உள்ளும் புறமும் எழிற் கொள்ளை

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

அனந்த்


அண்டப் ப்ரபஞ்சங்கள் அண்டிப் பெருத்தகனம்
…. உற்றுக் கரும்புள்ளியாய் (1)
மண்டிக் கிடந்தபினர் மாயம் இதுவெனவே
… மீண்டும் பலப்பட்டவாய்
விண்டுப் பிறக்குமொரு விந்தை நடக்குமுறை
… விஞ்ஞான வேதாந்திகள்
கண்டிங் குரைத்ததைநம் கண்முன் நிறுத்தும்நம
… துள்ளே நிகழ்வனவுமே:

ஆணும் பெண்ணும் உறவாடி
… ஆங்கே உதிக்கும் கருவினுள்ளே
மாணச் சிறிய புள்ளியிலே
… மண்டிக் கிடக்கும் மரபணுவில்
காணும் மூலக் கூறினிலே
… கடுகி உறையும் ‘டாஎன்னே ‘ (2)
பேணும் செய்திக் கற்றைகளே
… பின்னால் விரியும் உடலன்றோ ?

ஒன்றைத் தழுவும் மற்றொன்றின்
… உருவம்(3) கொண்ட ‘டாஎன்னே ‘
என்றும் உலகில் நாம்காணும்
… இணையின் அழகை எடுத்துரைக்கும்
அன்றி மேலும் அதனுடைய
… அணுவின் உருவில் பெருக்கத்திற்(கு)
என்றே இயற்கை அமைத்துள்ள
… எழிலும் காண்பார் அறிவியலார்

சிற்றறை(4) நடுவே வீற்றிருக்கும்
… தீயென் னேயின் உருஅமைப்பை
ஒற்றி விளைந்த ‘ஆரென்னே ‘ (5)
… உதவி கொண்டு பிறக்கின்ற
பற்பல வகையாம் புரதமெனப்(6)
… பயிலும் மூலக் கூறுகளின்
அற்புத மான அமைப்புகளின்
… அழகைப் புகல முயன்றிடுவேன்:

சுருண்டு வளைந்து சுருள் போலத்
… தோற்றம் கொண்ட புரதமொன்று
கருமைக் கூந்தல் இழைகளிலே
… ‘கெரட்டின் ‘(7) என்னும் பேர்கொள்ளும்
உருண்டை வடிவப் புரதங்கள்
… உணவைச் செரிக்கும் ஊக்கிகளாம் (8)
இருப்புச் சத்தைக் குருதியிலே
… இருத்தும் ‘குளோபின் ‘ எனும்புரதம் (9).

மேவும் எழில்மிகு கோலங்கள்
… விதம்வித மாகப் புனைபுரதம்
காவிய மாக விரிந்துள்ளே
… காண்பதை நினைக்கின் பெருமைமிகு
ஓவியர் சிற்பி இவரிவரென்று
… உலகம் புகழும் கலைஞர்களின்
பாவனை எல்லாம் புரதத்தின்
… பல்வகை உருவின் நகலேயாம்!

அண்ட வெளியின் காட்சிகளை
… அங்கே நிகழ்எழில் கொள்ளைகளைப்
பிண்டத் துள்ளும் புகுத்தியுள்ள
… பெற்றி பற்றி என்ஆய்வில்
கண்ட வியப்பைக் கூறியந்தக்
… களிப்பைப் பகிர்ந்து கொளும்நினைப்பைக்
கொண்ட கவிதை இதுவும்உடற்
… கூறுகள் புரியும் செயலாமோ ?
—-
குறிப்புகள்: 1) black hole 2) DNA என்னும் மூலக்கூறு (molecule);
3) the double-helix structure of DNA; 4) சிற்றறை=cell
5) ஆரென்னே = ரைபோநியூக்ளிக் அமிலம்; RNA;
6) புரதம்=புரோட்டான் (protein); 7) keratin; 8) கிரியா ஊக்கிகள் (enzymes);
9) குருதியில் இருப்புச்சத்தைக் கொண்டு ஆக்ஸிஜனைத்
தாங்கும் ஹீமோக்ளோபின் (hemoglobin).
—-

Series Navigation