உலகத்தில் எத்தனை வண்ணங்கள்? (தமிழிசைப் பாடல்)
கரு.திருவரசு
எடுப்பு
உலகத்தில் எத்தனை வண்ணங்கள் – எனக்கு
உதவுங்கள் நீங்களும் எண்ணுங்கள்
தொடுப்பு
மலர்களில் எத்தனை வண்ணங்கள் – மனித
மனத்துக்குள் எத்தனை வண்ணங்கள் – எண்ணுங்கள்
கண்ணிகள்
வானத்தின் நீல வண்ணத்திலே – வரும்
வானவில் ஏழு வண்ணங்கள்
கானத்தின் இராகக் கிண்ணத்திலே – சுவரம்
கலந்திடும் ஏழு வண்ணங்கள்
பார்க்கின்ற போதே மாறுகின்ற – சிறு
பச்சோந்தி காட்டும் வண்ணங்கள்
சேர்க்கின்ற கலவைக் கிண்ணத்திலே – நிறச்
சிதறல்கள் அனைத்தும் வண்ணங்கள்