உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்

0 minutes, 33 seconds Read
This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

ஜடாயு


“ஒவ்வொரு முறை குண்டு வெடித்தோ, இல்லை வேறு தீவிரவாதத் தாக்குதலிலோ அப்பாவி மக்கள் செத்து மடியும்போதும், கடவுளே, இதையாவது முஸ்லீம் ஆட்கள் செய்திருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.. ஆனால், ஒவ்வொரு முறையும், அதைச் செய்பவர்கள் ஜிகாதி தீவிரவாதிகளாகவே இருந்து விடுகிறார்கள்.. எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் (இந்தியாவிற்கு எதிரான) எல்லா தீவிரவாதிகளும் முஸ்லீம்களாக இருக்கையில், அதிலும் ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய ஜிகாதின் பெயரால் அவர்கள் இந்தக் கொடுஞ்செயல்களைச் செய்வதாகக் கூறுகையில், இந்திய சமுதாயம் சந்தேகக் கண்களோடு முஸ்லீம்களைப் பார்ப்பதில் என்ன வியப்பு? மும்பையில் மட்டும் ஜிகாதிகள் நடத்தும் ஆறாவது தாக்குதல் இது.. இன்னும் எத்தனை தாக்குதல்கள் இருக்கின்றனவோ? குற்றம் சாட்டுபவர்களைக் காட்டிலும், இதைப் பூசி மெழுகும் முஸ்லீம் தலைவர்களும், அவர்களை ஓட்டு வங்கிகளாக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுமே அயோக்கியர்கள்.. இந்தத் தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லீம் சமுதாயம் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும், இந்தப் புல்லுருவிகளைக் களைவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் எங்கள் மீது பழி கூறாதீர்கள் என்று கத்திக் கதறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?” வெட்கமும் வேதனையும் கலந்த தொனியில் மும்பையைச் சேர்ந்த சமூக அக்கறையுள்ள ஒரு முஸ்லீம் நண்பர் இவ்வாறு சொன்னதாக மும்பை நண்பர்கள் வட்டாரத்திலிருந்து செய்தி.. தேச பக்த சிந்தனையுள்ள சில பல முஸ்லீம்கள் இந்தக் கருத்தை எதிரொலிப்பதாகவும் கேள்வி.

ஆனால் இந்தத் தீவிரவாதத் தாக்குதல்கள் எல்லாம் “சமூக அமைதியைக் குலைப்பதற்காக” (disrupting communal harmony) நடத்தப்பட்டன என்று எல்லா ஊடகங்களும் கிளிப்பிளை போலத் திரும்பச் சொல்லி வருகின்றன..”அமைதி குலைவது” என்ற சாதாரண வெளிப்படை உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு ராக்கெட் விஞ்ஞானம் ஒன்றும் தேவையில்லை.. இந்தத் தாக்குதல்களை இப்படியே வர்ணித்துக் கொண்டு போவதன் மூலம் இந்த சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் இயங்கும் சக்திகள் பற்றிய அபாயங்கள் எல்லாம் நீர்த்துப் போகின்றன என்பதே உண்மை. இந்திய தேசம், அதன் மக்கள், இந்த தேசத்தின் வாழ்க்கை முறை இவற்றை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கில் உலகளாவிய இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதிகளும், உள்நாட்டு ஜிகாதி தேசத் துரோகிகளும் இணைந்து தேசத்தின் மீது தொடுத்துள்ள போர் என்று இந்தத் தொடர் தாக்குதலை அரசும், ஊடகங்களும், சமுதாயமும் சரியாக அடையாளம் காண வேண்டும்.. இந்தத் தீவிரவாதத்தின் கோர முகம் இப்படி அடையாளம் காணப் பட்டால் மட்டுமே, இந்த யுத்தத்தில் நாம் சண்டையிட முடியும்..

வெறும் “அமைதியைக் குலைப்பதற்காக” என்று, இவ்வளவு மெனக்கெட்டு இத்தகைய மனிதத் தன்மையற்ற மாபாதகச் செயல்களை சிலர் செய்வார்களா? அதன் பின்னால் இதை விட மிகப் பெரிய உந்து சக்தி இருக்க வேண்டும். இந்த உந்து சக்திகள் எவை?? காபிர்கள் (இந்தியாவைப் பொறுத்த வகையில் இந்த நாட்டின் 85% இந்துக்கள்) என்று ஜிகாதிகள் குறிப்பிடும் மக்கள் திரளின் மீது எல்லையற்ற வெறுப்புணர்வு.. இஸ்லாமிய வெறியர்கள் கூறும் தர்-உல்-ஹரப் (இப்போது இஸ்லாமிய ஆதிக்கத்தில் இல்லாத தேசங்கள்) முழுவதும் தர்-உல்-இஸ்லாம் (இஸ்லாமிய ஆதிக்கம் உள்ள தேசங்கள்) ஆவதற்கு எல்லா விதமான வன்முறைகளும் (கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு) சரியானவை, தேவையானவை என்கிற ஜிகாதி அரக்க எண்ணங்களால் மூளைச் சலவை (மூளைக் கொலை?) செய்யப்படும் வழி தவறிய இளைஞர்கள்… இவையே இந்தத் தீவிரவாதத்தின் முக்கிய உந்து சக்திகள்.

சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இவை குஜராத் கலகங்களுக்கான பழிவாங்கும் படலம், வேலையில்லாத இளைஞர்கள் பொருளாதார நெருக்கடிகளால் தீவிரவாதிகளாகிறார்கள் போன்ற சப்பைக் காரணங்களை ஊதிப் பெரிது படுத்துகிறார்கள்.. இந்தக் காரணங்கள் சிறிய அளவில் தீவிரவாதம் பெருகத் துணை செய்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அடிப்படைக் காரணங்கள் முதலில் குறிப்பிட்டவையே. வறுமையில் உழலும், நாட்டிலேயே பின் தங்கிய மாநிலங்களான ஒரிஸ்ஸா, ம.பி.யில் கூட நக்சல் தீவிரவாதம் கொஞ்சம் தான் உள்ளது, அதுவும் அடக்கிவிடக் கூடிய சிறிய அளவிலேயே. ஆனால் 1946-ல் 15% இருந்த பாகிஸ்தானிய இந்து மக்கள் தொகை இன்று 1%க்கு வந்து விட்டதற்கும், பங்களாதேஷ் இந்துக்கள் அவர்கள் உடைமைகள் தங்கள் இஸ்லாமிய அரசினாலேயே பறிக்கப்பட்டு தினந்தோறும் சித்திரவதைப் படுத்தப் பட்டுத் துரத்தப் படுவதற்கும், காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தம் நாட்டிலேயே அகதிகளாக வாழ்வதற்கும் எந்த “பழி வாங்கும்” நடவடிக்கையைக் காரணம் காண்பிக்க முடியும்? பாதிக்கப் பட்ட இந்த இந்து மக்கள் அனைவரும் அந்தந்த நாடுகளிலும், பிரதேசங்களிலும் சட்டத்தை மதித்த, எந்த இடையூறும் தராத, இஸ்லாமிய அரசு ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு விட்ட மக்களாகவே வாழ்ந்தார்கள்.. இருப்பினும் அவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது விரட்டியடிக்கப் பட்டார்கள். மேற்சொன்ன இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதமே இவை அனைத்திற்கும் காரணம். பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் உள்ள இஸ்லாமிய அரசுகளே இந்த ஜிகாதி இன அழிப்புகளைச் (ethnic cleansing) செய்தன, செய்து வருகின்றன.. ஜிகாதி தீவிரவாதம் இந்த நாடுகளில் அரசின் ஏகோபித்த அரவுடன் செழித்தோங்கி வளர்ந்ததில், வளர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

விஷயத்துக்கு வருவோம்.

1. பெருகி வரும் உள்நாட்டு ஜிகாதி தீவிரவாதம்

ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும், நம் நாட்டுக்குள்ளேயே இந்த ஜிகாதி தீவிரவாதம் பெருகி வளர்ந்து வருகிறது என்பதை மும்பை குண்டு வெடிப்புகளும், இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கையில் வந்த முறியடிக்கப் பட்ட கோவை தாக்குதல் சதி பற்றிய செய்திகளும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட முஸ்லீம் நண்பர் போன்றவர்களின் ஆதங்கங்களும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
– சிமி (SIMI) தீவிரவாத அமைப்பு தடை செய்யப் பட்டிருந்தாலும், மதரஸாக்களிலும், முஸ்லீம் இளைஞர்கள் நடுவிலும் வளர்ந்து வருகிறது.. புதுப் புதுப் பெயர்களில் தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி வருகிறது. புதுப் பெயர்களும், அமைப்புகளும் அரசையும், மக்களையும் குழப்புவதற்கான தந்திரம், மற்றபடி எல்லா ஜிகாதி அமைப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை, கூட்டுச் சதிகளில் ஈடுபட்டு வருவவை என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
– இந்திய-நேபாள எல்லையிலும், இந்திய-பங்களாதேஷ் எல்லையிலும், உ.பி, பீகாரின் பல பகுதிகளிலும் ஜிகாதிகள் ஏற்கனவே ஏராளமான மதரஸாக்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. ஆதரவில் வளரும் இந்த மதரஸாக்கள் தான் எதிர்காலத்தின் முக்கிய தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.
– தமிழகத்தில் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்குப் பிறகு, அல்-உம்மா போன்ற ஜிகாதி இயக்கங்களை திமுக, அதிமுக இரண்டு அரசுகளுமே முனைந்து பெருமளவுக்கு அடக்கின.. ஆனால் பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தில் ஜிகாதி தீவிரவாதம் வேருன்றி வருகிறது.. ஏதாவது பெரிய அளவில் தாக்குதல் நடந்த பின்னரே இந்த அரசுகள் விழித்துக் கொள்ளும் என்று தோன்றுகிறது.
– ஹைதராபாதில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருகைக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் ஒஸாமா பின் லேடன் படங்களைத் தூக்கிப்பிடித்து வந்ததாக தெலுங்கு செய்தித்தாள்கள் படங்கள் வெளியிட்டன
– அல்-கொய்தா இயக்கத்தில் இந்திய முஸ்லீகள் யாரும் இதுவரை சேரவில்லை என்று அரசும், செக்யுலர் அரசியல் கட்சிகளும் சும்மா சொல்லி (மார் தட்டி?) வருகின்றன. உளவுத்துறை கண்டெடுத்த தீவிரவாதத் தொடர்புகள் பெரிதாக பிரபலப் படுத்தப் பட்டால், அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்குமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.. மும்பை குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் அல்-கொஹார் என்ற ‘புது’ அமைப்பு அல்-கொய்தா ஆசாமிகளுடனும், பாகிஸ்தானின் ஐ-எஸ்-ஐ-யுடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்று உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.

2. குற்றத்திற்கு தண்டனை??

ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் அந்தத் தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்ததாக இந்திய அரசு ஒப்பாரி வைப்பது வழக்கமாகி விட்டது. இந்த ஒவ்வோரு தாக்குதல்களிலும், உள்ளூர் ஜிகாதிகளின் ஒத்துழைப்பும், பங்கேற்பும் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.. ஆனால் யாருக்கும் இது வரை பெரிய அளவில் தண்டனை வழங்கப் படவில்லை. 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புக் குற்றவாளி என்ற பெயரில் ஒரு கொசு கூட இன்றுவரை தண்டிக்கப் படவில்லை என்று சாய்சுரேஷ் ரிடி·ப்.காம் கட்டுரையில் [1] கூறுகிறார். தன் நாட்டைச் சேர்ந்த, இன்னும் நாட்டுக்குளேயே உலவும் தீவிரவாதிகளையே பிடித்துத் தண்டிக்காத இந்திய அரசு, தன் நாட்டில் ஜிகாதி தீவிரவாதம் வளர்வதை அடக்கி ஒழிக்காத இந்திய அரசு இப்படி பாகிஸ்தானிடம் புலம்புவது அதன் வக்கில்லாத தன்மையையே காட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், ஜிகாதி தீவிரவாதச் செயல் செய்து விட்டு, சட்டத்தின் உதவியுடனேயே எளிதாகத் தப்பிவிட வழியுள்ள நாடு என்ற இழிபெயரைச் சூட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவு தான்..

3. செக்யுலர் அரசியல், செக்யுலர் ஊடகங்கள்

தீவிரவாதத்தை ஒடுக்குதல் முஸ்லீம்களுக்கு எதிரான செயலாகக் கருதப் படும் என்ற கருத்தை முஸ்லீம் வெறியர்களும், ஜிகாதிகளும், ஒரு வகையில் மறைமுகமாக அவர்களை வளர்க்கும் ‘செக்யுலர்’ கட்சிகளும் செய்து வருகின்றன.. அரசியல்வாதிகள் மதச்சார்பு கொண்ட இஸ்லாமிய தீவிரவாதத்தை அரசியல், தேர்தல், ஓட்டு வங்கி என்ற நோக்கில் பார்க்கிறார்களே அன்றி நாட்டு மக்களின் உயிர்களுக்கும், தேசத்தின் பாதுகாப்புக்கும் பெரும் அபாயம் விளைவிக்கக் கூடிய விஷயம் என்ற அளவில் பார்ப்பதாகவே தெரியவில்லை என்று ஜோகிந்தர் சிங் கட்டுரை [3] கவலை தெரிவிக்கிறது.. மும்பை மக்களிடையே குண்டு வெடிப்புக்குப் பிறகு கொந்தளித்துக் கொண்டிருக்கும் கோபம், அரசியல் வாதிகளை முடுக்கி விடுமா என்று பார்க்க வேண்டும்.. இதை “அரசியல் ஆக்காதீர்கள்” என்றூ வழக்கம் போல செக்யுலர் கட்சிகள் அலறுகின்றன.. நாட்டை சீரழிக்கும் இந்த தீவிரவாதப் பிரசினையை அரசியலாக்காமல் வேறு எதை அரசியலாக்க வேண்டும்??? 1996 தமிழக தேர்தல்கள் கோவை குண்டு வெடிப்புகளின் பின்னணியில் நடந்த போது, இஸ்லாமிய தீவிரவாதம் முக்கிய பிரசினையாக விவாதிக்கப் பட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.

4. சுதந்திர நாட்டின் உரிமைகளை வைத்தே தேச துரோகம் செய்யும் ஜிகாதிகள்

இதற்கு முன் 2002 மும்பை காட்கோபர் குண்டு வெடிப்பின்போது போலீசாரால் கைப்பற்றப் பட்ட அரபு மொழியில் இயற்றப் பட்ட “அல்-கொய்தா தீவிரவாத கையேடு” பற்றிய தகவல்களை ‘தி வீக்’ வார இதழ் வெளியிட்டுள்ளது [4]. சமீபத்திய குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவர்கள் இந்தக் கையேட்டின் வழிகாட்டலை இம்மி பிசகாமல் பின்பற்றி இருப்பதாகவும் இந்தக் கட்டுரை கூறுகிறது.. குண்டுகள் தயாரிப்பு, தற்கொலைப் படைகள் அமைத்தல், தீவிரவாதிகள் பயிற்சி போன்ற ஜிகாத் பற்றிய ‘அடிப்படை’ விஷயங்கள் மட்டுமன்றி கருத்து மற்றும் சமய சுதந்திரம் நிலவும் நாடுகளில் இவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை வளர்ப்பது எப்படி என்பதையும் இந்தக் கையேடு கூறுகிறது. வன்முறைகள் நடந்தபின் அரசு குற்றவாளிகளுக்கான வேட்டையில் இறங்கி ஜிகாதிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தேடும், கைது செய்யும்.. அப்போது “ஐயோ, முஸ்லீம்கள் மீது பழி.. எங்கள் சமய உரிமைகள் பறிக்கப் படுகின்றன.. நாங்கள் முஸ்லீம்கள் என்பதால் பழி வாங்கப் படுகிறோம்” என்றெல்லாம் மதத்தின் பெயரால் கூச்சல் எழுப்ப வேண்டும்.. இதற்கு நல்ல பலனும் அரசியல் ஆதரவும் கிடைக்கும் – இந்த ‘டெக்னிக்’கை கையேடு புட்டுப் புட்டு வைக்கிறது.. “இது பலிக்காவிட்டால் மனித உரிமை என்ற பெயரில் கூச்சல் எழுப்ப வேண்டும்.. நாமே எதிர்பார்க்காமல் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தெல்லாம் இதற்கு ஆதரவு வரும்” – இது எப்படி?? கோவை குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய கயவன் அப்துல் நசீர் மதானியை விடுவிக்கக் கோரி கேரள “செக்யூலர்” அரசியல் கட்சிகளும் அரசும், தமிழக அரசை நிர்ப்பந்திப்பதன் பின்னணி இது தான்.. POTAல் கைது செய்யப் பட்ட மும்பை 2002 குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மிகல் சுலபமாக வெளியே வந்து தங்களைத் துணிச்சலுடன் கைது செய்த காவல் அதிகாரி ரோஹிணி சாலியான் (பார்க்க: [4]) மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் அளவுக்கு சுதந்திர நாட்டின் உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப் படுகின்றன.. கடுமையான சட்டம் என்று கருதப் பட்ட POTA-வையும் ஒழித்து, செக்யூலர் அரசும் கட்சிகளும், அல்-கொய்தாவின் எதிர்பார்ப்புக்கிணங்க ஜிகாதி தீவிரவாதம் ஓங்கி வளரப் பேருதவி புரிந்து வருகின்றன..

சாய் சுரேஷ் [4] கூறுவது சிந்தனைக்குரியது – “சமூக சுதந்திரம் என்பது சமூகத்தின் நலனையும், சுதந்திரத்தையும் மதிக்கும் குடிமக்களுக்கு மட்டும் தானே தவிர, மனிதத் தன்மை இல்லாமல் அப்பாவி மக்களை ஜிகாத் என்ற பெயரில் கொன்று கொவிக்கும் அரக்கர்களுக்காக அல்ல”.. அரசு, தீவிரவாதத்தை ஒடுக்கும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. பஞ்சாப் தீவிரவாதத்தை முனைந்து ஒடுக்கி, பஞ்சாபில் மீண்டும் அமைதியை நிலை நாட்டியதில் முன்னணி வகித்த மாவீர காவல் அதிகாரி கே.பி.எஸ்.கில் அவர்களும், இதே கருத்தைத் தான் வலியுறித்தி வருகிறார். பஞ்சாப் தீவிரவாதத்தை ஒடுக்க இப்படித் துணிந்து முடிவெடுத்த அதே அரசியல் கட்சி இஸ்லாமிய ஜிகாதிகள் விஷயத்தில் இவ்வளவு மந்தமாக நடந்து கொள்வதும், ஏகத்துக்குப் பயப்படுவதும்… ஜிகாதி தீவிரவாதிகள் நினைத்தபடியே நடக்கிறது!

5. தேசபக்த முஸ்லீம்கள்

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அனில் அதாலே மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனே எழுதிய கட்டுரையில் [2] கூறுகிறார் – “இந்தியாவின் 90% முஸ்லீம்கள் தேச பக்தர்கள். அமைதியை விரும்பும், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள். ஆனால் மீதம் இருக்கும் 10% பேர் ஜிகாதி தீவிரவாதத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் ஆதரவளிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், அந்த 10% என்பது ஒன்றரைக் கோடி மக்கள்.. இவ்வளவு பெரிய தீவிரவாத ஆதரவுக் கும்பலை அடக்குவது என்பது எந்த அரசுக்கும் மிகக் கடினமான, சொல்லப் போனால் முடியாத காரியம்.. அந்த 90% முஸ்லீம் மக்கள் தான் முனைந்து இந்தத் தேச துரோகிகளையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் இனம் காண வேண்டும்…தண்ணீரில்லாமல் தவிக்கும் மீன் போல, தங்கள் சமுதாயத்தின் ஆதரவு நிறுத்தப் பட்டால், ஜிகாதிகள் தானாக செயலிழந்து போவார்கள்.. இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாத்தை ஒடுக்க, நடைமுறையில் சாத்தியமான வழி இது தான்”

இந்தக் கருத்தும் கட்டுரையில் முதலில் குறிப்பிட்ட ஆதங்கத்துடன் ஒத்துப் போவதாகவே உள்ளது.. இதை பாரத முஸ்லீம்கள் செய்யாவிட்டால், அது ஒரு வகையில் ஜிகாதி தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ப்பதே ஆகும்.

6. கருத்தியல், பண்பாடு, கலாசார சிக்கல்கள்

‘ஜிகாத்’ என்பதன் இஸ்லாமிய சமயப் பின்புலம் என்ன? முகமது நபி மற்றும் கலீபாக்கள் நடத்திய ரத்த விளாறான போர்கள் சரித்திரம் என்னும்போது அவை முன் மாதிரிகளா அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளா? தீவிரவாதப் போக்குகளில் சமயத்தின் தாக்கம் எவ்வளவு? உலகம் முழுவதும் ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது? ‘ஜிகாத்’ என்பது காபிர்களைக் கொன்று குவிப்பது இல்லை என்றால் அதற்கு இஸ்லாமிய சமய கண்ணோட்டத்திலேயே (மற்ற சமயங்களின் கண்ணோட்டத்தில் அல்ல) வேறு ஏதாவது தத்துவார்த்தமான மறை பொருள் உள்ளதா? இல்லை என்றால் அமைதி விரும்பும் முஸ்லீம்கள் தீவிரவாத சவாலை எதிர்கொள்வதற்காக அதை உருவாக்கியிருக்கிறார்களா? உருவாக்குவார்களா? இத்தகைய கருத்தாக்கத்தை உருவாக்குவது என்பதே “இஸ்லாத்தின் இறுதி உண்மைகளுக்கு எதிரானது” என்ற பெயரில்
அடக்கப் படுகிறதா? சமய உண்மைகளை விளக்குவது (interpretation, வியாக்கியானம்) என்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இஸ்லாமிய சமய மரபில் இது நடந்திருக்கிறதா? சமய சீர்திருத்தம் என்பது இஸ்லாமில் நிகழ்வது சாத்தியமா?

இஸ்லாம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே செழித்தோங்கி வளர்ந்திருந்த பாரத, இந்து, தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீது பாரத முஸ்லீம்கள் பெருமிதம் கொள்கிறார்களா? இல்லை அதுவும் ‘இஸ்லாமிற்கு எதிரானதா’ – ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் போன்று திருக்குறளும், ராமாயணமும் ஜிகாதி கண்ணோட்டத்தின்படி அழித்தொழிக்கப் பட வேண்டியவையா? இந்தோனிஷிய முஸ்லீம்கள் ராமாயண, மகாபாரத காப்பியங்களைத் தங்கள் தேசிய கலாசாரத்தின் அங்கமாகப் போற்றுவது பற்றி பாரத முஸ்லீம்கள் அறிவார்களா? பாரதத்திற்கு உள்ளேயே பாரத நாட்டின் பண்பாடு, சமூகம், மொழி, சமயம் இவற்றைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல், இவற்றின் மீது வெறுப்பை உமிழும் அரபு-மொழி-வழி மதரஸாக்களில் ஆயிரக் கணக்கில் முஸ்லீம் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதை தேசபக்த முஸ்லீம்கள் ஆதரிக்கிறார்களா – இந்த மதரஸாக்களின் கல்விமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு மாற்றப் பட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பார்களா?

இவை போன்ற ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.. நேசகுமார் போன்றவர்கள் இவற்றில் சில விஷயங்களைப் பற்றி எழுதியும் இருக்கிறார்கள். இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளில் புலமை பெற்ற தேசபக்த முஸ்லீம்களால் அலசி ஆராயப் பட வேண்டிய விஷயம் இது – இங்கு சில விஷயங்கள் கோடிட்டுக் காட்டப் பட்டன, அவ்வளவே..வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் இவற்றில் சில விஷயங்கள் பற்றி விரிவாக எழுதுவேன்.

இந்தக் கட்டுரையை எழுதியன் நோக்கம் தேசத்தை உடைத்தெறியப் புறப்பட்டிருக்கும் உள்நாட்டு ஜிகாதி தீவிரவாதத்தின் அபாயகரமான வளர்ச்சி பற்றி தமிழ் வாசகர்களுக்கு உணர்த்துவதே. வேறெதுவும் அல்ல.

jataayu_b@yahoo.com

[1] http://in.rediff.com/news/2006/jul/12sai.htm
[2] http://in.rediff.com/news/2006/jul/12athale.htm
[3] http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=140&page=3
[4] http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.do?contentType=EDITORIAL&sectionName=COVER%20STORY&programId=1073755753&BV_SessionID=@@@@1437303263.1153587594@@@@&BV_EngineID=ccceaddighhjdjmcefecfikdghodgik.0&contentId=1212699

Series Navigation

author

ஜடாயு

ஜடாயு

Similar Posts