உரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

ராமச்சந்திரன் உஷா


சில வாரங்களுக்கு முன்பு டைரக்டர் பாலுமகேந்திராவின் பேட்டி ஆனந்தவிகடனில் வந்திருந்தது. அதைப் படித்த சில நண்பர்கள் எப்பேர்பட்ட இயக்குனர் கதி இப்படி ஆகிவிட்டதே என்று வேதனைப்பட்டனர். சிலரோ மெளனிக்கா, ஷோபா, அர்ச்சனா என்று அவர் ஆடிய ஆட்டத்தைச் சொன்னார்கள். ஆனால் இயக்குனர் சொன்ன ஒரு வாக்கியம் யார் கண்ணில் விழாமல் போனது. ‘ மெளனிகாவுடன் நான் கொண்ட நட்பு சாதாரண இயக்குனர், நடிகையின் படுக்கையறை உறவல்ல ‘ என்றுச் சொல்லியிருக்கிறார். ஆக, நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறார்.

நடிகைகள் பேட்டி கொடுக்கும்பொழுது, நடிகை என்றால் சமூகத்தில் அலட்சியமாய்ப் பார்க்கிறார்கள். ஆனால் இதுவும் கெளரவமான தொழில்தான். பெண்கள் ஆபிசுக்குப் போய் வேலை செய்துவிட்டு வருவதைப்போல நடிப்பும் ஒரு தொழில் என்று முழங்குவார்கள். ஆக, எது உண்மை ? பன்னிரண்டு, பதிமூன்று வயது சிறுமிகளைப் பெற்றோர் நடிக்க அனுப்புகிறார்களே அவர்களின் நிலைமை என்ன ? அந்த வயதில் இயக்குனர், நடிகர் என்று வரிசையாய் நடிப்பு தொழிலில் இருக்கும் அனைத்து ஆண்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றுச்

சொல்லப்படுகிறது. இதனாலே பிறகு கல்யாணம், குழந்தை என்று ஆசைப்பட்டு நடிப்பில் இருந்து விலகிப் போனாலும் நிம்மதியான வாழ்க்கை அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாலிகட்டுபவனும், சில மாதங்களிலேயே தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்குகிறான். ஆனால், அந்தக் காலம் போல் தற்கொலையைத் தவிர்த்து, கோர்ட் மூலம் மணவிலக்கு பெற்று பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்கள்.

தற்கொலை என்றால் அன்றைய மர்லின்மன்றோ முதல் சமீபத்திய சிலுக்கு ஸ்மிதா, விஜி பிறகு கொலையா தற்கொலையா என்று தெரியாத பிரத்யுக்ஷா ஞாபகம் வருகிறார்கள். பிரத்யுக்ஷா மரணம் எவ்வளவு சுலபமாய் மூடி மறைக்கப்பட்டது ?

மணவிலக்குகளும் மணமுறிவுகளும்

மணமுறிவுகள் நம் நாட்டில் அதிகமாகி வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கும், மிகவும் தாழ்ந்தவர்களுக்கும் மணவிலக்குகளும், மறுமணங்களும் மிகச் சாதாரணம். ஆனால் மத்தியவர்க்கத்தில் ஒரு பெண் அல்லது ஆண் மணவிலக்கு கேட்கிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். நம்மில் பெண்ணுக்கு முதலில் கல்யாணமே கஷ்டம், அதிலும் ஒருவனுடன் வாழ்ந்துதவளுக்கு இன்னொரு நல்லவன் கணவனாய் வருவான் என்று கனவுகூடக் காண முடியாது. மறுமணங்களும், விதவைத் திருமணங்களும் வெகு அபூர்வம். அவர்களே விருப்பப்பட்டாலும் குடும்பத்தில் செய்ய முன் வர மாட்டார்கள். மணவிலக்குகள் பெருகும் அளவு மறுமணங்கள் அதிகமாகவில்லை. பெற்ற குழந்தைகளுக்கு பொதுவாக நம் நாட்டில் பெண்களே பொறுப்பாகிறார்கள், பெண் ஆயுள் முழுதும் தனிமரமாய் நிற்க வேண்டியதுதான். சூடுப்பட்ட பூனையாய் மறுமணம் என்றாலே அலறுபவர்களும் உண்டு. பெண்கள் படித்து வேலைக்குப் போவதால் ஏற்பட்ட பின் விளைவு என்று சொல்லப்பட்டாலும் சில முறிவுகளுக்குக் காரணம் இரண்டுபக்க பெற்றோர்கள்தான். இவர்களின் ஈகோ பிரச்சனையால் மகன், மகள் இல்லறத்தை நாசம் ஆக்குகிறார்கள்.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான். சிறு குழந்தைகளும் பல்வேறு மன உளச்சலுக்கு ஆளாகுகிறார்கள். அவற்றின் விளைவு பெரியவர்கள் ஆனதும்தான் தெரியும். ஆனால் தினமும் சண்டைபோட்டுக் கொள்ளுவதைவிட விலகிவிடுவது நல்லதில்லையா என்று சொல்லப்படுகிறது. காலங்காலமாய் விட்டுக் கொடுத்தல் தத்துவம் பெண்களுக்கு போதிக்கப்பட்டிருந்தாலும் அன்று நம் பாட்டி, அம்மாக்கள் தங்கள் தன்மானத்தை விட்டு கணவன் காலடியே கதி என்று விழுந்து கிடந்ததை இன்றைய படித்து கைநிறைய சம்பாதிக்கும் பெண்கள்

செய்வார்களா ? விட்டுக் கொடுத்தல் என்பதற்கும் ஒரு அளவு உண்டில்லையா ? சுயமரியாதை என்பது பெண்களுக்கும் உண்டு இப்பொழுதுதானே தெரிய ஆரம்பித்துள்ளது. இப்பொழுது சிறிது சிறிதாய் ஆண்களின் மனோபாவம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ஜீன்களில் இருப்பது அவ்வளவு சுலபமாய் முற்றிலும் மாறிவிடுமா என்ன ?

நம் குடும்ப அமைப்பில் ஆணும், பெண்ணும் சமம் என்பதில்லை. ஆட்சி சிதம்பரமா, மதுரையா என்றுக் கேட்கப்படும். யாராவது ஒருவர்

விட்டுக் கொடுத்தால் பிரச்சனையில்லை. ஆனால் போட்டியில் இருவருமே சம பலத்தில் போரிட்டால் பிரச்சனைதான். விட்டுக் கொடுத்தால்

பிரச்சனைத் தீரும் என்று சொல்லப்பட்டாலும், விட்டுக் கொடுத்தலின் அளவு எவ்வளவு என்றுக் கேள்வி எழுப்பபடுகிறது. இவை தீராத

பிரச்சனையாய் மாறி, மணமுறிவில் வந்து முடிகிறது.

நினைவலைகள்

மூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்துவரை ரவி என்ற பையன் என் வகுப்பில் படித்தான். அவன் தங்கை என் விளையாட்டு தோழி. அவன் அண்ணன் என் அண்ணனின் வகுப்பு. இதை தவிர இன்னும் மூன்று உருப்படிகள் அவன் வீட்டில். மத்தியானம் சாப்பாடு பெரிய கேரியரில்வரும். வேலைக்காரர் ஒருவர் ஆளுக்கு ஒரு தட்டைப்போட்டு பரிமாறுவார். பள்ளியில் சிலருக்கு அம்மாக்கள் சாப்பாடு கொண்டு வருவார்கள். மற்ற எல்லாருக்கும் டிபன் பாக்ஸ்தான். ஆச்சரியத்துடன் தினம் நடக்கும் இந்த விருந்தை ஓரக்கண்ணால் பார்த்தப்படி எங்கள் ஆறிப்போன சோற்றை முழுங்குவோம். ஆனால் ஒருநாள்கூட அதுமாதிரி நமக்கும் வேண்டும் என்றோ, வீட்டில் கேட்டதோ

கிடையாது. அவர்கள் மிகுந்த பணக்காரர்கள் என்பதும் தெரியும். அரசு பள்ளிகளில் எல்லாரும் படிப்பதால் பெரிய ஏற்றத்தாழ்வுகளை யாரும் பாராட்டவில்லை.

ஆனால் இன்று பிள்ளைகள் படிப்பது அரசுபள்ளிகளில் அல்ல. அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்றாற்போல் பள்ளிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். வகுப்பில் ஏறத்தாழ எல்லாரும் ஓரே செல்வநிலையில் இருப்பவர்கள். சிலர் சிறிது தாழ்ந்த நிலையில் இருந்தாலும் இந்த ஸ்டேடஸ் சிம்பலை மெய்ன்டெய்ன் செய்ய பெற்றோர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

யாராவது எதையாவது புதியதாய் வாங்கிவிட்டால் பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததும் யார் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மேல் அன்பை பொழிகிறார்கள் என்றும் தாங்கள் மட்டும் அன்பில்லாத பெற்றோர்களுக்கு பிள்ளையாய் பிறந்த துர்பாக்கியத்தைச் சொல்லிப் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். ப்ளே ஸ்டேஷன், அதற்கான சி.டிகள். மொபைல்போன், சி.டி ப்ளேயர் என்று லிஸ்டு தினமும் வளர்ந்து கொண்டே போகின்றன. வாங்கிக் கொடுப்பதற்குத் தான் பெற்றோர்கள் என்ற எண்ணம் பிள்ளைகள் மனதில் ஆழவிழுந்துவிட்டது. பாசத்தின்

வெளிப்பாடு கேட்டதை வாங்கிக் கொடுத்தல் என்று ஆகிவிட்டது.

பெண்களை பீடிக்கும் பயங்கரவியாதி

பெண்கள் அவதிப்படும் மிகபெரிய வியாதி எது தெரியுமா ? சுயபச்சாதாபம். எத்தனை படித்தும் நல்ல வேலையில் இருந்தும் இந்த வியாதியில் இருந்து யாரும் மீளக்காணோம். பெண்கள் எழுதும் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் அதிகம் காணலாம். ஆண்கள் மனதில் வழி வழியாய் வந்த பாட்டி, அம்மாக்களின் தியாகங்கள், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்- (இது சமயத்துக்கு தகுந்தது போல் மாறும்) போன்ற எண்ணங்கள் அத்தனை சுலபமாய் மாறாது. கண்டுக்காமல் போக வேண்டியதுதான்.

நமக்கு என்று சில நல்ல விஷயங்களில் மனதைத்திருப்பி இத்தகைய சுயபச்சாதாபத்தில் இருந்து மீளலாம். என் உறவுக்கார பெண் மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமை, நண்பிகளுடன் கோவில்களுக்குச் சுற்றுலா சென்றுவிடுவார். அவர் மயிலாடுதுறையில் இருப்பதால் சோழ நாட்டு கோவில்களுக்குச் சுற்றுலா. ஆனால் கணவன், குழந்தைகள் கிடையாது. கூட வரும் பெண்களும் குடும்பத்தை விட்டு விட்டுதான் வருவார்களாம். என் பாட்டி ஒரு பழமொழி சொல்லுவார்- கல்யாணத்துக்கு பிள்ளைகுட்டிகளோடு போகாதே! யாத்திரைக்குக் கணவனோடு போகாதே! அதாவது கல்யாணம் என்பது ஜாலியாய் இருக்கும் இடம். பிள்ளைகுட்டிகள் வந்தால் தொந்தரவு. யாத்திரை என்பது வழிப்பாடு. கணவன் வந்தால் ஞாபகம் முழுவதும் கடவுள் மேல் போகாது. இங்கிட்டுச் சேவை செய்யவே நேரம் சரியாய் இருக்கும். ஆக, PKS (கமலஹாசன்) சொன்னதுப் போல பழமொழிக்கு பொருள் கேட்கக்கூடாது, அனுபவிக்க வேண்டும். என் பாட்டி நாளுக்கு ஒரு பழமொழி சொல்லுவார்கள். இது எப்படி இருக்கு ? பெண் பெரியவள் ஆவதற்கு முன்பு (விதவிதமாய்) உடுத்தி விடு, மருமகள்

வருவதற்கு முன்பு (விதவிதமாய்) சாப்பிட்டு விடு!

செம்மொழி

தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டதைக் குறித்து ஆளுக்கு ஒருவிதமாய் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆங்கிலம் அனைத்துமொழிகளையும் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் எல்லாப் பெரிய நகரங்களிலும் பொதுமொழி ஆங்கிலம்தான். சிறு நகரங்களிலும் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அனைத்து பாடங்களையும் படிப்பது ஆங்கிலத்தில்தானே ?ஆங்கிலத்தில் பேசுவதை அறிவின் வெளிப்பாடாய்த்தானே நினைக்கிறோம் ? ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் யாரை வேண்டுமானாலும் பாருங்கள், படித்தவர் மொழி, பேஷன் என்றால் வீட்டிலும், வெளியும் ஆங்கிலம்தான். ஆங்கிலத்திலேயே அத்தனைப் பாடங்களையும் படித்துவிட்டு, பேருக்கு இரண்டாவது மொழி என்று அது ஹிந்தியோ, தமிழோ படிப்பதால் வரும் வினை இது. ஹிந்திக்காரர்கள்

பேசுவது ஹிந்தி அல்ல, ஹிந்திலீஷ். சிறுநகரங்களிலும் பிள்ளைகளை மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அனுப்பி இங்கீலீசு படிக்க வைக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால் சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்கள் தகுதியைப் பார்த்தால் பூஜ்ஜியம்! சில நூறு ரூபாய் சம்பளத்திற்கு எந்த வித ஆசிரியப்பயிற்சியும் இல்லாமல் பாடம் நடத்தினால் எந்த அழகில் இருக்கும் ? சும்மா, பாடத்தில் இருப்பதைக் குருட்டாம் போக்கில் படித்து, மனப்பாடம் செய்து பாஸ் செய்துவிடுகிறார்கள். அந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் பாடத்தைப்

புரிந்துகொள்ளவும் வரவில்லை. இரண்டாம் மொழியாய்த் தமிழைப் படிப்பதால் அதுவும் அறைகுறை. செம்மொழி என்று புளகாங்கிதப்படுபவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி- எதிர்காலம் என்பது நமது சந்ததியர். ஆனால் அவர்களுக்கு எந்த அளவு தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதை முதலில் கண் கொண்டு பாருங்கள்.

இங்கு (அமீரகம்) இந்த வருடம் முதல், எட்டாவது வரை கட்டாயமாய் படிக்க வேண்டிய அரபி, இப்பொழுது +2 வரை கட்டாயமாக்கப்

பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் இங்கு வந்து குடியேறிவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் பத்திலும், பன்னிரண்டாவது வகுப்பிலும் படிக்கும் பிள்ளைகள் மிகவும் பயந்துப் போய் இருக்கிறார்கள். பெற்றோர்களும், பள்ளிகள் இப்பொழுது எட்டாவதில் படிக்கும் பிள்ளைகள் தொடர்ந்து அரபி படிக்கட்டும், ஆனால் இந்த ஒன்பது, பத்து, பதினென்று, பன்னிரண்டு படிக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் ஆக்காதீர்கள் என்றுக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அரசு கல்வித் துறை ஒப்பவில்லை.

பார்த்தது

மழலையர் நிகழ்ச்சி ஒன்று சன் தொலைக்காட்சியில் வருகிறது. அனிதா குப்புசாமி மிக செயற்கையாய் செந்தமிழில் பேசி பிள்ளைகளை பயமுறுத்துகிறார். வழக்கில் இல்லாத சொற்களை தமிழில் சொல்லிப் பிள்ளைகளைப் பேந்தப்பேந்த முழிக்க வைக்கிறார். ஆனால், இவருக்கு முன்பு நடத்திய அம்மையார் மிக இயந்திரதனமாய், சோகமாய் நடத்தினார். அனிதா கட்டும் புடைவைகளும், போடும் நகைகளும் மிக நன்றாக இருக்கும். அழகான முந்தானை நன்றாக தெரியும்படி அதை முன்பக்கமாய் விரித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

சரி, யாரோ ஸ்பான்சர் செய்கிறார்கள் அதனால் அணிந்து மினுக்குகிறார் என்றிருந்தேன். அதேபோல் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர் எப்போதும்,பட்டுபுடைவை, நகை, பூ என்று கல்யாண வீட்டுக்குப் போவதுப்போல் வந்து செய்தி வாசிப்பார். கோடிஸ்வரி என்ற ஜெயா டி.வியில் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ரவிக்கையைப் போட்டுக் கொண்டு வந்த குஷ்பூவைப் பார்த்து வயிற்றெரிச்சல் படாத பெண்கள் மிகக் குறைவு. நண்பர் ஒருவருக்கு தொலைக்காட்சி நிறுவனங்களுடன் தொடர்ப்பு உண்டு. அவரிடம் ஒருமுறைப் பேசிக் கொண்டு இருந்தப்பொழுது, இந்த ஆடையணிகலங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர், ‘ சினிமா ஸ்டாருங்களுக்கு வேண்டுமானால் ஸ்பான்ஸர் செய்வார்கள், மற்றவர்கள் அணிவதெல்லாம் அவரவர்களுக்குச் சொந்தமானவைதான் ‘ என்று ஓரே போடாய்ப் போட்டுவிட்டார். சரிதான் சம்பளமாவது ஓரளவு கணிசமாய் இருக்குமா என்றல், அதுவும் சினிமா ஸ்டார்களுக்குத்தான், மத்தவங்களுக்குச் சில நூறு ரூபாய்கள்தான். (கவனிக்க பல நூறு இல்லை) டி.வில நம்ம முகம் தெரிகிறது என்பதே பாக்கியம் இல்லையா ? என்று சொல்லிவிட்டார். ஆகவே பெண்கள் தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும் என்றால் முதலில் கோடிஸ்வரர்கள் ஆக வேண்டும். அப்போதுதானே நம் புடைவைகள், நகைகளை நமக்கு நம் கணவன்மார்கள் ஸ்பான்ஸர் செய்ய முடியும்!

படித்தது

சென்ற வாரம் ‘நாகமண்டலா ‘ என்ற கன்னட சினிமாவைப் பற்றிச் சொல்லியிருந்தேன். கிரீஷ்கர்னாட் அவர்களின் பிரபல நாடகம் (தியேட்டர்) அது. அவர் யக்ஷகானம் என்ற கர்நாடக பழங்கலையை மேடை ஏற்றி வருகிறார். இதற்குப் பலரும் வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். நாகமண்டலா நாடகம் சென்னையிலும் சமீபத்தில் மேடை ஏறியதாம்- நன்றி குமுதம். காம்- ஆனால் என்ன மொழியில் என்று தெரியவில்லை. சென்னையில் ஞாநி அவர்களின் ‘பரிக்ஷா ‘ தியேட்டரும், கூத்துப்பட்டறை என்ற அமைப்பும் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் இரண்டுமே எந்த அளவு நாடகங்களைப் போடுகின்றன என்று தெரியவில்லை. நாடகம் என்றால் நம் ஊரில் கிரேசி, எஸ். வி. சேகர் தானே ? நம் அரசுகள், பத்திரிக்கைகள் இவற்றை ஊக்குவிக்காதது பெரிய கொடுமை. கலைமாமணிகளும், அண்ணா, ராஜராஜன் விருதுகள் கதைகளும் ஊர் அறிந்ததுதானே ? ஆனால் ஹிந்தி, மராட்டி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மேடையில் நடிப்பவர்கள் பிரபலமானவர்கள். ஹிந்தி நடிகர் ரஜ்ஜித்கபூர் நடித்த ஒரு மலையாளப்படம் அக்னி சாக்ஷி. 1930 களில் நம்பூத்ரி குடும்பத்தின் கதை. ஷோபனா நாயகி.

நாயகன் ரஜ்ஜித்கபூர் மிக நல்ல தேர்வு. இவர் நடித்த ஷியாம் பெனகலின் ‘மேக்கிங் ஆப் மகாத்மா ‘ வில் மகாத்மாவாய் நடித்தார். பழைய டி.டியில் ஹிந்தி தொடர் சத்தியஜித்ராய் கதை அதில் துப்பறிவாளராய் வருவார். பூம்கேஷ் பக்ஷி- வங்காள பிண்ணணி கதை. ஞாபகம் இருக்கா ? பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்து இம்மொழிகளில் பரிட்சார்த்தப் படங்கள் எடுக்கப்படுகின்றன. சினிமாவின் கதை, நாவல் அல்லது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாய் கொண்டதுதான். ஆனால் நாம் ஆளுக்கு ஏற்றக் கதையைதானே ‘பண்ணிக் ‘ கொண்டு இருக்கிறோம். தியேட்டர் நடிகர்களை அழைத்து வந்து பாத்திரங்களுக்கு ஏற்றப்படி நடிக்க வைத்த கமலஹாசனுக்கு

நன்றி சொல்வதா அல்லது அந்த பசுபதி ( பெயர் சரியா ?) விருமாண்டி புகழ், இப்போது இன்னொரு வில்லனாய், ஒல்லி பிச்சான் நடிகரிடமெல்லாம் உதை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு வருந்துவதா தெரியவில்லை ?

படத்தில் நம்பூத்ரி கல்யாணக்காட்சி வருகிறது. அன்றைக்கும், இன்றைய கேரளாவினர் கல்யாணத்துக்கும் எவ்வளவு வித்தியாசம். வளைக்குடா பண வரவால் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு நூறுபவுன் போடுவது என்பது இன்று சர்வசாதாரணம். எல்லா கல்யாணத்திலும் அடுக்கடுக்காய் பொன்னாபரணங்கள் பெண் கழுத்தில். இதே முறை மெதுவாய் தமிழ்நாட்டிலும் ஆரம்பிக்கிறது. இப்பொழுது தீபாவளி விற்பனைக்கான விளம்பரங்களில் பட்டுபுடைவை மட்டுமல்லாத, நகைக் கடை விளம்பரங்களும் அதிகமாய் கண்ணில் விழுகிறது. இன்றைக்கு அய்யர் இல்லாமல் கூட கல்யாணம் நடக்கும் சிகை அலங்கார நிபுணரும், மேக்கப் கலைஞரும் இல்லாத கல்யாண உண்டா என்ன ? மணமகனுக்கான விசேஷ அலங்காரங்கள் செய்யப்படும் என்ற விளம்பரங்கள் நிறைய வருகின்றனவே!

துபாயில் சக்கைபோடு போட்டது லவ் லெட்டர்ஸ் என்ற ஹிந்தி நாடகம். மேடையில் இரண்டே மேஜை, நாற்காலிகள். ஷாபானா அஸ்மியும்,பஃரூக் ஷா நடித்தது. மேடையில் நடிப்பு என்ன தெரியுமா கடிதங்களைப் படிப்பது அவ்வளவுதான். என் ஹிந்தி தோழி பார்த்துவிட்டு மிகவும் பாராட்டி சொல்லிக் கொண்டு இருந்தாள். இந்த மாதிரி பரீட்சார்த்த நாடகங்களுக்குப் பொது ஜனங்களும், முக்கியமாய் படித்தவர்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள். இதை ஒரு நாகரீக வெளிப்பாடாய்ச் செய்தாலும் போற்றுதற்குரிய விஷயம்தானே ? வயதானபிறகு தாங்கள் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்களை மாறி மாறிப் படிப்பது எப்படி சுவாரசியமாய் இருக்கும் என்றக் கேள்வி எழுந்தது. வெறும் வசனம் என்றால் அந்தளவு ஹிந்தி புரியாது என்பதால் பார்க்கவில்லை. ஆனால் இங்கு வரும் நாளிதழ்களில் நல்ல விளம்பரமும், முழு பக்க விமர்சனமும் வந்தது. நடிப்பது என்பது அவர்களுக்கு passion .

பயணம்

சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் மிகவும் பிரபலம். சிறு குன்றின் மேல் முருகன் கோவில். இந்தக் கோவிலுக்கு அருகில்

ஒரு பெருமாள் கோவில். கோபுரம் மிகவும் சிதிலமடைந்து, உட்பிரகாரங்களில் புல்லும் பூண்டுமாய் இருந்தது. ஆனால் கோவில்

உள்ளே மிக சுத்தமாய் இருந்தது. மூன்று வருடம் முன்பு போயிருந்தப் பொழுது, மாலை பூஜை நடந்துக் கொண்டிருந்தது.

திரையை விலக்கியதும், அப்படியே தூக்கிவாரிப் போட்டது. தாயார் உயரம் ஆறிலிருந்து எட்டடி உயரம், அகலம் நாலைந்து அடி.

ஏழைக் கோவில். எந்த வித நகையில்லாமல், சாதாரண சிவப்பு நூல் புடைவையில் பளிச்சென்று தாயார் கண்ணைப் பறிக்கிறார். பெருமாளும் நல்ல அழகு. கூட்டமில்லாத, ஆடம்பரமில்லாத கோவில் அழகுதான். முருகன் கோவில் குன்றைவிட்டு இறங்கியதும், சிறிது தொலைவிலேயே வலதுப்புறம் பெருமாள் கோவில்.

செய்தி

கல்ப் நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி- சாலை விபத்தில் கணவனைப் பறிக்கொடுத்து ஏழை ரேணுவுக்கு வயது இருபத்தி எட்டு, இதில் இரண்டு பிள்ளைகள் வேறு. கேரளா, வயநாட்டை சேர்ந்த ரேணு, தன் ஊர்காரனாகிய காசிமுடன் ஐக்கிய எமிரேட்டில் (அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களை கொண்ட நாடு) குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளூம் ஆயாவேலைக்கு, கிளம்பியுள்ளாள். விமானநிலையத்தில் காத்திருந்த ஷாஜி என்பவனுடன் அவள் வந்து வீழ்ந்தது, உலகின் புராதன தொழிலான சதை வியாபாரத்தில்! துபாயும், கிரிக்கெட் புகழ் ஷார்ஜாவும் அருகில் அருகில் இருக்கும் இரட்டை நகரங்கள். அந்த ஷார்ஜாவில் ஒரு அப்பாட்மெண்ட்டுக்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள்.

அடுத்த நாள் தனக்கு என்று கொடுக்கப்பட்ட அறையில் இருந்த ரேணு, யாரோ ஒருவன் உள்ளே நுழைந்து கதவை தாளிடுவதைக் கண்டு அலறியிருக்கிறாள். ஆனால் அவளைச் சீரழித்த ஆள், அவள் இதற்கே அழைத்து வரப்பட்டாள் என்றும், அரைமணிக்கு இந்திய ரூபாயில் மதிப்பில் கட்டணம் அறநூறு ரூபாய் என்றும் சொன்னான்.

அன்று மாலையே கேள்விகேட்ட அவளுக்குக் கிடைத்தது நல்ல அடிதான். அவர்களிடம் இனி பேசிப் பயனில்லை என்று தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் தன்னைக் காப்பாற்றும்படி கேட்டு இருக்கிறாள். சிலர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை, சிலரோ கேட்டு விட்டு சிரித்தனராம். வாடிக்கையாளர்கள் இந்திய, பாக்கிஸ்தான் மற்றும் அரேபியர்கள்.வாடிக்கையாளன் வினேத்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) உதவியுடன் தப்ப முயன்று பிடிப்பட்ட ரேணுவுக்கு கிடைத்ததும் மேலும் அடி, உதைகள் மற்றும் பட்டினி.

ஒரு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு கொண்டு செல்லப் பட்ட ரேணுவை மீண்டும் சந்தித்த வினோத், இந்த முறை அவள் துன்பத்தை பிரபல ஆங்கில நாளிதழான கல்ப் நீயூஸ் இடம் எடுத்துச் சொல்லியிருக்கிறான். நாளிதழைச் சார்ந்தவர்கள், நேரே புறப்பட்டு, அவ்வீட்டுக்குச் சென்று ரேணுவைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். ரேணுவின் அதிருஷ்டம், மேடத்தைத் தவிர எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பவர்கள் யாரும் அங்கில்லை. தன் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல்களைக் கேட்ட ரேணு ஓரே ஓட்டமாய் வாசலுக்கு ஓடியிருக்கிறாள். அங்கிருந்த கல்ப் நீயூஸ் பத்திரிக்கையின் வேனில் ஏறியதும் அவளால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதே போல் நேற்று ஆந்திராவை சேர்ந்த ஒரு பதினென்பது வயது இளம்பெண்ணும் காப்பாற்றப்பட்டு இந்தியத் தூதரகத்தில் அடைகலமாகியுள்ளாள். நண்பர் ஒருவரால், இப்பெண்ணின் பரிதாபத்தைக் கேள்விப்பட்ட ரங்கா என்பவர் தன் நண்பர்கள் உதவியுடன் அவளைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அவர்களைப் பிடித்து நன்றாக உதைத்து விட்டு அந்தப்பெண்ணை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றிருக்கிறார்கள் கயவர்கள். உடனே ரங்கா குழுவினர் தூதரகத்தின் உதவியை நாடியதும், இப்பொழுது அந்தப் பெண்ணும் காப்பாற்றப் பட்டுள்ளாள். இந்த பெண்களின் அதிருஷ்டம், அவர்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். ஆனால் இருட்டு அறைகளில் இன்னும் எத்தனை பெண்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார்களோ!

இணையத்தில்

http://www.appusami.com/HTML/htmlv93/main/vikadan_jokes.asp போய் பாருங்கள். பழைய ஆனந்தவிகடனில் வெளியான

திரு. மாலி, ராஜூ அவர்களின் ஜோக்குகள். ஐம்பதுவருடங்களில் எத்தனை மாற்றங்கள் ? கல்கிப் போல ஆனந்தவிகடனிலும் சில பக்கங்களில் இப்படி பழைய சமாச்சாரங்களை தொடர்ந்துப் போடலாம்.

24-10-2004

தோழியர் வலைப்பதிவு

ramachandranusha@rediffmail.com

Series Navigation