உள்ள இணையாளே

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

சிவென்


கானல் மிகு கோடை என்னைச் சுட்டபோதும்
நாணல் மிகு உன் விழியோடை என்னைக் குளிர்விக்கிறதே…

நா வறண்டு நான்கு நாட்களாக நீரைக் காணாதவன் போல்
துவண்டிட்டாலும் உன் பெயரை உச்சரிக்கையில்
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜில்லிக்கிறதே…

பகவானாய் அதிகாலையில் வணங்கும் அப்பெருமானையே
நடுப்பகலில் கொடுமைவாதிக்கு ஒப்பிடும் அம்மனம்
இரவில் நிலவாய் தோன்றும் உன் முகத்தின் ஒளி
வழங்கிய சூரியனின் கருணையை என்னெவென்று புகழ்கிறது…

அனல் வெயிலில் காலில் செருப்பில்லாமல் செல்லமுடிகிறதே
எல்லோருக்கும் முன்னால் மனிதத்தை காட்ட முடிகிறதே
அன்பையே எங்கும் காண முடிகிறதே
எதனால் என்று நான் யோசிக்காமலில்லை கண்ணே!
கண்ணுக்குள் கண்ணாக என்னுள் நீ அன்பிப்பதாலேயே..

என் வாழ்க்கைக் கப்பலை வழி தப்பாது
இன்னன்பால் இயல்போடு இழுத்திடும்
கலங்கரை விளக்கமடி உன் அன்பு.

ஓருயிராகி ஒருவருக்கொருவராய்
உருகிட்டு உணர்வோம்
வாழ்வியல் உன்னதத்தையும்
உள்ளுணர்வின் இயக்கத்தையும்…

உன்னுள் என்னையும் என்னுள் உன்னையும் கொண்டு
வாழ்வை உண்மை அர்த்தமாக்கி
இறை அகராதியில் பொறித்திடுவோம்.

இறை செயலையே செய்திடவே பிறப்பெடுத்தோம்
அவனாலேயே வழி காட்டப்பெறுகிறோம்
அவனியின் அவஸ்தைகளையும் அகவீனங்களையும்
வினைப் பதிவுகளையும் நிகழ்வுகளையும்
ஆனந்தமாக்கி அவன் தாள் பணித்திடுவோம்.
அவனோடு இரண்டற கலந்திட்டு
பேரானந்த பெரு நிலை எய்திடுவோமடி….

cven_100@indiatimes.com

Series Navigation

சிவென்

சிவென்