புதியமாதவி, மும்பை.
காட்டில் கண்சிமிட்டாத நட்சத்திரங்கள்
அவன் அயோத்தியில் கால்வைத்தவுடனேயே கண்சிமிட்ட ஆரம்பித்துவிட்டன.
இத்தனை இரவுகளும் அவனிடம் நலம் விசாரிக்காத நிலவு இன்று ஓடி ஓடி வந்து அவனுக்கு
உபசரிப்பு.
தீடிரென தோளில் மாட்டியிருக்கும் வில்லும் அம்பும் கூட ‘வேண்டாம் எங்களை விட்டுவிடு ‘
என்று அவன் காதுகளில் ரகசியமாகப் பேசின.
அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அவன் கண்கள் அவளைத் தேடின.
அரண்மனை வாழ்க்கைக்கே உரிய சம்பிரதாயங்கள்..
சட்டங்கள்..முதல்முறையாக அவனுக்கு எரிச்சல் மூட்டின.
என்ன அரண்மனைச் சட்டங்கள்..
வேண்டாம்.. இந்த அரண்மனை வாழ்க்கை..
அவளை அழைத்துக்கொண்டு யாருமே இல்லாத கானகத்திற்கு போய்விட மனம் ஏங்கியது.
அந்த இருண்ட கானகத்தில் அவள்.. அவளுடன் அவன்..
அரண்மனைக்குள் நுழையும்போதே தன்னை அவள் மாடத்திலிருந்து பார்க்கின்றாள் என்பதை மட்டும்
அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
காத்திருக்க வேண்டும்..
யாருக்கும் யாரைப் பற்றியும் நினைப்பில்லை.
அவன் – அவள்
இந்த இரண்டுக்கும் அப்பால் எதுவுமே இல்லை என்கிறமாதிரி..
எல்லோரும் .
அவனுடம் அவள்
அவளுடன் அவன்..
காற்று வேகமாக அடித்தது.
அவன் மட்டும் வாசலில் எப்போது போல.
கண்கள் மேல்மாடத்தையே பார்த்துக்கொண்டிருந்தது..
அங்கே பாவை விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சுவரில் அவள் உருவம்..
அசையாத அவளின் உருவம்..
இமைகள் கூட தட்டாமல் அவனுக்காக அவள் காத்திருந்தாள்.
அவனால் எவ்வளவோ கட்டுப்படுத்திக் கொண்டும் அவளை.. பார்க்காமல்..
14 வருடங்கள்.. தூங்காமல் காத்திருந்த வாழ்க்கை..
அவளும்தான் காத்திருந்தாள்..அவனுக்காக.
ராமனிருக்குமிடமே அயோத்தி என்று மூத்தவள் சொன்னதையே அவளும் சொல்லியிருக்க முடியும்தான்
இலக்குமண் இருக்குமிடமே எனக்கும் என் அயோத்தி என்று.
அவள் சொல்லவில்லை.
அண்ணன் தன் மனைவியுடன் மரவுறி தரித்து கிளம்பியவுடன் இவனும் அவர்கள் பின்னால்
மரவுறியுடன்..கைகளில் காக்கும் அம்பும் வில்லும்.
அவளிடம் எதுவும் அவன் கேட்கவில்லை.
அவளும் என்னைவிட்டு போகின்றாயே என்று அழவில்லை.
போகட்டுமா ? என்று அவனும் அவளிடம் உத்தரவு கேட்கவில்லை.
அவன் கேட்காமல் போகின்றானே என்று அவளுக்கும் அது ஒரு குறையாகவே தோன்றவில்லை.
இதயம் காதல் அணை உடைத்து பிரிவில் அழுதது.
அந்த ஈரம் கண்ணின் இமைகளில் பட்டுத் தெறித்துவிடுமே என்ற பயத்துடன் மட்டுமே அவள்
அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்..
போகும்போதும் அவன் அவளைத் திரும்பிப் பார்ப்பான் என்ற ஆசையில் அவள் மேல்மாடத்தில்
நிற்கவில்லை.
ஆனால் கண்பார்வையில் அவன் நிழல் தெரியும்வரை நின்று கொண்டே இருந்தாள்..
அந்த நிழலைத்தான் இன்னும் 14 வருடங்கள்..
5113 இரவுகள்..விழித்திரையில் சித்திரமாக்கி மனச்சுவரில் மாட்டி வைத்து
பார்வையிலேயே வாழ்ந்தாக வேண்டும்..
அந்த நினைப்பில் அவன் நிழல் கண் பார்வையிலிருந்து மறையும்வரை மேல்மாடத்தில் நின்று கொண்டே
இருந்தாள்..
இன்று..
அவன் அவள் கண்முன்னே ஆனாலும் அவள் காத்திருக்கின்றாள்.
வந்தவர்கள் எல்லோரும் அவரவர் துணையுடன்..
ராமனுக்காக.. அவன் சகோதரர்கள் மண்ணாசையை மட்டும் துறக்கவில்லை.
ஆயிரம் மனைவியரை அந்தப் புரத்தில் வைத்து முகம் கூட தெரியாமல் சல்லாப வாழ்க்கை
வாழ்ந்தவனின் பிள்ளைகள் கண்முன்னே காதல் மனைவியை வைத்துக்கொண்டே இல்லறத்தில்
துறவறம்..
காட்டில் ராமனும் சீதையும் மானுடன் மகிழ்ந்து விளையாடிப் பூந்தோட்டத்தில் பூக்களை எறிந்து
புதுப்புது விளையாட்டில் மனம் களித்திருந்த மாலைப்பொழுதுகளில்…
தன்னவளின் நினைவில்லாமல் இலக்குவன்.. கைகளில் அம்புடன்..
அயோத்தி அரண்மனையில் அவள்கள் காத்திருக்க பரதனும் சத்ருகனும் அந்தப்புர வாசனை மறந்த
விரதத்தில்.
எல்லாம் முடிந்து இன்று அவரவர் துணையுடன்..
எல்லா மாடங்களிலும் சாளரங்களை மறைத்த திரைச்சீலைகள்..
இரண்டாவது மாடத்தில் மட்டும் இன்னும் அசையாத திரைச்சீலை
சுவரில் அசையாத அவள் நிழல்..
அந்த நள்ளிரவு அன்று மட்டும் ஏன் நீண்டு கொண்டே இருக்கின்றது ?
எப்போது விடியும் ?
இத்தனை வருடங்களும் சட்டென மறையும் இருள் அன்று மட்டும் கூடாரம் கட்டித் தங்க வந்துவிட்ட
மாதிரி ஏன் ?
அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ராமனின் சிரிப்பு..
சீதையின் அணைப்பில் ராமனின் சிரிப்பு..
காற்றடித்து காகிதம் தீப்பிடிக்கிற மாதிரி அவன் உள்ளம் எரிந்தது..
எந்தச் சத்தமும் காதில் கேட்காமல்..
கையில் ஏந்திய அம்பு மண்ணில் விழாமல்..
நிற்கவே நினைத்தான்..
அவனால் முடியவில்லை.
இத்தனை வருடங்களும் எங்கிருந்தது இந்த நினைப்புகள் ?
எங்கே ஒளிந்திருந்தது ?
அவள் எழுந்து வாசலில் வந்து நிற்க மாட்டாளா..
அவள் முகம் பார்க்க மாட்டோமா..
அவள் விழிகள் ..
சினந்து சிவந்து போயிருக்குமோ..
ஊர்மீளைய்ய்ய்ய்
ஊர் உறங்கும்போது..
உறவுகள் உறவின் அணைப்பில் உறங்கிக்கொண்டிருக்கும்போது..
மணல்வீடுகளை அடித்துச் செல்லும் அலைபோல
எல்லாவற்றையும் அடித்துச் சென்று
அவள் கரம் பற்ற .. அசையாமல் விற்றிருக்கும் அவளின் நிழல் அசைந்தாட..
இப்போதே இந்த ஷணமே ,..காற்றாகப் பறந்து அவளருகில்..
அவனால் தலைநிமிர முடியவில்லை.
தலைநிமிர்ந்து பார்த்துவிட்டால் எங்கே தன் மனம் தன்வசமிழந்து விடுமோ என்ற பயத்தில்
எதற்குமே தலைகுனியாத அவன் ….
அசையாமல் காத்திருக்கும் அவள் நிழல் கண்டு தலைகுனிந்து நின்றான்..
விடியல்..
அரண்மனையின்அந்தப்புரங்கள் வெட்கத்துடன் குளியல்..
இசை..அதிகாலை அரசனை எழுப்பும் பள்ளி எழுச்சி..
மார்பில் குழந்தையாகத் தூங்கும் சீதையை மெதுவாக கைகளால் எடுத்து
அவள் தூக்கம் கலையாமல் அப்படியே படுக்கையில் வைக்க ராமன் போராடிக்கொண்டிருந்தான்.
எல்லா போர்களிலும் வெற்றி கண்ட ராமன் அவள் விழி இமைகளுடன் நடத்திய இந்தப் போரில்
தோற்றுப்போனான்.
அவள் சிரித்தாள்..
அவனும் சிரித்தான்..
இருவரும் எழுந்து வந்து வாசலைத் திறந்துப்போது..
அங்கே சிவந்த விழிகளுடன்..இலக்குவன்..
கையில் ஏந்திய அம்பும் வில்லும்..
ஏன் காத்திருக்கின்றாய் என்று ராமனும் கேட்கவில்லை.
அண்ணனுக்கும் அவனுடன் செல்லும் சீதைக்கும் இனி நீயே காவல்..என்று ஆணையிட்ட
அன்னையும் மறந்துவிட்டாள்..
அண்ணனும் மறந்துவிட்டான்..
காவலன் மட்டும் மறக்காமல் …
சீதையின் கரங்களைப் பிடித்திருந்த தன் கைகளைச் சட்னெ விலக்கிக்கொண்டான் ராமன்.
அவன் கண்கள் மேல்மாடத்தை நோக்கியது.
அங்கே அலங்காரம் கலையாதச் சிலைபோல ஊர்மிளை நின்று கொண்டிருந்தாள்.
அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல் ராமன் தலைகுனிந்தான்.
எப்ப்படி… ?எப்படி ஒருநாள் கூட இந்தக் காத்திருக்கும் தேவதையை நினைக்காமல்..
நான் மட்டும் …நான் மட்டும்….எப்படி…. ? ? ?
ஊர்மிளையின் பார்வை..
காற்றில் கலந்து இருட்டில் ஊடுருவி.. சீதையைத் துரத்திக்கொண்டே இருந்தது..
அதன்பின்..
ராமனின் ஒவ்வொரு அணைப்பிலும் ஒரு சின்ன உறுத்தல்..
காதலிலும் குற்ற உணர்வு..
மண் விழுங்கும்வரை சீதையின் மனசில்..உறுத்திக்கொண்டே இருக்கத்தான் செய்தது..
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை.