உலக வர்த்தக மையம் தாக்குதல் – கருத்துக் குருடர்களின் ராஜ பார்வையும் அறிவுஜீவி நேர்மையின்மையும்

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

மஞ்சுளா நவநீதன்


அமெரிக்காவின் நியூயார்க் நகரின் இரு கட்டடங்களில் மோதிச் சிதறிய விமானங்களும் அவை ஏற்படுத்திய நசிவும், 6000 பேர் படுகொலை செய்யப் பட்டதும் , தொடர்ந்து பல விவாதங்களை எழுப்பியுள்ளது. மீண்டும் நீ அமெரிக்காவிற்கு ஆதரவா இல்லையா என்ற கேள்வியாய்த் தான் புரிந்து கொள்ளப் படுகிறது. அமெரிக்காவிற்கு எதிர்ப்பு என்பதை அவர்கள் மூளையிலேயே வைத்துத் தைத்துக் கொண்டுவிட்ட கம்யூனிஸ்டுகளுக்கு இப்போதும் அதே நிலைபாடு தான். அமெரிக்காவிற்கு இந்தியா உதவி செய்தால் இந்தியா அமெரிக்காவின் காலனி நாடு ஆகி விடும் என்ற பூச்சாண்டி அது. சீதா ராம் யெச்சூரி என்ற மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவரின் பார்வை இது தான். (இந்து – செப் 18, 2001)சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கி உலவ விட்ட பூதம் தான் ஒஸாம பின் லாடன் என்பது அவர் சொல்வது. சொல்லாமல் விட்டது : சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமிப்புச் செய்ததன் மூலம் இப்படிப் பட்ட ஒரு போருக்கு வித்திட்டது. கிட்டத்தட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் இதற்குப் பொறுப்பு என்று பலவாறாக நிறுவப்பட்ட பின்னரும் கூட, ஜப்பானின் குழு ஒன்று ஹிரோஷிமா-நாகசாகிக்குப் பழி வாங்க இதனைச் செய்திருக்கலாம் என்று அபிப்பிராயம் சொல்கிறார் இவர். மேற்கு வங்கத்தில் மைக்ரோசாஃப்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் . அமெரிக்காவிற்கு எதிர்ப்பு என்ற அடிப்படையிலிருந்து தம்முடைய எல்லா எழுத்தையும் மையப் படுத்தும் யெச்சூரி மறு புறம். மார்க்ஸிஸ்ட் கட்சியின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது.

இந்தியா அமெரிக்காவிற்கு துணை போவது தவறு என்பது இவர் வாதம். காரணம் பாகிஸ்தான் இந்தியாவில் நிகழ்த்திய பயங்கரவாதத்தைக் கண்டும் காணாதது போல் அமெரிக்கா இருந்தது என்ற உண்மையைக் காரணம் காட்டி நாம் ஒத்துழைப்புத் தரக் கூடாது என்கிறார் இவர்.

கடைசியாக பயங்கரவாதத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என்பது அவர் திருவாய் மலர்ந்தருளிய வாக்கு. நக்ஸல்பாரி இயக்கத்தை மார்க்ஸிஸ்ட் கட்சி எந்த மாதிரி அரசியல் பார்வையுடன் அணுகியது என்று இவர் தெளிவு படுத்தினால் தேவலை . பயங்கரவாதத்தைக் கைக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலோர் அவர்களுடைய நோக்கத்துக்குச் சம்பந்தமேயில்லாத பொது மக்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்பது பற்றி இவர் மூச்சு கூட விடவில்லை. பயங்கரவாதம் கைக் கொண்டிருப்பது வேறுவிதமான ஆயுதம் – அது அரசியல் ஆயுதமல்ல. அரசியல் பார்வையுடன் அவர்களை அணுகுவதற்கான பேச்சு வார்த்தைக்கோ, அல்லது சுமுகமான அணுகுமுறைக்கோ அவர்கள் தயாரில்லை என்பது தான் உண்மை. உங்கள் வீடு தகர்க்கப் படும்போது முதல் கவனம் அந்தத் தகர்ப்பாளரைச் செயலிழக்கச் செய்வதாகத் தான் இருக்க முடியும். பேச்சு வார்த்தைக்கு வராத ஆட்களுடன் எப்படிப் பேசுவது ?

அதில்லாமல் ராபர்ட் ஃபிஸ்க் என்ற ஒருவரை இவர் மேற்கோள் காட்டிச் சொல்கிறார். ‘ மிகவும் இழிவு படுத்தப் பட்ட மக்களின் கடைசி ஆயுதம் பயங்கரவாதம். ‘ அப்படித் தானா ? வேற்று நாட்டிலிருந்து காஷ்மீருக்கு வந்து குண்டு வைக்கும் மக்களை எப்படி இந்திய அரசு இழிவு படுத்தியது ? பால் தாக்கரேயின் கூலிகள் இஸ்லாமிய மக்களைத் தாக்கியதையும் இப்படி ஒரு மேற்கோளை வீசி நியாயப் படுத்திவிட முடியாதா ? கோவையில் குண்டு வீச்சில் இறந்த மக்களிடமும், ஜெயலலிதா கைதுக்குப் பின்பு எரிக்கப் பட்ட மூன்று சகோதரிகளின் தாய் தந்தையரிடமும் இந்த மேற்கோளைக் கூற வேண்டும் இவரும், இவரைப் போன்ற சிந்தனை கொண்டவர்களும். அமெரிக்க எதிர்ப்பு என்று வரும்போது மட்டும் தான் இந்த மேற்கோளுக்கு அர்த்தம் என்று சொல்வாரோ என்னவோ ?

எல்லா மக்களும் எத்தனையோ விதங்களில் இழிவு படுத்தப் பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா மீது தீராக் கோபம் எந்த நாட்டிற்காவது இருப்பது நியாயம் என்றால், இது வியத் நாமியருக்கு இருப்பது வெகு பொருத்தமாய் இருக்கலாம். ஆனால் அவர்களால் இது நிகழ்த்தப் படவில்லை. மத்திய கிழக்கு மக்களின் பாலஸ்தீனப் பிரசினையில் அமெரிக்காவின் நிலைபாட்டிற்கெதிரான ஓர் இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஜன நாயக விரோதமான ஆஃப்கானிஸ்தான் தலைலையிடமிருந்து, பழமை நோக்கிப் பயணப் படுவதன் மூலம் மக்களின் நியாயமான உரிமைகளை மறுக்கும் ஓர் நோக்கிலிருந்து எழும் வன்முறையை இவர்கள் நியாயப் படுத்துவது எதனால் ?

பயங்கர வாதத்தைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் தான். ஆனால் அதை நியாப் படுத்தலாகாது. பயங்கர வாதம் ஏற்படும் காரணங்களைக் களையவேண்டும். ஆனால் காரணங்களைத் தொகுத்து அவற்றின் உண்மையின் வெளிச்சத்தில், அந்த அநீதிகளைக் களைவதற்கான போராட்டமாக பயங்கர வாதம் ஏற்படுவதில்லை. கற்பிதம் செய்து கொண்டுவிட்ட அநீதிகளையும், அநீதிகளைக் களைய வேண்டும் என்ற ஆர்வத்தைக் காட்டிலும் பாடம் புகட்ட வேண்டும், தம் இருப்பை எப்படியாவது காட்டிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலும் தோன்றிச் செயல் படுவது பயங்கரவாதம். பம்பாயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு. பால் தாக்கரேயின் தாக்குதல்கள், கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் எல்லாம் இத்தன்மையாயின.

இந்தக் கட்டுரையை எழுதும்போது, எஸ் வி ராஜதுரை தினமணி(செப்டம்பர் 17 2001) யில் எழுதிய ஒரு கட்டுரை என் கவனத்திற்கு வந்தது. எஸ் வி ராஜதுரையின் கட்டுரையும் யெச்சூரியின் கட்டுரையுடன் ஒப்பிடக் கூடியது தான். இவரிடமிருந்து அவர் பிரதி செய்தாரா என்று வியப்பு ஏற்படும் வண்ணம் இருவருமே ராபர்ட் ஃபிஸ்க் என்ற ஒருவரை மேற்கோள் காட்டுகிறார்கள் . எஸ் வி ராஜதுரை ஃபிஸ்கின் பெயரைத் தவறக ஃப்ரிஸ்க் என்று குறிப்பிடுகிறார். இருவருமே ராபர்ட் ஃபிஸ்க்கின் வாதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

‘இந்தப் பயங்கரவாதமும் கொடூரச் செயல்களும் – பல சமயங்களில் . ‘நசுக்கியெறியப்பட்ட , இழிவுக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கப் பட்ட மக்களிடமிருந்தே வருகின்றன ‘ எனப் பல்லாண்டுகளுக்கு முன்பே கூறிய அமெரிக்க அறிஞர் ராபர்ட் ஃப்ரிஸ்க்கின் கூற்றும் முக்கியத்துவம் பெறுகிறது. ‘ – ராஜ துரையின் கட்டுரை வாசகம் இது.

இதைத் திருப்பிப் போட்டு இவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அதனால் இவர்கள் நசுக்கப் பட்டவர்கள் என்பது போன்றது ராஜதுரையின் வாதம். ‘ அமெரிக்கக் கண்டத்தில் கொலம்பஸ் காலடி வைத்த நாள் முதல் ஆப்பிரிக்க அடிமை வர்த்தகம் தொடங்கியது வரை : அமெரிக்கத் தொல்குடி மக்கள் துடைத்தெறியப் பட்டதிலிருந்து ஆப்பிரிக்கர் கண்டதுண்டமாக்கப் பட்டது வரை ‘ என்று பட்டியலிடுகிறார் ராஜதுரை.

வரலாற்றின் பழைய நிகழ்வுகளுக்கு இன்றைய பழி வாங்கல் நியாயமானது என்பது போன்ற ஒரு வாதம் இது. பாபரி மசூதியை உடைத்த இந்துத்துவ சக்திகளும் கிட்டத்தட்ட இதையே தானே சொல்கின்றன. இதை இவர் ஒப்புக் கொள்வாரா ? அதில்லாமல் வரலாற்றின் போக்கில் சில கண்ணிகள் அறுபடும் சில கண்ணிகள் தொடரும். அமெரிக்க வரலாற்றில், அடிமைச் சமுதாயமும், தொல்குடியினர் மீது ஆதிக்கமும் தொடரவில்லையெனினும், மேலாண்மை முயற்சிகள் தொடர்கின்றன.

ஆனால் இந்தப் பயங்கர வாதம் இப்படிப் பட்ட யோசனையுடன் மேற்கொள்ளப்பட்டது அல்ல. இஸ்லாமின் எதிரி என்று கட்டமைக்கப்பட்ட அமெரிக்காவின் மீது தொடுக்கப் பட்ட போர் இது. இஸ்லாமியப் பிற்போக்குவாதிகளும், அடிப்படைவாதிகளும், புத்தர் சிலைகளைத் தகர்த்த தூய இஸ்லாமிய ஆட்சியாளர்களும் இதன் பின்னணியில் எனும்போது. எப்படி இந்த பயங்கரவாதத்தை நியாயப் படுத்த முடியும் ? லட்சியங்களும் வழிமுறைகளும் பற்றியும், எதிரி யார் , என்பது பற்றியும் சாதாரண மக்களின் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல்களின் அறச் சிந்தனை பற்றியும் பேச வேண்டிய தருணம் இது.

வன்முறையை நிகழ்த்துவோரைக் காட்டிலும் வன்முறையை நியாயப்படுத்தும் யெச்சூரி , எஸ் வி ராஜதுரை போன்ற ஆசாமிகள் மிக ஆபத்தானவர்கள். வன்முறையை உபயோகிப்பவர்கள் தம்மளவில் இதற்கு ஏதோ ஒரு வகையில் பொறுப்பேற்கிறார்கள். அதன் பின் நிகழ்வுகளை ஏற்கத் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் இதை நியாயப் படுத்துகிறவர்களுக்கு இந்தப் பொறுப்புச் சுத்தமாய் இல்லை என்பது மட்டுமல்ல, இவர்கள் ஏதோ நசுக்கப் பட்டவர்களின் காவலர்கள் என்ற போலி கிரீடத்தையும் அளிக்கிறது.

*******

Series Navigation