உறவும் சிதைவும்

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

பாரி பூபாலன்


பொழுது விடிந்ததும் வீடு அமர்க்களப்பட்டது. அந்த இருவரும் தூக்கத்திலிருந்து எழுந்து அவசர அவசரமாய் காலை வேலைகளைப் பார்த்தனர். வேலைகளை முடித்து கிளம்பியபின், இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் குழந்தையை எழுப்பினர். அப்படி எழுப்பும் போதே அவர்கள் இருவருக்குள் ஒரு குற்ற உணர்வு. அந்த குழந்தையின் உறக்கத்தைக் கெடுப்பதாய்! அதன் உணர்வுகளைக் குலைப்பதாய்! அந்த குற்ற உணர்வினால் அங்கே அளவுக்கு மீறிய கொஞ்சலும் குலாவலும். அழுகையுடன் எழும் குழந்தையை பாத்ரூம் செல்ல வைத்து, பல் விளக்கி பாலைக் குடிக்க வைப்பதற்குள் படாதபாடு.

ஒரு வழியாய் மூவரும் கிளம்பி குழந்தையைப் பார்த்துக்கொள்பவரின் வீட்டுக்குச் சென்றனர். இன்னும் சுமார் பத்து மணி நேரம் கழித்துத்தான் குழந்தையைப் பார்க்க முடியுமாதலால் அதனுடன் சிறிது சம்பாஷனை வளர்த்து அதன் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தபடி சென்றனர் அவர்கள். விடை சொல்லும் போது வரும் அழுகையை அடக்குவதற்கு மாலையில் ‘லாலிபாப் ‘ வாங்கி வருவதாய் வாக்குறுதி. குழந்தையை விட்டுவிட்டு ரயிலைப் பிடித்து அலுவலகம் விரைந்தனர். அப்படிச் செல்லும் போதே அவர்களுக்குள் ஒரு சலிப்பு. அவர்களுக்கு அவர்கள் மீதே ஒரு கோபம். என்ன வாழ்க்கை இது ? இது தேவைதானா ? தவறு செய்கிறோமோ ? வளரும் குழந்தையிடம் ஒரு தாயாய், தந்தையாய் எப்பொழுதும் உடனிருக்க முடியாத இந்த நிலை தேவைதானா ? இப்படி இருவரும் ஓடிக்கொண்டிருப்பது எதற்காக ? அந்த மழலையுடன் கூடி இருக்கலாமே ? அதனுடன் மகிழ்வாய் விளையாடலாமே ? இந்த வாழ்க்கையை சிறிது வாழ்ந்து பார்க்கலாமே ? ஏன் இப்படி ? அவர்களுக்குள் ஒரு சலிப்பு. அவர்கள் மீது ஒரு கோபம்.

அந்த குழந்தையைப் பற்றி எண்ணுகையில், இந்த சலிப்பையும் கோபத்தையும் காட்டிலும் ஒரு இயலாமை தோன்றியது. பெற்ற குழந்தையைப் பேணிக்காக்க முடியாமல் இருப்பதாய்த் தோன்றியது. வளரும் குழந்தைக்குச் சரியான உணவு கொடுப்பார்களா ? அது சாப்பிடவில்லையென்றால் மற்றவர்கள் சிரமம் பாராது அதை சாப்பிட வைப்பார்களா ? விஷயங்களைத் தெரிந்துகொள்ள உரிய ஆர்வத்தை ஆதரிப்பார்களா ? மற்றவர்கள் குழந்தை நல்ல முறையில் வளர்வதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பார்களா ? என்றெல்லாம் அவர்கள் இருவரும் யோசித்து கவலையுடன் சென்றனர். அந்த சலிப்பும், கோபமும், இயலாமையும், கவலையும் அவர்களது குற்ற உணர்வினை அதிகரிக்கச் செய்தது. தாங்கள் தங்களது குழந்தைக்கு ஒரு சரியான பெற்றோராக இருக்கவில்லையோ என யோசிக்க வைத்தது.

இதை எப்படி ஈடு செய்ய ? இந்த குற்ற உணர்வுகளுக்கு என்ன நிவர்த்தி ? யாராவது ஒருவர் வேலையை விட்டு நின்று விடலாமா ? அதை எப்படிச் செய்யலாம் ? இன்னும் சிறிது நாட்கள் கழித்துச் செய்யலாமா ? சரி இன்று என்ன செய்யலாம் ? இந்த வாரம் என்ன செய்யலாம் ? இன்று மாலை சீக்கிரம் கிளம்பி விடலாமா ? சிக்கிரம் சென்று குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். குழந்தையை ஒரு பார்க் அழைத்துச் செல்லலாம். கடைகளுக்குக் கூட்டிச் செல்லலாம். வேண்டியதை வாங்கிக் கொடுக்கலாம். நூலகம் சென்று கதைப்புத்தகம் படிக்கலாம். அது விரும்பியதைச் செய்யலாம். கதை பேசலாம். பாட்டுப் பாடலாம். அது பேசும் மழலை மொழியில் மூழ்கலாம். கிடக்கும் நேரத்தை இப்படிச் செலவிட்டு ஈடு செய்ய முயற்சிக்கலாம் என்று அவர்கள் இருவரும் திட்டமிட்டபடி இரயிலை விட்டு இறங்கி மாடியில் இருந்த அலுவலகதிற்குள் நுழைந்தனர்.

இந்த கனவுகளுடன், இருக்கையில் அமர்ந்தபோது, திடாரென்று தலையில் இடி விழுந்தது போன்ற உணர்வு. பலத்த சத்தம். படிகளில் பலர் ஓடிக்கொண்டிருந்தனர். என்னவென்று யோசிப்பதற்குள் கண்ணெதிரே புகை மண்டலம். என்ன செய்வது ஏது செய்வது என்று புரியவில்லை. கட்டிடம் சரிந்து வீழ்வதை உணர முடிந்தது. அவர்கள் இருவரும் அதிர்ச்சியின் பிடியில். தங்கள் இருவரும் தப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. ‘இறைவா! ஏனிந்த கொடுமை ? ‘ என இருவரும் புலம்பினர். தங்களது நிலையை விட குழந்தையின் நிலை கொடிதாய்த் தோன்றியது. அது ஒரு அனாதையாகி விடுமோ ? ஒரு தாயாய் அல்லது தந்தையாய் வேறு யாரால் அந்த குழந்தையை நேசிக்க முடியும் ? அந்த சின்னஞ்சிறு மலர் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறதோ ? தாங்கள் இல்லையேல் அதன் நிலையென்னவோ ? தாங்கள் இருவரும் இனி இல்லை என்பதை அதனால் புரிந்து கொள்ள முடியுமா என்பதே புரியவில்லை. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எண்ணிப் புலம்பியபடி இறைவனை வேண்டினர். அவர்களது கண்ணெதிரே தெரிந்தது அவர்களது முடிவு. அந்த உறவின் சிதைவு அவர்களுக்குப் புரிந்தது. அவர்களால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை, இறைவனை பிரார்த்திப்பதை விட.

எப்பொழுதும் போல் மாலை வந்தவுடன் அந்தக் குழந்தை வாசலை ஆவலுடன் நோக்கியது. அழைத்துச் செல்ல வரும் அப்பா அம்மாவுடன் வீட்டுக்குச் செல்லலாம் என்ற எண்ணத்துடன். அவர்களிடம் இன்று நாம் என்னென்ன செய்தோம் என்பதை சொல்லலாம் என்ற எண்ணத்துடன். அங்கே அந்த குழந்தை காத்துக் கொண்டிருக்கிறது. அப்பாவும் அம்மாவும் லாலிபாப்புடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன்.

[பின் குறிப்பு: உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலினால் ஏற்பட்ட எண்ணிலடங்கா இழப்புகளிடையே, தன் தாயையும் தந்தையையும் இழந்து நிற்கும் ஒரு குழந்தையின் இழப்பும் ஈடு செய்ய இயலாதவொன்று. அந்த குழந்தையின் நல்வாழ்விற்கும் மன உறுதிக்கும் எங்களது பிரார்த்தனைகள்]

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்