உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

தேவமைந்தன்


இன்றைக்கு அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகப்போர்க் காலத்தில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று, தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றது. ‘கதைக் கோவை’ என்று அதற்குப் பெயர். பதிப்புத் துறையில் முதற்பெயர் பெற்ற அல்லயன்ஸ்
கம்பெனி வெளியீடு.

அதே போர்க்காலத்தில்தான் அறிஞர் வெ.சாமிநாத சர்மா அவர்களும், இன்றைக்கும் பாராட்டத் தக்க செறிவு மிக்க நூல்களைப் படைத்தார். ‘பங்கர்’ எனப்பட்ட பதுங்குமிடங்களில் தாள்கற்றைகளை ஒருபுறமும் மைக் கூட்டை ஒருபுறமும் வைத்துக் கொண்டு, அவர் படைத்த புத்தகங்களின் அர்ப்பணித்தல்(dedicating) உணர்வு, உலகமயமாதலை உட்கொண்ட நிகழ்சமூகத்தின் புத்தங்களுக்கு வருமா? சாமிநாத சர்மா தமிழுக்குக் கொண்டு வந்த பிளேட்டோவின் ‘தி ரிபப்ளிக்'(‘The Republic’) என்ற நூலின் மொழியாக்கமான ‘குடியரசு’தானே தமிழகத்தில் சாக்ரடீஸ் குறித்தும் பிளேட்டோ பற்றியும் அறியும் ஆர்வம் தந்தது? போர்க்காலத்திலும் படைப்புணர்வை விட்டுவிடாத தன்னுணர்வு குறித்து அவர் எழுதியுள்ள உணர்ச்சி மிக்க எழுத்துகளை பர்மாவிலிருந்து அவர் வழிநடந்த பயணம் பற்றிய ‘எனது வழிநடைப் பயணம்’ புத்தகத்தில் இன்றும் வாசிக்கலாம். இரங்கூனில் அவர் வாழ்ந்தபொழுது ‘ஜோதி” என்ற இதழை நடத்தியிருக்கிறார். புதுமைப்பித்தன் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பாடுகளை அதே போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு நடந்துவந்த என் தந்தையார் இரங்கூன் பி.கே.அண்ணார் கூறியும் கேட்டிருக்கிறேன். திண்ணை. காம் ஏட்டில் “ஒரு மனிதரின் கதை: பி.கே.அண்ணார்” என்ற தலைப்பில் பதிவுசெய்தும் இருக்கிறேன். அப்படிப்பட்ட காலத்தில் பதிப்பித்ததால்தான் “ஒரு புத்தகம் வெளியிடுவதில் பலவகையான தொல்லைகளுக்குட்பட வேண்டிய இந்த யுத்தகாலத்தில் இந்தப் பெரிய வெளியீட்டைப் பிரசுரம் செய்ய எங்களைக் கருவியாக்கிக் கொண்ட சர்வேசுவரன் திருவருள் இனியும் எங்கள் முயற்சிகளுக்குத் துணையாக நின்று அரண் செய்யும் என்றும், எழுத்தாளர்களும், வாசகர்களும் என்றும் குன்றாத அன்புடன் எங்களுக்கு உதவி செய்வார்களென்றும் நம்பி இந்தக் கதைக் கோவையாகிய முத்துமாலையைத் தமிழுலகத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்” என்று 1942-இல் அல்லயன்ஸ் பதிப்பாளர் எழுதியிருக்கிறார்.

அப்பொழுதெல்லாம் கதை வாசிக்கும் ஆர்வம் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. சிறுகதைகளுக்கு மதிப்பு ஓங்கிய காலம் அது. ஆங்கிலத்தில் ஜாக் லண்டன் போன்றோர் கதைகளையும் ருஷ்யத்தில் டால்ஸ்டாய் கதைகளையும் இந்தி வங்காளிக் கதைகளையும் மொழிபெயர்ப்பில் படித்த நிலை ஓய்ந்து, தமிழ் எழுத்தாளர்கள் தாங்களே சொந்தமாகப் படைத்த சிறுகதைகளை வாசகர்கள் விரும்பிப் படிக்கத் தொடங்கிய காலம் அது.(1930-1940)

சென்ற நூற்றாண்டின் முப்பதுகளின் கடைசியிலேயே வ.வே.சு.ஐயர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் படைத்த கதைகள் தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின.

அப்படி அரசியல் துறையில் பெயர்பெற்றவர்களின் சிறுகதைகள் தொகுப்புகளாக வெளிவந்த நிலை சற்று மாற்றம் கொண்டு, புத்தக உருவத்தில் கொண்டு வருவதற்கு முடியாத திறமைசாலிகளின் தனித் தனிச் சிறுகதைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியே ‘கதைக் கோவை’யின் முதல் இரு தொகுதிகள். மூன்றாவது தொகுதியும், அதற்கு மேலும்கூட வந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. இந்தத் தொகுதிகளில் தொண்ணூறு சிறுகதைகள் வெளிவந்தன. இவற்றில், ஆனந்த விகடன், கலைமகள், சந்திரோதயம், கல்கி, இந்துஸ்தான், தினமணி மலர்கள், சில்பஸ்ரீ, ஜகன்மோகினி, மணிக்கொடி, நவசக்தி, சுதந்திரச் சங்கு, பாரதமணி, லோகோபகாரி ஆகிய இதழ்களில் முன்பே வெளியாகியிருந்த கதைகளும் அடக்கம்.

சிறுகதைகளை அவற்றின் வடிவம் பற்றிய விழிப்புணர்வோ உள்ளடக்கம் பற்றிய அலசலோ இல்லாமல் ‘நிம்மதி’யாக வாசித்த காலமல்லவா அது? இல்லாவிட்டால், வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய ‘காலச் சக்கரம்’ சிறுகதை, இருபத்து மூன்று பக்கங்களைக் கொண்டிருந்து, வாசகர் உள்ளங்களை வென்றிருக்க முடியுமா? ‘ஜகன்மோகினி” இதழில் இது வெளிவந்தது என்ற குறிப்பும் இருக்கிறது.

அந்தக் காலத்தில் ‘மணிக்கொடி’ இதழில் வெளிவந்த புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி’ யும் பக்க அளவில் பெரிய சிறுகதைதான். ‘காலச் சக்கர’மும் ‘துன்பக் கேணி’யும் கிட்டத்தட்ட ஒரே காலத்தைச் சார்ந்தவைதாம்(20ஆம்நூற்றாண்டின் முப்பதுகளின் நடுப்பகுதி) எனினும், இவை இரண்டுக்கும் நடையிலும் சொற்கட்டுமானத்திலும் சொல்ல வரும் பொருளின் சமூக நோக்கின் அழுத்தத்திலும் கதைசொல்லலிலும்தான் எத்தனைப் பெரிய இடைவெளி?

வை.மு.கோதைநாயகி அம்மாளின் ‘காலச் சக்கரம்’ சிறுகதையும் சரி, புதுமைப் பித்தனின் ‘துன்பக் கேணி’யும் சரி – இரண்டுமே தம் அடிப்படைச் சித்தரிப்பில் ஒன்றுபடுகின்றன. இரண்டுமே எதிர்மறை நோக்கில் சமூகத்தைப் பார்ப்பவைதாம். மனப்புழுக்கம், விரக்தி, வேதனை முதலான எதிர்மறை உந்துதல்கள் இவ்விரண்டிலுமே சம அளவில் இருக்கின்றன. ஆனாலும் வை.மு.கோதைநாயகி அம்மாளின் ‘காலச் சக்கர’ சுபாஷிணிக்கும் புதுமைப் பித்தனின் ‘துன்பக் கேணி’ மருதிக்கும் ஆகவும் பெரிய பாத்திரகுண இடைவெளி விழுந்திருக்கிறது.

‘இடைவெளி’தான் இறப்புநிலை என்றல்லவா காலஞ்சென்ற எழுத்தாளர் சம்பத், அதே தலைப்பிலான தன் நெடுங்கதையில் கருத்துரைத்தார்? சமகாலத்தில் இரண்டு படைப்பாளிகளின் படைப்புகளிலுள்ள இந்த இடைவெளியைக் குறித்து சமூகவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், என்னென்னவோ உண்மைகள் எழும். பணத்தின் பின்னே போய்விட்ட பாஸ்கரனை நினைத்து நினைத்து மறுகி மடியும் சுபாஷிணிக்கும்(காலச் சக்கரம்); ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, திருநெல்வேலியின் குறுஞ்சிற்றூரொன்றில் பண்ணைக்கு அடிமைப்பட்டவனுக்கு மனைவியாக நேர்ந்ததால் பண்ணையின் கையாளான தலையாரித் தேவனின் அடி உதைகளுக்கு ஆட்பட்டு, தன் வாழ்க்கையின் அடுத்த கட்டமான இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை ஸ்டோர் மேனேஜரின் காமத்துக்கும் உட்பட்டு, பாட்ரிஸன் ஸ்மித் துரையின் கொடையான ‘பரங்கிப் புண்’ணையும் வாங்கிக் கொண்டு, சந்தேகம் என்ற ஒன்றின் பேரால் கங்காணிச் சுப்பனின் மூர்க்கமான தாக்குதல் தந்த கொடிய விளைவுக்கும் உடல் நலத்தை அழித்துக் கொண்டு, தம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும் தேயிலைப் பெண் தொழிலாளிகள் சிலரின் வழக்கமான தீர்மானத்துக்கு மட்டும் அறவே இடங்கொடுக்காமல் தன் தலைமுறையிலும் தன் மகள் வெள்ளைச்சியின் தலைமுறையிலும் விடாது போராடும் மருதிக்கும்தான்(துன்பக்கேணி) எவ்வளவு பெரிய வாழ்வின் – இருப்பின் – உயிர்த்திருத்தலின் இடைவெளி?

சாதியளவிலும் கூட, இவ்விரு படைப்பாளர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட இரு வேறு சாதிகளில் பிறந்தவர்களில் ஒருவர், உயர்சாதிப் பெண்ணொருத்தியின் கருத்தியலால் அவள் வீழும் வீழ்ச்சியைக் குறிக்க இருபத்து மூன்று பக்கங்களை எடுத்துக் கொள்ள; மற்றவர், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணொருத்தியின் சளைக்காத – நடப்பியல் சார்ந்த – உடலால் வீழ்ந்தாலும் உள்ளத்தால் வீழாத போராட்ட வாழ்வைக் குறிக்க முப்பத்தெட்டுப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்! இதை வெறும் அளவுக்குக்காகவே குறிக்கிறேன். மற்றபடி எடுத்துக் கொள்ளும் பொருளின் உட்கிடக்கைதான் முதன்மையானது.

அல்லயன்ஸின் வெளியீடான ‘கதைக் கோவை’யில் கூர்மையான வாசகரின் புருவங்களை உயர்த்த வல்லதொரு சிறுகதை, அ.நா. சிவராமன், பி.ஏ. அவர்கள் எழுதிய “நாலு’ அவுன்ஸ் பிராந்தி” என்பது. இதுவும் மணிக்கொடியில் தான் வந்திருக்கிறது. முற்றிலும் நாம் உள்வாங்கிக்கொள்ள முடியாத ‘தாம்பத்திய’த்தை அடிநாதமாகக் கொண்ட சிறுகதை. அளவு ஏழரைப் பக்கங்கள்தாம். உணர்த்தாமல் உணர்த்தும் உட்கிடக்கையோ பெரிது. சொல்லாமல் விட்டுவிட்டவற்றை வாசகர்களே புரிந்துகொள்ள வைக்கும் உத்தியைக் கொண்ட, அன்றைய நிலைக்கு வேறுபாடான கதைசொல்லல். அன்றாடம் சந்திக்க நேரும் வாழ்க்கை உண்மைகள் தரும் படிப்பினைகளால் சிராத்தம்(சொல் – கதையிலுள்ளவாறே)போன்ற – இறப்புக்குப் பிந்திய சடங்குகள் குறித்துக் கொஞ்சமும் நம்பிக்கை கொள்ள முடியாத கணவன், தன் தீரா நோய் நிலையிலும் தனக்கு வேண்டியவற்றை முழு ஈடுபாடு கொண்டு செய்யும் கணவனிடம் மட்டும் முழுநம்பிக்கை கொள்ளாமல், மடி, சிராத்தம், பிதிர்தோஷம்(சொற்கள் – கதையிலுள்ளவாறே)ஆகியவற்றில் அளவில்லாத நம்பிக்கை கொள்ளும் நோயாளி மனைவி ஆகிய இருவரும் இதில் முக்கியமான பாத்திரங்கள். கோமதி என்ற பெயருடைய அவள், தான் நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த – ‘பிராணன்’ போகும் நொடிப்பொழுதை, தானே எதிர்பார்க்க முடியாதவாறு சந்திக்கும்படி அவள் கணவன் திட்டமிடாமல் செய்துவிடும் விலங்குணர்வு(id)ச் செயல் இந்தக் கதையின் திருப்புமுனை. முடிவில் தன் நண்பன் கிட்டுவிடம், தன் செயலை மறந்து அன்றைய நாளிரவு தூங்க அவன் வாங்கி வரச் சொல்லிக் கேட்கும் நான்கு அவுன்ஸ் பிராந்தி கதைத் தலைப்புக்குக் காரணம். இடையில், தனக்கு வழக்கமில்லாத கடன் வாங்க நண்பன் கிட்டுவைச் சந்திக்கத் திருவல்லிக்கேணிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்பொழுதில், பேருந்தில், தன் தோற்றத்தை நோக்கி நடத்துநர் கொள்ளும் நம்பிக்கையை அரையணாவுக்காக ஏமாற்றும் புத்திசாலித்தனமும், முடிவில் நண்பனை வாங்கிவரச் சொல்லும் நான்கு அவுன்ஸ் பிராந்தியும் அவன் ஏற்றிருக்கும் காந்தியடிகளின் கொள்கைக்கு எதிர்ப்பானவை. “பின்பற்றுபவர்கள் குருவை அழிக்கிறார்கள்”(“Followers destroy their Guru”) என்ற ஜே. கிருஷ்ணமூர்த்தியின் வாக்கியத்துக்கு இந்தக் கதையைவிடவும் விளக்கம் ஒன்றிருக்குமா?

“சுகி” அவர்கள் எழுதிய ‘நல்ல பாம்பு’ என்ற கதை, இந்தக் கோவையில் உள்ளது. கதைக் கோவை இரண்டாம் தொகுதிக்கென்றே “சுகி” இதைப் படைத்திருக்கிறார் என்று பதிப்புரையின்வழி ஊகிக்க இடமுள்ளது. கதையில் வரும் பாம்பாட்டி முனியனும் அவனுடைய இரு புதல்வர்களான நாகப்பனும் ரங்கப்பனும் முனியனின் தங்கை மகளான செங்கமலமும் வாசகர் உள்ளங்களைப் பிணைத்துக்கொள்ளும் பாத்திரங்கள். ஒன்பதரைப் பக்கங்களை எடுத்துக் கொண்ட கதையில் இடம்பெறும் இருளர் வாழ்வை “சுகி” அவர்கள் உடனிருந்து அறிந்து கொள்ளாமல் அல்லது நன்கு விசாரித்து அறிந்து கொள்ளாமல் இவ்வளவு தெளிவாகப் படைத்திருக்க முடியாது. ஒரு பெண்ணால், ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிக்குள் பிளவும் அண்ணனுக்குக் குரூரமும் வருவது புதிய கதைக் கரு அல்லவென்றாலும் கதை சொல்லப்பட்ட முறை சிறப்பாக உள்ளது.

1994இல் இந்தக் ‘கதைக் கோவை’யின் தொகுதிகள் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பதால் சிறுகதை வளர்ச்சி வரலாற்றில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் இவற்றை ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிச் சமூகம் குறித்துக் கதைகள் வழியாக அறிய விரும்புகிறவர்களும் வாசிக்கலாம். அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை மயிலை ராமகிருஷ்ணா மடத்துச் சாலையில் இருக்கிறதென்று நினைக்கிறேன்.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்