உலகம் சுற்றும் குழந்தைகள்
Published January 30, 2011 • By
ரவிஉதயன்
ரவிஉதயன்
நகரும் பொம்மைகள்,
உருளும் பந்துகள்
ஓடும் சிறுமிதி வண்டி
ஒரு வீடு மைதானமாகிறது.
மானைப்போல் துள்ளல்,
தவளை போல கனைப்பு
முயலைப் போல் தாவல்
ஒரு வீடு வனமாகிறது .
சிறு செப்பில் மண் சோறு.
பச்சைப் புல் துவையல்,
மழைத்தண்ணி தேநீர்,
ஒரு வீடு மணல்வீ டாகிறது.
மயிலிறகில் கீரிடம்,
கண் மையில் மீசை,
மினுக்கும் அட்டைக்கத்திகள்
ஒரு வீடு அரண்மனையாகிறது.
குழந்தைகள் வசிக்கிற ஒரு வீடு
ஒரு உலகமாகிறது