்லாம் நீக்கி தூய தமிழ்ச் சொற்களைப் பெய்து தமிழ் தொண்டாற்றத் தொடங்கினார்கள் ஒரு பதிப்பகத்தார். அது அனேகமாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமாக இருக்க வேண்டும். உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அது என்ன காரணத்தாலோ தொடரவில்லை. விட்டுப் போன அந்த மரபைப் புதுப்பிக்கும் வகையில் தினம் தமிழறிஞர் நன்னன் அவர்கள் தூய தமிழ் எதுவென்னும் பாடம் நடத்தி வருகிறார் மக்கள் தொலைக் காட்சியில். நாம் சோர்ந்து சோம்பியிருக்கும் வேளைகளில் விவேக், வடிவேலு காட்சிகள் எப்படி நம் சோர்வை அகற்றி புத்துணர்ச்சி தருகின்றனவோ அவ்வாறான அரிய சேவையை நன்னனின் தூய தமிழ்ப் பாடங்களும் எனக்களிக்கின்றன. பாடம் நடத்தும் போது காணும் அவரது முக பாவங்களும் எனக்கு மகிழ்வையூட்டும்.

ஆனால் அவர் பார்வையிலான தூய தமிழ் ஒரு ஆரோக்கியமான தமிழாக உயிரோட்டமுள்ள தமிழாக எனக்குத் தோன்றவில்லை. பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தூயதமிழில் பெய்தளிக்க முயன்ற காரியம் எப்படி பிரதாப முதலியாரின் எழுத்தை முடமாக்கியதோ அப்படித்தான் தூய தமிழும் தமிழை முடமாக்கி ஒரு விசித்திர பிராணியாக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ் சரித்திரம், இலக்கியம், தமிழ் பண்பாடு, பாரம்பரியம் என்று தமிழ் பற்றிய ஒவ்வொரு விஷயத்திலும் நம் பார்வைகள் என்னவோவாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் எல்லாம் ஒரு சரித்திர உணர்வு, கலை உணர்வு, இலக்கிய உணர்வு, பாரம்பரியம் பற்றிய அறிவு எல்லாம் பழுது பட்டதாக, முடமாக்கப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் அவரது ஆளுமை இவற்றிற்கும் அவரது எழுத்திற்குமான ஒரு உறவு, பின்னைப் பிணைந்த ஒன்று உண்டு. அதை நாம் உணர வேண்டும். அதைக் காக்க வேண்டும். நமது இன்றைய அரசியல் தேவைகளுக்கு அடி பணிந்து அந்த பிணைப்பை மாசுபடுத்தக் கூடாது. அது தான் நாம் வேதநாயகம் பிள்ளைக்கும், சரித்திரத்திற்கும் தமிழுக்கும் அளிக்கும் மரியாதையாகும். வேதநாயகம் பிள்ளையின் எழுத்து அவரது காலத்தை, அவரது ஆளுமையை பிரதிபலிக்கும். அந்த நினைவுகளை அழியாது காப்பாற்றும்.

இப்போது 23 மூன்று லட்ச ரூபாய்கள் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் உ.வே.சா நினைவகம் ஒரு புதிய கட்டிடம். அவர் வாழ்ந்த வீடு இருந்த மனையில் எழுப்பப்பட்டுள்ள புதிய கட்டிடம். அது உ.வே.சா. வின் நினைவுகளை நமக்கு அளிப்பதில்லை. சென்னையில் டா. ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு பெரிய மூன்றோ ஐந்தோ நக்ஷத்திர ஹோட்டல் இருக்கிறது. பிரம்மாண்டமான கட்டிடம் தான். வெளியில் நடைபாதையில் நின்று கொண்டே பார்த்தோமானால் அதன் ஒரு மூலையில் சுற்றுச்சுவரை ஒட்டி கட்டிடத்தில் உள்ளே ஒரு அறிவுப்புப் பலகையைக் காணலாம். அங்கு தான் மகாத்மா காந்தி முதன் முதலாக சென்னை வந்தபோது தங்கி அன்றைய சென்னைப் பிரமுகர்களைச் சந்தித்தார் என்று சொல்லும். எனக்கு நினைவில் இல்லை. அது சீனிவாசாச்சாரியார் இல்லமோ என்னவோ. அங்கு தான் காந்தி ராஜாஜியுடன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று பாரதியார் உள்ளே நுழைந்து, “மிஸ்டர் காந்தி, இன்று நான் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன் அதற்கு நீங்களும் வந்து கலந்து கொள்ளமுடியுமா? என்று கேட்டதாகவும் காந்தியார் தன் உதவியாளரிடம் விசாரிக்க, அவர் நேரம் இல்லையென்று சொல்ல, காந்தியார் தான் வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்ததாகவும், “அப்படியா, நல்லது. உங்கள் சென்னை வருகை வெற்றியடையட்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றோ என்னவோ பாரதி சொல்லி திரும்பிச் சென்றதாகவும், பின்னர் காந்தியார் ராஜாஜியின் இவர் யாரென்று கேட்க, ராஜாஜி, “இவர் ஒரு தமிழ் கவிஞர்” என்று சொல்ல “நீங்கள் இவரை நன்கு கவனித்துக்கொள்ளவேண்டும்” என்று சொன்னதாகவும் ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. இபபடி மகாத்மா வந்து தங்கியிருந்த அந்த இடத்திற்கு அனேக வரலாற்றுச் சிறப்புக்கள் உண்டு. அந்த இடத்தில் அந்த பழைய வீடு இருக்கலாமா? ஒரு 5 நக்ஷத்திர ஹோட்டல் தான் தமிழ் நாட்டின் பொருள் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சாட்சியம் தரும். ஒரு வரலாறு நடந்ததற்கு ஒரு அறிவுப்புப் பலகை வைத்தால் போயிற்று. பிரச்சினை தீர்ந்தது. இது இன்றைய தமிழனின் முன்னோக்கிய பார்வை.

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அதில் ஒரு வரலாற்று அறிஞர் சொல்கிறார். பஞ்சாபில் இருந்த சீக்கிய மத, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பல முன்னூறு நானூறு வருடங்கள் பழமை வாய்ந்த புராதன கட்டிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் 90 சதவிகிதம் அழிக்கப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில் சலவைக் கற்களால் ஆன மாளிகைகள் பல எழுந்துள்ளன. இதற்குக் காரணமே, சீக்கிய மத குருக்கள், சீக்கிய அரசியல் கட்சிகள், குருத்வாராக்களுக்குள் வந்து வெள்ளமெனப் பாயும் வெளிநாட்டில் வாழும் சீக்கியர்களின் பணம். அவர்களிடம் மத உணர்வு உண்டும். கொள்ளை கொள்ளையாய் பணமும் உண்டு. ஆனால் சரித்திர உணர்வோ பாரம்பரிய உணர்வோ, தம் வரலாறு பற்றிய கர்வமோ கிஞ்சித்தும் இல்லாது போனது தான் இந்த சீரழிவுக்குக் காரணங்கள்’ என்கிறார் அந்த சீக்கிய வரலாற்று அறிஞர்.

அவர் சொன்ன காரணங்களில் மிக முக்கியமானது இன்றைய மதிப்புகளின் சீரழிவு. மத உணர்வுகளின் உத்வேகத்தில் குறை இல்லை. பணத்துக்கும் குறையில்லை. ஆனால் குறைபட்டது சரித்திர உணர்வும், பாரம்பரியத்தின் கர்வமும். முன்னூறு வருட பழைய கட்டிடத்தை பழைய நிலைக்கு புணரமைப்பதில் ஆராய்வு தேவை. தொழில் நுட்பம் தேவை. சிரமங்கள் அதிகம். இவ்வளவும் செய்து ஒரு பழைய கட்டிடத்திற்கு உயிர் கொடுப்பதில் என்ன சிறப்பு என்று நினைக்கும் மதிப்பு மாற்றம். அதற்கு பதில் நிறைய பணம் செலவழித்து ஒரு புதிய கட்டிடம் எழுப்புவது பெருமைக்குரியது. அதில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கட்டிட குத்தகைக்காரப் பார்வையே ஆதிக்கம் செலுத்துகிறது என்றார் அந்த வரலாற்று அறிஞர். ஆக, பணம் இருந்தும், செயல்பாடு இருந்தும், ஆர்வம் இருந்தும், மாறிய வாழ்க்கை மதிப்புகள் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும் அழித்து விடுகின்றன.

உத்தம தானபுரம் உ.வே.சா நினைவகம் இத்தகைய வேதனை உணர்வைத்தான் என்னில் எழுப்பியுள்ளது. அரசியலாக்கப்பட்ட, கோஷமாக்கப்பட்ட தமிழ் உணர்வு, உள்ளீடற்ற வரண்ட ஒன்று அது. அது இரைச்சலிடும். கோஷங்கள் எழுப்பும். அது அரசியலுக்கு பயன் படலாம் பயன் பட்டுள்ளது. ஆனால் தமிழுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. அது வரலாற்றை அழித்து நிற்கும். பாரம்பரியத்தை அழித்து நிற்கும். காலத்தின் நினைவுகளை அழித்து நிற்கும். என் குடும்ப நினைவுகளிலிருந்து ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

1955 அல்லது 1956 என்று நினைக்கிறேன். நான் ஒரிஸ்ஸாவில் ஹிராகுட் அணைகட்டும் இடத்தில் வேலைக்கிருந்தேன். என் தம்பி ரெவென்யூ டிபார்ட்மென்டில் வேலை செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அடிக்கடி மாற்றலாகிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த மாற்றல்கள் கும்பகோணம், குடவாசல், பாபநாசம் என்று எல்லாம் பக்கத்து ஊர்களாகத்தான் இருக்கும். அவனுக்கு வேலை கிடைத்ததும் உடையாளூர் என்ற கிராமத்தில் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு அவன் மாற்றலாகிப் போகும் இடங்களுக்கு போக வர வசதியாக ஒரு இடத்திற்கு எங்கள் குடும்பம் குடிபெயரும். அப்போது என் தம்பிக்கு பாபநாசத்திற்கு மாற்றலாகியிருந்தது. வழக்கம் போல, எங்கள் குடும்பம் பாபநாசத்திற்கு அருகே உத்தமதானபுரத்திற்கு குடி பெயர்ந்தது. தினம் உத்தமதானபுரத்திலிருந்து அருகிலிருக்கும் பாபநாசத்திற்கு பஸ்ஸில் வேலைக்குச் செல்வது சௌகரியமாக இருந்தது. இதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது அப்பா ஹிராகுட்டிலிருந்த எனக்கு எழுதிய கடிதத்தில். அவர் எழுதியிருந்த விஷயம். “இப்போது கிருஷ்ணனுக்கு பாபநாசத்துக்கு மாற்றலாகியிருக்கிறது. நாங்கள் உத்தமதானபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கிறோம். இங்கிருந்து பாபநாசத்துக்கு போய்வருவது சௌகரியம். இங்கே வாடகைக்கு எடுத்திருக்கும் வீடு பெரிய வீடு. சௌகரிமாக இருக்கிறது. இந்த வீடு சாமிநாதய்யர் இருந்த வீடு என்கிறார்கள். அவர் தமிழில் ரொம்ப பெரிய மனுஷராம். உனக்குத் தெரிந்திருக்கும். வீடு பிடித்திருக்கிறது. “நீங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று வீட்டுக்காரர் சொல்கிறார். 3000 ரூபாய் கேட்கிறார். அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது? அதோட, கிருஷ்ணனுக்கு எங்கேயாவது ரொம்ப தூரம் உள்ள ஊருக்கு மாற்றலானால் என்ன பண்றது? ஆகையால் இங்கே இருக்கற வரைக்கு இருக்கோம்” என்று சொல்லியிருக்கிறேன்”

வீடு வாங்குவது என்ற பிரச்சினையே எழுவதற்கில்லை. எங்களுக்கு 1950 களில் 3000 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. 1956-ல் ஹிராகுட் அணை கட்டி முடியப்போகிற தருவாயில் இருந்தது. அதிகம் போனால் ஒரு வருடத்திற்கு மேல் அங்கு இருக்க முடியாது. வேறு வேலை தேடவேண்டும். தேடிக்கொண்டிருந்தேன். மூன்று இடங்களிலிருந்து எனக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. பிகானீர், கல்கத்தா இரண்டிலிருந்தும் ரயில்வேயில் வாய்ப்புக்கள். மூன்றாவதாக தில்லியில், மத்திய அரசாங்கத்தின் உள்விவகார அலுவலகத்தில். எங்கே போவது என்று திணறிக்கொண்டிருந்த போது மூன்றாவதாக வந்த தில்லி அழைப்பு எனக்கு மாதம் ருபாய் 210 தருவதாக இருந்தது. அது மற்ற இடங்களை விட 35 ரூபாயோ என்னவோ அதிக சம்பளம் தருவதாக இருந்தது. ஆக அந்த 35 ரூபாய் தான் என்னைத் தில்லிக்கு இட்டுச் சென்றது. எந்த இடத்திற்கு வேலையில் சேர்வது என்பதை 35 ரூபாய் தீர்மானிக்கும் நிலையில் இருந்த நான், கிராமத்தில் வீடு வாங்க 3000 ரூபாய்க்கு எங்கே போவேன்? ஆக பாரம்பரியமும், வரலாறும் கொண்ட ஒரு நினைவுச் சின்னம் கைவரப்பெறும் பாக்கியம் எங்களுக்கில்லாது போய்விட்டது.

கைவரப்பெறும் பாக்கியத்தைப் பற்றிப் பேசுவானேன். நான் அந்த வீட்டைப் பார்க்கும் பாக்கியத்தைக் கூடப் பெறவில்லை. அந்நாட்களில் நான் அப்படி ஒன்றும் அடிக்கடி விடுமுறையில் கிராமத்துக்குச் சென்றவனில்லை. சில சமயங்களில் மூன்று நான்கு வருடங்கள் கூட ஆகிவிடும் நான் விடுமுறையில் கிராமத்துக்குச் சென்று பெற்றோர்களைப் பார்க்கச் செல்வது என்பது. கையில் அவ்வளவு காசு இருப்பதில்லை என்பது தான் காரணம். இதெல்லாம் போகட்டும் விஷயத்திற்கு வரலாம்.

அப்பா பெரிய வீடு என்கிறார். தஞ்சை ஜில்லாவில் எல்லா வீடுகளும் இரண்டு கட்டு வீடாகத்தான் இருக்கும். ஒரே அமைப்பும் கட்டுமானப் பொருள்களும் கொண்டதாகத்தான் இருக்கும். சில பெரிய வீடுகளாக இருக்கலாம். அது மூன்று கட்டுக்கள் கொண்டதாக இருந்திருக்கலாம். கொல்லையில் பெரிய தென்னந்தோப்பு இருந்திருக்கிறது. 1950களில் எங்கள் குடும்பம் அங்கு குடியேறிய போது அது வாழும் இடமாகத்தான் இருந்திருக்கிறது. அதற்குப் பிறகும் பல பத்து வருடங்களுக்கு வாழும் இடமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி எவ்வளவு வருடங்களாக அது வாழும் இடமாக இருந்தது, எப்போது சிதிலமடையத்தொடங்கியது என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த உத்தமதானபுரத்தில் உ.வே.சா.வின் நினைவில் ஏதும் செய்யவேண்டும் என்று ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சிந்தனை எழுந்ததென்றும் அப்போதைய அரசு 23 லட்சம் ரூபாய் இதற்கென ஒதுக்கியது என்றும் ஒரு செய்தி படித்தேன். ஆக இதன் ஆரம்பமும் செயல் முனைப்பும் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்டது என்பது பற்றி இப்போது நினைவகம் திறக்கப்பட்ட சமயம் யாரும் மூச்சு கூட விடவில்லை. இது இன்றைய தமிழ் அரசியல் பண்பாட்டின் குணம் சார்ந்தது தான். ஆனால் அப்போது உத்தமதானபுரத்தில் நினைவகம் என்ற சிந்தனை எழுந்த போதே, அவர் இருந்த வீடு சிதிலமடைந்து இருப்பதாகவும் ஆகவே அந்த இடத்தில் ஒரு புதிய கட்டிடம் எழுப்பத் தீர்மானிக்கப்பட்டது என்றும் அந்த செய்தி சொன்னது. இது தான் நம் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையினரது சிந்தனைக்கோளாறு. தஞ்சை ஜில்லாவில் எத்தனை பெரிய வீடாக இருந்தாலும் அது மிக எளிமையான, வாழ்க்கைக்குகந்த வீடு. மிக எளிய பொருட்களால் கட்டப்பட்டது. அனேகமாக ஒரே கட்டமைப்பைக் கொண்டது. நாட்டு ஓடு வேய்ந்த வீடுகள். தாழ்வாரம் கூடம் என இரண்டு அல்லது மூன்று கட்டுக்கள் கொண்டவை. எல்லாம் அருகே கிடைக்கும் மூங்கில் போன்ற மரங்களால் ஆனவை. உடையாளூரில் நாங்கள் இருந்த வீடு இரண்டு கட்டு வீடு தான் என்றாலும் மண்தளம் கொண்ட வீடுதான். வாழத் தகுந்த, கோடையிலும் வெப்பம் குறைக்கும் வீடு தான். உத்தமதானபுரத்தில் சிதிலமடைந்த உ.வே.சா.வின் வீடு எவ்வளவு பெரிய வீடானாலும், அதன் கட்டமைப்பு பெரிதாக இருந்தாலும், அது மீண்டும் புணரமைக்கப்படக்கூடிய ஒன்று தான். ஏதும் பர்மா தேக்கு, இதாலியிலிருந்து சலவைக்கல் என்று சங்கடப்படுத்துபவை அல்ல. ஏதும் ஐரோப்பிய கட்டிடக் கலைஞரின் வரைபடம் கொண்டு எழுப்பப்பட்டதல்ல. எல்லா தஞ்சை கிராமத்து வீடுகள் போல ஒரு வீடு. அது எத்தனை பெரியது எவ்வாறு கட்டப்பட்டிருந்தது என்பதை சிதிலத்திலிருந்தும் கண்டறியலாம். அக்கிராமத்தாரிடமிருந்தும் கேட்டறியலாம். அதில் அதிகம் செலவும் ஆகாது. ஆனால் அத்தகைய புணரமைப்பை, புத்துயிர் கொடுக்கப்படும் பழைய கட்டிடத்தை விரும்புவார் இல்லை. அதை மதிப்பாரும் இல்லை என்பது தான் உண்மை. அதில் பெறப்படும் லாபமும் ஏதும் இல்லை என்னும் கட்டிட குத்தகைக்காரர் பார்வையும் அதில் இருந்திருக்கக் கூடும்.

இப்புதிய நினைவகத்தைப் பார்த்துமே, அல்லது உள்ளே நுழைந்ததும் நமக்கு என்ன தோன்றும். உத்தம தானபுரம் கிராமத்துக்கு திரும்பி வந்த ஒரு புதிய பணக்காரரது வீடோ என்று தான் நினைக்கத் தோன்றும். அது உவேசா வின் காலத்தை, அக்காலத்தின் சூழலை அவர் வாழ்ந்த வாழ்க்கையின் தோற்றத்தை அது நினைவுறுத்துமா? ஆனால் அவர் வாழ்ந்த, இப்போது சிதிலமடைந்த இல்லம் இன்னம் குறைந்த செலவில், ஆனால் நிறைந்த அக்கறையோடும் ஆராய்வோடும் புணரமைக்கப்பட்டிருக்குமானால் அது உ.வே.சா வின் நினைவுகளை அவர் வாழ்ந்த காலத்தையும் சூழலையும் தக்க வைத்திருக்கும். அத்தகைய சிந்தனை நம்மிடம் இல்லை.

நம் சிந்தனைகளே இப்படித்தான் வேலிகட்டி குறுகிப்போனவையோ என்று தோன்றுகிறது. பாரதி இறந்தது 1921-ல். கல்கி பாரதிக்கு நினைவு மண்டபம் ஒன்று எழுப்ப நினைத்தது நாற்பதுகளில் என்று நினைக்கிறேன். எட்டைய புரத்தில். ஒரு புதிய கோவில் மண்டபம் போல ஒன்று எழுப்பப்பட்டது. அவர் வாழ்ந்த இல்லங்கள் 30 வருடங்களுக்குள்ளாகவா இடிந்து தரைமட்டமாகியிருக்கும்? அவை புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடாதா? அப்படி யாரும் நினைக்கவில்லை. நினைக்கத் தோன்றவில்லை. ஒரு புதிய கட்டிடம் எழுப்பவேண்டும். பெரிய கட்டிடமாக, பார்க்க பிரம்மாண்டமாக. அது தான் பெருமை தருவதாக இருக்கும்.

சரித்திரம் தொடர்கிறது. புதிய சட்டமன்றம், அலுவலகங்கள், செயலகம் எல்லாம் புதிதாக பிரம்மாண்டமாக, முத்தமிழ் வித்தகர், உலகத் தமிழினத் தலைவர், டாக்டர் கலைஞரின் நல்லாட்சி நடக்கும் இப்பொற்காலத்தில் அவர் சிந்தனையில் உதித்தவை, அவர் காலத்தில் அவர் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை என்று சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற தமிழ்ச் சான்றோரின் பிரமாண பத்திரம் வேறு இருக்கவே இருக்கிறது தமிழ் மரபில். எனவே பழைய கழிதல் தவிர்க்கப்படமுடியாதது. அட்மிரால்டி ஹவுஸ் போன்றவை மிக அழகானவை. கம்பீரமானவை. அவை 200 ஆண்டு சரித்திரம் கொண்டவை. இருந்தால் என்ன?. பழையன கழியத்தான் வேண்டும்.

வெங்கட் சாமிநாதன்/2.5.08


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்