உரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

சுந்தர ராமசாமி தன் ‘தமிழகத்தில் கல்வி : வே. வசந்தி தேவியுடன் உரையாடல் ‘ என்ற புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை


கற்றுக்கொள்ளும் ஆற்றல்தான், மனிதனை விலங்குகளிலிருந்தும் தாவரங்களிலிருந்தும் பிரித்துக்காட்டும் முக்கியக் குணம். மனித நாகரிகத்தின் சாராம்சத்தைச் சுட்டுவதும் இந்த ஆற்றல்தான். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு இந்த ஆற்றலை மனிதன் இழக்க நேர்ந்தால் பிற ஜீவராசிகள் அனைத்தும் எண்ணற்ற திறன்களில் தன்னை விஞ்சி நிற்பது அவனுக்குத் தெரிய வரும். கற்றுக் கொள்வதன் மூலம் புதிய அறிவுகளைக் கண்டடைவதுடன், சமூகத்தின் குணத்தையும் மனிதன் தன் வாழ்வின் மூலமே மாற்றி விடுகிறான்.

வாலிபப் பருவம் அடைவது வரையிலும் பள்ளியிலோ, குடும்பத்தினரிடமிருந்தோ, புற உலகத்தைச் சார்ந்தோ சொல்லும்படி கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. உயிர் தரித்தல் மூலம் ஜீவன்கள் இயற்கையாகப் பெறும் அறிவு எனக்கும் சாத்தியமாக இருந்தது என் பாக்கியம். நகத்தால் எவரையும் பிறாண்டக்கூடாது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. பள்ளி வாழ்க்கையை அரைகுறையாக முடித்துக் கொண்டபோது ஆசிரியர்களின் முகங்கள், பள்ளிக் கட்டிடம், சுற்றியிருந்த மைதானங்கள், அவற்றில் நின்ற மரங்கள் ஆகியவையே மனத்தில் நிழலாடிக் கொண்டிருந்தன. கல்வியின் பாதிப்பு எனத் திடமாக உணர எதுவும் இருக்கவில்லை.

பள்ளி நாட்களில் விளையாட்டில் முன்னிலையிலும் படிப்பில் வெகுவாகப் பின்னிலையிலும் நான் இருந்தேன். இந்நிலையில் என் ஆசிரியர்கள் என்னைச் சுட்டாமல் மாணவர்களைப் பற்றிப் பொதுவாகக் கூறும் குறைகள் எனக்கும் பொருந்தி வந்து என் மனத்தை உள்ளூரத் தைத்துக்கொண்டிருந்ததால் எனக்கு அவர்களுடன் நெருங்க முடியாத சங்கடம் இருந்தது. தங்கள் முயற்சிகள் மூலம் சிறிதளவுகூடக் கற்றுக் கொள்ள முடியாத ஒரு மாணவனின் அன்பையும் மதிப்பையும் எப்படி ஆசிரியர்களால் உணர்ந்துகொள்ள முடியும் ? இந்தப் பின்னணியில் ஒரு ஜீவன், தன்னைத் தனது பதினெட்டாவது வயதுவாக்கில் மூடம் என அறிய நேர்ந்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இந்தச் சுய அறிவு மனித ஜீவனுக்கு மட்டுமே நிகழக்கூடியது என்பதால் இதில் ஆச்சரியப்பட எல்லாம் இருக்கிறது என்றும் சொல்லலாம். அறியாமை கூட மனிதனிடத்திலும் பிற ஜீவராசிகளிடத்திலும் ஒன்றாக இல்லை.

அறியாமை பற்றிய அறிவு துளிர்விடத் தொடங்கியபோது மனத்தில் கவிந்தது துக்கம். விலைமதிப்பற்ற இந்தத் துக்கம் காலப்போக்கில் வளர்ந்து கல்வியின் மதிப்பை உணரச் செய்ததுடன் சுயகல்வி என்ற வாசலை எனக்கு ஒருக்களித்து வைத்தது. சுயகல்வி என்ற வாசல் திறந்தபோது வாழ்க்கைக்கும் எனக்குமான உறவில் ஒரு குண வேறுபாடு தோன்றத் தொடங்கிற்று. வாழ்க்கையே ஒரு பள்ளி என்பதும் சக மனிதன் மூலமாகவும் புத்தகங்கள் வாயிலாகவும் எண்ணற்ற அறிவுகளை முடிவின்றிப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதும், தொடர்ந்து கற்றுக்கொண்டு வந்தாலும், ‘கற்றது கை மண் அளவு ; கல்லாதது உலகளவு ‘ என்ற நிலையே தொடரும் என்பதும் தெரிய வந்தது. கல்விமீதான என் உறவும் அக்கறையும் கல்லாத கல்வி அளித்த துக்கத்திலிருந்து பிறந்தவை.

2

இளமையிலிருந்தே எனக்குப் பல ஆசிரியர்களுடன் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இவர்களில் ஒருசிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன். ஜேசுதாசன், இலக்குவனார், ருத்திரப்பசாமி, ஸ்ரீதர மேனன், வீரபத்திரன் செட்டியார், காந்திமதி அம்மாள், சிவராம கிருஷ்ண ஐயர், அச்சம்மா தாமஸ், சிவன் பிள்ளை, ஏகாம்பர நாடார் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களுடன் கொண்டிருந்த உறவு காலப் போக்கில் நட்பாக மலர்ந்தது. இவர்கள் எல்லோருமே எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஆசிரியர்கள்.

எனக்குக் கற்றுத்தந்த வீரபத்திரன் செட்டியாரும், காந்திமதி அம்மாளும், சிவராமகிருஷ்ண ஐயரும், அச்சம்மா தாமஸும், சிவன் பிள்ளையும் என்மீது நம்பிக்கை கொண்டிருந்ததோடு நானும் என்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து தூண்டிக்கொண்டு இருந்தார்கள். அப்போது எனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை என்னையோ அவர்களையோ வெற்றிபெறச் செய்யவில்லை.

ஏகாம்பர நாடாரின் உறவு மலர்ந்த பின்புதான் விளையாட்டில் எனக்கு இருந்த ஆற்றல் வளர்ச்சி பெற்று என் ஆசிரியர்களையும் என் மாணவ நண்பர்களையும் – என்னையுமே – திகைப்படையச் செய்தது. ஆசிரியர்கள் தாண்டிப் போகும்போது பூமியைப் பார்க்காமல் ஆசிரியர்களின் முகங்களைப் பார்க்கத் தொடங்கினேன். விளையாட்டும் ஒரு கல்வி என்பதும் விளையாட்டில் முன்னிற்கும் மாணவனும் பள்ளிக்குச் சில கெளரவங்களைச் சேர்க்க முடியும் என்பதும் எனக்கு உறுதியாயிற்று.

ஓர் எழுத்தாளனாக நான் உருவாகத் தொடங்கியபோது கற்றுத் தருவதில் தோல்வியடைந்த என் ஆசிரியர்களின் நேசம் எனக்குக் கிடைத்தது. மட்டுமல்ல ; அவர்கள் தெளிவாக அறிந்திருந்த விஷயங்களைப் பற்றிக்கூட என்னிடம் சந்தேகங்கள் கேட்டு என்னைக் கெளரவிக்கத் தொடங்கியது மிகுந்த கூச்சத்தைத் தந்தது. குற்றவுணர்ச்சியின்றி அவர்களுடன் உறவாடக் கிடைத்த சந்தர்ப்பம் நம்பிக்கையை ஊட்டிற்று.

தமிழகக் கல்வி பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையுமே நான் அறிய நேர்ந்தது பின்னால் பழக நேர்ந்த பணியிலிருக்கும் இன்றைய என் ஆசிரிய நண்பர்கள் வழியாகத்தான். முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சரிபாதியினரேனும் கல்வி பற்றிய அவர்களுடைய எண்ணங்களையும் குறைகளையும் விமர்சனங்களையும் என்னுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களில் ஒருசிலர் இன்றையக் கல்வி பற்றிய மிகக் கூர்மையான விமர்சனங்களும் அதிர்ச்சி தரும் அனுபவங்களும் தகவல்களும் கொண்டவர்கள். நண்பர் ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது மேல்நிலைக் கல்வியைப் பற்றிப் பொதுவாகவும் தான் பணியாற்றும் பல்கலை பற்றிக் குறிப்பாகவும் அவர் முன்வைத்த குறைகள் என்னை வெகுவாகச் சங்கடப்படுத்தின. நம் கல்விமீது ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருக்கும் இவர்கள் பணியாற்றும் நிறுவனங்களால் ஒதுக்கப்பட்டவர்களாகவும், சக ஆசிரியர்களால் விலக்கப்பட்டவர்களாகவும் ஆகிவிட்டிருக்கின்றனர். நிறுவனமும் சக ஆசிரியர்களும் தங்களைத் தனிமைப்படுத்தும் நிலையில் ஆற்றாமை கொள்ளும் இவர்கள், மாணவர்கள் தங்கள்மீது வைத்திருக் கும் அன்பையும் மதிப்பையும் பெரும் ஆறுதல்களாகக் கருதித் தங்கள் ஆசிரிய வாழ்க்கையைச் சகித்துக்கொண்டு வருவது எனக்குத் தெரிகிறது.

கல்வியின் அடிப்படைகளைத் தக்கவைத்துக்கொள்ள முயலும் ஆசிரியர்களின் வாழ்க்கை தத்தளிப்பில் முடிந்திருப்பது வருந்த வேண்டிய விஷயம். சமூக மதிப்பீடுகள் சார்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் படைப்பாளியைத் தமிழ்ச் சமூகம் ஒதுக்குகிறது என்ற ஆற்றாமை என் மனத்தில் இருந்ததால் நான் இவர்களை என் சகப் பயணிகளாகக் கண்டதில் எங்கள் உறவில் அந்தரங்கம் கூடிற்று. மாணவர்களை நேசிப்பதும் கற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து கற்பதும் நூல்களைப் படிப்பதும் தம் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான தொடர்புகளைத் தேடிச் செல்வதும் மாணவர்களின் நலன் கருதிப் பொது அறிவுகளை வகுப்பில் சிறிய அளவிலேனும் கூற முற்படுவதும் தாங்கள் தனிமைப்பட்டுப் போனதற்கான காரணங்களாக இவர்கள் உணர்கிறார்கள். ‘ஆசிரியர்கள் ஓய்வு பெறும் அறையில் வீண் பேச்சுகளைத் தவிர்த்து வகுப்பெடுக்கப் பயன்படும் நூல்களை விடாப்பிடியாகப் படிக்கும் பழக்கம் என்னைச் சக ஆசிரியர்களின் வெறுப்புக்கு ஆளாக்கிவிட்டது ‘ என்று என் ஆசிரிய நண்பர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய வாசகம் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்துகொண்டிருக்கிறது.

3

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் வே. வசந்தி தேவியை, அவர் ஓய்வு பெறும் காலம் வரையிலும் புகைப்படங்களில் மட்டுமே நான் பார்த் திருக்கிறேன். அவர் துணைவேந்தராகப் பதவி வகித்த காலத்தில் தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த அவருடைய பேச்சுகள்தாம் முதலில் அவர்மீது என்னைக் கவனம் கொள்ள வைத்தன. பதவி கட்டுப்படுத்தும் நிலையிலேயே கல்வி நிலையை அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கிப் பேசியது மதிக்கத் தகுந்த ஒரு காரியமாக எனக்குப்பட்டது. தொடர்ந்து அவரது பேச்சுகளைக் கவனித்து வந்தேன்.

நண்பர் ஹமீது (மனுஷ்யபுத்திரன்) ம. சு. பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறை மாணவராகப் படித்துக்கொண்டிருந்தபோது தொடர்பியல் துறை பதிப்பித்த மாணவர் இதழ் ஒன்றில் அவர் கண்ட வசந்தி தேவியின் நேர்காணல் வெளிவந்திருந்தது. அதில் தமிழகக் கல்வியைப் பற்றி மேலும் கூர்மையாகவும் பட்டவர்த்தனமாகவும் அவர் கூறியிருந்த கருத்துகள் என்னைக் கூடுதலாகக் கவர்ந்தன. கல்வியைப் பற்றி ஆற்றாமைப்பட்டுப் பேசும் என் ஆசிரிய நண்பர்கள் பலரிடமும் நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வந்திருந்த கேள்வி ஒன்று உண்டு : ‘ஆசிரியர்களில் எவரேனும் – பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பேனும் -நம் கல்வியின் நிலை பற்றிய விமர்சனங்களை எழுதியிருக்கிறார்களா ? ‘ சொல்லும்படி எந்த நூலையும் அவர்களால் நினைவுகூர முடிந்ததில்லை.

இந்நிலையில் கல்வி பற்றிய வசந்தி தேவியின் கருத்துகளைச் சற்று விரிவாகத் தொகுக்க வேண்டியது அவசியம் என்று பட்டது. ஹமீதிடமும் வசந்தி தேவியை அறிந்திருந்த எங்கள் குடும்ப நண்பரான லல்லியிடமும் வசந்தி தேவியுடன் உரையாட இசைவு பெற முடியுமா என்று கேட்டேன். இந்தக் கேள்வியை நான் கேட்ட நேரத்தில் உரையாடலுக்கு அவர் இசைய மாட்டார் என்ற எண்ணம்தான் என் மனத்தில் இருந்தது. உயர் பதவி வகித்திருக்கும் ஒருவர் நிறுவனம் சாராத எழுத்தாளனுடன் உரையாடுவதன் மூலம் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் சூழல் உருவாகும் எனக் கருதக்கூடும் என்று எண்ணினேன். வசந்தி தேவியின் இசைவு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அத்துடன் கல்வித் துறைச் சிந்தனைகளில் ஊறிப்போன ஒருவருடன் உரையாட எனக்கு இருக்கும் தகுதி பற்றிய கவலைகளும் முளைக்கத் தொடங்கின.

4

பல்வேறு துறைகளில் பணியாற்றும் என் கல்லூரி ஆசிரிய நண்பர்கள் ஒருசிலரைத் தேர்ந்தெடுத்து, கல்வி பற்றிய அவர்களுடைய கருத்துகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவர்களுடைய பேச்சுகள் எல்லாவற்றையுமே மிக விரிவாக ஒலிநாடாவில் பதிவு செய்து வைத்துக் கொண்டேன். இந்தச் சந்திப்புகளின்போது எனக்கு ஒன்று தெளிவாயிற்று. ஒரு வெளி மனிதனாக இன்றையக் கல்வியின் நிலை பற்றி என் மனத்திலிருந்த மதிப்பீட்டைவிட ஆசிரிய நண்பர்கள் மனங்களில் இருந்த மதிப்பீடு மிகத் தாழ்வாக இருந்தது. ஆசிரியர் என்ற சொல் உருவாக்கும் படிமத்திற்கு என் மனத்தில் – காலமாற்றத்தால் சிதைந்து போன பின்பும் – எஞ்சியிருந்த மரியாதைகூட என் ஆசிரிய நண்பர்கள் பலருக்கும் இல்லை என்பது தெரிந்தது. கல்வித்துறை சார்ந்தவர்களின் பொறுப்பின்மை பற்றி மிகக் கடுமையாக என்னிடம் விமர்சித்துப் பேசிய ஆசிரியரிடம் – சுமார் இருபத்தைந்து வருட கால நண்பர் அவர் – ‘பணியில் உங்களுக்குச் சிறிய அளவிலேனும் மகிழ்ச்சி தரும் விஷயம் எது ? ‘ என்று கேட்டேன். ‘மாணவ மாணவிகளின் முகங்கள்தான் ‘ என்றார் அவர்.

கல்லூரி ஆசிரியர்களைச் சந்தித்த அளவுக்கு எனக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களையோ நடுநிலை / உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களையோ சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் சந்திக்கக் கிடைத்த ஒருசிலருடன் சற்று விரிவாகப் பேசும் சந்தர்ப்பத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடிந்தது. ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்து அதன்பின் படிப்படியாகக் கற்று உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பதவியை எட்டியிருந்த என் நண்பர் ஒருவர் – டாக்டர் மு. வ. வைத் தன் மானசீகக் குருவாக வரித்துக் கொண்டிருந்தவர் – கல்வியின் நிலை பற்றிப் பேசிக்கொண்டு வந்தபோது தன் இயற்கைக்கு மாறாக ஆவேசம் கொண்டு, எதிரே இருந்த என்னை மேல்நிலைக் கல்வி அதிகாரியாகப் பாவித்து, ‘நீங்க வேற ஒண்ணும் செய்ய வேண்டாம் ஐயா. பொட்டைப் பசங்களுக்கு ஒரு கழிப்பறை மட்டும் கட்டித் தாங்க, அது போதும் ‘ என்று உரத்த குரலில் சொன்னார். அவருடைய பாவனைப்படி நான் மட்டும் ஒரு மேலதிகாரியாக இருந்திருந்தால் இரண்டு கழிப்பறைகளை உடனடியாகக் கட்ட (ஆம்பிளைப் பசங்களுக்கும் ஒண்ணு இருக்கட்டுமே!) உத்தரவு போட்டிருப்பேன். ‘பெண் குழந்தைகள் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் காலம் தமிழ் மண்ணில் நிச்சயமாக மலரும் ‘ என்று சொல்லி என் நண்பரை அப்போதைக்குத் தேற்றினேன்.

5

1998 செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் திண்டுக்கலில் வசந்தி தேவியின் வீட்டில் இந்த உரையாடல் நடந்தது. முதல் இரண்டு நாட்கள் ஹமீதும் லல்லியும் உடன் இருந்தார்கள். வசந்தி தேவி எந்த மனத்தடையும் இல்லாமல் மிகவும் உற்சாகமாகப் பேசினார். ஐந்து அமர்வுகளில் சுமார் பதினைந்து மணி நேரம் உரையாடல் நாடாவில் பதிவு செய்யப்பட்டது. வசந்தி தேவி பகிர்ந்துகொள்ள விரும்பிய பெரும்பாலான விஷயங்களை இந்தச் சந்திப்பின் போதே கூறிவிட்டிருந்தார். விட்டுப் போன ஒரு சில செய்திகளை மட்டும் பின்னால் எழுதிச் சேர்த்தார்.

உரையாடலை நாடாவிலிருந்து எழுதி எடுப்பதற்கும், பிரதியை ஒழுங்கு படுத்திப் புத்தக வடிவம் தருவதற்கும் பலருடைய கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. கணினிப் படிவங்களை இருமுறை பார்வையிட்டுத் தேவையான திருத்தங்களை வசந்தி தேவி செய்து தந்தார். நூலுக்கு இறுதி வடிவம் தர, நாங்கள் இருவரும் எதிர்கொண்ட வேறு அலுவல்களுக்கு இடையே நான் எதிர்பார்த்ததைவிடவும் கால தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் நம் கல்வி பற்றி வசந்தி தேவி கூறியுள்ள கருத்துகள் இன்றும் பொருத்தமுடையவையாக இருக்கின்றன. எந்தக் கருத்தையும் காலாவதியாக்கிவிடும் மாற்றம் எதுவும் கல்வித் துறையில் நடந்ததாகத் தெரியவில்லை. கடந்த ஐம்பது வருடங்களில் அடிப்படை மாற்றங்கள் எவையும் நிகழ்ந்துவிடாத ஒரு துறையில் கடந்த இரண்டாண்டுகளில் மாற்றங்கள் எவையும் நிகழாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

6

வசந்தி தேவி இந்த உரையாடலில் கூறியுள்ள கருத்துகளைப் பற்றி ஒருசேர யோசித்துப் பார்க்கும்போது இரண்டு சிந்தனைகள் அழுத்தம் கொள்கின்றன. ஒன்று : கல்வி மனித நேயத்தை வளர்க்க வேண்டும். இரண்டு : சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த இரு குறிக்கோள்களையும் முன்வைத்தே அவருடைய சிந்தனைகள் பல்வேறு தளங்களை நோக்கி விரிகின்றன. கல்வியின் பயனை மொத்தச் சமூகமும் பெறவில்லை என்றும், அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றும், உயர் ஜாதியினரும் வசதி படைத்தவர்களும் பெறும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் இன்று பெற முடியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். ஆகவே தமிழ்வழிக் கல்வியில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை கல்வியின் குறிக்கோளில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. பல்கலைக் கழகங்கள் உயரமாக எழுப்பப்பட்டுள்ள சுவர்களுக்குள்ளே முடங்க வேண்டியவை அல்ல என்றும், அவை அவற்றைச் சுற்றியிருக்கும் சமுதாயத்துடன் உறவுகொள்ள வேண்டியவை என்றும், சமுதாயப் பிரச்சினைகளில் தங்களுக்குரிய பங்கைச் செலுத்த வேண்டியவை என்றும் அவர் வற்புறுத்துகிறார். வாழ்க்கையைவிட்டு விலகி நிற்கும் கல்வி பயனற்றது என்பதே அவரது கருத்து.

வசந்தி தேவியின் அணுகுமுறை லட்சிய நோக்கும் யதார்த்தப் பார்வையும் இணைந்தது என்று சொல்லலாம். நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகளைப் பற்றி அவர் இந்த நூலில் எங்கும் பேசவில்லை. மனம் சோராத போராளி அவர். மாற்றத்தை முட்டுக்கட்டை போட்டு முடக்கும் சமூகம் நம்முடையது. அமைப்பு ஜீவனற்று உளுத்துப் போன பின்னரும் பொக்கான அதன் சடங்குகளைக் காப்பாற்றிக்கொண்டு போகும் பழக்கத்தைச் சுமப்பவர்கள் நம் நிர்வாகிகள். இந்தச் சூழலில் செயல்பாட்டில் மிகுந்த நம்பிக்கை கொள்ளும் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் திணறலைத் தரக்கூடியனவாகவே இருக்க முடியும். வசந்தி தேவி எதிர்கொண்ட தடைகளை அவரது சொற்களிலேயே அறியும் வாய்ப்பை இந்நூலில் பெறுகிறோம். இருப்பினும் குறிக்கோளைப் பொதுநலம் சார்ந்தும் தெளிவாகவும் வகுத்துக்கொண்டால் ஆசிரியர், மாணவர், கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை ஒரு எல்லை வரையிலும் வென்றெடுக்க முடியும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. மனித மனங்களின் சிக்கல்களும் சுயநலச் சக்திகளின் தந்திரங்களும் அவர் அறியாதவை அல்ல. இருப்பினும் சமூக மாற்றங்கள் சார்ந்த பணிகள் அனைத்துமே சிறிய அல்லது பெரிய போராட்டங்களின் விளைவாகக் கூடிவந்தவைதாம் என்ற வரலாற்றுணர்வு அவருக்கு இருக்கிறது. இந்த வரலாற்றுணர்வுதான் அவரைச் சோர்வடையவிடாது தொடர்ந்து போராடத் தூண்டிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இது ஒரு முடிவற்ற போராட்டம்.

7

தமிழ்ச் சமூகம் விமர்சனங்களை எதிர்கொள்ளும் முறை தந்திரமானது. ஒரு துறை சார்ந்த விமர்சனங்கள் ஆழமாகவும் தடயங்களை முன்வைக்கும் ஆதார குணங்களைக் கொண்டவையாகவும் இருக்கும் நிலையில்கூட அந்தத் துறை சார்ந்தவர்களால் அவ்விமர்சனங்கள் பொதுவாக எதிர்கொள்ளப்படுவதில்லை. இலக்கியத் துறையில் ஐம்பது வருடங்களாக விமர்சனக் கருத்துகளைக் கூறிவரும் நான் தமிழ்ச் சமூகத்தின் இத்தந்திரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இதற்குப் பின்னால் சில சுயநலக் கணக்குகள் இருக்கின்றன. ஒன்று : விமர்சனக் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவி அவை ஒரு இயக்கமாக வளர்ந்து துறை சார்ந்த நாற்காலிகளை அசைப்பதற்கான வாய்ப்பு நம் சமூகத்தில் மிகவும் குறைவு என்பது. இரண்டு : அவ்வாறான மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என்றால் தொலைதூரத்தில் நிற்கும் அம்மாற்றம் வந்துசேர்வது வரையிலும் தொடர்ந்து சுரண்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கலாம் என்பது. மூன்று : எல்லாச் சமூகங்களிலும் மாற்றங்களை உருவாக்க ஆதார இயக்கமாகச் செயல்படும் அரசியல், விழிப்புநிலை அற்ற மக்களைச் சுரண்டும் நிறுவனமாக இங்கு இறுகிப் போய்விட்டதால் பெரிய மாற்றங்கள் எவற்றையும் இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது. சமூக விழிப்புநிலையை உருவாக்க முயலும் சிந்தனையாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் எதிர்நிலையிலேயே அரசியல் சக்திகள், ஊடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி, சமயத்தலைமை சார்ந்த கூத்தடிப்புகள் நிகழ்கின்றன. இவை எல்லாமே மக்களுடைய சிந்தனையை மழுங்கடிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரும் வணிகத்தில் பங்கு கொள்பவையாக இருக்கின்றன.

ஜனநாயக மதிப்பீடுகள் கூர்மைப்பட அவசியமான விழிப்புநிலை இன்னும் நம் மக்களிடத்தில் போதிய அளவில் வளரவில்லை. விழிப்பு நிலை கூடிவர மக்களின் போலிக்கனவுகள் சார்ந்த கற்பனைகள் உடைய வேண்டும். மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். பகுத்தறிவு கூர்மைப்பட வேண்டும். காரண, காரியத் தொடர்புகள் வலுப்பட வேண்டும். வாழ்க்கையின் நலங்களுக்கெதிராக இருப்பவை எவற்றிற்கும் எந்தப் புனிதமும் கிடையாது என்ற பிரக்ஞை உருவாக வேண்டும்.

சமூகத்தை மாற்ற முற்பட்ட சக்திகள் அனைத்தின்மீதும் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று சொல்லலாம். அரசியலில் நேற்றையத் தலைவர்களின் தியாகங்களை முன்வைத்துத் தொழில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. தியாகங்களை மூலதனமாக்கப் புதிய தலைமுறைக்குச் சிறிய அளவிலேனும் வரலாற்றுணர்வு வேண்டும். அது முற்றாகத் தேய்ந்து வரும் நிலையில் அரசியல் தொழிலின் வெற்றிக்கு ஜாதி வேற்றுமைகளும் மத வேற்றுமைகளும் கிளறிவிடப்படுகின்றன. லட்சியவாதிகளின் தியாகங்களைப் பற்றிய உள் நினைவு கொண்ட நேற்றையத் தலைமுறை அடைந்திருக்கும் ஏமாற்றத்தில் துக்கமேனும் இருக்கிறது. லட்சிய வாதத்தையே அறியாத இளைய தலைமுறையினர் கருத்துலகத்திலிருந்து முற்றாக விலகி வணிகத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் போட்டிகளில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

தமிழகத்தில் ஆசிரியர்களின் செயல்பாடுகளில் கருத்துலகப் பாதிப்பு என்று சொல்லும்படி இன்று எதுவும் இல்லை. தத்துவமோ, கோட்பாடோ, சமூக அறிவியலோ, நுட்பமான சிந்தனைகளோ அவர்களைக் கவர்வதாகத் தெரியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படும் மனித துக்கங்களுக்கு அவர்கள் இன்று எந்த எதிர்வினையும் தருவதும் இல்லை. இந்நிலையில் அவர்களை ஒரு சமூகச் சக்தியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை என்ற வாதத்தில் பொருள் இல்லாமலில்லை. இருப்பினும் நேற்றே கடவுளை இழந்துவிட்ட மனிதன் இன்று அரசியலையும் இழந்து நிற்கும் நிலையில் அவனுக்கு நம்ப ஒரு சக்தி வேண்டும். பூமியைப் புதைமண்ணாகக் கற்பனை செய்துகொண்டால் நடப்பதும் சாத்தியமற்றுப் போய்விடும். ஆகவே இன்றையச் சூழலில் கடைசி நம்பிக்கை ஆசிரியர்களை நோக்கிக் கவிவது இயற்கைதான். வீறுகொண்டு எழத் துணை நிற்கும் சாதக மான அம்சங்கள் ஆசிரிய வர்க்கத்தினருக்கு இருப்பதுபோல் வேறு எவருக்கும் இன்று இல்லை. பணி நாட்களும் பணி நேரமும் குறைவு என்பதால் நிறைய கால அவகாசம் கிடைக்கிறது. கருத்துலகத் தொடர்பு கொள்வதற்கான பெரும் வாய்ப்பு மற்ற எவரையும்விட அவர்களுக்கு மிகுதி. நூல்நிலையத் தொடர்பும் சிந்தனையாளர் தொடர்பும் அவர்களுக்கு எளிது. மாணவ சமூகம் என்ற மிகப் பெரிய சக்தி அவர்கள் கையில் அவர்களுடைய கருத்துகளை எதிர்நோக்கி நிற்கிறது. ஆசிரிய சமூகத்துக்கு வெளியே ஒரு சிந்தனையாளனுக்குத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஒருசிலரைக் கண்டடைவதுகூட மிகக் கடினமாக இருக்கிறது. ஆசிரியர்கள் பொருளாதாரப் பலத்துடனும் பணி சார்ந்த உத்தரவாதத்துடனும் இன்று இருக்கிறார்கள். ஆசிரியர்களை எப்போதும் போற்றி வந்திருக்கும் நம் சமூகம் இப்போதும் அவர்கள் சொல்லுக்கு மதிப்பளிக்கும் மனநிலையிலேயே இருக்கிறது.

வசந்தி தேவியுடன் நான் நிகழ்த்தியிருக்கும் இந்த உரையாடல் தமிழக ஆசிரியர்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் எதிர் வினைக்கும் இலக்காக வேண்டும் என்று விரும்புகிறேன். நிகழ்ந்து முடிந்துவிட்ட இந்தக் காரியத்தை, நிகழாத ஒன்றாக ஆசிரியர்கள் கற்பனை செய்து கொள்ளாமல் இருப்பார்கள் என்றால் அந்நிலை தமிழ்ச் சமூகத்துக்கு அவர்கள் செய்யும் உதவியாக இருக்கும்.

சுந்தர ராமசாமி

நாகர்கோவில்

14.07.2000


நூலிலிருந்து :

சுந்தர ராமசாமி : உங்களைச் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறீர்கள். மாற்றங்களை விரும்பாத சமூகம் நம்முடையது. அதனால் பல தடைகள் உருவாக்கப்படும். சோர்வடையாமலும் சித்தாந்தங்கள் சார்ந்து முன்தீர்மானங்கள் இல்லாமலும் நம் பின்தங்கிய சமூகச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நீங்கள் செயல்பட்டு வருவதுதான் எனக்கு உங்கள்மீது மதிப்பு ஏற்படக் காரணம். முதலில் கல்வி குறித்த உங்கள் பார்வைகளையும் அணுகுமுறைகளையும் விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

வே. வசந்தி தேவி : கோட்பாடுகள் சார்ந்து நமக்கு எப்போதும் சில லட்சியங்கள் இருக்கும். ஆனால் அவற்றை என்றைக்கும் எந்தச் சமூகத்திலும் நேரடியாக, முழுமையாக நிறைவேற்ற முடியாது. மாற்றங்கள் துல்லியமாகவும் முழுமையாகவும் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தால் அவை ஒருபோதும் நடைபெறுவதில்லை. பல கட்டங்களில் யதார்த்தத்திற்கு ஏற்றபடி, இருக்கின்ற நிலைமைகளுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை, விட்டுக்கொடுத்தும் சிறிய சமரசங்கள் செய்துகொண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஒரு நீக்குப்போக்குத் தேவைப்படுகிறது. எந்த ஒரு லட்சியத்தையும் கரைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் படிப்படியாக இறங்கித்தான் வரவேண்டும். அப்படியென்றால் ஒவ்வொரு படியிலும் ஒரு நீக்குப்போக்குத் தேவைப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு லட்சியம் சிதறித்தான் போகிறது. ஆனாலும்கூட மீதியிருப்பதையாவது கரையில் கொண்டு சேர்க்கலாம். மிகவும் ஏற்ற, லட்சியபூர்வமான ஒரு சூழல் உருவானால்தான் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியும் என்று எண்ணிக் கொண் டிருந்தால், அந்த நேரம் வரப்போவதேயில்லை. இப்படித்தான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்பிற்கு வந்தபோது எனது எண்ணங்களை நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டுமென்ற வேகம் இருந்தது. அதனால், ஆரம்பத்திலேயே, நான் வந்த முதல் வருடமே அடிப்படையில், பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்டு வரவேண்டுமென்று விரும்பினேன். முதலில் எடுத்துக்கொண்டது பட்டப் படிப்புகளை மாற்றி அமைக்கும் திட்டம். அதை ஆரம்பித்தவுடனேயே சக ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோருமே, ‘நம்முடைய பல்கலைக்கழகம் ரொம்பப் புதியது, இளையது; இன்னும் கட்டிடங்களோ துறைகளோ உருவாகவில்லை, யுஜிசி அங்கீகாரம் வரவில்லை; நீங்கள் இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறீர்களே! மிகப் பெரிய பல்கலைக்கழகங்களெல்லாம் தொடவே பயப்படும் விஷயமல்லவா இது ‘ என்று சொன்னார்கள். ஆனால் நாம் அங்கேயிருந்து, அடிப்படையிலிருந்து தொடங்கினால்தான் ஏதாவது மாற்றம் சாத்தியம் என்று நினைத்தேன்.

நான் செய்த மாற்றங்களிலேயே மிகவும் முக்கியமானது, அடிப்படையானது இதுதான் என்று நினைக்கிறேன். என்னுடைய கல்வி சித்தாந்தத்தை லட்சியமாக வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி, ஓரளவு நிறைவேற்ற முயன்றேன்.

சு. ரா : என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு எதிர்காலம் பற்றிப் பல கனவுகள் இருக்கலாம். ஆனால் நீங்களோ திட்டவட்டமாகவும் நடைமுறை சார்ந்தும் சில காரியங்களை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். எந்தவிதமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறீர்கள் ? அதோடு கல்வி பற்றிய உங்கள் அடிப்படைச் சிந்தனைகள் என்ன ? எனக்குப் பலவிதமான எண்ணப் போக்குகள் இருக்கின்றன. கல்வி, மாணவ மாணவிகளின் ஆளுமைகளை வளர்க்க வேண்டும்; இனம் தெரியாத பயங்களை அகற்ற வேண்டும்; நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தயார் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறேன். உங்கள் நோக்கம் என்ன ? ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டால்தானே அது நிறைவேறிற்றா இல்லையா என்று நாம் பார்க்க முடியும்.

வ.தேவி : இப்போது நான் உயர்கல்வியைப் பற்றி மட்டும் சொல்கிறேன். பின்னால் கல்வியைப் பற்றி முழுமையாகப் பேசலாம். உயர்கல்வியில் அறிவு வளர்ச்சி பல தளங்களில் இருக்க வேண்டும். அதில் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் நடந்து கொண்டிருக்கும் பெரிய, வேகமான மாற்றங்களையெல்லாம், அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சியை எல்லாம் நம்முடைய மாணவர்கள் அடையுமாறு செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் எங்கேயோ நடந்திருக்கிற விஷயங்களை எல்லாம் நம்முடைய மாணவர்களுக்குப் பயன்படும்படியாக அவர்களுடைய வாசற்படிக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம், ஒரு மாணவனை சுயசிந்தனை உடையவனாக, ஒரு விமர்சனப் பார்வை கொண்டவனாக, சமூகத்தோடு அவன் சில பிணைப்புகளை உரு வாக்கிக் கொள்பவனாக, அந்த மாணவனை மாற்றக்கூடியதாக கல்வி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அத்துடன் மாணவனிடத்தில் ஒரு படைப்பாற்றலை உருவாக்குகிற கல்வி; அவனுள்ளிருக்கும் அந்தப் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் கல்வி வேண்டும். The Purpose of education is not to inform, but to sensitise செய்திகள், தகவல்கள் ஆகியவற்றை இன்றைய இளைஞன் பல வழிகளில் பெறலாம். கல்வி நிலையங்கள், வகுப்பறைகள், தகவல்களைப் பெறுவதற்கு, இன்றைய உலகில் தேவையில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தச் செய்தி உலகத்தில், தகவல் யுகத்தில், இணையம் மூலம், பலவகைப்பட்ட ஊடகங்கள் மூலம் பெறலாம். ஆனால் கல்வி நிலையங்கள், வகுப்பறைகள் இளைஞர்களுக்கு sமீஸீsவீtவீஸ்வீtஹ்ஐ கொடுக்க வேண்டும். அதை இணையம் கொடுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசுகிறபோது இன்றையக் கல்வி அமைப்பிலிருக்கும் முக்கியமான குறைகளைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.

மாணவர்களுக்குத் தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி எறியும் கல்வியைத்தான் நாம் இன்றைக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் தங்களைச் சுற்றி மதிற்சுவர்களை எழுப்பிக்கொண்டு இருக்கின்றன. அந்த மதிற்சுவர்களுக்குள்ளாக நம்மை முடக்கிக்கொண்டு நாம் கல்வியைக் கொடுக்கிறோம். அந்தக் கல்வி, சுற்றியுள்ள சமுதாயத்தைத் தாண்டி எங்கேயோ இருக்கும் அந்நியமான உலகத்திலிருந்து சில வளர்ச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கலாம். ஆனால் சமுதாயத்தின் தொடர்பில்லாமல் கொடுக்கிற கல்வியானது மாணவனைக் குறை மனிதனாக்குகிறது. உண்மையான நிறைவை அவனுக்குக் கொடுப்பதில்லை. அந்தக் கல்வி மிகவும் செயற்கையானது. இதனால் சமுதாயத்திற்கும் பயனில்லை; மாணவர்களுக்கும் பயனில்லை. அதனால்தான் இங்கே படித்துக்கொண்டு இருக்கிறவர்கள் எல்லோரும் நேரே அமெரிக்கா போகணும் என்று நினைக்கிறார்களே ஒழிய அவர்களுக்குத் தங்களுக்கு ஒரு இடம் சமுதாயத்தில் இருக்கிறது என்பது தெரியாமல் போகிறது. இது உயர்கல்வியில் இருக்கிற பெரிய குறை. இதை மாற்ற வேண்டும்.

உலகத்தில் நடப்பவற்றையெல்லாம் ஓரளவுக்கு அறிந்துகொள்ளும் விசாலப்பார்வை கொண்டவர்களாக மாணவர்களை மாற்ற வேண் டும் என்று நான் நினைக்கிறேன். ‘To think globally and act locally ‘ என்று சொல்கிறார்களே அதுபோல பரந்த உலகின் அறிவையும், ஞானத்தையும் ஈர்த்துக்கொண்டு அதைத் தன்னுடைய சமுதாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கு கல்வி ரொம்ப குறுகிக்கொண்டே போகிறது. ஒரு துறையில் ஆழமான அறிவு வேண்டும் என்றால் ஒரு கட்டத்தில் specialisation மிகவும் அவசியம் தான். அதற்குமுன் ஒருவருக்கு அறிவின் பல்துறை பற்றிய ஒரு பரிச்சய அறிவு இருக்க வேண்டும். அப்போதுதான் தான் தேர்ந்தெடுத்து, ஆழமாகக் கற்கும் அந்த அறிவை ஒரு பரந்த பின்புலத்தில் பொருத்திப் புரிந்துகொள்ள முடியும். அவனது துறைக்கும், மனித அறிவுத் திரட்சியின் முழுமைக்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள முடியும். அறிவுத்துறை ஒவ்வொன்றும் மற்ற துறைகளுடனும், மனித அறிவு முழுமையுடன் பல உயிர்த்தளைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது. பிணைக்கும் நரம்புகளையும், ரத்தநாளங்களையும் துண்டித்துவிட்டுத் தனது குறுகிய துறையில் மட்டுமே ஆழ்ந்து செல்வது மனித உடலின் ஒரு உறுப்பை மட்டும் எடுத்து, பரிசோதனைக்கூட மேசையில் வைத்து, மிகுந்த சக்தி கொண்ட பூதக்கண்ணாடியால் ஆராய்வதைப் போன்றது. அந்த உறுப்பை உடலின் மற்ற உறுப்புகள் எப்படிப் பாதிக்கின்றன என்பதையோ, இந்த உறுப்பு மற்ற உறுப்புகளை எப்படிப் பாதிக்கிறது என்பதையோ புரிந்துகொள்ள முடியாது.

அத்துடன், வேலை வாய்ப்பை அளிக்கும் கல்வியாகவும் இருக்க வேண்டுமென்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வேலைவாய்ப்பு களை உருவாக்குவது சமுதாயத்தின், பொருளாதார அமைப்பின், தேசியக் கொள்கைகளின் பொறுப்பு ; கல்வியின் பொறுப்பல்ல. எந்த அறிவுத் துறையுமே வேலைவாய்ப்பற்ற துறையாக இருக்கக் கூடாது. அதிலும், நம்மைப் போன்ற பிரம்மாண்டமான இயற்கை வளமும், மனித வளமும், மகோன்னதமான கலை, இலக்கியக் கலாச்சாரப் பாரம்பரியமும், நீண்ட வரலாறும் கொண்ட நாட்டில் அனைத்து அறிவுத்துறைகளுக்கும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

அப்புறம் இதிலே இன்னொன்று : ஜனநாயக ரீதியான கல்வி அமைப்பு வேண்டும் என்பது. அப்படிப்பட்ட கல்வி அமைப்பு என்று ஒன்று தனியாக இருக்கிறதா என்று கேட்கலாம். இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். கல்வி அமைப்பிலும் ஜனநாயகம் இருக்கிறது. நமக்கு ஜனநாயகத்தின் மேல் பல வெறுப்புகள் இருக்க லாம். இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக நடக்கவில்லை என்று நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ஜனநாயகத்திற்கு வேறு மாற்று கிடையாது. ஜனநாயகத்தை மேம்படுத்தலாமே ஒழிய ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு இன்னொரு வகைப்பட்ட அரசியலைக் கொண்டு வரவேண்டும் என்று நாம் நினைக்க முடியாது. ஆனால் அதற்கு எல்லாத் துறைகளோடும் இணைந்துதான் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் கல்வி அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒரு தலைமுறைக்கு முன்னால் இருந்ததைவிட இன்று ஏற்றத் தாழ்வுகள் மிகவும் கொடூரமாக அதிகரித்திருக்கின்றன. இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு அது ஒரு அடிப்படையான காரணம் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் மாற்றக்கூடிய கல்வியைக் கொடுக்க வேண்டும். கல்வி மூலமாகப் பல நெறிமுறைகளைக் கொடுக்க வேண்டும். அந்த நெறிமுறை என்பதை ஒரு ஒழுக்கவியலாக நான் கருதவில்லை; மாணவர்களுக்குத் தன்னைப் புரிந்துகொள்ளும் கல்வியை, தன் மீது நம்பிக்கைகொள்ளும் கல்வியைக் கொடுக்க வேண்டும்.

இன்றைய சமூகத்தில் இளைஞர்களுக்குத் தங்களிடம் நம்பிக்கை இல்லாதது மட்டுமல்ல, பிறரிடமும் நம்பிக்கையில்லை. இவ்வாறான ஒரு உலகத்தைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்நிலையில் ஒரு முக்கியமான மாற்றத்தை நாம் இளைஞர்களிடம் கொண்டு வரவேண்டும். அவனைத் தன்னை நம்பக்கூடியவனாக, சமுதாயத்தை நம்பக்கூடியவனாக மாற்றக்கூடிய கல்வி வேண்டும். இவையெல்லாம்தான் அடிப்படையாக நம் கல்வி அமைப்பில் நிகழ வேண்டிய மாற்றங்கள். இவை லட்சியங்கள். அவற்றை எப்படி நாம் நிலையான மாற்றங்களாகக் கொண்டு வருவது ? எப்படி நடைமுறைப்படுத்துவது ? இன்றையக் கல்விமுறையில் அதற்கான அவகாசமே இல்லாமல் இருக்கிறது. தேர்வு முறையை ஒட்டிய பாடத்திட்டங்களும் போட்டி மனப்பான்மையும்தான் இன்றையக் கல்வியின் அடிப்படையாக இருக்கின்றன. இதற்குள்ளாகத்தான் மற்ற விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

சு. ரா : நாம் சுதந்திரம் பெற்று 50 வருடங்கள் ஆகிவிட்டன. நம் கல்வி பிரிட்டாஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்டது. அவர்களுடைய நலன்களுக்கு இந்தியர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் அதில் முதன்மையானது. இந்தக் கல்வியை அகற்றி நம்முடைய மண், கலாச்சாரம், சூழல் சார்ந்த கல்வியை உருவாக்கு வதற்கு நாம் ஏதாவது முயற்சி செய்திருக்கிறோமா ? இந்த 50 வருட நீட்சியில் உங்கள் எண்ணங்கள் விதிவிலக்கான, வித்தியாசமான எண்ணங்களாகத்தான் எனக்குப்படுகின்றன. நாம் பின்பற்றி வரும் பொது இயக்கத்தின் பகுதியாகப் படவில்லை. அரை நூற்றாண்டுக் காலத்தில் ஆசிரியர்கள் ஒரு புதிய கல்வியை உருவாக்குவதில் என்ன கவனம் காட்டியிருக்கிறார்கள் ? ஏன் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்க இந்திய ஆசிரியர்கள் முயற்சி செய்யவில்லை ? ஆண்டான் அடிமை முறைக்கும் குமாஸ்தாக்களை உருவாக்கும் முறைக்கும் நாம் ஏன் இன்னும் முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருக்கிறோம் ?

வ.தேவி : நீங்கள் சொல்வது ரொம்ப சரி. கல்வி அமைப்பில் காலனிய ஒழிப்பு நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசியல் ரீதியாகக் காலனியாதிக்கம் முடிந்ததே தவிர அடிப்படைக் கட்டமைப்பில் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மேற்கத்தியமயமாதல் நம்முடைய கலாச்சார அமைப்பில் ரொம்ப ஆழமாக ஊடுருவியிருக்கிறது. அந்நிய ஆட்சியிலிருந்து வந்த கல்வியை மாற்றி நம் மண்ணுக்குத் தகுந்த ஒரு கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையே யாருக்கும் உருவாகவில்லை. அங்கங்கே சின்னச்சின்னப் பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. கல்விக்கான கமிஷன்களை எல்லாம் போட்டார்கள். அவற்றின் பரிந்துரைகளில் இதைப் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் உண்மையாகவே அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. ஏனெனில், அப்போதிருந்தே வேகவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் உலகத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தோம். சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்த அளவு உலகமயமாதல் இல்லையென்றாலும்கூட அப்போதிருந்தே போட்டி மிகுந்த உலகத்தில்தான் இருக்கிறோம். அதுதான் நம்முடைய சமூகத்திலுள்ள அடிப்படையான சிந்தனா முறையை நிர்ணயிக்கிறது.

அத்துடன், மிக முக்கியமானது காலனிய காலத்துக் கல்வியினால் பலனடைந்து, அன்றே நிர்வாகத்தின், அரசு எந்திரத்தின் பல அமைப்புகளிலும் புகுந்து அவற்றை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்கள் நமது சமுதாயத்தின் மேல் ஜாதியினர். கருத்துலகத் தலைமையும் அவர்கள் கையில்தான் இருந்தது. காலனியக் கல்வி இவர்களுக்குப் பலனளித்து, மற்றவர்களைவிட வேகமாக முன்னேற வாய்ப்புகளை அளித்திருக்கிறது. இதில் அவர்களுக்கு நிறைய சாதக நிலைகள் உருவாகின. சுதந்திரத்திற்குப் பிறகும் இவர்கள் கையில்தான் கருத்துலக – நிர்வாகத் தலைமை தொடர்ந்தது. தங்களுக்குப் பெரும் சாதகமாக இருந்து சமுதாயத்தின் உச்சிக்குத் தங்களை எடுத்துச் சென்ற கல்வியை மாற்ற வேண்டும் என்று அவர்கள் ஏன் நினைக்கப் போகிறார்கள் ? அதே கல்வி தொடர்வதுதான் அவர்களுக்குச் சாதகமானது.

மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தைத் தீர்மானிப்பவர்கள் அதிகாரிகளே தவிர ஆசிரியர்கள் அல்ல. மேலேயிருந்து உருவாக்கப் படும் கல்வி கீழ்நோக்கித் திணிக்கப்படுகிறது. இது நம்முடைய கல்வி அமைப்பிலிருக்கும் பெரிய குறை. ஆகவே பள்ளிக்கல்வியிலிருந்து எல்லோருக்கும் அங்கங்கே என்னென்ன கல்வி அமைப்பு இருக்க வேண்டும் என்பதைப் பற்றித் தீர்மானிக்க ஆசிரியர்களுக்குப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும். அதை ராதாகிருஷ்ணன் கமிஷன், கோதாரி கமிஷனிலிருந்து சொல்லிக்கொண்டே இருக் கிறார்கள். ஆனால் யாரும் அதைச் செய்யவில்லை. ராஜீவ் காந்தி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள். அதுவும் மேலிருந்து உருவாக்கப்பட்டதே ஒழிய ஆசிரியர்களுக்கு அதில் பங்கு இல்லை.

தமிழகத்தில் கல்வி : வே. வசந்தி தேவியுடன் உரையாடல்

சந்திப்பு : சுந்தர ராமசாமி

பக்கம் 208, விலை ரூ.90

விமான பதிவுத் தபால் கூடுதல் கட்டணம் ரூ.78

வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம்

669 கே. பி. சாலை

நாகர்கோவில் 629 001

இந்தியா

தொலைபேசி : 04651 – 222525

தொலைநகல் : 04651 – 223159

மின்னஞ்சல் : kalachuvadu@vsnl.com

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி